சித்தர் சிந்தனையிலிருந்து 3 பாடலும் விளக்கமும் /11




சிவவாக்கியம்-121


உயிரு நன்மையால் உடல் எடுத்துவந்து இருந்திடுமே
உயிர் உடம்பு ஒழிந்தபோது ரூபரூபமாயிடும்
உயிர் சிவத்தின் மாயை ஆகி ஒன்றை ஒன்று கொன்றிடும்
உயிரும் சத்திமாயை ஆகி ஒன்றை ஒன்று தின்னுமே!!!

உயிரானது நல்வினைதீவினைக்கேற்ப உடலைப் பெற்று இப்புவியில் வந்து வாழ்ந்து வருகின்றது. உடம்பைவிட்டு உயிர் போனபோது அது உருவம் ஒழிந்து அரூபமாக ஆகின்றது. உயிர் என்பது சிவமென்ற பரம்பொருளின் மாயையாகிமெய்ப்பொருளாகி அனைத்தையும் தன்னுள் மறைத்து மறைந்திடுமே!!! உயிர் சிவனாகவும்உடம்புச்  சக்தியாகவும்  இருப்பதை அறிந்து தியான தவத்தால் ஒன்றிணைத்து சமாதி இன்பம் அடைபவர்உடம்பை உயிரில் கரைத்து இரண்டும் ஒன்றாகி சிவத்தை அடைவர்.
*******************************************

சிவவாக்கியம்-124

விண்  கடந்து நின்ற சோதி மேலை வாசலைத் திறந்து
கண்களிக்க உள்ளுளே கலந்து புக்கிருந்த பின்
மண்பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்
எண் கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே!!!

உனக்குள் விண் வேளியாக இருக்கும் மனத்தை கடந்து அப்பால் சோதியாக உலாவும் ஈசனை அறிந்து மேலைவாசல் என்னும் பத்தாம் வாசலை யோக ஞானத்தால் திறந்து தியானிக்க வேண்டும். அப்போது கண்களிக்க உனக்குள்ளே கலந்து புகுந்திருக்கும் இறைவனை தரிசிக்கலாம். இம்மண்ணிலே பிறவி எடுக்கும் மாயமும்மயக்கத்தைத் தருகின்ற சுக போகங்கள் யாவும் மறைந்துபோய் விடும். விண்ணில் நிற்கும் சூரியனைப் போல் என்னில் அகாரத்தில் கலந்து நிற்கும் ஈசனோடு இணைந்து இருப்பது உண்மையாகும்.

******************************************* 

சிவவாக்கியம்-126 


மின் எழுந்து மின் பறந்து மின் ஒடுங்கும் வாறு போல்
என்னுள் நின்ற என்னுள் ஈசன் என்னுள்ளே அடங்குமே
கண்ணுள் நின்ற கண்ணில் நேர்மை கண் அறிவிலாமையால்
என்னுள் நின்ற என்னை யானும் யான் அறிந்தது இல்லையே!

மின்னல் வானில் தோன்றி மின்னலாக ஒளிவீசி மின்னளுக்குல்லேயே ஒடுங்கிவிடுகிறது. அதுபோல என் உடலில் நின்று என் உயிருள் உள்ள ஈசன் நானாக எனக்குள்ளேயே ஒடுங்கி அடங்கியுள்ளான். கண்ணிலே நின்று கண்ணிலே நேர்படும் பிம்ம்பத்தைக் கண்கள் அறியாத தன்மையினால் கண்ணைப் பற்றிய அறிவு இல்லாமையால் என்னுள் நின்ற ஆன்மாவையும் அதனுள் நின்றிலங்கும் ஆண்டவனையும் நான் எனும் ஆணவத்தால் யான் அறிய முடியாமல் ஆனதே.

***********************.அன்புடன் கே எம் தர்மா.

0 comments:

Post a Comment