'உன்நினைவுகளில் என்றும் ...... '

 


"எங்கள் வீட்டின் குலமகளாய் இணைந்து

எல்லார் நெஞ்சையும் சிரிப்பால் இணைத்து

எடுப்பாய் குடும்பத்தில் இரண்டற கலந்து

எம்மோடு ஒருவளாக வாழ்ந்த திருமகளே!"

 

"மனதை கவர்ந்து அன்புமழையில் நனைத்து

மணக்கோலம் கொண்டு மணமகளாய் வந்து

மகரிகை தொங்க வலதுகால் வைத்த

மகிமை பொருந்திய எங்கள் கலைமகளே!!"

 

"வந்தாரை மகிழ்வித்து மனமார வாழ்த்தி

வஞ்சனை இன்றி வெளிப்பட கதைத்து

வயிறு நிறைய உபசாரம் செய்து

வணக்கம் கூறி வழியனுப்பும் மலைமகளே!"

 

"கல்விஞானம் அத்தனையும் ஒருங்கே கொண்டு

கண்ணாக குடும்பத்தை அணைத்து வாழ்ந்து

கருணையுடன் எல்லோரையும் வழி நடத்தி

கண்டவர்கள் மனம் நிறைந்த அலைமகளே!"

 

"மீதி வாழ்வை பாதியில் விட்டுவிட்டு

மீளாதுயரில் எம்மை ஆழ்த்தியது எனோ?

மீட்சி உண்டோ விடிவுஉண்டோ எமக்கு ?

மீண்டும்நீ எம்மிடம் வரும் வரை?"

 

"சொல்லாமல் கொள்ளாமல் நீ பிரிந்ததை

சொல்லியழ எமக்கு வார்த்தை இல்லை

சொர்க்கம் என்று ஒன்று இருந்தால்

சொந்தமாய் அதில்நீ என்றும் இருப்பாய்!"

 

இயற்கையின் அழைப்பை ஏற்றதனால் - நீர்

இசைந்து எம்மை விட்டு  விரைந்தீரோ ?

இளகிய இதயம் கொண்டதனாலா - அவன்

இயமன் வலையில் நீர் விழுந்தீரோ?"

 

"உறவாய் உற்றவளாய் உடன் பிறப்பாய்

உத்தமியாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர்?

உயிராய் உன்கொள்கைகளை  போற்றி நாம்

உன்நினைவுகளில் என்றும் வாழ்ந்திடுவோம்!".

 

👨[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment