சூறாவளி எப்படி உருவாகிறது?


வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உண்டாகி இருக்கிறது, புயல் வர வாய்ப்பிருக்கிறது என்று நாம் அடிக்கடி செய்திகளில் கேட்பதும் படிப்பதும் வழக்கம். அந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை எதனால் உண்டாகிறது, அது புயலாக எப்படி உருவெடுக்கிறது அதன் பின் என்னாகிறது என்று தெரியுமா..? அது குறித்த விவரங்களை விளக்குவதே இந்த கட்டுரைத் தொகுப்பு.

 

புயல், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. மேற்கிந்தியத் தீவுகளில் ஹரிக்கேன் என்றும், வடபசிபிக் பெருங்கடல் பகுதியில் டைபுன் என்றும், மேற்கு ஆஸ்திரேலியா கடற்கரைப் பகுதிகளில் வில்லி வில்லி என்றும், டொர்னடோ (சுழல் காற்று), இந்தியப் பெருங்கடல் பகுதியில் சைக்லோன் (புயல்) என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு பெயர்கள் மட்டுமே மாறுபடுகிறதே தவிர அனைத்துமே ஒரே விஷயத்தைத்தான் குறிப்பிடுகிறது.

 

ஒரு புயலானது தோன்றி மறைவது மூன்று நிலைகளில் நடக்கிறது, தோன்றும் நிலை, வலுவடையும் நிலை மற்றும் வலுவிழந்த நிலை. இந்த அனைத்து நிலைகளும் ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்று நடைபெறுகிறது. கடற்பரப்பில் 26'C அதிகமான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும்போது காற்று வேகமாக வெப்பமடைகிறது. வெப்பமடைந்த காற்றானது மேல் நோக்கிச் செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து வெற்றிடம் உண்டாகிறது. அந்நிலையில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது. மேலே செல்லும் வெப்பக்காற்று குளிர்வடைந்து வானில் தாழ்வு நிலையில் தங்குகிறது.

 

இதன் காரணமாகத் தாழ்வு நிலை உண்டாகிறது. தாழ்வு நிலையின் காரணமாக அங்கு காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதுவே காற்றழுத்த தாழ்வு நிலையாகும். பூமியின் சுழற்சி காரணமாகக் காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம் அதிகரித்து புயலாக உருமாறுகிறது. இந்நிலையிலேயே புயலின் கண் உருவாகும். காற்றழுத்தத் தாழ்வு நிலையின்போது 31 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் அது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாகும்.

 

புயலின் கண் பகுதியென்பது அதன் மையத்திலிருக்கும் மிதமான காற்றழுத்தப் பகுதி. இது, சுமார் 30 - 65 கி.மீ விட்டம் கொண்டிருக்கக் கூடும். அங்கு நிலவும் காற்றழுத்தம் வெளிப்புறத்தில் இருப்பதைவிடக் குறைத்தே காணப்படும். காற்று மேலெழுந்து, பின் குளிரும் நிலையினில் சில அடர்த்தியான காற்று கீழ் நோக்கி நகர்ந்து தெளிவான புயலின் கண் பகுதி உருவாகும். அதிக வலுக்கொண்ட புயலின் மையப்பகுதி அடர்ந்த உருளை வடிவில் தோற்றமளிப்பதால் அது புயலின் கண் எனப்படுகிறது.

 

அப்படிச் சுழலும் மேகச்சுருளின் வேகத்தையும், அதன் அடர்த்தி, பரப்பளவைப் பொறுத்துதான் புயலின் வலிமையை வரையறை செய்ய இயலும். இப்படிச் சுழலும் மேகக் கூட்டங்களைக்கொண்ட காற்று, கடற்பகுதியிலிருந்து கரையை நெருங்கும்போது, கனமழையுடன்கூடிய புயற்காற்று தாக்குகிறது. இந்தப் புயல் நிலப்பரப்பில் நீண்டதூரம் பயணித்ததும் வலுவிழந்து காற்றின் வேகம் குறைகிறது. இந்தப் புயல் மீண்டும் கடலை அடையும்போது வலுவடையவும் வாய்ப்பிருக்கிறது.

 

காற்றானது மணிக்கு 31கி.மீ வேகத்தில் வீசினால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.

 

காற்றானது மணிக்கு 32 - 51 கி.மீ வேகத்தில் வீசினால் அது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.

 

காற்றானது மணிக்கு 52 - 62 கி.மீ வேகத்தில் வீசினால் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகும்.

 

காற்றானது மணிக்கு 63 - 87 கி.மீ வேகத்தில் வீசினால் அது புயல்.

 

காற்றானது மணிக்கு 88 - 117 கி.மீ வேகத்தில் வீசினால் அது தீவிர புயல்.

 

காற்றானது மணிக்கு 118 - 165 கி.மீ வேகத்தில் வீசினால் அது  மிகத் தீவிர புயல்.

 

காற்றானது மணிக்கு 165 - 221 கி.மீ வேகத்தில் வீசினால் அது  கடும் தீவிர புயல்

 

காற்றானது மணிக்கு 222 கி.மீ-க்கு மேல் வீசினால் அது அதி தீவிர புயல்.

 

-துரைராஜ் குணசேகரன்


0 comments:

Post a Comment