கடுகதியில் மாறிவரும் உலகில்...

  


வீட்டுக்கு ஹைட்ரஜன் மின் கருவி

மெல்ல மெல்ல, ஹைட்ரஜன் பொருளாதாரம் ஒன்று வளரத் துவங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த, 'லாவோ' நிறுவனம், ஹைட்ரஜனை உற்பத்தி செய்து, சேமித்து வைத்து, மின்னாற்றலாக மாற்றும் கருவியை, அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இது வீடுகளுக்கான ஹைட்ரஜன் மின் கருவி. வீட்டு கூரை மீது வைக்கப்படும் சூரிய மின் பலகைகள், இரண்டு நாட்களுக்கு உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தேக்கி வைக்கும் திறன் கொண்டது, லாவோ கிரீன் எனர்ஜி கருவி. மேலும், லித்தியம் அயனி பேட்டரிகளைவிட, பல ஆண்டுகள் அதிகம் உழைக்கவும் லாவோ மின் கருவிகளால் முடியும்.

 

தற்போது, பகலில் சூரிய மின் பலகைகள் தயாரிக்கும் மின்சாரத்தை, லித்தியம் பேட்டரிகளில் சேமித்து வைப்பது வழக்கமாக உள்ளது. அப்படி சேமித்து வைத்தால் தான், இரவிலும், சூரியன் தலைகாட்டாத பருவங்களிலும், தேவையான நேரத்தில் மின்சாரத்தை எடுத்துப் பயன்படுத்தலாம்.

 

ஆனால், லாவோ கிரீன் எனர்ஜி கருவி, வீட்டு குழாயில் வரும் நீரிலிருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுக்க சூரிய மின்சாரத்தை பயன்படுத்துகிறது. அதாவது, ஹைட்ரஜன் வடிவில் ஆற்றல் சேமிக்கப்படுகிறது. பின் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் மின் உற்பத்தி சாதனத்தை முடுக்கிவிட்டு, மின்சாரத்தை உற்பத்தி செய்து தருகிறது.

 

லாவோவின் பசுமை ஹைட்ரஜன் கருவி, 19.5 லட்சம் ரூபாய் என்ற விலைக்கு வரவுள்ளது. என்றாலும், சில ஆண்டுகளில் நடுத்தர வர்க்கத்தினரும் வாங்கும் விலைக்கு அது வந்துவிடும் என நம்பலாம்.

டென்மார்க்கின் மின் ஆற்றல் தீவு!

உலகின் முதல், 'ஆற்றல் தீவு' ஒன்றை டென்மார்க் உருவாக்கி வருகிறது. மனித முயற்சியால் கட்டப்படும் தீவான இதில், பெரிய காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன.இந்த காற்றாலைகள் மட்டும், 30 லட்சம் வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாக இருக்கும் என, டென்மார்க் அரசு அறிவித்துள்ளது.

 

டென்மார்க் அரசு, 51 சதவீதமும், தனியார் நிறுவனங்கள், 49 சதவீதமும் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றன. வரும், 2030ல் நிறைவடையவுள்ள, ஆற்றல் தீவின் பரப்பளவு, 30 ஏக்கராக இருக்கும். டென்மார்க் அரசு, அதன் வரலாற்றிலேயே இத்தனை பெரிய திட்டத்தை மேற்கொண்டதில்லை.கடலுக்கு நடுவே மிதக்கும் காற்றாலைகளை அமைப்பது, ஐரோப்பிய நாடுகளின் பிரியத்திற்குரிய திட்டமாக இருந்து வருகிறது.பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் மிதக்கும் காற்றாலைகளை பெருமளவில் அமைத்து வருகின்றன.

 

ஆனால், ஒரு பெரிய செயற்கை தீவினை இதற்கென அமைப்பது இதுவே முதல் முறை.ஆற்றல் தீவு முழுமையாக செயல்படும்போது, 12 ஜிகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என, வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். உபரி மின்சாரத்தை, டென்மார்க் தன் அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்யவிருக்கிறது.

ஹைட்ரஜன் கண்டு வரும் ஏற்றம்!

சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத எரிபொருள் எது? ஹைட்ரஜன். இது மாசு எதையும் வெளிப்படுத்தாமல் முற்றிலுமாக எரிந்துவிடும். கடைசியில் நீர்த்திவலைகள் மட்டுமே எஞ்சும்.இதனால் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தும் ஆய்வுகள் அதிகரித்து வருகின்றன.

 

குறிப்பாக, ஹைட்ரஜனை நீரிலிருந்து பிரிப்பது, அதற்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து பெறுவது போன்ற முறைகளால் பெறப்படும் ஹைட்ரஜனை, 'பசுமை ஹைட்ரஜ' என்றே விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.உலக ஹைட்ரஜன் கவுன்சிலின் கணக்குப்படி, மாற்று எரிசக்தி முறைகளை பயன்படுத்துவது மற்றும் இதர புதிய நுட்பங்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால் ஹைட்ரஜனின் உற்பத்தி செலவு வேகமாக குறைந்து வருகிறது.

 

உலகெங்கும் தற்போது புதிதாக, 228 ஹைட்ரஜன் எரிபொருள் ஆலைகள் கட்டப்பட்டு வருகின்றன.இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு கட்டுமான வேலைகள், கடந்த ஓராண்டுக்குள் துவங்கப்பட்டன.இவற்றின் முதலீட்டு மதிப்பு, 300 பில்லியன் டாலர்கள் என்கிறது, ஹைட்ரஜன் கவுன்சில். ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில், லாரி, ரயில் மற்றும் கார் போன்ற போக்குவரத்துகளுக்கு ஹைட்ரஜன் இயந்திரங்களை உருவாக்கி சோதனைகள் நடந்து வருகின்றன. அடுத்த, 10 ஆண்டுகளில், ஹைட்ரஜன் யுகம் பிறக்கும் என, வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இலவச ஹைட்ரஜன் ஆலை!

சூரிய ஒளியிலிருந்து ஹைட்ரஜனை தயாரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். 'அகுவா ஏரெம்' என்ற புத்திளம் நிறுவனம், இதற்கென, இரண்டு மாற்று ஆற்றல் நுட்பங்களை பயன்படுத்தும்.

முதலாவது, அகுவா ஏரெம் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை தயாரிக்கும். தனியாக பிரித்தெடுக்கும்இரண்டாவது, காற்றில் உள்ள ஈரப்பதத்திலிருந்து நீரை உறிஞ்சி சேகரிக்கும் நுட்பத்தை பயன்படுத்துவது. அப்படி சேகரித்த நீரை, சூரிய மின்னாற்றல் மூலம் பகுத்து, ஹைட்ரஜனை தனியாக பிரித்தெடுக்கும்.

மின்சாரம் மற்றும் நீர் ஆகியவற்றை அகுவா ஏரெம், எந்த கட்டணமும் இன்றியே பெறுகிறது. எனவே, இந்த திட்டம் ஏறக்குறைய இலவசமாகவே ஹைட்ரஜனை உற்பத்தி செய்து தரும். 'பசுமை' எரிஹைட்ரஜன், தற்போது தொழிற்சாலைகள், வாகனங்கள் போன்றவற்றின், 'பசுமை' எரிபொருளாக மாறி வருகிறது.

எனவே, இந்த கூட்டு தொழில்நுட்ப முறை மூலம், ஹைட்ரஜன் தயாரிப்பதை முழு வீச்சில் செயல்படுத்தவிருக்கிறது அகுவா ஏரெம். அப்போது, வெயில் தகிக்கும் வறட்சி பகுதிகளைச் சேர்ந்தோர் கூட, ஹைட்ரஜன் ஆற்றலை ஏற்றுமதி செய்ய முடியும்.

இலவச குடிநீர்

காற்றிலிருந்து குடிநீர் எடுக்க, பல தொழில்நுட்பங்கள் வரத் துவங்கியுள்ளன. அதில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள ஏரோஜெல் தொழில்நுட்பம் மிக சுவாரஸ்யமானது.உலகிலேயே மிகவும் எடை குறைந்த பொருளான ஏரோஜெல், மிகவும் நுண்ணிய துளைகளைக் கொண்டது.

 

அதுமட்டுமல்ல, காற்றிலுள்ள நீராவி மூலக்கூறுகளை ஈர்க்கவும், அதேவேளையில், அவற்றை விலக்கிவிடவும் செய்யும் தன்மை கொண்டவை. இதனால், ஆவியாக உள்ள நீர் மூலக்கூறுகள், ஏரோஜெல்லினால் ஈர்க்கப்பட்டு, பிறகு திரவ நீராக மாறியதும் விலக்கப்படுகின்றன. இப்படி விலகும் நீரை ஒரு கலனில் சேமித்து வைக்கவேண்டியது தான்.

 

ஏரோஜெல் ஈர்த்துத் தரும் நீர், உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, மனிதர்களுக்கு குடி நீராக இருக்கும் தன்மை உடையவை என, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஒரு கிலோ எடையுள்ள ஏரோஜெல்லை காற்றில் படும்படி வைத்தால் அது ஒருநாளைக்கு 17 லிட்டர் குடி நீரை ஈர்த்து, வடித்து தரும் திறன் கொண்டது. ஆனால், 1 கிலோ எடையுள்ள ஏரோஜெல்லை, தட்டையாக விரித்து வைக்வேண்டும் என்றால், அதிக இடம் தேவை என்பதுதான் குறை.

 

அதே சமயம், குடிநீரை காற்றிலிருந்து பிரித்தெடுக்க, மின்சாரமோ, வேறு எரிபொருளோ தேவையில்லை என்பதையும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். வெயில் நேரத்தில், ஏரோஜெல் நீர் வடிகட்டி அதிக நீரை ஈர்க்கிறது என்பதால், நம்மூர் மொட்டை மாடிகளில் தண்ணீர் பந்தல் போல போட்டுக்கொள்ளலாம். நிழலுக்கு நிழல், தண்ணீருக்கு தண்ணீர்!

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment