மாறிடும் உலகில் புதுமைகள் -தொழில்நுட்பம்



காணாமல் செய்யும் தொழில்நுட்பம்

நீங்கள் சுமந்து செல்லும் சாவி, வங்கி அட்டைகள், பணம் போன்ற அனைத்தையும் காணாமல் போகச் செய்யும் ஒரு தொழில்நுட்பம் வரவிருக்கிறது. அது மோதிர வடிவில் இருக்கக் கூடும்.

ஏற்கனவே. கடைகளில் பொருட்களின் மீது, 'பார் கோடு' போல ஒட்டப்படும் ஆர்.எப்.ஐ.டி., தொழில்நுட்பம்தான் இப்படி புது அவதாரம் எடுக்க இருக்கிறது. ரேடியோ அலைவரிசை மூலம் அடையாளத்தை தெரிவிக்கும் தொழில்நுட்பம் இது.

ஜெர்மனியைச் சேர்ந்த, 'கினிமாட்டம் புராஜக்ட்' என்ற திட்டத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மனித அடையாளம் மற்றும் வசதிகளை மனதில் வைத்து, இந்த தொழில்நுட்பத்தை வடிவமைத்து சோதித்து வருகின்றனர்.

மோதிர வடிவில் இருக்கும் இந்த அடையாள தொழில்நுட்பம், எளிதில் தொலையாது. தவிர, பாக்கெட் அல்லது பர்ஸ்களில் இருந்து சிரமப்பட்டு எடுக்க வேண்டியதில்லை. அந்தக் கால ராஜ முத்திரை போல, எவரும் தன் அடையாளத்தை ஆர்.எப்.ஐ.டி., மோதிர வடிவில் அணிந்து செல்லலாம்.

கார் கதவு, வீட்டுக் கதவு, வங்கி ஏ.டி.எம்., என்று எங்கும் இதை காட்டினால் போதும்.உடனே உங்களை கணினிகள் அடையாளம் கண்டு, உங்களுக்கு வேண்டியதை செய்து தரும். இதற்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

காரணம் அறிந்து கொள்ள

முப்பரிமாண பூமிபூமியை முப்பரிமாண முறையில் புகைப்படம் எடுத்து பூமியில் ஏற்படும் பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல் உள்ளிட்ட இயற்கை பேரிடர் நிகழ்வுகளுக்கு என்ன காரணம் என்பதை அறிந்து கொள்வதற்கு ஐந்து செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டு உள்ளது. அமெரிக்க அரசின் உதவியுடன் 2029க்குள் இத்திட்டத்தை செயல் படுத்த நாசா இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் வளிமண்டத்திலிருந்து பூமியின் கடல்நீர்மட்ட உயர்வு, பனிப்பாறை உடைவது, எரிமலை, நிலச்சரிவு போன்றவற்றை ஆய்வு செய்யும்.

மூளையில் எண்ணங்களை திரையில் காட்ட..

மனித மூளையில் உதிக்கும் எண்ணங்களை புரிந்துகொள்வது, அதை திரையில் துல்லியமாக காட்டுவது. இந்த இரு செயல்களையும் செய்யும் கருவிகள் ஆய்வுக்கூடத்திலிருந்து வெளிவரத் தயாராகின்றன.

'பிரெய்ன் கம்ப்யூட்டர் இன்டர்பேஸ்' எனப்படும் மூளை-கணினி இடைமுக கருவிகளை பேஸ்புக் முதல் பல தனியார் அமைப்புகள் ஆராய்ந்து வடிவமைத்து வருகின்றன. அண்மையில், அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பக்கவாதத்தால் கழுத்துக்குக் கீழே உடல் செயலிழந்த ஒருவருக்கு புதுமையான சோதனையை நடத்தினர்.

அவரது மூளையில் இரு சிறிய சில்லுகளை விஞ்ஞானிகள் பதித்தனர். இந்த சில்லுகள் அவரது மூளையில், கைகளை இயக்கும் பகுதியில் உதிக்கும் சமிக்ஞைகளை, கணினிக்கு அனுப்பும் திறன் கொண்டவை. பக்கவாதம் வந்த நபர், தன் கையால் பேனா பிடித்து எழுதுவது போல கற்பனை செய்து, ஒவ்வொரு எழுத்தாக மனதிற்குள் நினைப்பார். அவை அப்படியே கணினி திரையில் தோன்றும்.

சில வார பயிற்சிக்குப் பிறகு, அவரால், நிமிடத்திற்கு 90 எழுத்துக்கள் என்ற வேகத்தில், தன் மனதில் நினைத்ததை, கணினி மூலம் திரையில் கொண்டு வர முடிந்தது.மூளை-கணினி இடைமுகங் கருவிகள் சரளமாக மனித எண்ணங்களை புரிந்துகொள்ளும் திறனை விரைவில் பெற்றுவிடும். அப்போது, கை, கால் செயல் இழந்தோர்கூட, சக்கர நாற்காலியை இயக்குவது, எழுதுவது, ரோபோ கரங்களை இயக்கி வேலை செய்வது போன்றவற்றை எளிதாக செய்ய முடியும்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment