கொரோனாவின் 'லேம்டா' திரிபு: ஆபத்தா? - உண்மை என்ன?

கொரோனா வைரஸின் டெல்டா திரிபால் இந்தியாவிலும் தொற்றுகள் பரவியிருக்கும் நிலையில் அச்சுறுத்தும் வகையில் லேம்டா என்ற மற்றொரு திரிபின் பெயர் அண்மைக் காலமாக பேசப்பட்டு வருகிறது.

 

இது ஆபத்தானதா, வேகமாகப் பரவக்கூடியதா, இறப்பு விகிதம் எப்படியிருக்கும், எங்கெல்லாம் பரவியிருக்கிறது, இந்தியா அஞ்ச வேண்டுமா என்பன போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

 

லேம்டா திரிபு "கவனிக்கப்பட வேண்டிய திரிபு" (Variant of Interest) என உலக சுகாதார அமைப்பு கடந்த மாதம் அறிவித்தது. அந்த அமைப்பின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி இந்தப் பட்டியலில் தற்போது இருக்கும் நான்கு திரிபுகளில் ஒன்று இது. அதாவது இதன் பரவலைக் கண்காணிக்க வேண்டும் என்று பொருள்.

 

உலக சுகாதார அமைப்பைப் பொறுத்தவரை, கவலைக்குரிய திரிபுகள், கண்காணிக்கப்பட வேண்டிய திரிபுகள் என இரண்டு வகையாகக் கொரோனா திரிபுகள் பட்டியலிடப்படுகின்றன.

 

ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா ஆகிய நான்கு திரிபுகள் இதுவரை கவலைக்குரிய கொரோனா திரிபுகள் (Variant of Concern) பட்டியலில் உலக சுகாதார அமைப்பு வைத்திருக்கிறது. லேம்டா திரிபு இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. மாறாக தொடர்ந்து கண்காணிகப்பட வேண்டிய திரிபுகளின் பட்டியலில் அது வைக்கப்பட்டிருக்கிறது.

 

மக்கள் உச்சரிப்பதற்கு வசதியாகவும், நினைவு கொள்ளத் தக்க வகையிலும் கொரோனாவின் திரிபுகளுக்கு கிரேக்க எழுத்துக்களில் பெயரிடுவதை உலக சுகாதார அமைப்பு தற்போது கடைப்பிடித்து வருகிறது. கவலைக்குரிய திரிபுகள், கண்காணிக்கப்பட வேண்டிய திரிபுகள் ஆகியவற்றின் பட்டியல்களையும் அவ்வப்போது புதுப்பித்து வருகிறது.

 

உலக சுகாதார அமைப்பின் தகவல்களின்படி லேம்டா திரிபு இதுவரை 29 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது டெல்டா, டெல்டா பிளஸ் திரிபுகளை விட மிகவும் வேகமாகப் பரவக் கூடியது, தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாதது என்ற கருத்து உருவாகி இருக்கிறது.

 

"ஆனால் இதை உறுதி செய்யக்கூடிய ஆதாரங்கள் ஏதுமில்லை. ஏனென்றால் இதுவரை இதுபற்றிய தரவுகள் மிகவும் குறைவாகவே சேகரிக்கப்பட்டுள்ளன" என்கிறார் இந்திய விஞ்ஞான் பிரசார் அமைப்பின் மூத்த விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன்.

 

தென் அமெரிக்க நாடுகளில் அதிக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸின் வகை இது. குறிப்பாக பெரு போன்ற நாடுகளில் வைரஸ் பரவலுக்கு இது காரணமாக இருக்கிறது. பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இந்தத் திரிபு பரவியிருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. ஆனால் இந்தியாவில் இதுவரை லேம்டா திரிபு கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறை தரப்பில் தகவல் இல்லை.

 

லேம்டா திரிபு புதிதாகக் கண்டறியப்பட்டதா?

லேம்டா திரிபானது இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டதல்ல. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே இப்படியொரு வைரஸ் திரிபு பரவி வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டார்கள். டிசம்பர் மாதத்தில் இருந்து இதன் முதற்கட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

"தென்னமெரிக்காவின் பெரு நாட்டின் லிமா நகரில் இது உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாத புள்ளி விவரங்களின்படி அங்கு 97 சதவிகித கொரோனா தொற்று இந்த வைராஸால் ஏற்பட்டிருக்கிறது. அண்டை நாடுகளான சிலி, ஈகுவடார், அர்ஜென்டினா ஆகிய நாடுகளிலும் இத்திரிபின் பரவல் அதிகமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்கிறார் டி.வி. வெங்கடேஸ்வரன்.

 

உலகின் பல பகுதிகளில் லேம்டா திரிபு பரவியிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. எனினும் தென் அமெரிக்காவைத் தவிர பிற பகுதிகளில் இது பரவியிருக்கும் அளவு மிகவும் குறைவுதான்.

 

லேம்டா திரிபின் முக்கியத்துவம்

"லேம்டா திரிபானது வூகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புரத நீட்சியில் 14 மாற்றங்களுக்கு உள்பட்டது" எனக் கூறுகிறார் வெங்கடேஸ்வரன்.

 

"C.37 என முன்னர் அழைக்கப்பட்டு வந்த லேம்டா திரிபுக்கு, வீரியமாகப் பரவுவது, தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாதது போன்ற தன்மைகள் இதற்கு இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இந்தத் தன்மைகளைக் குறித்து ஆய்வு செய்வதற்காகத்தான் இதனை கண்காணிக்க வேண்டிய திரிபுகளின் பட்டியலில் உலக சுகாதார அமைப்பு வைத்திருக்கிறது"

 

பிரிட்டனில் கண்டறியப்பட்ட ஆல்பா மற்றும் பிரேசிலில் கண்டறியப்பட்ட காமா திரிபுகளைவிட லேம்டா திரிபு வேகமாகப் பரவும் என சிலியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.

 

சீனாவின் சினோவேக் தடுப்பூசியின் செயல்திறனைக் குறைப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. ஆனாலும் லேம்டா திரிபின் தன்மை குறித்த முழுமையான முடிவுகள் இன்னும் வரவில்லை.

 

"பொதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பானது அதிகமாக இருந்தால் அங்கு கொரோனா திரிபுகளும் அதிகமாக உருவாகின்றன. அவற்றில் சில கவலைக்குரிய திரிபுகளாக வகைப்படுத்தப்படுகின்றன" என்கிறார் வெங்கடேஸ்வரன்

 

புதிய திரிபுகள் கண்டறியப்படுவது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

 

"புதிய திரிபுகள் அதிகரிப்பதால் தடுப்பூசிகளின் திறன் குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஏற்கெனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல கொரோனாவுக்காக மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளில் சில திரிபுகள் தென்படாமல் போவதும் உண்டு. அதற்காகவே புதிய திரிபுகள் பற்றிய விவரங்கள் கிடைத்ததும் பரிசோதனைகளில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. புதிய திரிபுகள் பரவி வரும் நிலையில் ஏற்கெனவே பரவிய சில திரிபுகள் நாளடைவில் இல்லாமலேயே போய்விடுகின்றன" என்கிறார் வெங்கடேஸ்வரன்.

 

லேம்டா திரிபால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாறுபட்ட புதிய அதிகுறிகள் ஏதுமிருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை. அதேபோல் தடுப்பூசிகளின் திறன் லேம்டாவுக்கு எதிராகப் போதுமான அளவுக்கு இருக்கும் என்றே இதுவரையிலான தரவுகள் கூறுகின்றன.

 

லேம்டா தவிர, ஈட்டா, அயோட்டா, காப்பா, ஆகிய திரிபுகளும் கண்காணிக்கப்படும் கொரோனா திரிபுகளின் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் காப்பா திரிபு இந்தியாவில்தான் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

 

எம். மணிகண்டன் -பிபிசி தமிழ்

0 comments:

Post a Comment