சித்தர் சிந்திய முத்துக்கள் ....3/51

 


சித்தர் சிவவாக்கியம் -411

ஆடுகின்ற எம்பிரானை அங்கமிங்கு நின்று நீர்

தேடுகின்ற வீணர்காள் தெளிவ தொன்றை ஒர்கிலீர்

நாடி யாடி உம்முளே நவின்று நோக்க வல்லிரேல்

கூடொணாத தற்பரங் குவிந்து கூடலாகுமே.  .               

நமக்குள் சிற்றம்பலமாகிய இடத்தில் ஆடிக் கொண்டிருக்கின்ற எம்பிரானாகிய ஈசனை அங்கும் இங்கும் நின்று நீராகத் தேடுகின்ற வீணர்களே! தெளிவான நீராக நின்ற ஒன்றை அறிந்து உணர்ந்து அந்த ஒன்றையே ஒன்றி தியானியுங்கள். அதனையே நாடி நாடி 'உம்' என்ற உகாரத்தை உணர்ந்து அகராத்தையே நோக்கி ஒரே நினைவுடன் தியானிக்க வல்லவர்கலானால் எவருக்கும் கூடி கிடைக்காத தற்பரமாகிய மெய்ப் பொருள் கூடி எல்லாமாக குவிந்து நிற்கும் சோதியை சேரலாம்.  

***************************************************

சித்தர் சிவவாக்கியம் -412

சுற்றி ஐந்து கூடமொன்று சொல்லிறந்த தோர் வெளி

சத்தியுஞ் சிவமுமாகி நின்ற தன்மை யோர்கிலீர்

சத்தியாவது உம்முடல் தயங்கு சீவன் உட்சிவம்

பித்தர்காள் அறிந்துகொள் பிரான் இருந்த கோலமே.  

சுற்றி ஐந்து பூதங்களும் ஒன்றாகி கூடியிருக்கும் இடத்தில் சொல்லிறந்த ஓர் எழுத்தாக விளங்கும் வெளியில் சத்தியும் சிவமும் ஒன்றாகி நின்ற மெய்ப்பொருளின் தன்மையை உணர்ந்து ஓர்ந்து நில்லுங்கள். அதிலிருந்தே சத்தியாக ஆகியதே உங்கள் உடம்பு. உடம்பில் நின்று இயங்கும் உயிரில் உட்சோதியாய் உள்ளதே சிவம். இப்படி ஈசன் இருந்த கோலத்தை அறிந்து கொள்ளாமல் பித்தராக திரியாதீர்கள்.    

****************************************************

சித்தர் சிவவாக்கியம் -413

அகாரமானது அம்பலம் அனாதியானது அம்பலம்

உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம்

மகாரமானது அம்பலம் வடிவமானது அம்பலம்

சிகாரமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே.

அகாரம் அம்பலமாக இருக்கும் இடத்தில்தான் அநாதியான ஈசன் கோயில் கொண்டுள்ளான். உகாரம் அம்பலமாகிய இடத்தில்தான் ஈசன் உண்மையாக உள்ளது. மகாரம் மனதாக அமைந்து சோதியே வடிவமாகி அமைந்தது. சிகாரமே ஆதியும் நடுவும் அந்தமும் ஆகி நின்றதை அறிந்து தெளிந்து தியானியுங்கள், அதுவே சிவம் என்பதை உணர்ந்து.    

-அன்புடன் கே எம் தர்மா & கிருஷ்ணமூர்த்தி

0 comments:

Post a Comment