மகா கனம் பொருந்திய தலைக்கனம் ..... கதை


கனடாவில் மகா கனம் பொருந்திய மகேஸ்வரன் அவர்கள் -  அவரைப்பற்றிப்  பலரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு. இருந்தாலும் சுருக்கமாக கூறினால்..

 

இலங்கையில், பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய மகேஸ்வரன் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த 1983 லியே அரச விசுவாசம் காரணமாக போராளிகளினால்   தேடப்பட ,தப்பிக்  கனடா வந்தவர். தொடர்ந்து, தன் மனைவி பிள்ளைகளையும் கனடாவுக்குள்  அழைத்துக்கொண்ட போதிலும் , அவர் மனம் அமைதியடைய முடியவில்லை.

 

 இலங்கையில், பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய காலத்தில், வெளியிலும் வீட்டிலும் ஒரு அதிகாரியாகவே தன்னை அடையாளப்படுத்தியே  பழகிவிட்ட மகேஸ்வரனால் கனடாவில் வீட்டிலும்,சந்திக்கும் உறவுகளும் ,நண்பர்களும் தன்னுடன்  சமமாக பழகுவதனை அவரால் ஜீரணிக்கமுடியவில்லை.

 

அன்று  தொடரும் உள் நாட்டு யுத்தம் காரணமாக பெருமளவு இலங்கைத் தமிழர் கனடாவந்து சேர்ந்துகொண்டிருந்தனர். . அச்சூழ்நிலையினை தனக்கு சாதகமா மாற்ற எண்ணிய மகேஸ்வரன் அவர்கள் , மக்கள் தன்னை 'ஐயா' என்று விழிக்க வழியாகதன்னை ஒரு ஈழப் போராட்ட ஆதரவாளராக இனம்காட்டி, ஒரு ஈழ அமைப்பினை உருவாக்கி தானே தலைவர் என அறிவித்தார்.

 

வழமையாகவே தமிழருடனும் ,தன் பிள்ளைகளுடனும்  தமிழ் பேச மறக்கும்  அவர், தமிழுக்காக மேடையில் முழங்கி ,பல பொன்னாடைகளும் பெற்றுக்கொண்டு அகமகிழ்ந்தார் மகேஸ்வரன். அவருடைய பதவி மோகம் ஆலயங்கள், ஊர் சங்கம், முதியோர் சங்கங்கள் என்று பரவியது.

 

 தன்னை மட்டுமே  எல்லோரும் பெருமைபடுத்த வேண்டும், பாராட்ட வேண்டும்   உபசரிக்கவேண்டும் என்றும் விரும்பும் மகேஸ்வரனால்   ஏனைய கலைஞர்களையோ  , எழுத்தாளர்களையோ    பாராட்டிப் பேச அவரது மனம்  என்றுமே இடம்கொடுத்தது கிடையாது. இது காலப்போக்கில் அவரை சமுதாயம் ஒதுக்கிவைக்கவே செய்தது.

 

காலங்கள் கடந்தன. விஞ்ஞானம்  தொழில்நுட்பத்தில்  பல விந்தைகளைப் படைத்துக்கொண்டிருந்தது. அடுத்தவரிடம் அதனை அறிந்துகொள்வதை தரக்குறைவாக உணரும் அவரால் கொம்பியூட்டர் பக்கம் எட்டிக்கூட பார்க்க தையிரியத்தினைக்  கொடுக்கவில்லை. புதிய உலகத்திலிருந்து  தனிமைப்படுத்தப்பட்டார் மகேஸ்வரன் அவர்கள்.

 

கொரோனாவும் வந்தது.

இச்சூழ்நிலையில், நேரடியான ஒன்றுகூடல்கள், சந்திப்புகள்கலைநிகழ்வுகள் எல்லாம் உறங்கிக்கொண்டன. பதிலாக அவை எல்லாமே (zoom) மெய்நிகர்  ஊடாக மெல்ல வளர ஆரம்பித்தது. இதனை பலரும் எடுத்து மகேஸ்வரனிடம் கூறியபோது, எட்டாப்ப பழம் புளிக்கும் என்பதனை நிரூபித்துக்கொண்டார் மகேஸ்வரன்.

 

ஒருநாள்  மெய்நிகர் மூலம்  அவர் கலந்து கொள்ள, அவரின் பேரன் உதவி செய்வதாக முன்வந்தபோதும், 'முந்தை நாள் பிறந்த மூஞ்சுறுஎனக்குப் படிப்பிக்க வாறார்' என முணுமுணுத்தவாறே   அதனை  நிராகரித்துவிட்டார் மகேஸ்வரன்.

 

அதேவேளை ,

 இன்னொருவர் தலைமை தாங்கி நடத்தும் 'மெய்நிகர்' இல் தான் ஒரு சிறியவனாக கலந்துகொள்வதோ, அல்லது கலந்துகொள்ளும் ஏனையவர்களுடன் சரி சமமாக உட்கார்ந்து கொள்வதோ   மகேஸ்வரனைப் பொறுத்தவரையில்  ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

 

பாவம் , மகா கனம் பொருந்திய மகேஸ்வரன் அவர்கள்   எத்தனை நாளுக்குத்தான் இப்படி இந்த நவீன உலகத்தில்  வெற்று வாழ்க்கை வாழமுடியும். அவரின் தலைக்கனம் கூடியதால் ஒருநாள்  படுத்தவர்தான். மீண்டும் அவர் எழுந்திருக்கவில்லை.

கற்பனை:-மனுவேந்தன் , செல்லத்துரை 


0 comments:

Post a Comment