விலங்குகளை கொல்லாமல் செயற்கை இறைச்சி:


உணவுத்தேவையை பூர்த்தி செய்ய ஐஸ்லாந்தில் புதிய முயற்சி

ஐஸ்லாந்தில் உள்ள வித்தியாசமான நிலப்பரப்புகளின் மத்தியில் ஒரு விநோதமான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் மனிதர்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய பல புதிய உணவு வகைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

 

இங்குள்ள பசுமைக் குடில்களில் பார்லி செடிகள் வளர்க்கப்படுகின்றன. செடிகள் வளர்த்தபிறகு, விதைகள் அறுவடை செய்யப்படுகின்றன. விதைகள் அரைத்து சுத்தம் செய்யப்பட்டு, அதிலிருக்கும் வளர்ச்சிப் புரதம் தனியாக எடுக்கப்படுகிறது. பின்னர் இந்த புரத்தின் மூலம், விலங்குகளே இல்லாமல் ஆய்வகத்தில் இறைச்சி உருவாக்கப்படுகிறது.

 

ஆனால், தற்போது விலங்குகளிடம் இருந்து நமக்கு இறைச்சி கிடைத்துவரும் நிலையில், செயற்கை இறைச்சிக்கான தேவை என்ன?

 

``செயற்கை இறைச்சி தேவை என்ற என்ற காலகட்டத்திற்கு வந்துவிட்டோம். பூமி விரிவடையப்போவதில்லை, அதிகமான விவசாய நிலங்களோ உற்பத்தியோ கிடைக்கப்போவதில்லை. மக்கள் தொகை பெருகிவருகிறது. எல்லாருக்கும் உணவளித்தாகவேண்டும்`` என்கிறார் ஓ.ஆர்.எஃப் ஜெனிட்டிக்ஸ் நிறுவனத்தின் புரதத் தொழில்நுட்பத்துறை தலைவர் அர்னா ருனாஸ்டாட்டிர்.

 

விலங்குகள் இல்லாமல் ஆய்வுக்கூடத்தில் இறைச்சியை உருவாக்குவதன் அடிப்படை என்னவென்றால், காலப்போக்கில் இது நிலத்தின் மீதான தேவையைக் குறைக்கும். குறைவான ஆற்றல் இருந்தால் போதும். கழிவுகளும் வெகுவாக குறையும்.

 

``நாம் உண்கிற இறைச்சியை உருவாக்கும் விலங்குகளை வளர்க்கத் தீவனம் தேவை. அதற்கு விளைநிலங்கள் தேவை. செயற்கை இறைச்சியில் அதற்கான வேலையில்லை. எந்த விலங்குகளையும் கொல்லத்தேவையில்லை. ஸ்டெம் செல்களை எடுத்துக்கொண்டால் போதும். இந்த முறை செயல்திறனைக் கொண்டதாகவும் சுற்றுச்சூழலைப் பாதிக்காததாகவும் இருக்கிறது`` என்கிறார் அர்னா.

 

மாடுகளின் ஸ்டெம் செல்களை வைத்து ஆய்வுக்கூடங்களிலேயே பீஃப் பர்கர்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும், வறுத்த இறைச்சியைத் தயாரிக்கும் நிறுவனங்களும் இப்போது ஐஸ்லாந்தில் உருவாக்கப்படும் வளர்ச்சிப் புரதத்தைப் பரிசோதிக்கத் தொடங்கிவிட்டன.

 

முதல் வளர்ச்சிப்புரதங்கள் விலங்குகளிடமிருந்து எடுக்கப்பட்டன என்றாலும், அதன் ஸ்டெம் செல்களை பார்லி தாவரத்தில் செலுத்தி வளர்ச்சிப் புரதம் எடுக்கும் இந்த செயல்முறை மலிவானது என்றும் பல மடங்கு அதிக உற்பத்திக்காக மாற்றியமைக்க ஏற்றது என்றும் நம்பப்படுகிறது.

 

ஆனால் இப்போதைக்குச் சிறப்பான வளர்ச்சிப் புரதங்களை உற்பத்தி செய்யக்கூடிய பார்லியை உருவாக்கும் முயற்சி, ஆராய்ச்சிக்கட்டத்தில் இருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்கு, வெவ்வேறு நிலப்பகுதிகளில் பார்லியை வளர்த்து பரிசோதனைகள் நடத்தவேண்டும். எரிமலைகள், புவிவெப்ப மையங்கள் கொண்ட ஐஸ்லாந்தின் விநோத நிலப்பரப்புதான் இதற்கு ஏற்றதாக உள்ளது.

 

மவுண்ட் ஹெக்லா எரிமலைகளிலிருந்து வரும் பஞ்சுபோன்ற பூமிஸ் கற்களில் பார்லியை வளர்க்கிறார்கள். பூமிஸ் கற்களிலிருந்து பார்லிக்கு ஊட்டச்சத்துக்கள் எதுவுமே கிடைக்காது என்பதால், பார்லிக்கு என்ன ஊட்டச்சத்து தேவையோ அதை மட்டும் வெளியிலிருந்து கொடுக்க முடியும்.

 

``அதிநவீன பசுமைக்குடிலில் பார்லியை வளர்க்கிறோம். புவியிலிருந்து கிடைக்கும் ஆற்றலால் இது வெப்ப மூட்டப்படுகிறது. இங்கு ஹைட்ரோபோனிக் முறையில் விவசாயம் செய்கிறோம். விளக்குகளை எப்போது போடுவது, அணைப்பது, எப்போது ஜன்னல்களைத் திறப்பது, எப்போது கார்பன் டை ஆக்சைடை அனுப்புவது, செடிகளுக்கு என்ன ஊட்டச்சத்து தருவது என்று எல்லா முடிவுகளையும் கம்ப்யூட்டர்தான் எடுக்கிறது.`

 

ஆனால் காலப்போக்கில் இந்த செடிகள் திறந்தவெளி நிலங்களில் வளர்க்கப்பட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட்டால் மட்டுமே உலகளாவிய செயற்கை இறைச்சிக்குப் போதுமான வளர்ச்சிப் புரதங்கள் கிடைக்கும். பல்வேறு சூழல்களில் வளரக்கூடியது என்பதாலும் அருகில் உள்ள பிற செடிகளோடு மகரந்த சேர்க்கையில் ஈடுபடாது என்பதாலும் பார்லி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

 

இந்தநிலையில், ஐஸ்லாந்தில் உள்ள மற்றொரு நிறுவனம், சாப்பிடுவதற்கு ஒரு புதிய பொருளைப் பரிந்துரைக்கிறது. அதுதான் பாசி!

 

வாக்ஸா டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் நுண் பாசிகள் புரத்துச்சத்தும், ஒமேகா 3 ஊட்டச்சத்தும் நிறைந்தவை. வழக்கமான பயிர்களுடன் ஒப்பிடும்போது இவற்றை வளர்க்க, குறைவான வளங்களே இருந்தால் போதுமானது.

 

``இந்த அமைப்பின்மூலம் 500 மடங்கு குறைவான தண்ணீர், 1500 மடங்கு குறைவான நிலம் இருந்தாலே அதிகமான புரதங்களை உருவாக்கலாம்.`` என்கிறார் வாக்ஸா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் க்ரிஸ்டின் ஹாஃப்லிடாசன்.

 

பாசி என்பது தாவர வகையைச் சேர்ந்தது என்பதால் இதில் இன்னொரு சூழல் சாதகமும் இருக்கிறது. அது ஒளிச்சேர்க்கை.

 

புவி வெப்ப அமைப்புகள் கொண்ட ஐஸ்லாந்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரமும், வெந்நீரும் உருவாக்கப்படுகிறது. ஆகவே இந்த பாசி வளர்ப்பு முறை கிட்டத்தட்ட கரிம உமிழ்வுகளே இல்லாமல் இயங்குகிறது. இங்கு ஒளிச்சேர்க்கையும் நடப்பதால் கூடுதலான கார்பன் டை ஆக்சைடும் உறிஞ்சப்படுகிறது. இதை 'நெகட்டிவ்' கரிம உமிழ்வு கொண்ட செயல்முறை எனலாம்.

 

உலகிற்கு உணவளிக்கவேண்டுமானால் இதுபோன்ற பண்ணைகள் எல்லா இடங்களிலும் நாடுகளிலும் அமைக்கப்படவேண்டும். ஆனால், அந்த இடங்களில் ஐஸ்லாந்தைப் போலவே புவிவெப்ப அமைப்புகளும் எரிமலைகளும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

 

சிறு இடங்களில் பயிர்களை வளர்ப்பது, அதிலிருந்து ஆக்சிஜனை உருவாக்குவது ஆகியவை செவ்வாய்க் கிரகத்திலோ நிலவிலோ கூடப் பயனளிக்கலாம் என வாக்ஸா கருதுகிறது.

 

நம்மால் பாசிகளை விரும்பி சாப்பிட முடிந்தால், விரைவில் இவையெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது.

நன்றி :பிபிசி தமிழ்

0 comments:

Post a Comment