நாரிவலி – தவிர்ப்பது எப்படி?

மனித உடலில் கீழ்ப்புற முதுகுப்பகுதி நாரிப்பகுதி எனப்படும் இது L1,L2,L3,L4,L5 என்ற ஐந்து நாரிய முள்ளென்புகளால் ஆனது. இப்பகுதியானது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உடலில் முழுமையான பாரத்தையும் உடல் பாரத்திற்கு மேலதிகமாக சுமக்கும் பாரத்தையும் தாங்கும் பகுதியாக அமைகின்றது. இவ்வழுத்தமானது வளைதல் திரும்புதல் பாரத்தை உயர்த்துதல் போன்ற சாதாரண உடல் தொழிற்பாடுகளின் போது பலமடங்கு அதிகரிக்கின்றது.

 

எனவே குறித்த செயற்பாட்டின் பொருட்டு நாரிப்பகுதியானது நன்கு சிறத்தலடைந்துள்ளது. ஆனாலும் உடலின் மற்றைய பாகங்களுடன் ஒப்பிடும் போது குறித்த நாரிப் பகுதியிலுள்ள என்பு தசை நரம்பு கசியிழையம் போன்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் மிக அதிகளவில் காணப்படுகின்றன.

 

இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படும்போது குறித்த நாரிப்பகுதியில் மிகத் தீவிரமான வலி ஏற்படுகின்றது. இது முதுகுவலி அல்லது நாரிவலி என்ற பொதுவான சொற்பிரயோகம் கொண்டு அழைக்கப்படுகின்றது.

 

சாதாரண மக்கள் தொகையில் பத்திற்கு 4 பேர் வரை தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு சந்தர்பத்தில் குறித்த பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர் இவ் அளவானது மிக குறுகியகால அளவினுள் மிகவேகமாக அதிகரித்து செல்கின்றது. மேலும் வளர்ச்சி அடைந்த நாடுகளில்  இவ்  அளவானது 10க்கு 8  பேர் வரை இருக்கலாம் என இப்போது அனுமானிக்கப்படுகின்றது. இதற்கு இன்றைய நவீன உலகில் மக்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பிரதான  பங்கைக்கொண்டிருக்கின்றன.

 

நாரி வலி  20 வயது தொடக்கம் 40 வயது வரையிலான  காலப்பகுதியிலேயே பொதுவாக ஆரம்பிக்கின்றது. மேலும் 40 வயதுக்கு அதிகமான நபர்களிடம் இது ஒரு பொதுவான பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

 

நாரிவலியானது திடீரென்று அல்லது படிப்படியாக அல்லது விழுதல் காயமடைதல் போன்றவற்றின் உடனடி விளைவாக ஏற்படுகின்றது. நாரிவலியானது 90% வரை நாரிப் பகுதியின் மூட்டு, தசை, எலும்பு, கசியிழையம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாகவும் மிகுதி 10% வயிற்றுப் பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாகவும் ஏற்படுகின்றது. அதாவது சிறுநீரக மற்றும் சிறுநீர்ப்பை கற்கள் போன்ற வயிறு சார்ந்த பிரச்சினைகளும் நாரிவலி ஏற்பட காரணமாக அமைகின்றன.

 

கூன் விழுந்த நிலையில் அமர்ந்திருத்தல், வேலை நிமித்தமாகத் தொடர்ச்சியாக கணினி முன்னால் உட்கார்ந்தே இருக்கவேண்டிய சூழல், தினமும் இருசக்கரவாகனங்களில் நெடுந்தொலைவு பயணித்தல், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணம் செய்தல், அதிக எடையைத் தூக்குதல், போதுமான உடற்பயிற்சி இல்லாமை, ஊட்டச் சத்துக்குறைவு, உயரமான இடத்திலிருந்து குதித்தல், திடீரெனக் குனிதல் அல்லது திரும்புதல், உடல்பருமன் போன்ற காரணங்களால் முதுகெலும்பில் அழுத்தம் அதிகமாகி நாரிப்பகுதியில் வலி ஏற்படும்.

 

Osteomyelitis, Ankylosing Spondylitis, காசநோய் போன்றவற்றின் பாதிப்பாலும் நாரிப்பகுதியில் வலி ஏற்படும். வாகனவிபத்துகள் அல்லது விளையாடும்போது ஏற்படுகிற விபத்துகள் காரணமாக எலும்பு முறிந்து இந்தவலி ஏற்படலாம். சிலருக்குப் பிறவியிலேயே தண்டுவடம் செல்லும் பாதை குறுகலாக (Spinal canal stenosis) இருக்கும் இவர்களுக்குச் சிறுவயதிலேயே முதுகுவலி ஏற்படும் முதுகெலும்பில் கட்டி அல்லது காயங்கள், தசைப்பிடிப்பு, தசைநார் வலி மனஅழுத்தம் நீரிழப்பு போன்றவற்றாலும் நாரிப்பகுதியில் வலி ஏற்படும்.

 

ஆரம்பத்தில் இந்தவலியானது அவ்வப்போது கீழ் முதுகில் ஏற்படும். திடீரென்று ஒருநாள் இந்த வலி கடுமையாகித் தொடைக்குப் பின்புறத்திலோ, காலுக்கோ மின்சாரம் பாய்வதைப் போல பரவும். படுத்து உறங்கும் போது இந்தவலி குறைந்து பிறகு நடக்கும்போது அதிகரிக்கும். மிக பிந்திய நிலைகளில் இவ்வலி தூக்கத்தைக் கெடுக்கும். காலில் உணர்ச்சி குறையும். நாளாக ஆக மரத்துப்போன உணர்வும் ஏற்படும். தும்மினாலோ சிறுநீர் அல்லது மலம் கழித்து முக்கினாலோ வலி கடுமையாகும்.

 

நாரிவலிக்குப் பலகாரணங்கள் இருப்பதால் பொருத்தமான மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெறவேண்டியது முக்கியம். நாரிப் பகுதியின் மூட்டு, தசை, எலும்பு, கசியிழையம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக  ஏற்படுகின்ற நாரிவலிக்கு வலிநிவாரணிகளும் தசைகளைத் தளர்த்தும் மருந்துகளும் பலன் தரும். அத்தோடு முழுமையாக ஓய்வு எடுப்பது இடுப்பில் பெல்ட் அணிவது இயன்மருத்துவ(பிசியோதெரபி) சிகிச்சையைத் தொடர்ச்சியாக பெற்றுக்கொள்வது என்பவற்றின் மூலம் குணமாக அதிக வாய்ப்புகள் உள்ளன. மேற்கூறிய சிகிச்சைகள் பயனளிக்காத சந்தர்ப்பங்களில் Lumber Endoscopic Discectomy போன்ற நவீன அறுவைசிகிச்சைகள் மூலம் நிவாரணம் பெற முடியும்.

 

 

தற்போதைய நவீன ஆய்வுகளின் அடிப்படையில் பொருத்தமான சிகிச்சைகளை எடுக்கும் பட்சத்தில் 40% தொடக்கம் 90% வரையிலான  நபர்களில் நாரி  வலியானது  குறிப்பிடத்தகுந்த அளவில் குறைவடைவது / அற்றுப்போவது அவதானிக்கப்பட்டுள்ளது.


மிகத் தீவிரமான நாரி வலியானது மனிதர்களில் தீவிரமான இயலாமைத் தன்மையையும் தங்கி இருக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்துகின்றது. ஆனாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவ்வகையான  நாரி வலி ஏற்படுவதை சாதாரண வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் தவிர்த்துக்கொள்ள முடியும். ஏனெனில் எப்பொழுதும் வருமுன்  காப்பதே சிறந்ததாகும்.

 

அலுவலகத்தில் வேலை செய்யும்போது முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து வேலை செய்யவேண்டும் நாற்காலியில் அதிகநேரம் உட்காரும்போது நாரிப்பகுதியில் சிறிய தலையணை ஒன்றினை வைத்துக்கொள்ளலாம்.

நடக்கும் போது கூன் விழாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும்.

ஒரேமாதிரியான நிலையில் வேலை செய்யும்போது, அவ்வப்போது உடலில் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

 

எந்த வேலையையும் தொடர்ந்து மணிக்கணக்கில் ஓரேநிலையில் அமர்ந்தவாறு செய்யாது வேலைக்கு இடையில் சிறிதளவு ஓய்வு எடுத்தல் அவசியம்.


சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்வது முதுகுவலி வராமல் தடுக்கும்.


குளிர் பானங்கள் மென் பானங்கள் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றில் உள்ள சில இரசாயனங்கள் கல்சியத்தைக் குடல் உறிஞ்சுவதை தடுக்கும். இதனால் இளமையிலேயே எலும்புகள் வலுவிழந்து விடும் எனவே இவ்வகை உணவுகள், பானங்களைத் தவிர்ப்பது சிறந்தது.


எலும்பையும் தசையையும் வலுப் படுத்தும் கல்சியம் மற்றும் புரதம் மிகுந்த பால், முட்டைவெள்ளைக்கரு, சோயா, உழுந்து, கடலை போன்ற உணவு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுவது சிறந்தது.

 

முதுகுவலி உள்ளவர்கள் மெல்லிய மெத்தையில் சரிந்தவாறு படுக்கவேண்டும். கால்களைச் சிறிது மடித்தநிலையில் கால்களுக்கு இடையில் தலையணையை வைத்துப் படுத்துக்கொள்ளும் போது நாரிவலி குறைவடையும்.

அதிக எடையைத் உயர்த்துதல் கூடாது அப்படி உயர்த்த வேண்டி இருந்தால் எடையைத் உயர்த்தும் போது, இடுப்பை வளைத்து உயர்த்தாமல் முழங்காலை முன்புறம் மடக்கி உயர்த்த வேண்டும்.


சாதாரண கழிப்பறைக்குப் பதிலாக மேற்கத்தியக் கழிப்பறையைப் பயன்படுத்துவது சிறந்தது

பெண்கள் உயரமான காலணிகளை (High heel) அணிவதை தவிர்ப்பது சிறந்தது.


இருசக்கரவாகனங்களில் கரடுமுரடான பாதைகளில் செல்வதைக் குறைத்துக்கொள்ளவேண்டும்

 

நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும்போது நிமிர்ந்து ஸ்டியரிங் அருகில் அமர்ந்து ஓட்டவேண்டும்.

நாரி வலிஉள்ளவர்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது, நடுவிலுள்ள இருக்கையில் உட்கார்ந்து பயணிப்பது நல்லது.

 

முதுகுத் தசைகளை வலுப்படுத்தும் மற்றும் இழுவைத் தன்மையை (Flexibility) அதிகரிக்கும் உடற்பயிற்சிகளைத் தினமும் மேற்கொள்வது சிறந்ததாகும்.

 

மேலும் நாரிவலி ஆரம்பமான உடனேயே பொருத்தமான மருத்துவரை அல்லது   இயன்மருத்துவரை (பிசியோதெரபிஸ்ட்டை)  சந்தித்து  பொருத்தமான  சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது பின்னர் ஏற்படும் அதி தீவிரமான  நாரி வலியைத் தவிர்த்துக்கொள்வதில்  பேருதவி புரியும்.

 

தி.கேதீஸ்வரன் (B.Sc PT)

இயன்மருத்துவர்

மாவட்ட பொது வைத்தியசாலை

வவுனியா

0 comments:

Post a Comment