பழகத் தெரிய வேணும் – 17

 


👧-எனக்கு என்னைப் பிடிக்கும்-

என்னை யாருக்குமே பிடிக்கவில்லை,’ என்று அழுதான் அச்சிறுவன்.

பாட்டி அளித்த அபரிமிதமான செல்லத்தில் வளர்ந்து, மனத்திற்குத் தோன்றியபடி நடந்து, ஒருவரையும் மதிக்காது நடந்துகொண்டதன் விளைவு அது. ஆனால் அதெல்லாம் புரியும் வயதாகவில்லை அப்போது.

 

சிறு வயதில், ‘புத்திசாலி, சமர்த்துஎன்றெல்லாம் பிறர் பாராட்டுவதைக் கேட்டு, ‘நாம் அப்படித்தான்என்று நம்பிவிடுகிறோம். யாரும் புகழாது, பழிப்பிற்கு ஆளானால் அச்சிறுவனைப்போல்தான் வருந்த நேரிடுகிறது.

 

இருப்பினும், அறியாப் பருவத்தில் தவறு செய்துவிட்டு, அதையே எண்ணி வருந்துவது வீண். பெரியவர்களானதும், கடந்த காலக் கசப்புகளிலிருந்து மீண்டால்தான் நிம்மதி கிடைக்கும்.

 

👩-பிறருக்குப் பிடிக்காவிட்டால் என்ன?

எனக்கு என்னைப் பிடிக்கும்!’ என்ற மனப்பான்மையை ஒருவர் வளர்த்துக்கொள்வது நல்லது.

 

👵சுயநலமா?

தன் நலனை ஒருவர் கவனித்துக்கொள்வது சுயநலம் அல்ல. பிறரை ஒதுக்கிவிட்டு, தன்னையே எப்போதும் கவனித்துக் கொண்டிருந்தால்தான் சுயநலம்.

 

மூன்று வயதான வினு கடைக்குட்டியானதால் குடும்பத்தில் எல்லாருக்கும் செல்லம்.

 

எனக்கு வினுவைப் பிடிக்கும்,” என்று தன்னைக் கண்டிப்பும் அன்புமாக வளர்த்த தாயிடம் அடிக்கடி சொல்வான். அக்குணத்தினால் அவனுக்குப் பார்த்தவர்கள் எல்லாரையும் பிடித்துப் போயிற்று. அவர்களும் அவனது அன்பைத் திரும்ப அளித்தார்கள்.

 

👫அனுசரித்துப் போய்விடு!

பிறருக்கு ஏற்றபடியெல்லாம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெண்களுக்குப் போதிக்கப்படுகிறது. அப்போதுதான் அவள் எவ்விதக் கண்டனத்துக்கும் ஆளாகமாட்டாள்.

 

ஒரு பெண்ணானவள் தந்தைக்கு அன்பான மகள், கணவனுக்கு..,’ என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். அவளுக்கு அவள் யார் என்பது முக்கியமென்று எவருக்கும் தோன்றவில்லை.

 

கதை:

பிறருடைய சந்தோஷம்தான் உன் சந்தோஷம்,’ என்று கூறியே வளர்த்திருந்தார்கள் விசாலியை.

பத்து வயதிலிருந்தே பிறருக்காக ஓயாது உழைத்தாள். அவர்கள் செய்ய ஆரம்பித்த வேலையைப் பிடுங்கிச் செய்வாள். தன் நலனையும் கவனிக்காது விட்டுவிட்டால் எவருக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்காது.

என்ன குணம்!’ என்ற பிறரின் பாராட்டு கிடைத்தது.

அவளுடைய பதின்ம வயதில், தன்னலம் பாராத அக்குணத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள் கயமையான சில உறவினர்கள்.

விவரம் புரியாத அந்த வயதில், “எல்லாருக்கும் என்னைப் பிடிக்கிறது!’ என்ற பூரிப்பு ஏற்பட்டது. இருபது வயதில்தான் தன் இழப்பு என்னவென்று அவளுக்குப் புரிந்தது.

திருமணமானபின், கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறான் என்று புரிந்தபோதும், அவனை எதிர்க்கத் தோன்றவில்லை.

வழக்கம்போல், ‘என்னுடைய மகிழ்ச்சியா பெரிது!’ என்று விட்டுக் கொடுத்தாள். ஆனால், வருத்தம் ஏற்படாமல் இருக்குமா?

 

உடற்பயிற்சி, ஆகாரம், ஓய்வு எல்லாம் நமக்கு நாமே செய்துகொள்ளும் நன்மை. அத்தேவைகளைக் கவனிக்காது விட்டால் உடலும் மனமும் ஒருங்கே கெடும் அபாயம் இருக்கிறது.

 

நல்ல பெண்என்று பெயரெடுக்க எந்தப் பெண்ணும் விசாலியைப்போல் தன்னையே கரைத்துக்கொள்ள வேண்டியதில்லை.

 

தனக்குப் பிடித்த காரியத்திற்காக நேரத்தைச் செலவிடுவது சுயநலம் என்று பெண்களை நம்பவைத்திருக்கிறார்கள். நம் நலனில் நம்மைவிட வேறு யாருக்கு அதிக அக்கறை இருக்கமுடியும்?

 

📺தொலைக்காட்சியில் ஒரு பாடம்

அண்மையில், தொலைக்காட்சியில்கோடீஸ்வரிநிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள். பெண்கள் மட்டுமே கலந்துகொண்ட நிகழ்ச்சி அது.

 

சொல்லிவைத்தாற்போல், அனேகமாக எல்லாப் பெண்களும், ‘வெல்லும் பணம் கணவருக்கு, குழந்தைகளுக்கு,’ என்றுதான் கூறினார்கள்.

 

அவர்களுக்கென்று தனிப்பட்ட ஆசை எதுவுமே கிடையாதா?

 

இருக்கலாம். ஆனால், பிறருக்காக வாழ்ந்தால்தான் நல்ல பெண் என்று சமூகம் எதிர்பார்த்து, அதன்படி நடந்து பழகியவர்கள் ஆயிற்றே!

 

நிகழ்ச்சியைச் செம்மையாக வழிநடத்திய நடிகை ராதிகா சரத்குமார் இப்பெண்களைப் பலமுறை தூண்டி, அவர்களுக்கும் மனம் என்று ஒன்று இருக்கிறது, அதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதில் தப்பில்லை என்று உணரவைத்தார்.

 

ஒரு கிராமப்புறத்திலிருந்தபடித்தபெண்ணுக்கு ஜீன்ஸ் அணிய ஆசை. ஆனால், தாய் மறுத்துவிட்டாள்பிறர் பழிப்பார்கள் என்று அஞ்சி. அவளுடைய ஆசை அந்நிகழ்ச்சிமூலம் நிறைவேற, பல பெண்கள் அவளைப் பின்பற்றினார்கள்.

 

நான் இப்படி இருந்தால்தான் பிறருக்குப் பிடிக்கும்!’ என்று வளைந்துகொடுப்பவர்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கலாம். பிறரது புகழ்ச்சியும் கிடைக்கும். ஆனால், நிறைவேறாத ஆசையை அடக்குவதால் ஏற்படும் ஏக்கத்தைத் தவிர்க்க முடியாது.

 

பெண்கள் தம் ஆசைகளை, அனுபவிக்கும் துயரங்களை, வெளிக்காட்டாது இருப்பதால் பிறருக்கு அவர்களது மனம் புரிவதில்லை. ‘பெண்களின் மனம் கடலைவிட ஆழமானது!’ என்று சொல்லிவிடுகிறார்கள்.

 

உனக்கென்று ஏதாவது ஆசை இருக்கிறதா?’ என்று கேட்டுப்பாருங்கள்.

 

அவர்களுக்கே தெரியாது, ஏதாவது ஆசை ஒட்டிக்கொண்டிருக்கும்.

 

கதை:

ஆறு வயதான மாது, சுறுசுறுப்பும் தன்னம்பிக்கையும் நிறைந்தவன்.

உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டபோது, “எனக்கு ஒரு குதிரை வேணும்,” என்றான்.

பொம்மைக் குதிரையா?”

இல்லை, நிஜக்குதிரை! என் கல்யாணத்திலே நான் அதுமேலே ஒக்காந்து வருவேன்!”

இவனுக்குத் தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்திருக்கிறது.

குழந்தைத்தனமாக ஏதோ பிதற்றுகிறான் என்று அலட்சியம் செய்யாமல், அவனையும் மதித்து, பேச்சுக் கொடுத்ததால் தன்னைப் பற்றி யோசிப்பது தவறில்லை என்று அவனுக்குப் புரிகிறது.

 

👯ஒப்பீடு வேண்டாமே!

பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டாலோ, ‘வித்தியாசமாக இருக்கிறோமே!’ என்று மனம் நொந்தாலோ நிம்மதி பறிபோய்விடும்.

 

நான் ஆதர்ச மனைவியாக இருப்பேன்!’

 

பிறருடைய மகிழ்ச்சிக்காக உயிரையே கொடுப்பேன்!’

 

இம்மாதிரியான உறுதிமொழிகள் ஏன்? பிறர் நம்மைவிட உயர்ந்தவர்கள் என்று ஒத்துக்கொள்வதுபோல் ஆகிவிடுகிறதே!

 

கதை:

சிறுவயதிலிருந்தே, தனது ஒவ்வொரு சொல்லாலும் செயலாலும் பிறரது ஆமோதிப்பை எதிர்பார்த்தாள் பூமா. பாராட்டு பெறாதவர் கண்டனத்துக்குரியவர் என்று நம்பினாள்.

 

இப்போக்கால், தன்னம்பிக்கை குறைந்துவிடும் என்பதை அவள் உணரவில்லை. சற்றுப் பெரியவளானதும், அதிகாரத்தால் தன் பலவீனத்தை மறைத்துக்கொண்டாள்.

 

நம்மைப்பற்றி நாமே நல்லவிதமாக எண்ணும்போது, நம்மையே மதிக்கிறோம். தன்னம்பிக்கை வளர, நாம் செய்யும் சிறு பிழைகளுக்காக மனம் உடைந்துபோய்விடுவதில்லை.

 

நாமேதான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கவோ மாற்றிக்கொள்ளவோ முடியும்.

 

மிக அழகாக இருந்த ஒரு நடனமணியைக் கேட்டார்கள், “நீங்கள் எப்படி உலகளாவிய எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுகிறீர்கள்? இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்?”

 

அவள் அளித்த பதில்: “தினமும் காலை கண்ணாடிமுன் நின்று, `YOU, HANDSOME DEVIL!’ என்று என்னை நானே மெச்சிக்கொள்வேன்!”

 

:-நிர்மலா ராகவன் / எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

தொடரும்.... 
👉👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

0 comments:

Post a Comment