நான்மணிக்கடிகை/19/வாழ்க்கை உண்மைகளை வெளிக்காட்டும்..


சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.


 தொடர்ச்சி

91. 👉

இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்;

வளம் இலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்

கிளைஞர் இல் போழ்தில், சினம் குற்றம்; குற்றம்,

தமர் அல்லார் கையகத்து ஊண்.  

:-இளமைப் பருவத்தில் கல்லாமை குற்றம். செல்வ வளம் இல்லாதபோழ்து வள்ளல் தன்மையுடன் நடத்தல் குற்றம். உறவினர் துணையில்லாத போழ்து பிறரைச் சினத்தல் குற்றம். உள்ளன்பு இல்லாதவர்களிடம் உணவு பெற்று உண்பது குற்றம்.

 

92. 👉

எல்லா இடத்தும் கொலை தீது; மக்களைக்

கல்லா வளரவிடல் தீது; நல்லார்

நலம் தீது, நாண அற்று நிற்பின்; குலம் தீது,

கொள்கை அழிந்தக்கடை.

:-எவ்வகையாலும் கொலை செய்தல் தீதாகும். குழந்தைகளைப் படிக்காமல் வளர்ப்பது தீதாகும். நாண் இல்லாத மகளிரின் அழகு தீதாகும். கொள்கை அழிந்து விட்டால் குலம் தீதாகும்.

 

93. 👉

ஆசாரம் என்பது கல்வி; அறம் சேர்ந்த

போகம் உடைமை பொருள் ஆட்சி; யார்கண்ணும்

கண்ணோட்டம் இன்மை முறைமை; தெரிந்து ஆள்வான்

உள் நாட்டம் இன்மையும் இல்.  

:-நல்லொழுக்கம் என்பது கல்வியின் பயன். அறம் செய்து செல்வத்தை நுகர்தல் செல்வத்தின் பயன் ஆகும். யாரிடத்தும் பாரபட்சம் பாராமல் நடுவு நிலைமையோடு நிற்றல் அரசாளும் முறையாகும். பிறரோடு கலந்து ஆராய்ந்து அரசாள்பவன் தனக்குத் தானே ஆராய்ந்து செயல்படுவான்.

 

94. 👉

கள்ளின் இடும்பை களி அறியும்; நீர் இடும்பை

புள்ளினுள் ஓங்கல் அறியும்; நிரப்பு இடும்பை

பல் பெண்டிராளன் அறியும்; கரப்பு இடும்பை

கள்வன் அறிந்துவிடும்.     

:-கள் பெறாமையால் உண்டாகும் துன்பத்தைக் கள் குடியன் அறிவான். நீர் பெறாமையால் உண்டாகும் துன்பத்தை வானம் பாடிப் பறவை அறியும். வறுமைத் துன்பத்தை (பொருள் இல்லாததால்) பல மனைவியரைப் பெற்றவன் அறிவான். ஒன்றை ஒளித்து வைப்பதில் உள்ள துன்பத்தைத் திருடன் அறிவான்.

 

95. 👉

வடுச் சொல் நயம் இல்லார் வாய்த் தோன்றும்; கற்றார் வாய்ச்

சாயினும் தோன்றா, கரப்புச் சொல்; தீய

பரப்புச் சொல் சான்றார்வாய்த் தோன்றா; கரப்புச் சொல்

கீழ்கள் வாய்த் தோன்றிவிடும்.     

:-அன்பில்லாதவர் வாயில் பழிச் சொற்கள் தோன்றும். கற்றவர்கள் வாயில் வஞ்சனையான சொற்கள் தோன்றாது. சான்றோர்கள் வாயில் தீய சொற்கள் தோன்றாது. கீழ்மக்கள் வாயில் மறைக்கின்ற சொற்கள் வெளிப்படும்.

 

நான்மணிக்கடிகை தொடரும்…..பகுதி:20 வாசிக்க அழுத்துக... 👉Theebam.com: நான்மணிக்கடிகை/20/வாழ்க்கை உண்மைகளை வெளிக்காட்டும்…: 


ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉

Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...

 

தேடல் தொடர்பான தகவல்கள்:

நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, குற்றம், தீது, சொல், தீதாகும், வாயில், இடும்பை, இலக்கியங்கள், சொற்கள், அறியும், நான்மணிக்கடிகை, பதினெண், அறிவான், கீழ்க்கணக்கு, உண்டாகும், பெறாமையால், தோன்றும், கரப்புச், தோன்றாது, தோன்றா, நீர், வாய்த், துன்பத்தை, பொருள், கல்லாமை, வளம், இளமைப், கல்வி, சங்க, கொலை, குலம், பயன், அறம், என்பது, கொள்கை, ஆராய்ந்து  [nanmanik kadikai]

0 comments:

Post a Comment