தாய்மாரின் சுகப்பிரசவத்திற்கு....


கர்ப்பகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் உணவு முறைகள் பற்றி பார்க்கலாம். குழந்தை வயிற்றில் இருக்கும்போது, எடை அதிகமாக உள்ள பெண்கள் 5 முதல் 7 கிலோ வரை எடை கூடலாம். அதுவே ஒல்லியானவர்களாக இருந்தால், 12 முதல் 15 கிலோ வரைகூட எடை ஏறலாம். தவறில்லை.

 அதேநேரத்தில், முதல் 3 மாதங்களுக்கு எடை கூடவேண்டும் என்ற அவசியம் இல்லை. வாந்தி எடுப்பதால் சிலர் எடை குறைவார்கள்; அதுவும் தவறில்லை. அடுத்து, 3-ல் இருந்து 5 மாதங்களுக்கு 2 முதல் 3 கிலோ வரை ஏறலாம். அதன்பிறகு, 5-ல் இருந்து 10 மாதங்களுக்கு 5 முதல் 7 கிலோவரை எடை கூடலாம்.
முதல் 5 மாதங்களுக்கு உணவு அளவை அதிகப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. ஐந்தாவது மாதத்துக்குப்பிறகு, 1 வேளைக்கு 300 கலோரி கொண்ட உணவை எடுத்துக்கொண்டால் போதுமானது. உதாரணத்துக்கு 1 இட்லி, 1 வாழைப் பழம், 1 டம்ளர் பால். இதில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற உணவை 300 கலோரி அளவுக்கு மாற்றியும் உட்கொள்ளலாம்.
சில பெண்கள், ‘குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடுகிறேன்என்று, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். இதனால், அதிக குண்டாகி சிசேரியன் செய்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ஒல்லியாக இருப்பவர்களைவிட குண்டாக இருக்கும் பெண்கள்தான் உணவு விஷயத்தில் கூடுதல் ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும்.
முதலில் நிறைய சாப்பிடக் கூடாது. கட்டாயம் சர்க்கரை கலந்த உணவையோ, அதிக எண்ணெய் கலந்த பதார்த்தத்தையோ உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சாதாரணமாக, எல்லாப் பெண்களும் எண்ணெய், சர்க்கரை, பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஒல்லியானவர்கள் எந்த பழங்கள், காய்கறிகளை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், குண்டானவர்கள் அதிக சர்க்கரை உள்ள வாழை, பலா, மாம்பழத்தைக் கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும். அதேமாதிரி கிழங்கு வகைகள், கொட்டைகள், மாமிசங்களையும் தவிர்க்க வேண்டும். இரும்புச்சத்து நிறைந்த பேரிச்சம்பழத்தை தேனில் நனைக்காமல் சாப்பிடலாம். ஒரே வரியில் சொல்வதென்றால் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்த்தால், சுகமான சுகப்பிரசவம்தான்!’’

0 comments:

Post a comment