இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்{பகுதி 04 "B":"}

Death & Its Beliefs of Tamils:
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்/ 
Compiled by: Kandiah Thillaivinayagalingam]

மரணம் குறித்த சொற்கள்[11 to 25]"


[11]மாண்டார்

"யாண்டுபல வாக , நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன்தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே."
புறநானூறு Purananuru 191

பிசிராந்தையர் என்ற சங்க புலவன் ஒருவன் தன் நரையின்மைக்குச் சொன்ன காரணங்களுள் ஒன்று ‘மாண்ட மனைவி’. அதன் பொருள்  மாட்சிமை கொண்டது  எனப்படும். மாண்ட என்னும் சொல்லை இறந்த என்று தவறாகவே புரிந்துகொள்ளுமளவு அச்சொல் இப்ப பழக்கத்தில் வந்து விட்டது.  

[12]காலகதி அடைந்தார்

காலத்தின் கதி அடைதல்; ஒருவர் வயதாகி மரணம் அடைந்தார் என்பதைக்
குறிக்கும் மங்கலப் பயன்பாடு.வயதான மனித ஜீவனின் இயற்கையான இறப்பைக் குறிக்கப் பத்திரிகைகள் முன்பு பயன்படுத்தி வந்த சொல் காலகதி.
அதாவது காலத்தின் கதி என்பது இயற்கையான மரணத்தை அல்லது மூப்பு இறப்பை குறிக்கிறது. 

[13]காலமானார்

இங்கே,ஏறக்குறைய காலமானார் என்ற சொல்லின் முந்தைய வடிவமாகக்கூடக் ‘காலத்தினடை’ என்ற பொருள் தரும் காலகதி என்ற சொல்லைக் கருதலாம்.மேலும் இறந்தார் என்பதன் இடக்கரடக்கல்[euphemism] காலமானார் என்பதாகும் 

நாகரிகம்  கருதி,மற்றவர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும்.“இடக்கர்” என்பதற்கு சொல்லக்கூடாத சொல் என்று பொருள். அமங்கள நிகழ்வை மங்களப்படுத்திக்கூறுவதும் இடக்கரடக்கலாகவே கொள்ளப்படும்.

[14]மடிந்தார்

மடி என்பதன் வினைச்சொல்:துணி அல்லது காகிதத்தைப் போன்ற பொருளை மடக்கி சிறிதாக்குதல் அல்லது இறந்து போதல் ஆகும் 

[15]துஞ்சல்

"துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப் புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ."[திருப்பொன்னூசல் - திருவாசகம் 332]
இங்கு "துஞ்சல் பிறப்பு அறுப்பான்" - இறப்பு பிறப்புகளை அறுப்பவனுமாகிய என்று பொருள் படுகிறது.பண்டைய இலக்கியத்தில் இறப்பு துஞ்சல் என்று வழங்கப்பட்டது.இறப்பை நீண்ட தூக்கமாகக் கருதியதால் துயிலுதல் என்ற பொருளுடைய துஞ்சல் வந்திருக்க கூடும்.துயில் = ஆழ்ந்த அசைவில்லாத நிலை.துஞ்சல் என்பது துயிலின் நீட்டமே ஆகும் 

[16]கண் மூடினார்

கண் மூடினார் என்ற வழக்கும் ஏறக்குறைய தூக்கம் என்பதன் தொடர்பில் உருவாகியிருக்கக்கூடும்.

[17]போய்ச் சேர்ந்தாரு/போய்ட்டாரு

போய்ச் சேர்ந்தாரு, போய்ட்டாரு போன்றவை சொர்க்கம், நரகம் போன்ற மத நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவான பண்பாட்டு சொற்களாகும் 

[18]மண்டயப் போட்டாரு
[19]தவறிட்டாரு 
[20]டிக்கெட் வாங்கிட்டாரு 
[21]உயிர் நீத்தார்
[22]பிரிந்துவிட்டார்
[23]ஆவி நீத்தார்
[24]முடிவெய்தினார்
[25]இயற்கை எய்தினார்

என்னும் மதச் சார்பற்ற சொற்கள் மூலமாகவும்  இரங்கல் குறிப்புகளை எழுதலாம் பயன்படுத்தும் மக்களின் பண்பாட்டுத் தரத்தையும் ஒருவாறு உணர்த்திவிடுவன இவை.மனித இறப்பால் பூமிக்குப் பயன்தானே! பாரம் குறைகிறது மற்றும் நிலம் வாழ் நுண் உயிர்க்கு இறந்த உடல் உணவாகப் பயன்படுகிறது.அதனால்தானோ என்னவோ ‘பூமி லாபம்’ என்ற சொல்கூடப் பழந்தமிழில் மரணத்தையே குறித்தது என்கிறார்கள் .

நாம் மேலே கூறியவாறு ஆன்மத்துறை சாராத உலக வாழ்க்கை ஒரு தற்காலிகமானதே.நிறைந்த துயர்மிகுந்ததும், மகிழ்ச்சியற்றதும்  மாறக்கூடியதும் ஆகும்.நேற்று மாதிரி இன்று இருப்பதில்லை.இன்று மாதிரி நாளை இருக்கப்போவதில்லை.வாழ்க்கை  என்பது ஒரு மாயை,ஒரு பரம ரகசியம்.அடுத்தது என்ன நடக்கும் என்று எமக்கு தெரியா.இந்த நிலையற்ற வாழ்க்கையில்  நாம் சம்பாதித்த எமது விவேகம் அல்லது மெய்யறிவு  ஒன்றே எமது வாழ்விற்கு ஒரு கருத்தை/மதிப்பை கொடுக்கிறது.ஆகவே  முடிவான உண்மையை அறியும் தேடுதலை கைவிட வேண்டாம்.ஏனென்றால் உண்மையை அறிந்தவுடன்,உங்கள் வாழ்க்கை ஒரு கருத்துள்ளதாக மாறுகிறது.ஆகவே இந்த நிலையற்ற வாழ்க்கையில் நிலையான உண்மையை தேடி அறிதலில் ஒரு தவறும் இல்லை.இது சும்மா நேரத்திற்கு நேரம் குடித்து,சாப்பிட்டு,உறங்குவதை விட எவ்வளவோ மேல்! 

அதன் ஒரு படியாக எமது பண்டைய இலக்கியம் என்ன கூறுகிறது என அடுத்த பகுதியில் பார்ப்போமா ?

 அடுத்தவாரம் -பகுதி 05:"பண்டைய இலக்கியத்தில் மரணம்" தொடரும் 

0 comments:

Post a comment