தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி :04

 [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
 [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது]

இன்றில் இருந்து,2.5 மில்லியன் ஆண்டுகளுக்கும் 10,000 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட  பழைய கற்காலத்தில் அதாவது விவசாயத்திற்கும் கைத்தொழிலிற்கும் முற்பட்ட காலத்தில்,மனித இனம் பொதுவாக வேட்டையாடுபவராகவும்,உணவு சேகரிப்போராகவும்,ஒரு நாடோடி வாழ்க்கை முறையை மேற்கொண்டனர்.கனிகள்,காய்கள்,கிழங்குகள் மற்றும் விலங்குகளின் இறைச்சிகள் இவர்களது முக்கிய உணவுப் பொருள்களாகும்.பாலூட்டிகளை சோர்வடையும் வரை துரத்தினார்கள்.பெரிய சூறையாடும்[மற்றப் பிராணிகளைத் தின்கிற] விலங்குகள் விட்டுச் சென்ற பிராணிகளின் இறைச்சி, கொழுப்பு,உறுப்பு போன்ற அழுகு ஊன்களை உண்டார்கள்.என்றாலும் ஒருவாறு இறுதியில்,அவர்கள் மீனை தூண்டில் போட்டு பிடிக்கவும் ஈட்டி,வலை,அம்பு,வில்லு போன்றவை கொண்டு வேட்டையாடவும் கற்றுக்கொண்டனர். மனிதனின் பரிணாம வளர்ச்சியில்
உணவு முக்கிய இடத்தை பெறுகிறது.இது பல மாற்றங்கள் பெற்று,எமது முன்னோரில் இருந்து வழிவழியாக எமக்கு வந்துள்ளது.இன்று நாம்,சிறந்த உணவை எமக்கு தேர்ந்து எடுப்பதற்கு,எப்படி நாம் பரிணாம வளர்ச்சி பெற்றோம் என்பதை விளங்கிக் கொள்வது கட்டாயம் உதவி புரியும்.இன்று ஒவ்வொரு உயிர் இனமும் பொதுவாக சாப்பிடும் உணவு-அது பழமாகவோ,காய்கறியாகவோ அல்லது விலங்காகவோ,அது எப்படி இருப்பினும்-அவை, அவைகளின் பழைய கற்கால முன்னோர்களின் உணவு பழக்கத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.பெரும்பாலான சந்தர்ப்பங்களில்,நாம் சாப்பிடும் தாவர,விலங்கு வகைகள் செயற்கைத் தேர்வு மூலம் மாற்றப்பட்டது.இன்று,முடிந்த அளவுக்கு இறைச்சி,பால், முட்டை முதலியவற்றை கூடுதலாக பெறக்கூடியதாக நாம் மாடு,கோழி,ஆடு போன்றவற்றை தேர்ந்து எடுத்து வளர்ப்பதுடன் பெரிய பழங்கள்,கொழுப்பான கொட்டைகள் இருக்கும் பருப்பு,இனிமையான சதையையும் குறைந்த இயற்கையான நச்சுகளையும் கொண்ட பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற விரும்பத்தகுந்த தன்மைகளைக் கொண்ட விதைகளை தேர்ந்து எடுத்தும் நாம் விதைக்கிறோம்.
 
எமது முன்னோர்கள் ஒரு நாளைக்கு எத்தனை தடவை உணவு உட்கொண்டார்கள் என்பது எமக்கு சரியாக தெரியா விட்டாலும்,இன்று போல் அன்று மூன்று வேளை உணவு கட்டாயம் அவர்கள் உட்கொண்டிருக்க மாட்டார்கள் என்பது புரிகிறது.அன்றைய சூழ்நிலையில்,அதிகமாக தமது பெரும்பாலான உணவை பிற்பகலில் அல்லது மாலையில் உண்டார்கள் என நாம் ஓரளவு சரியாக ஊகிக்க கூடியதாக உள்ளது.வேட்டையாட விலங்கு ஒன்று கிடைக்க வேண்டும்,பின் அதை வேட்டையாடி கொல்ல வேண்டும்துண்டுகளாக வெட்டி,அதிகமாக சமைக்க வேண்டும்.அதே போல கிழங்குகளும் காய் கறிகளும் கண்டுபிடிக்க வேண்டும்,அதன்பின் தோண்டவேண்டும் அல்லது பறித்து எடுக்கவேண்டும்,இறுதியாக அவைகளை சாப்பிடக்கூடியதாக தயார் செய்ய வேண்டும்.ஆகவே ஏதாவது காலை உணவு இந்த வேட்டையாடு பவர்களாலும்,உணவு சேகரிப்போராலும்
சாப்பிடப்பட்டது என்றால் அது கட்டாயம் முன்னைய இரவின் மிச்சமாகவே இருக்கவேண்டும்.அவர்கள் எவ்வளவு,எந்தெந்த நேரம் சாப்பிட்டார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது.என்றாலும் ஒன்று மட்டும் நன்றாக ஊகிக்க முடிகிறது.அவர்கள் வளர்ப்பு பிராணிகள் அல்லது முன்பு அறுவடை செய்த தானியங்கள், கிழங்குகள் வைத்து இருந்தா லொழிய மற்றும்படி,நித்திரையால் எழும்பியதும் உடனடியாக சாப்பிட அவர்களால் முடியாது.ஆகவே எமது முன்னைய வேட்டையாடுபவர்களாலும்,உணவு சேகரிப்போராலும் அதிகமாக காலை உணவு சாப்பிட சந்தர்ப்பம் மிக மிக குறைவாகவே இருந்து இருக்கும்.மேலும் இந்த  சாவகாசமான வேட்டையாடுபவரினதும், உணவு சேகரிப்போரினதும் வாழ்வை விட விவசாயம் கடும் உழைப்பை கொண்டது.அது மட்டும் அல்ல,சேவல் கூவலுடன் அதி காலை தொடங்குகிறது.ஆகவே தமது நீண்ட கடும் வேலையை தொடங்கும் முன்பு,எமது முன்னைய விவசாயிகள் தம்மை பலப்படுத்த ஏதாவது ஒன்றை-தம்மிடம் உள்ளதை கட்டாயம் உண்டிருப்பார்கள் என நாம் நம்பலாம்.மேலும் இது ஆச்சரியப்படகூடிய ஊகமும் அல்ல.

பொதுவாக ஒரு நாளில் மூன்று முறை உணவு உட்கொள்ளுதல் இயல்பான ஒன்று என்ற எண்ணம் எம்மிடம் இன்று உள்ளது. ஆனால் அப்படி என்றும் இருக்கவில்லை.இது இன்றைய பண்பாட்டில் ஏற்பட்ட ஒரு நடை முறையே ஆகும். உலகத்தில் உள்ள எல்லா மக்களும்-மேற்கு நாடு உட்பட-அனைவரும் என்றும் மூன்று முறை உணவு உட்கொள்ள வில்லை.பல ஆயிரம் ஆண்டு களுக்கு மேலாக ஒரு வேளை உணவு முறையே வழக்கத்தில் இருந்ததாக  BBC யின் "history of breakfast, lunch and dinner."என்ற கட்டுரை ஒன்றும் கூறுகிறது.நாம் இன்று கேள்விப்படும் காலை உணவு முறை மனித வரலாற்றின் பெரும் பகுதியில் காணப் படவில்லை.ரோமர்கள் அப்படி ஒன்றை உண்ணவில்லை.அவர்கள் பொதுவாக ஒரு உணவையே மதியம் வேளை உண்டார்கள் என உணவு வரலாற்றாளர் "கரோலின் யெல்தம் [Caroline Yeldham ] கூறுகிறார். பண்டையக்கால சரித்திரத்தை புரட்டி பார்த்தோம் என்றால் அதில் கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களின் வரலாற்று நிகழ்வுகள் பெரும் பகுதியாக நிறைந்திருக்கும்.அப்படி பெருமைப்படத்தக்க கல்வி,தடகள கலாச்சாரங்களை[academic and athletic cultures] கொண்ட இந்த மக்கள் ஒரு சமைத்த பெரிய விருந்தாக-முதன்மை உணவாக-ஒரு நேரம்-அதிகமாக, பின்னேரம் அல்லது பிற்பகலில் உட்கொண்டார்கள்.ஆகவே,அதிகமாக அவர்கள் இரண்டு உணவு
உட்கொண்டார்கள் என நாம் ஊகிக்கலாம்.அவர்கள் அதிகமாக,இந்த முதன்மை உணவிற்கு முன் ஒரு சிறிய உணவு எதோ ஒரு நேரத்தில் எடுத்து இருக்கலாம். "To rise at six, dine at ten, sup at six and go to bed at ten, makes a man live ten times ten.","காலை ஆறுக்கு துயில் எழுந்து,பத்துக்கு  [உணவை] உண்டு ,பின் ஆறுக்கு [இரா உணவை] உண்டு,பத்துக்கு [நித்திரைக்கு] கட்டிலுக்கு போய்,பத்து மடங்கு பத்து வாழவைப்போம் " என்ற பதினாறாம் நுற்றாண்டு பழமொழி ஒன்று என் நினைவுக்கு வருகிறது.எனவே மூன்று முறை உணவு என்ற கருத்து மிக அண்மையானதே.முன்னைய எமது முதாதையர்கள் அதிகமாக இரு முறையே உட் கொண்டிருப்பார்கள்.சூரிய உதயத்திற்கு சற்றுப் பின்பும் சூரிய மறைவிற்கு சற்று முன்பும் ஆகும்.இந்த ஊகம் அதிகமாக சரியாகவே இருக்கும்.ஏனென்றால் இது பகல் இரவுடன் ஒத்து போவதால்.இரவு உணவு முறை,அதிகமாக மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் வந்து இருக்கலாம்.நாம்,வரலாற்றில் வளர்ச்சி அடைந்து கொண்டு போகையில்,எமது நடவடிக்கையும் நீண்டு பிற்பகலின் பிற்பகுதி மட்டும் சென்றது.ஆகவே அவர்களுக்கு தமது உணவை அதற்குத் தக்கதாக பரப்ப அல்லது நீட்ட வேண்டி இருந்தது.
பகுதி :05 தொடரும்

0 comments:

Post a Comment