தமிழரின் உணவு பழக்கங்கள்-பகுதி/22

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

[இடைக்கால தமிழரின்  உணவு பழக்கங்கள் தொடர்கிறது]

இரண்டாம் நுற்றாண்டில் வாழ்ந்த தொலெமி அல்லது தாலமி (Ptolemy, /ˈtɒləmi/) என்று பொதுவாக அழைக்கப்படும்,குளோடியஸ் தொலெமாயெஸ்  (Claudius Ptolemaeus ],தனது வரலாற்றுக் குறிப்பில் அரிசி ,வர்த்தக பொருளாக இலங்கையில் இருந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அரிசி முதலாம் நுற்றாண்டில்,இந்தியாவின் மேற்கு கடற்கரையில் இருந்து எகிப்த்திற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக செங்கடல் செலவு (The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea) என்ற வரலாற்று ஆவணங்கள் சான்று பகிர்கின்றன.பெரிப்ளசு (பெரிப்ளஸ்) (Periplus) என்பது "கடல் வழிப்பயணம்" ( கடல் பயண விவரிப்பு) என்னும் பொருள் தருகின்ற பண்டைய கிரேக்கச் சொல் ஆகும். இந்த பெரிப்ளசு என்ற கையேட்டு நூலை எழுதியவர் ஒரு  கிரேக்க மாலுமி ஆகும்.இவரது பெயர் தெரியாததால் இவரையும் அவரது நூலின் பெயரால் பெரிப்ளசு என்றே அழைக்கின்றனர்.மேலும் எகிப்தின் பண்டைய துறைமுகமான,வெரெணிகே அல்லது பர்ணிஸ்/பெரெனீசு[Berenike or Berenice] துறைமுகத்தில் கண்டு எடுக்கப்பட்ட தொல்பொருள்களும் இதை மெய்ப்பிகின்றன.இத்துறைமுகம் தற்போது மெதினெத் எல் ஹரஸ் [Medinet-el Haras] என அழைக்கப்படுகிறது.1994 தொடங்கி இங்கு டெலவேர் பல்கலைக்கழகம் பிற அமைப்புகளுடன் இணைந்து மேற்கொண்டுள்ள அகழாய்வுகளில் பண்டைத் தமிழகத்துடன் இத்துறைமுகம் கொண்டுள்ள தொடர்பை மெய்ப்பிக்கும் பல பல சான்றுகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.சோழப்பேரரசின் ஆட்சி தமிழகத்தில் ஒன்பதாம் நுற்றாண்டில் இருந்து பதின் மூன்றாம் நுற்றாண்டு வரை மேலாதிக்கம் செலுத்தியது.சோழ கல்வெட்டுக்கள் அரிசி முதன்மை பயிராக வளர்க்கப்பட்டதையும் அதுவே தமிழர்களின்
பிரதான உணவாக இருந்ததையும் காட்டுகிறது. இந்த சோழ காலத்தில் எழுதப்பட்ட இலக்கியமும் இதை உறுதிப்படுத்துகின்றன.உதாரணமாக  இடைக்கால அல்லது சோழர் கால ஔவையார்,"வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோன் உயர்வான்" என்று குலோத்துங்க சோழ மன்னனை வாழ்த்துகிறார்.இது-அரிசி அல்லது அதில் இருந்து பெறப்பட்ட  பொரி,அவல்,மா போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவே அங்கு பிரதான உணவாக இருந்ததை சுட்டிக்காட்டுகிறது.அவர்கள் பால்,நெய்,தயிர் போன்றவற்றையும் முதன்மையாக உட்கொண்டார்கள்.

பல்லுக்கொழுக்கட்டை
கிழக்கித்திய[East Asia /oriental] சமையல்களில்  நீராவியில் வேகவைத்தல் முக்கிய இடத்தை வகுக்கிறது.இவர்களின் பிரதான உணவான அரிசி இதற்கு மிகவும் உகந்ததாக உள்ளதும் இதற்கு ஒரு காரணம் ஆகும்.சீனர்கள் மூவாயிரம் ஆண்டுகளிற்கு முன்பே ஆவியில் வேகவைத்து சமையல் செய்ததற்கான சான்றுகள் தொல்பொருள் ஆய்வில் சீனாவின் மாகாணங்களில் ஒன்றான யுன்னானில்[province of Yunnan] கிடைத்துள்ளன. இது கல்லாலான நீராவிப் பாத்திரம் [stone steamers] ஆகும். எட்டாம் நுற்றாண்டில் சீனர்கள் ஒரு வகை ஊசி இலை[புன்னை /cypress] மெல்லிய மரத் துண்டில் இருந்து நீராவிப் பாத்திரம் செய்தார்கள். இது இப்ப மூங்கிலால் மாற்றிடு செய்யப்பட்டுள்ளது.நீராவி சமையல்,உணவின்/சேர்மானங்களின் அமைப்பு,சுவை,ஊட்டச்சத்து[போஷாக்கு] போன்றவற்றை பத்திரப்படுத்துகிறது.மண்பானையில் சமைப்பது பாரம்பரியமாக தமிழகத்தில் உள்ள வழக்கம். இங்கு மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி,காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது.இதனால் மண்பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையை பொதுவாக பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.நீராவியில் வேக வைக்கும் போது,கொதிக்கும் நீர் எந்த சந்தர்ப்பத்திலும் உணவுடன் நேரடியாக தொடர்புகொள்வதில்லை.சமூகவியல் பேராசிரியர்,Dr Govind Sadashiv Ghurye (12 December 1893 – 28 December 1983) அவர்களின் கருத்தின் படி,ஆவியில் சமைப்பது இந்தியாவில் நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது.புதிய கற்காலப்பகுதியிலும்,சிந்து சம வெளிப்பகுதியிலும் கண்டு எடுக்கப்பட்ட,பல துளைகளைக் கொண்ட  உயரமான மண் உருளைகள்[சிலிண்டர்கள்] நீராவி சமையலுக்கு பாவிக்கப்பட்டு இருக்கலாம் என கருதுகிறார்.ஆறாம் நுற்றாண்டை சேர்ந்த வராஹமிகிரர் என்ற பேரறிஞரின் பிருஹத் சம்ஹிதா அல்லது  பெரிய தொகுப்பு [Brahat Samhita of Varahamihira ] என்ற  சம்ஸ்கிருத நூல்,ஆவியில் சமைத்த உணவை  புழுங்கல் அல்லது வியர்வை உணவு [“svinna bhaksya”/Sweat food] என குறிப்பிடுகிறது.கி பி 920 ஆண்டை சேர்ந்த சிவகோட்டியாச்சார்யர் எழுதிய வட்டராதனே[ Sivakotiacharya’s Vaddaradhane] என்னும் பழமையான கன்னட நூலும் கி பி 1508 ஆண்டை சேர்ந்த மங்கராசாவின்  சூப சாஸ்திரமும்[ Mangarasa’s Soopa Shastra] ஆவியில் சமைப்பதை சொல்கிறது.இங்கு உணவு ஒரு மெல்லிய துணியால் சுற்றி கட்டியோ அல்லது ஒரு நாணற்கூடை அல்லது கொடிக்கூடை[wicker baskets]யில் வைத்து,அதை அகன்ற வாயை கொண்ட  நீர் கொதிக்கும் பாத்திரத்தின் மேல் வைக்கப்படுகிறது.கி பி 1250 இற்கு பின்புதான் இப்ப நாம் செய்வது போன்ற இட்டலியை  ஆவியில் வேக வைக்கும் நடைமுறை வந்ததாக கே.டி.ஆசயா கூறுகிறார்,அதன் பின்பு தான் பிட்டு,இடியப்பம் போன்றவை இன்று நடைமுறையில் இருப்பது போல ஆவியில் வேகவைக்கப்பட்டன. இலங்கையிலும்,தென்னிந்தியாவிலும் உண்ணப்படும் ஒரு இனிப்பு
வகை கொழுக்கட்டையாகும்.மேலும் இந்து சமயக் கடவுள்களில் ஒருவரான விநாயகர் வழிபாட்டின் போது கொழுக்கட்டை சிறப்பு உணவாக (நைவேத்தியமாக) பூசையில் வைக்கப்படுகிறது.இதுவும் ஒரு  ஆ‌வியில் வேகவைத்து சமைக்கும் உணவாகும்.அரிசி மாவு மற்றும் தேங்காய்ப்பூ,வெல்லத்தினால்[சர்க்கரை] இது செய்யப்படுகிறது.இது மகாராஷ்டிராவில் முதல் முதல் சமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இலங்கை வாழ் தமிழர்களின்,குறிப்பாக சைவ சமயத்தவர்களின் முக்கிய நிகழ்வுகளில் கொழுக்கட்டைக்கும் ஒரு தனியிடம் இருக்கிறது. குறிப்பாக திருமணம், சாமத்தியச்சடங்கு,குழந்தைகளுக்கு முதல் பல் முளைத்தல் போன்ற பல சம்பிரதாய நிகழ்வுகளில் இது முக்கிய இடத்தை வகிக்கின்றது.உதாரணமாக குழந்தைகளுக்கு முதல் பல் முளைத்ததும்,பல்லுக்கொழுக்கட்டை என்ற பெயரில் கொழுக்கட்டை அவித்து,அவர்களின் தலையில் கொட்டி கொண்டாடுகிறார்கள். இலங்கையின் கிழக்கு பகுதியில்,குறிப்பாக அம்பாறை பகுதியில், பிள்ளை கொழுக்கட்டை  என்னும் சிறிய கொழுக்கட்டை செய்து நான்கு மாத கர்ப்பணி தாய்க்கு விழா எடுப்பார்கள்.இடைக்கால இந்தியாவில்,தமிழர்கள் உட்பட,பெரும்பாலும் இரு நேரமே பொதுவாக உணவு உண்டார்கள் என நம்பப்படுகிறது.
பகுதி :23 தொடரும்...........                                                                          

2 comments:

  1. நன்று நல்ல தகவல்

    ReplyDelete
  2. தொடர்ந்து உங்கள் கட்டுரைகளை படித்து வருகிறேன்.பல அறியாத விடயங்களை அறியத்தரும் நல்ல தொகுப்புக்கள் .தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete