- ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}
மனிதக் கண்களுக்கு ஏன் கடவுள் புலப்படுபவராய் இல்லை? இதை விளக்குவதற்கு பரிமாணங்கள் (Dimensions) பற்றிய ஒரு சிறிய அலசல் முதலில் அவசியமாகும்.
மனிதனாகப் பிறந்தவனுக்கு இயற்கையில் 3 பரிமாணங்களை உணரக்கூடிய சக்தியே இருக்கின்றது. (4 வது பரிமாணம் பற்றி இப்போது வேண்டாம்)
1D, 2D, 3D பரிமாணங்கள்:
1D என்றால், நீளம் மட்டும் உள்ள ஒரு நேர்கோடு. இதற்கு அகலமோ, உயரமோ கிடையாது.
2D என்றால், 1D நேர்கோடுகள் பல சேர்ந்து உருவாக்கப் படும் நீளமும், அகலமும் கொண்ட ஒரு மட்ட, தட்டை உருவம். இதற்கு உயரம் கிடையாது.
3D என்றால், 2D தட்டுகள் பல சேர்ந்து உருவாகப் படும் நீளம், அகலம், உயரம் கொண்ட உருவம்.
இப்படியான பரிமாணங்களில்,
ஓர் 1D பரிமாணத்தை மட்டுமே தன் கண்களால் காணக்கூடிய ஒருவர் கண்களுக்கு, அதற்கு மேற்பட்ட 2D, 3D அகல, உயரங்கள் புலப்பட மாட்டா.
அதேபோல, 2D மட்டுமே காணக்கூடிய ஒருவருக்குத் தெரிவதெல்லாம் தட்டையாகவே இருக்கும்; எந்த உயரமாக இருந்தாலும் அந்த 3D உயரம் தோற்றாது; அது வெறும் நிழலாகத்தான் தெரியும்.
இதே காரணத்திற்காக, 3D மட்டும் தெரியும் ஒருவருக்கு (மனிதனுக்கு) 4D யிலுள்ள உருவம் கண்ணுக்குப் புலப் படமாட்டா. வேண்டுமாயின், 4D உருவத்தை 3D நிழலில் கற்பனை செய்து பார்க்கலாம்.(3D யை 2D நிழலாய் பார்ப்பது போல - உ+ம் : ஒரு 3D பந்து, 2D யில் ஒரு வட்ட நிழல் மட்டுமே தெரியும்)
இதற்கிடையில், 2D மட்டுமே உணரும் ஒருவருக்கு 3D என்று ஒன்று இருந்தாலும், அது எப்படி அவர்கள் உணர்வுகளுக்கு மறைக்கப்படுகின்றது என்று ஒரு சிறிய உதாரணம் மூலம் விளங்கப் படுத்தலாம்.
திரு தட்டையர் + திருமதி தட்டையர் இருவரும் 2D திறன் மட்டுமே உள்ளவர்கள் என்று வைத்துக்கொண்டால், அவர்கள் உயரம் என்று ஒன்று இருப்பதையே அறிந்திருக்க மாட்டார்கள். இவர்கள் நிலத்தில் இருக்கும் ஒரு காகிதத்தில் கீறப்பட்டிருக்கும் ஆண் + பெண் படங்கள் வடிவத்தில் இருப்பர். எந்தவித சிறிய தடிப்பும் இல்லாதவர். இருவரும், ஒருவரை ஒருவர் பார்க்கும்போது, அடுத்தவர் ஒரு கோடு போலவே தென்படுவர். அத்தட்டிலே உலாவி ஆராய்ந்தனரேயானால், தட்டையான ஆண், பெண் நிழலுருவத்தையே காணுவர்.
சரி, நான் இப்போது எனது (3D யான) 5 கை விரல்களின் நுனியை, அக்காகிதத்தின் அருகே சரி அல்லது ஒரு மி.மீ. தூரம் வரை கொண்டு சென்று திரும்பி எடுத்துக் கொண்டால், இந்த திரு + திருமதி தட்டையர்களுக்கு, இப்படிச் சில விரல்கள், தங்களுக்கு மிகவும் சமீபமாக வந்துபோனது என்ற சங்கதியே அறிந்திருக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்களின் பார்வை அந்த 2D தட்டினுள் வந்தால்தான் தெரியும்; 3வது D யில் நடைபெற்ற சம்பவங்கள் ஒன்றையும் அவர்கள் மனம் உணரவே செய்யாது.
இப்போது நான், எனது 5 விரல்களாலும் ஐந்து பொட்டுகளை காகிதத்தில் அவர்களுக்கு இடையில் வைக்கின்றேன். அவர்களுக்குத் தெரிவது அந்த 5 வட்ட வடிவங்களே ஒழிய, எனது 3D யிலான கைவிரல்கள் அல்ல. நான் எனது விரல்களை விலத்தியதும் அத்தட்டையர்கள் என்ன செய்வர்? வலுவான, ஆழ்ந்த விஞ்ஞான ஆராய்ச்சியின் முடிவில் அவர்கள் கண்டு பிடிப்பார்கள், வட்ட வடிவமுள்ள 5 வெளி உலக (தட்டை) மனிதர்கள் குடும்பமாக தமது நிலத்திற்கு வந்து போயுள்ளனர் என்று!
மனிதனால், ஒரு 3D உணர்வுத் தன்மையுடன், சாதாரணமான 4வது D யையே உணரமுடியாமல் இருக்கும்போது, பல D யுடைய ஆண்டவனின் இருக்கை, எப்படித்தான் ஐயா மனிதனின் கணகளுக்குப் புலப்படும்?
ஆதலால், கடவுள் அவ்வப்போது பூமியில் வந்து 3D சுவடுகளை விட்டுச் சென்றால்தான், மனிதனின் தேடலின்போது அவரின் வருகையை உணரமுடியும். மேலும் சிலர், அவ்வப்போது மனித வடிவிலும் அவர் வந்து பிறந்து காட்டுகிறார் என்று நம்பியும் அவரின் இருக்கையை உணர்கின்றார்கள். எப்படித்தான் பகீரதப் பிரயத்தனம் செய்தாலும், மனிதக் கண்களுக்கு கடவுள் அப்படியே உண்மையான தன் உருவில் காட்சி அளிப்பார் என்பது முடியவே இயலாத ஒரு விடயம்.
கடவுள் ஏன்தான் நமது கண்களுக்கு புலப்படமாட்டார் என்பதற்கான காரணம் இப்போது நன்றாகப் புரிகின்றதல்லவா?
0 comments:
Post a comment