தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?[பகுதி :02]

ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"


ராமன் முழுநிறைவு கொண்ட மனிதப் பண்புகளை கொண்டவர் அல்ல. வடநாட்டில் இருந்து தமிழகத்தின் வடக்குப்பகுதியில் ஆரியர்கள் குடியேரினார்கள்.அங்கு முனிவர்கள் உயிர்பலி கொடுத்து யாகம் செய்தார்கள். அதனை தடுப்பதற்காக இடைவள நாட்டை ஆண்டு வந்த தமிழரசியான தாடகை வேள்விக்கு இடையூறு செய்தாள்."இறைக்கடை துடித்த புருவத்தள்; எயிறு என்னும் பிறைக்கடை பிறக்கிட மடித்த பில வாய வாயாளுமான" என்று கம்பர் அவளை அரக்கியாக்கி பாடுகிறார்.அதை தடுக்கும் முகமாக,ராமன் தனது வாலிப பருவத்தில்,அறமில்லதாக இருந்தாலும்,முனிவரின் கட்டளையை ஏற்று,அவளை கொலை செய்தான். தாடகை ஒரு சிவ பக்தி நிரம்பியவள்! ஒரு பூர்வ குடிப் போராளி!!

ஆக்கிரமிப்பை மீறி அவள் தொடுத்த முதற் போர்.கொன்றது
மட்டும் அல்ல அவளை அரக்கியாகவும் மாற்றிவிட்டார்கள்.அரக்கியாகச் சித்தரித்தவன் ஆழ்பவனாகவும்,கொன்றவன் கடவுளாகவும் ஆகிவிட்டார்கள்.அதன் பிறகு எந்த தவறும் செய்யாத வாலியை மறைந்திருந்து அம்பு எய்து கொன்றான்."கானின் உயர்கற்பகம் உயிர்த்த கதிர்வல்லி,மேனிநனி பெற்றுவிளை காமநெறி வாசத்,தேனின் மொழி உற்றினிய செவ்விநன் பெற்று(ஓர்),மானின் விழிபெற்று  மயில்வந்த தென வந்தாள்"[கற்பகதரு உயிர் பெற்று வந்ததுபோல, ஒளிவீசும் கொடி போன்ற மேனியுடன், மருண்ட மானின் விழியுடனும், மயில் போன்ற அழகுடனும் நறுமணம் எங்கும் பரவுமாறு வந்தாள் சூர்ப்பணகை] என்று கம்பனால் வர்ணிக்கப்பட்ட இராவணனின் சகோதரி சூர்ப்பனகையின் மார்பகங்களையும், மூக்கையும்,ராமனின் முன்னிலையில் இலட்சுமணன் வெட்டி அலங்கோலப் படுத்தினான்.ஒருவரை திருமணம் செய்ய அல்லது காதலிக்க விரும்புவது ஒரு குற்றம் ஆகாது.அவளின் அந்த திருமணக்கோரிக்கையை ஏற்க விரும்பாவிட்டால்,ராமன் அதை நாகரிகமான முறையில் கையாண்டு இருக்கலாம். ஆனால், அதைவிட்டுவிட்டு அவளை தனக்கும்  இலட்சுமணனுக்கும் இடையில் முன்னும் பின்னும் போகவைத்து அவளைக் கேலி செய்தான்.இறுதியாக அவளை அலங்கோலப் படுத்தினான்.இந்த ராமனின்,இலட்சுமணனின் அட்டூழியமே ராவணனை கோபமூட்டி, பழிவாங்கும் முகமாக,சீதையை கடத்த வழி சமைத்தது.ஆகவே,ராவணன் சீதையை
கவர்ந்தது,அவள் மேல் அவன் வைத்த இச்சை அல்ல.ஒரு அரசன் இன்னொரு நாட்டின் மீது படையெடுத்துச் செல்ல முடிவு செய்தவுடன்,முதலில் அந்த நாட்டின் பசுக்களைக் கவர்ந்து வருவான்.இழந்த ஆநிரைகளை மீட்க அந்தப் பகை நாட்டரசன் போருக்கு வருவான்.அதாவது எதிரி நாட்டரசனை போருக்கு வர வழைக்க "ஆநிரை கவர்தல்" ஒரு முகாந்திரமாகப் பயன்பட்டது.அது போலத்தான் ராவணன் சீதாவை கவர்ந்த ஒன்றாகும்.ராமன் காட்டில் வனவாசத்தில் இருந்ததால்,தன் தங்கையை மானபங்கம் செய்தவர்களுடன் போருக்கு [சூளுரைக்க] அறை கூவ ஒரே வழி-சீதையை கவருவதாகவே அப்பொழுது அவனுக்கு இருந்திருக்கலாம். ஆயுதம் ஏதும் அற்ற தன் தங்கையின் மூக்கை அறுத்து கேவலபடுத்தியதற்கு பழிவாங்க சீதையை கடத்தியிருக்கலாம்?. அப்படி அவன் தன் தங்கைக்காக பழிவாங்காவிட்டால்,அவனது குடிமகன்கள் [பிரஜைகள்] எவருமே அவனை தங்கள் பாது காவளனாக பார்க்கமாட்டார்கள் என்பது ஒரு கருத்தாகும்.ஆகவே இந்த கவருதல், தங்கையை அவமான படுத்தியவனை தண்டிக்கவே என இலகுவாக
வாதாடலாம். "இனிய புன்னகையும், அழகிய இடையும் கொண்டவளே {சீதை}, விருப்பமற்ற உன்னை நான் எக்காரணம் கொண்டும் அணுக {அடைய} மாட்டேன்." அப்படியே ராவணன் சீதையை தொடாமலே அசோகா வனத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தான் .ஆனால்,இதற்கு எதிர்மாறாக,ராமனும் அவரது சேனையும் இலங்கை போது மக்களையும் ,பெண்கள் குழந்தைகளையும் கொன்றும் உயிருடன் எரித்தும் அட்டூழியம் செய்தனர்[வால்மீகி
ராமாயணம்/யுத்த காண்டம்].கம்பர் மிக அழகாக "ஊறுகின்றன கிணறு உதிரம், ஒண்ணகர் ஆறுகின்றில தழல் அகிலும் நாவியும் கூறு மங்கையர் நறுங் கூந்தலின் சுறு நாறுகின்றது, நுகர்ந்திருந்தம் நாம் எலாம்".அதாவது நகரத்தில் எல்லா கிணறுகளிலும் தண்ணீர் ஊறவில்லை, உதிரம்தான் ஊறுகிறது. அந்த குரங்கு வைத்த நெருப்பு இன்னும் நகரம் முழுவதும் அடங்கவில்லை, அகிலும் சந்தனமும் மணந்து கொண்டிருந்த நகரத்தில் இப்போது மங்கையர்களின் கூந்தல் கருகிய நாற்றம் மட்டும் தான் பரவியிருக்கிறது.அகில், சந்தனம் வாசனையை அனுபவித்துக் கொண்டிருந்த நாம் இப்போது இந்த
துர்நாற்றத்தைத்தான் நுகர்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறார்.மேலும் ராமன் எப்படி அனுமானிடம் சீதையின் அடையாளங்களை, அழகை  கூறி  சீதையை கண்டாறிந்து வா! என அனுப்புகிறான் என பாருங்கள்.
"வாராழி கலசக் கொங்கை,வஞ்சிபோல் மருங்குவாள் தன்,தாராழிக்கலைசார் அல்குல் தடங்,கடற்கு உவமை தக்கோய்!!பாராழி பிடரில்தங்கும், பாந்தளும்,பணி வென்றோங்கும்,ஓராளித் தேரும் கண்ட உனக்கு நான் உரைப்பதென்ன?"
["என் மனைவி சீதையின் கொங்கைகள் கலசம் போன்றவை. அவளுடைய அல்குல் (பெண்குறி) தடங் கடற் போன்றது."]அந்த காலத்தில் மார்பென்பது எளிமையான, காமமற்ற அழகை வெளிப்படுத்தும் அவயம்.அது அழகியல் சார்ந்த விடயம் ஆனால் “இடை,அதற்குக் கீழ் மறைந்திருக்கும் பகுதிகள் "அல்குல்” அப்படி அல்ல.உலகிலே எந்த பித்தனும் வெறியனுங்கூட இப்படி வேறொருவனிடம் வர்ணிக்க மாட்டான்?  கடைசியில் இராமன் சீதையை மீட்டான்.அன்று மிதிலையில் அவள் நோக்க, அண்ணலும் நோக்கப் பார்வைகளின் சங்கமத்தில் இதயங்களின் பரிமாற்றம் நிகழ்ந்தது. இன்று அவர்கள் இருவரும் சந்திக்கும் போது பார்வைகள் மோத அங்கு ராமனிடம் இருந்து தீப்பொறி தான்  பிறந்தது. "அரக்கன் மாநகரில் வாழ்ந்தாயே, ஒழுக்கம் பாழ்பட இருந்தாயே, மாண்டிலையே?" என்று ராமன்  சீதையின் தூய்மையை நம்பாமல் அவளை குற்றம்சாட்டுகின்றான். சீதையை மீட்க தான் வரவில்லையாம். தன்னைப் பிறர் குறைகூறக் கூடாதென்பதற்காகவே அரக்கர் படை அழிக்க வந்ததாகக் கூறுகின்றான் ராமன்.“மருந்தினும் இனிய மண்ணுயிரின் வான் தசை,அருந்தினையே, நறவு அமை உண்டியே;இருந்தினையே, இனி எமக்கு ஏற்பன,விருந்து உளவோ? உரை”அப்பப்பா, எப்பேர்ப்பட்ட கொடிய வார்த்தைகள்.அவள் உயிருடன் இருந்ததே இப்ப ராமனுக்கு  தவறாகப் படுகின்றது.அதே போல, வால்மீகி இராமாயணத்தில் ராமன் அவளை பார்த்து “உன்னை சிறைப் பிடித்தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்து பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இராவணனைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை.” (யுத்த காண்டம், சருக்கம் 115, சுலோகம் 1-23)என்று அடித்து கூறுகிறான் இராமன் சீதையிடம் இதைவிடக் கொடுஞ்செயல் வேறு என்ன செய்திருக்க முடியும்? இராமன் அதோடு நிற்கவில்லை, சீதையை நோக்கி மேலும் கூறுகிறான்:“இனி உன்னைச் சேர்த்துக்கொள்ளமுடியாது. உன் விருப்பம்போல் யாருடனும் இருக்கலாம்” என்று இராமன் இறுதியாக சீதையிடம் கூறுகின்றான். மேலும், தவம் இயற்றிய சூத்திரன் என்ற ஒரு காரணத்தால் சம்புகன் (Shambuka) என்பவன் இராமனால் கொல்லப்பட்டான்.கெளமதனின் மனைவி அகலிகை. இந்திரனுக்கு அவள்மீது ஆசை பிறந்து விட்டது.பொழுது புலர்ந்ததாய்ப் பொய்த் தோற்றம் ஏற்படுத்தி கெளதமனை அக்குடியிலிருந்து போகச்செய்கின்றான். பிறகு கெளதமனின் தோற்றத்தில் உள்நுழைந்து அகலிகயைப் புணர்கின்றான். அகலிகையும் ஆரம்பத்தில் வந்தவன் தன் கணவர் என்று நினைக்கின்றாள்.ஆனால் வந்தவன் கணவன் இல்லை என்பதை விரைவில் உணர்ந்த பொழுதும் அவனை ஒதுக்கவில்லை. "புக்கவ ளோடும் காமப்புதுமணத் தேறல் ஒக்கஒண் டிருத்தலோடும் உணர்ந்தனள், உணர்ந்த பின்னும் தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்"அத்தகைய அகலிகைக்கு இராமன் கருணைகாட்டுகின்றான். புனர்வாழ்வளிக்கின்றான். அப்படி அகலிகைக்கு விமோசனம் கொடுத்த ராமன் தனது அழகிய மனைவியை நம்பவில்லை.குற்றமே செய்யாத சீதைக்கு மன்னிப்பு இல்லை. அக்கினி பிரவேசம் செய்ய சொல்கிறான்.மீண்டும் கருவுற்ற தன அழகிய மனைவியை காட்டிற்கு அனுப்பிவிட்டு தான் அரண்மனையில் இருக்கிறான் .இப்படிச் செய்வது சரியா, தவறா!-என்பதை யோசிக்கக் கூட அவன் காத்திருக்கவில்லை. சீதையின் வாழ்வு அவனுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவனுடைய பேரும் புகழுமே அவனுக்குப் பெரிதெனத் தோன்றியது. அரசாளும் மன்னன் என்ற முறையில், அவ்வித அவதூறுகளைப் போக்கிட அவன் என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்யவில்லை. ஓர் அப்பாவி மனைவியின் நம்பிக்கைக்குரிய கணவன் ஒருவன் எதைச் செய்வானோ அதையும் செய்யவில்லை.அவள் தனி-தாயாக பிள்ளைகளை பெற்று வளர்க்கிறாள் .இன்றைய எமது சமூகத்தில்,பிரிவு,மணமுறிவு,ஒற்றை பெற்றோர் போன்றவற்றை கூடுதலாக காணுகிறோம்.ராமாயணம் அப்படியான பிரச்சனைகளுடன் ஈடுபடுகிறது.இராமாயண கதையில் சீதையை அப்படியான பாத்திரங்களில் காண்கிறோம்.அயோத்திய கண்டத்தில் ராமன் "பெண்ணை நம்பக்கூடாது" என்றும் "ரகசியங்கள் மனைவிக்கு அந்தரங்கப் பகிர்வு செய்ய கூடாது" என்றும் சொல்கிறான்.  அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார். சீதா பெற்ற துயர்களைப் போல இன்றும் நம் நாட்டுப் பெண்டிரில் பலர் இன்னல் அடைந்து வருகிறார்கள். தனித்து விடப்பட்ட சீதை குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு மரணம் அடைவது இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் உன்னத துன்பியல் வரலாறு. காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பவதி சீதா, இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் ராமனுடன் இணைந்து வாழ, இரண்டாவது அக்கினிப்பிரவேசம் செய்து அவமானப் படுவதை விட, சாவது மேல் என உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் பாரத நாடு இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாய்க் காட்டித் தொழுது வருகிறது!.ஆனால் ஏன் ராவணனை மட்டும்  பூதாகரமாக சித்தரிக்கவேண்டும்?ராமனைப் பற்றி என்ன?
ராவணனும் அவனின் சகோதரர்களும் திராவிடர்கள்,தமிழர்கள். திராவிடர்களின் மனம் புண்படும் என்பதை பொருட் படுத்தாமல், அவர்களின் உருவப் பொம்மை தீபாவளி திரு நாளில்  எரிக்கப்படுகிறது.வரலாறு வென்றவர்களின்  கண்ணோட்டத்தில் இருந்து விவரிக்கப் படுகிறது.ஆகவே அது ஒரு பக்க சார்பாக உள்ளது.  தோற்றவர்கள் துரதிஷ்டவசமாக,கெட்டவன், வில்லன்,போக்கிரி யாக அங்கு வர்ணிக்கப் படுகிறார்கள். வால்முகியால் சித்தரிக்கப்பட்ட  ராமன் கதாப்பாத்திரம் கடவுளாக போற்றப்படும் அளவுக்கு ராவணன் கதாப்பாத்திரம் இழிவாக அரக்கன் போன்று கற்பனை செய்யப்பட்டுள்ளது.உண்மையில்,வால்முகியாலும், கம்பராலும் சித்தரிக்கப்பட்ட ராவணன் ராமனை விட நல் ஒழுக்கத்திலும், வீரத்திலும்,மக்கள் ஆட்சியிலும்,சகோதர பாசத்திலும்,இறை பக்தியிலும்,பலமடங்கு பெரியவனாகவே தெரிகின்றான்.எல்லோரும் எளிதாக பொதுவாக  சொல்லி விடுவார்கள், நல்லவன் என்றால் ராமன் என்றும், கெட்டவன் என்றால் ராவணன் என்றும்.விரிந்து பரந்த கடலில் முத்து வேண்டுபவனும் மணல் வேண்டுபவனும் தேவையானதை அள்ளுகிறான். ஆழத்தில் அதிசயங்களை ஒளித்துக் கொண்டு இவர்களை எள்ளியபடி சிரித்துக் கொண்டிருக்கிறது சமுத்திரம்.ஆமாம் இராவணன் நல்லவனா?. என அறிய அவனைப்பற்றி மற்றவர்கள் பக்தி காலத்திலும் சித்தர்கள் காலத்திலும் கூறியதை ஒருக்கா பார்த்தால் என்ன ? கதை கேட்கும் வயதில் மிகவும் கொடியவனாக, காமுகனாக, அரக்கனாக வர்ணிக்கப்பட்டவன் இந்த ராவணன் .ஆனால் சமுத்திரத்தின் அடியில் போய் பார்த்த போது நான் எடுத்ததை உங்களுக்கு தருகிறேன்.போகர், சித்தர்களில் ஒருவர்.‘போகர் ஏழாயிரம்’ என்ற நூலில் இராவணனைப் போகர் "இராவணனார்" என பெருமதிப்புடன் குறிப்பிடுகிறார்.“ கூறுவேன் இலங்கைபதி மார்க்கந்தன்னை கொற்றவனே புலிப்பாணி மைந்தகேளு,தேறுபுகழ் நவகண்டந் தன்னிலப்பா தேர்வேந்தர் ராஜர்களின் கோட்டை தன்னில்,வீறுபுகழ் இராவணனார் கோட்டையப்பா விண்ணாழி கோட்டையது விளம்பப்போமோ,மாறுபடாக் கோட்டையது வளப்பஞ்சொல்வேன் மகத்தான வசதிகள் மெத்தவுண்டே”[போகர் 7000 சப்த காண்டம்].சிறு வயதில் தேவாரம் இயற்றத் தொடங்கிய திருஞானசம்பந்தர் பல தேவாரங்களில் இராவணனைப் பாடியுள்ளார்."கொடித்தேர் இலங்கைக் குலக்கோன்" [கொடித்தேரைக் கொண்ட இலங்கையர் குலத்தலைவனாகிய இராவணனை ].“வானினொடு நீரும் இயங்குவோருக்கு இறைவனாய இராவணன்"[வானிலும் நீரிலும் இயங்கித் திரிவோருக்கு அரசனான இராவணன்].“சாமவேதமோர் கீதம் ஓதியத் தசமுகன் பரவும் நாமதேய முடையார்” [இராவணன் சாமகீதம்பாடி வணங்கிய பொழுது வைத்த பெயரே, இறைவனின் பெயராக நிலைத்து இருக்கின்றது].இதே போல திருநாவுக்கரசரும் தமது தேவாரத்தில் இப்படி பாடியுள்ளார்:[தென் இலங்கை மன்னனாகிய இராவணன் தேரைச் "தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு"[தென் திசையை ஆண்ட இராவணன் கயிலையைப் பெயர்க்கப் பார்வதி நடுங்கக் கண்டு,]."தென்கையான் றேர்க டாவிச் சென்றெடுத் தான்ம லையை"செலுத்திக் கயிலைமலை தேரின் இயக்கத்திற்கு இடையூறாயுள்ளது என்று அதனைப் பெயர்க்க முற்பட்டானாக,].சுந்தரமூர்த்தி நாயனார், ஒருபடி மேலே போய் இராவணனுக்கு இறைவன் அருள்செய்த திறத்தைக் கண்டே தான் இறைவனின் திருவடியை அடைந்ததாகாக் கூறுகிறார்."எறியு மாகடல் இலங்கையர் கோனைத்,துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்,குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்,கோல வாளொடு நாளது கொடுத்த செறிவு கண்டுநின் திருவடி யடைந்தேன்"அலையெறியும் பெரிய கடலிடத்து உள்ள இலங்கையில் உள்ளார்க்கு அரசனாகிய இராவணனை, அவனுக்கு அறிவு தோன்றுமாறு பெரிய மலைக்கீழ் வைத்து நெரித்து, பின்பு அவன் பாடிய, உய்யும் கருத்தைக்கொண்ட பாடலினது இனிய இசையைக்கேட்டு, அழகிய வாளோடு, மிக்க வாழ்நாளையுங் கொடுத்தும் அருளிய உனது மிகுந்த திருவருளை அறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன்].இப்படி சுந்தரமூர்த்தி நாயனார் சொல்வதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது? தம் முன்னோனான இராவணன் வழி நடக்கவே சுந்ரமூர்த்தி நாயனார் விரும்பியது என்னத்தை காட்டுகிறது?இன்னும் நல்லவனா கெட்டவனா என்று நாம் ஏன் எமது மண்டையை உடைப்பான்? இவ்வளவு பெருமை எல்லாம் பெற்ற இராவணனை இந்த நூற்றாண்டு புலவன் எப்படி பெருமை படுத்துகிறான் பாருங்கள் .“தென் திசையைப் பார்க்கின்றேன் என் சொல்வேன் என்றன்,சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடடா!அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத்தமிழன் ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்,குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடை கொடுக்கும் கையான்,குள்ளநரிச் செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம்,என் தமிழர் மூதாதை! என் தமிழர் பெருமான்!இராவணன் காண்! அவன் நாமம் இவ்வுலகம் அறியும்"
பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் "புட்பக விமானம்"  ஒன்றை வைத்திருந்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது.மேலும்  ராவணனுக்கு ஜோதிடம் பார்க்கும் அபார திறமையும், வேத மந்திரங்களை கற்று தேறிய ஆற்றலும் அபாரமாக இருந்தது.அத்துடன்,இராவணன் ஒரு மிகச்சிறந்த சிவபக்தன் என்பதோடு அவனது காலத்தில் "ஈழம்" மிகச்சிறந்த தொழினுட்ப வசதிகளுடன் இருந்திருக்கிறது. இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஓங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவிலும் உலகிலும் ராவணன் கோவில் உள்ளது.உதாரணமாக, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராவணனுக்கு கோவில் உள்ளது.அதே போல,மற்றும்- பிஸ்ரக்ஹ் ,கிரேடர் நொய்டா ,உத்தர பிரதேசம்,-ராவண கிராமம் ,விதுசா மாவட்டம் ,மத்திய பிரதேசம்,-கான்பூர் ,உத்தர பிரதேசம், போன்ற இடங்களிலும் ராவணன் கோவில் உண்டு. இலங்கை,திருக்கோணேஸ்வரம் குன்றில் இராவணன் சிலை ஒன்று உண்டு.அதே போல,தாய்லாந்திலும் இராவணன் சிலை உண்டு.ஆட்சி கலையில் சிறந்து விளங்கியவன் ராவணன். ராமன் அவரை போரில் வதம் செய்த போது ராவணன் இறக்கும் தருவாயில் இருந்தான். அப்போது தன் தம்பி லட்சுமணை ராவணனிடம் அனுப்பிய ராமன், அவனிடம் ஆட்சி கலையை கற்று கொள்ளும்படி சொன்னார்.இதைவிட ராவணனின் சிறப்பை பற்றி வேறு என்ன கூறமுடியும்?

ஆரம்பத்திலிருந்து படிக்க சொடுக்குங்கள் Theebam.com: "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?"

ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
[பி கு :"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?"என்ற  தீபத்தில்  வெளியிடப்பட்ட  எனது கட்டுரையை தொடர்ந்து,அதன் விரிவாக இக்கட்டுரை எழுதப்பட்டு உள்ளது]    

Diwali 


5 comments:

  1. கோணேஸ்வரன்Thursday, October 12, 2017

    இராவண யுத்தத்தில் கொல்லப்படட தமிழர்களின் நிலையினை என்னும்போது தற்காலத்தில் நடந்த முள்ளிவாய்க்கால் கொடுமை நினைவில் நிறுத்துகிறது. ஆரியரின் கொடுமைகளை கொண்டாடுகிறோம் என்கிறபோது வெட்கமாக இருக்கிறது.

    ReplyDelete
  2. I got this web site from my friend who informed me about this web page and now this time I
    am visiting this site and reading very informative content at this
    time.

    ReplyDelete
  3. Great delivery. Solid arguments. Keep up the great work.

    ReplyDelete
  4. I visit day-to-day a few blogs and sites to read content, but this blog provides feature
    based content.

    ReplyDelete
  5. You are so interesting! I don't believe I've truly read a single thing like this before.
    So great to find somebody with unique thoughts on this subject.
    Really.. many thanks for starting this up. This website is something that is required on the internet,
    someone with a bit of originality!

    ReplyDelete