விஞ்ஞானம் வழங்கும் விந்தை

அறிவியல்=விஞ்ஞானம்

 


㊩புற்றுநோய்க்கான புதிய மருந்து மற்றும் ஆயுள் நீட்டிப்பு:

ட்ராமெடனிப் (Trametinib) மற்றும் ராபாமைசின் (Rapamycin) ஆகிய இரண்டும் தனித்தனியாக புற்றுநோய்க்கு எதிரான மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ட்ராமெடனிப் என்பது MEK pathway-ஐத் தடுக்கிறது. இது சில வகை புற்றுநோய்களில் செல்கள் வேகமாகப் பிரிந்து வளர்வதை கட்டுப்படுத்துகிறது.

ராபாமைசின் என்பது ஒரு mTOR pathway-ஐத் தடுக்கக்கூடிய மருந்தாகும். இது செல்களின் வளர்ச்சி மற்றும் வாழ்நாள் (longevity) மீதான தாக்கம் கொண்டது.

இவ்விரண்டும் சேர்த்து ஒரே மருந்தாகக் கலந்து எலிகள் மீது சோதனை செய்யப்பட்டபோது,

🔹 அவர்களின் ஆயுள் சுமார் 30% அதிகரித்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.

இதுஅளவோடு கொடுக்கும்போது செல்களின் செயல்பாடுகளை சமநிலைப்படுத்தி, வயதை மந்தமாக்கலாம்என்பதைக் குறிக்கிறது.

இது குறித்து தற்போது மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நன்மை மற்றும் பக்கவிளைவுகள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆனால்:

மனித உடல் மற்றும் வாழ்க்கை சூழ்நிலை, எலிகளைப் போல இல்லை.

அதனால், இவ்வளவு சதவீத ஆயுள் அதிகரிப்பு நேரடியாக மனிதர்களுக்கு ஏற்படும் என உறுதியாகக் கூற முடியாது.

ஆனால் இது, மனித உடலின் வயதினை தாமதப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்படலாம் என்பதற்கான ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

இவ்வாறான கண்டுபிடிப்புகள் மனித உடலின் செல்கள், வயது மற்றும் நோய் எதிர்ப்பு தன்மைகள் குறித்து புதிய சாத்தியங்கள் திறக்கும். இது புற்றுநோய்க்கும், வயதுமிக்க நோய்களுக்கும் எதிரான சிகிச்சைகளில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

 

🧊உருகிவிடும் பனிப்பாறைகள்

புவி வெப்பமயமாதலால் இமய மலைத்தொடரின் ஒரு பகுதியான 'ஹிந்து குஷ்' மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதாகச் சூழலியலாளர்கள் கூறியுள்ளனர். இந்த வேகத்தில் உருகினால் இந்த, நுாற்றாண்டின் இறுதிக்குள் 75 சதவீத பனிப்பாறைகள் உருகிவிடும். இது ஆசியாவில் வாழும் 100 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடும்.

 

🫛கொண்டைக்கடலை நல்லது

பொதுவாக நீரிழிவின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும், சில விதமான அழற்சி ஏற்படும். கெட்ட கொழுப்பு அதிகரிப்பது இதய நோய்களுக்கு இட்டுச் செல்லும். இதைச் சரி செய்யும் ஆற்றல் கொண்டைக் கடலை, கருப்பு பீன்ஸ் ஆகியவற்றுக்கு இருக்கிறது என்கிறது சமீபத்திய ஆய்வு.

அமெரிக்காவின் இலினாய்ஸ் தொழில்நுட்பக் கழகம் இது தொடர்பாக நீரிழிவின் ஆரம்ப நிலையில் இருந்த 72 பேரை 12 வாரம் தொடர்ந்து ஆய்வு செய்தது. கொண்டைக் கடலை, கருப்பு பீன்ஸ் ஆகியவை உடலுக்கு நன்மை செய்பவை என்று பரவலாக உண்ணப்படுகின்றன என்றாலும் இப்படியாக நீரிழிவுடன் தொடர்புப்படுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டதில்லை.

72 பேரில் ஒரு பிரிவினருக்குக் கொண்டைக் கடலையும், மற்றொரு பிரிவினருக்குக் கருப்பு பீன்ஸும், இன்னுமொரு பிரிவினருக்கு அரிசிச் சாதமும் கொடுக்கப்பட்டது. அரிசி உண்டவர்களை விடக் கொண்டைக் கடலை, கருப்பு பீன்ஸ் உண்டவர்களுக்குக் கெட்ட கொழுப்பும், அழற்சியும் குறைந்திருப்பது தெரியவந்தது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இவை இரண்டும் ரத்த சர்க்கரை அளவைக் கூட்டவோ, குறைக்கவோ இல்லை. எனவே மாலை நேரச் சிற்றுண்டியாக இவற்றைச் சாப்பிடலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

 

⽪தோலை காக்கும் தோழன்

மனித உடலில் பல்வேறு நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. அவை நமக்குப் பல நன்மைகள் செய்கின்றன. சமீபத்திய ஆய்வு ஒன்றில், தோலில் இருக்கும் நுண்ணுயிரிகள் சூரியனில் இருந்து வரும் ஆபத்தான கதிர்களிலிருந்து நம்மைக் காப்பது கண்டறியபட்டுள்ளது.

சூரியனிலிருந்து வரும் யுவிபி (UVB) -என்ற அல்ட்ரா வைலட் பி ரேஸ் என்பவை நம் தோலில் படும்போது 'சிஸ் யுரோகேனிக்' அமில மூலக்கூற்றை உருவாக்குகிறது. இது நம் தோலின் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும். இதனால் சாதாரண தோல் நோய்களில் இருந்து புற்றுநோய் வரை ஏற்படலாம். ஆனால், தோலில் வாழும் ஸ்டபைலோகாகஸ் எபிடெர்மிஸ் முதலிய சில பாக்டீரியாக்கள், யுரேகேனேஸ் எனும் நொதியை உற்பத்தி செய்து, யுரோகேனிக் அமிலத்தை நச்சு இல்லாத அமிலமாக மாற்றுகின்றன. இதனால் யுவிபி கதிர்வீச்சால் ஏற்படும் தோல் நோய்கள் குறைகின்றன.

இதை உறுதிசெய்ய ஆய்வாளர்கள் எலிகளைப் பரிசோதித்தனர். எலிகளின் உடல் ரோமங்களை மழித்து, தோல் மீது சிஸ் யுரோகேனிக் அமிலத்தைப் பூசினர். சிறிது நேரத்திலேயே ஸ்டபைலோகாகஸ் எபிடெர்மிஸ் பாக்டீரியா அமிலத்தை உட்கொண்டு, அதை ஆபத்தற்ற சேர்மமாக மாற்றியது.

இந்த ஆய்வின் மூலம் தோலில் வாழும் பாக்டீரியா நமக்கு எவ்வளவு அவசியமானவை என்று தெரியவந்துள்ளது. வருங்காலங்களில் தோல்நோய்களுக்கான மருந்தை உருவாக்க இந்த ஆய்வு நமக்கு உதவும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

 

தொகுப்பு:செ.மனுவேந்தன்


No comments:

Post a Comment