அறிவியல்=விஞ்ஞானம்
🕴நியாண்டர்தால்
மனிதன்
ஸ்பெயின் நாட்டில், ஒரு கிரானைட் கல்லில் நியாண்டர்தால் மனிதன் ஒருவனின் கைரேகை
கண்டறியப்பட்டுள்ளது. இது 43,000 ஆண்டுகள் பழமையானது. உலக வரலாற்றிலேயே மிகப் பழமையான,
முழுமையாகக் கிடைத்த நியாண்டர்தாலின் கைரேகை இதுதான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
🐒சிம்பன்சி
குரங்குகள்
ஆஸ்திரிய நாட்டின் வியன்னா பல்கலை சிம்பன்சி குரங்குகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு
வந்தது. அந்த ஆய்வில், குரங்குகள் தங்களுக்குள் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள மரங்கள்
மீது வெவ்வேறு விதமான தாளங்கள் இடுவது தெரியவந்துள்ளது. மனிதர்களுக்கு முன்பாகவே இசையைப்
பயன்படுத்தியவை சின்பன்சிகள் என்கின்றனர், ஆய்வாளர்கள்.
💻புதுவகை காந்தம்
உருவாக்கும் கணினி நினைவகம்
எம்.ஐ.டி., இயற்பியலாளர்கள், 'பி-வேவ் காந்தம்' என்ற புது தினுசான காந்தத்தை
கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை காந்தத்தை கணினி நினைவகச் சில்லுகளில் (Memory
Chips) பயன்படுத்தினால், அவற்றின் செயல்பாட்டை பலமடங்கு வேகப்படுத்த முடியும்.
வழக்கமான காந்தங்களில், எலக்ட்ரான்களின் சுழற்சிகள் ஒரே திசையில் இருக்கும். ஆனால் நிக்கல் அயோடைடு படிகத்தால் ஆன பி--வேவ் காந்தத்தில், எலக்ட்ரான்களின் சுழற்சிகள் ஒரு சுழல் வடிவில் (Spiral Pattern) அமைந்துள்ளன.
எலக்ட்ரான்கள் இந்த வகையில் சுழல்வதில் மிகப்பெரிய நன்மை உண்டு. மிகமிககம்மியான மின்சாரத் துாண்டல் அல்லது ஒளிக்கதிர் பாய்ச்சல் மூலம், பி--வேவ் காந்தத்தின் காந்த ஆற்றலை உயர்த்தவோ, குறைக்கவோ முடியும்.
இந்த வகை காந்தத்தால் இயங்கும் நினைவுச் சில்லுகள் எளிதில் சூடாகாது என்பதோடு, இவற்றின் மின் நுகர்வும் மிகக் குறைவாகவே இருக்கும்.இது தற்போதைய தொழில்நுட்பத்தை விட ஐந்து மடங்கு வரை மின்தேவைகளைக் குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைக்கு, பி-வேவ் காந்தம் மிகக் குளிர்ந்த -213 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையில் மட்டுமே செயல்படுகிறது.
அறை வெப்பநிலையில் இயங்கக்கூடிய பி--வேவ் காந்தத்தை உருவாக்குவதே, அமெரிக்க எம்.ஐ.டி., விஞ்ஞானிகளின் அடுத்தகட்ட இலக்கு. அது சாத்தியமானால், கணினி தொழில்நுட்பத்தில் இது ஒரு மாபெரும் பாய்ச்சலாக இருக்கும்.
🚗தாமிர 'காயில்' இல்லாத அசத்தல் மின் மோட்டார்!
உலோகத்தையே பயன்படுத்தாமல் ஒரு மின்சார மோட்டாரை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் தென் கொரியாவின், கே.ஐ.எஸ்.டி., நிலைய விஞ்ஞானிகள்.
மோட்டார் காயிலுக்கு, கனமான தாமிரம் அல்லது அலுமினிய கம்பிச் சுருள்களுக்குப் பதிலாக, கார்பன் நானோகுழாய்களைக் (Carbon Nanotubes) கொண்டு உருவாக்கப்பட்ட கம்பிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்திஉள்ளனர்.
இவை மிகவும் இலகுவானவை. உறுதியானவை. அதோடு வளையும் தன்மை கொண்டவை. இந்த நானோகுழாய் கம்பிகள், தாமிரக் கம்பிகளைவிட 80 சதவீதம் வரை எடை குறைந்தவை. குறைவான எடை இருப்பது, மின்சார வாகனங்கள், ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் போன்றவற்றுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்தான். உதாரணமாக, ஒரு விமானத்தில், கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கிய மோட்டார்களை பயன்படுத்தினால் பல நூறு கிலோ எடையை குறைக்க முடியும்.
தற்போதைக்கு கார்பன் நானோகுழாய் காயில்களின் மின் கடத்தும் திறன் தாமிரத்தை விடக் குறைவாகவே இருக்கிறது. எனினும், எடை குறைப்பு மற்றும் செயல்திறன் ஆகியவை, இதை ஒரு சிறந்த மாற்றாக முன்னிறுத்துகின்றன.
உலோக காயில் இல்லாத மோட்டார்கள், இலகுரக மின்சாரவாகனங்களுக்கு விரைவில் வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
🦷வலி தராத செயற்கை பல்
பற்களை இழந்தவர்களுக்குச் செயற்கை பற்களை வைப்பது அவ்வளவுசுலபமான காரியமல்ல. இயற்கையான பற்களை, நரம்புகள் நிறைந்த மெல்லிய திசுக்கள், தாடை எலும்புகளுடன் சேர்க்கின்றன. இந்த நரம்புகள் தான் நாம் எப்படி உண்கிறோம், பேசுகிறோம் என்பதை நிர்ணயிக்கின்றன.
இயற்கை பற்கள் விழுந்தபின் அதே இடத்தில் செயற்கையான செராமிக் பற்கள் வைப்பதற்காக தாடை எலும்பைத் துளையிட வேண்டி உள்ளது. இது வலியை உருவாக்கும்.
புதிய பல்லை இயற்கையான பல் போல் உணரமுடியாது.இதற்கான தீர்வை அமெரிக்காவின் டப்ட்ஸ் பல்கலை உருவாக்கியுள்ளது. செயற்கை பல்லின் அடியில் ஸ்டெம் செல்களையும், சில விதமான புரதங்களையும் இணைத்துப் புதுமை செய்துள்ளது. இவை இரண்டும் செயற்கை பல்லை தாடை நரம்பு, எலும்புடன் இணைய உதவுகின்றன. இந்தப் புதுமுறையில் வலி ஏற்படாது.
செயற்கை பல் இயற்கைப் பல் போலவே வேலை செய்யும். எலிகள் மீது சோதித்துப் பார்த்ததில் செயற்கை பல் வைத்த 6 வாரங்களில், இயற்கை பல் போலவே அது வேலை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக மனிதர்கள் மீது சோதிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
🍴மேற்கத்திய
உணவு
அதீத சர்க்கரை, கொழுப்பு, உப்பு உடைய மேற்கத்திய உணவுகளை உண்பதால் ஏற்படும்
உடல் பருமன், மண்ணீரலை பாதிக்கும். ஆரோக்கியமான உணவு முறைக்கு மாறினால்கூட இந்த பாதிப்பை
சரி செய்யவே இயலாது என்று, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கே.ஐ., பல்கலை மேற்கொண்ட ஆய்வில்
தெரிய வந்துள்ளது.
📶மனிதர்களும்
பாதிக்கப்படுவர்
பாசிகளின் வளர்ச்சியில் மாற்றம், நீரின் வெப்பநிலை மாற்றம் முதலிய காரணங்களால்
பெருங்கடல்கள் இருண்டு வருகின்றன. அதாவது உலகப் பெருங்கடல் பரப்பின் 20 சதவீத பரப்பிற்குள்,
ஒளி ஊடுருவுவது குறைந்துள்ளது. இதனால் சூரிய, சந்திர ஒளியை நம்பி வாழும் உயிரினங்கள்
கடுமையாக பாதிக்கப்படும். இவற்றை உண்ணும் மனிதர்களும் பாதிக்கப்படுவர் என்று விஞ்ஞானிகள்
எச்சரிக்கின்றனர்.
⭕ஒளியில் இயங்கும்
உங்கள் ஸ்மார்ட் போன், குறைந்த மின்சார செலவில், ஆயிரம் மடங்கு வேகமாக இயங்கினால்
எப்படி இருக்கும்? அமெரிக்காவின், எம்.ஐ.டி., நிலையத்தில் உள்ள பொறியாளர்கள், ஒரு புதிய
ஏ.ஐ., செயலியை உருவாக்கியுள்ளனர். இது, தகவல்களை அலசவும், வெளியிடவும், எலக்ட்ரான்களை
பயன்படுத்துவதில்லை.
மாறாக, ஒளியை பயன்படுத்தி தகவல்களை பரிமாறுகிறது. இது, செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொடர்பின் எதிர்காலத்தை அடியோடு மாற்றிவிடும்.
இந்த 'ஆப்டிகல் நியூரல் நெட்வொர்க்' சில்லு, தரவுகளை பகுப்பாய்வு செய்யவும், அனுப்பவும் போட்டானிக் கூறுகளை பயன்படுத்துகிறது. இது, மனித மூளையில் நியூரான்கள் செயல்படும் விதத்தை பிரதிபலிக்கிறது.
ஆனால் இந்த சில்லு, ஒளிக்கற்றைகள் மூலம் கணக்கீடுகளை செய்கிறது. இதன் விளைவாக, குறைந்த மின் செலவில், ஒளி வேகத்தில் இந்த சில்லு இயங்கும்.
இந்த சில்லு, '6ஜி' நெட்வொர்க்குகள், நிகழ்நேர மொழிபெயர்ப்பு கருவிகள் மற்றும் அதிவேக நிதி அமைப்புகள் போன்ற தொழில்நுட்பங்களை செலுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மேலும், ஒளியானது எலக்ட்ரான்களை விட வேகமாக, குறைந்த எதிர்ப்புடன் பயணம் செய்வதால், முற்றிலும் புதிய கணினி கட்டமைப்புகளுக்கான கதவை திறக்கிறது.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment