ஊட்டச்சத்துகள் நிறைந்த கருவாட்டில் ஒளிந்திருக்கும் ஆபத்து

தவிர்ப்பது எப்படி?



கருவாடு ஊட்டச்சத்து நிறைந்த ஒரு சக்தி வாய்ந்த உணவு. 100 கிராம் கருவாட்டில் 60-80% வரை புரதம் உள்ளது. இது இறைச்சி, முட்டையைவிட அதிகமான அளவு. இந்த மேம்பட்ட புரதம் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது. இது எளிதில் செரிமானமாகி, தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
மேலும், ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை, இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், குழந்தைகளின் கற்றல் திறன், நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகின்றன. இவை ரத்த அழுத்தம், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

கருவாட்டில் வைட்டமின் டி, ஏ, பி12 போன்ற முக்கியமான வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன. வைட்டமின் டி எலும்புகளின் வலிமைக்கு அவசியமானது. வைட்டமின் ஏ கண்பார்வை, நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது.

வைட்டமின் பி12 நரம்பு மண்டலம், ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு மிகவும் அவசியம். துத்தநாகம், செலீனியம் போன்ற தாது உப்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.
சிறிய மீன்களின் முழு உடலையும் (எலும்புகள் உள்பட) உண்ண முடியும் என்பதால், இவை பெரிய மீன்களைவிட 2-3 மடங்கு அதிக கால்சியம், 5-10 மடங்கு அதிக இரும்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக இந்திய ஊட்டச்சத்து நிறுவனத்தின் (NIN) ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இது குறிப்பாக வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு.
அதேவேளை 
கருவாடு தயாரிப்பதற்கு, கடலில் பிடித்த மீன்களைக் கழுவிச் சுத்தம் செய்து வெயிலில் 3-5 நாட்கள் காய வைக்கப்படும். மாதக்கணக்கில் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக இதில் 20% முதல் 30% வரை உப்பு சேர்த்து காயவைக்கப்படுகிறது.
 சில சுகாதார சவால்களும் அதில் உள்ளன. பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் கருவாட்டில் உப்பு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. சராசரியாக, 100 கிராம் கருவாட்டில் 5-10 கிராம் உப்பு இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் 20-30% உப்பு சேர்க்கப்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களுக்கு வழிவகுக்கும். இதைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம்.

அதோடு கருவாடு தயாரிப்பு சுகாதாரமின்றி இருந்தால், அதில் நுண்ணுயிர்த் தொற்று அபாயம் இருக்கவும் வாய்ப்புள்ளது. சுத்தமற்ற சூழலில் காயவைப்பது, இலையான் போன்ற பூச்சிகள், புழுக்கள் ,  மண் போன்றவை கருவாட்டுடன் சேர்ந்து கருவாடாகும்  சாத்தியம் உள்ளது. சில வேளைகளில் கெட்டுப்போன மீனை கருவாடு தயாரிக்க சிலர் பயன்படுத்துவதால், உணவுப் பாதுகாப்பில் மிகப்பெரிய சவால் உள்ளது.

புகை போடுவதன் மூலம் தயாரிக்கப்படும் கருவாட்டில் பாலிசைக்ளிக் அரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) உருவாகலாம்.உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகள், அதிகம் புகை போடப்பட்ட உணவு வகைகளை உட்கொள்வது சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் எனக் காட்டுகின்றன.

கருவாட்டில் கன உலோகங்கள் கூடுதல் அளவில் சேர்ந்துவிடும் அபாயமும் உள்ளது. குறிப்பாக கடல் மாசுபாடு அதிகமுள்ள பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களில் பாதரசம், காட்மியம் போன்ற கன உலோகங்கள் அதிக அளவில் இருக்கலாம்.

இவை நீண்ட காலத்திற்கு உடலில் சேர்ந்து நரம்பு மண்டல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இந்தக் காரணங்களாலேயே, கருவாட்டு உணவு வகைகளை மருத்துவர்கள் தவிர்க்குமாறு வலியுறுத்துகிறார்கள்.

இருப்பினும், இந்த சவால்கள் அனைத்தையும் சரியான உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் முறைகளின் வாயிலாகச் சரிசெய்ய முடியும். குறைந்த உப்பு, சுகாதாரமான உற்பத்தி முறைகள், நவீனப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் தரமான கருவாடு மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

எனவே சுகாதாரமுறையில் ஆக்கப்பட்ட கருவாடு என உறுதிசெய்யப்பட்டவைகளை தெரிவு செய்வதன் மூலம் மேற்கூறிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம்.

நன்றி:அன்பு வாகினி / பிபிசி தமிழுக்காக

No comments:

Post a Comment