அறிவியல்=விஞ்ஞானம்
குளிர்ச்சி-பெயின்ட்
சிங்கப்பூர் விஞ்ஞானிகள் ஒரு புதிய வகை வெள்ளை பெயின்ட்டைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதை சுவரில் பூசியதும், நீர்த் துளிகளை வெளியேற்றும். மனித உடலை குளிர்விக்கும் வியர்வை
போல், இந்த நீர்த்துளிகள் செயல்பட்டு, கட்டிடங்களை வெப்பமான சூழலிலும் குளிர்ச்சியாக
வைக்கிறது.
வலி நிவாரணி
மறுசுழற்சியில் ஒரு திருப்பம். விஞ்ஞானிகள், இ.கோலி (E. coli) என்ற பாக்டீரியாவை
வைத்து, பிளாஸ்டிக் கழிவுகளை, பாராசிட்டமால் மருந்தாக மாற்றும்படி செய்துள்ளனர். பயன்படுத்தப்பட்ட
பிளாஸ்டிக் பாட்டில்களை சிதைத்து, பொதுவான வலி நிவாரணியாக மாற்றும் இந்த செயல்முறை,
மருத்துவ விநியோகம் மற்றும் பிளாஸ்டிக் மாசுபாடு என இரண்டுக்கும் தீர்வு வழங்குகிறது.
வெறும் நீர்க்குமிழியில்
கிடைக்கும் உரம்!
இந்தியாவின் தேசிய ரசாயன ஆய்வகமும் (NCL) அயர்லாந்திலுள்ள லிமெரிக் பல்கலையும்,
இணைந்து ஒரு அசத்தலான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளன. 'குமிழிகளை உருக்குதல்'
(cavitation) என்ற வேதியியல் விந்தையைப் பயன்படுத்தி, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை
அடித்திருக்கிறார்கள்.
அதாவது, கழிவு நீரிலிருந்து உரம் தயாரிப்பதுடன், நீரை சுத்திகரிக்கும் வேலையையும் சேர்த்தே செய்கிறது இந்த கண்டுபிடிப்பு.
இந்த அமைப்பில், 'சுழல்- டையோடு ஹைட்ரோடைனமிக் கேவிடேஷன் ரியாக்டர்' என்ற ஒரு கருவி பயன்படுகிறது. இதில் உள்ள சுழலும் கூம்பு, தண்ணீரில் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறிய குமிழிகளைச்சிதைக்கிறது.
நீர்க்குமிழிகள் உடையும்போது, அந்த இடத்தில் மிக அதிக வெப்பமும், அழுத்தமும் மைக்ரோ வினாடி நேரம் உருவாகிறது. இந்த வெப்பமும், அழுத்தமும், காற்றிலுளள நைட்ரஜனையும் நீரையும் அம்மோனியாவாக மாற்றுகிறது. மேலும், நீரில் கார்பன் டை ஆக்சைடு இருந்தால், சிறிதளவு யூரியாவும் வேதி வினை மூலமாக உருவாகிறது. இதற்குக் கூடுதலாக வெப்பமோ, அழுத்தமோ, எந்த வினையூக்கிகளோ தேவையில்லை என்பதுதான் இதன் சிறப்பு.
பிரவீன் பாட்டீல் தலைமையிலான குழுவினர், இதே கருவியை வைத்து தொழிற்சாலைக் கழிவுநீரில் இருந்து 80 சதவீதத்திற்கும் அதிகமான அம்மோனியா மற்றும் நைட்ரஜனை வெற்றிகரமாக நீக்கியுள்ளனர்.
இதன் அர்த்தம் என்னவென்றால், இந்தக் கருவி மாசுபட்ட தண்ணீரையும் சுத்தம் செய்யும்; அதே நேரத்தில், விவசாயத்திற்குத் தேவையான உரத்தின் மூலப்பொருட்களையும் உற்பத்தி செய்யும் என்பது தான்.
இதயம் காக்கும்
இலை காய்கறிகள்
இலைகளை உடைய காய்கறிகளை உண்பது இதய நோய்களைக் குறைக்கும் என்கிறது சமீபத்திய
ஆய்வு. கீரை, பிராக்கலி, முட்டைக்கோஸ் முதலிய காய்கறிகளில் வைட்டமின் கே1 நிறைந்துள்ளது.
இது இதயம், ரத்த நாளங்களை வலுப்படுத்தும். எனவே தினமும் இவற்றை உண்பது நல்லது என்கின்றனர்
மருத்துவர்கள்.
உலகின் மிக முக்கியமான உடல் பிரச்னைகளில் ஒன்று இதயக் கோளாறு. ரத்த நாளங்களில்
கொழுப்பு அடைக்கும்போது ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. பல உயிர்களை
பறிக்கின்ற வாழ்வியல் முறை நோய் என்பதால் தான் இதை தடுக்கும் வழிகள் குறித்து உலகம்
முழுக்க ஆய்வுகள் நடக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் உள்ள இசியு பல்கலையும், டேனிஷ் புற்றுநோய் மையமும் இணைந்து இது தொடர்பாக 14 ஆண்டுகள் ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். சராசரியாக 75 வயதுடைய ஆஸ்திரேலிய பெண்கள் 1,436 பேரை விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்கள் தினமும் தங்கள் உணவில் எவ்வளவு 'கே 1' வைட்டமின் எடுத்துக் கொள்கின்றனர் என்று தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அதில் கே1 அதிகமாக உண்டவர்களின் ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆண்கள் தினமும் 120 மில்லி கிராமும், பெண்கள் 90 மில்லி கிராமும் கே1 வைட்டமின் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கே1 வைட்டமின் ஒரு கப் கீரையில் 145 மில்லி கிராமும், அரை கப் பிராக்கலியில் 110 மில்லி கிராமும், அரை கப் முட்டைக்கோஸில் 82 மில்லி கிராமும் உள்ளது. எனவே தினமும் இவற்றை உண்டாலே உடலுக்குத் தேவையான கே 1சத்து கிடைத்துவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
'பெடைன்’
சிறுநீரகங்களில் இயற்கையாக உற்பத்தியாகும் ஒரு சத்து 'பெடைன். பீட்ரூட்டிலும்,
கீரைகளிலும் உள்ள இதை, வயதான எலிகளுக்குக் கொடுத்தபோது, அவற்றின் உடலில், உடற்பயிற்சிக்கு
இணையான பலன் கிடைப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பெடைன் சத்து உடலில் ஏற்படும்
வீக்கத்தைக் குறைத்து, செல்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
கொடுக்கில்லாத்
தேனீ
ஆஸ்திரேலியாவில் உள்ள கொடுக்கில்லாத் தேனீக்களின் தேனை அந்த நாட்டின் பூர்வகுடிகள்
மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலை மேற்கொண்ட
ஆய்வில், இந்தத் தேனில் கிருமிநாசினித் தன்மை இருப்பது தெரியவந்துள்ளது.
கண்ணாடி போத்தலினுள்
எப்படி பிளாஸ்டிக் வந்தது?
கண்ணாடிப் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் பாதுகாப்பானவை என்ற பொதுவான
நம்பிக்கை தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது. பிரான்சில் நடந்த ஓர் ஆய்வில்தான் இந்த
அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
குளிர்பானங்கள், ஐஸ் டீ, பீர், எலுமிச்சைச் சாறு போன்ற கண்ணாடிப் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களில், லிட்டருக்கு ஏறத்தாழ 100 நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இது அசல் பிளாஸ்டிக்காலான பாட்டில்கள் அல்லது டப்பாக்களில் இருக்கும் பிளாஸ்டிக் நுண் துகள்களை விட கணிசமாக அதிகம். இந்த நுண்துகள்கள் எப்படி கண்ணாடி பாட்டில்களில் வர முடியும்?
ஆய்வில் தெரியவந்தது இதுதான்: பாட்டில்களில் இருக்கும் உலோக மூடிகளின் மேல் பூசப்பட்டுள்ள அலங்காரப் பெயின்ட் கரைந்து கலப்பதே இந்த மாசுக்கு முக்கியமான காரணம்.
பாட்டில் மேல்மூடியை அடைக்கும் முன், மூடிகளை காற்றால் ஊதி கழுவுவதன் வாயிலாக, இந்த துகள்களின் எண்ணிக்கையை 60 சதவீதம் வரை குறைக்க முடியும் என்றும் அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
கார்க் எனப்படும் தக்கையால் மூடப்பட்ட கண்ணாடி பாட்டில்களில் உள்ள தண்ணீர் மற்றும் ஒயின்களில் மிகக் குறைந்த அளவே நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவுகள், தயாரிப்பாளர்கள் மூடிகளை கூடுதல் கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment