வெள்ளை - பழுப்பு ஆகிய இரு நிற முட்டைகளில் எது சிறந்தது?

வெள்ளை நிற முட்டையா அல்லது பழுப்பு நிற முட்டையா? எந்த முட்டையில் அதிக ஊட்டச்சத்து உள்ளது என்ற கேள்வியும் அவ்வப்போது எழுகிறது.

பழுப்பு நிற முட்டையே இயற்கையானது என்றும் அதனால் இதில் அதிக ஊட்டச்சத்து இருக்கும் என்றும் பலர் நம்புகின்றனர். இது உண்மையா?

"பொதுவாக வெள்ளை நிற இறகுகள் மற்றும் காதுகள் கொண்ட கோழி வெள்ளை நிறத்தில் முட்டையிடும். அதே சமயம் சிவப்பு நிற இறகுகள் மற்றும் காதுகள் கொண்ட கோழி பழுப்பு நிற முட்டையிடும்" என ஃபுட் அண்ட் வைன் (Food and Wine) என்ற அமெரிக்க இதழின் செய்தி கூறுகிறது.

"கோழி எந்த இனத்தை சேர்ந்தது என்பதைப் பொறுத்துதான் முட்டை ஓடுகளின் நிறம் தீர்மானிக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க மரபியல் சார்ந்தது" என்கிறார் மரிலாந்து பல்கலைக்கழகத்தின் கோழி வளர்ப்பு நிபுணர் மற்றும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ள அறிவுரைகள் மற்றும் தகவல்களை வழங்கும் நிபுணரான டாக்டர் ஜொனாதன் மொய்ல்.

வெள்ளை மற்றும் பழுப்பு நிற முட்டைகளுக்கு இடையே ஊட்டச்சத்து அளவில் எந்த குறிப்பிடத்தக்க வித்தியாசமும் இல்லை என்கிறது அமெரிக்க வேளாண்துறை.

பெரிய முட்டையில் 90 கலோரி மற்றும் 8 கிராம் புரதம் உள்ளது, அதேசமயம் சிறிய முட்டையில் 60 கலோரி மற்றும் 6 கிராம் புரதம் மட்டுமே உள்ளதாக அது குறிப்பிடுகிறது.

"சுதந்திரமாக சுற்றித் திரியும் கோழிகள் மீது அதிக சூரிய ஒளி படுவதால், இவை ஈனும் முட்டைகளில் வைட்டமின் D அதிகம் இருக்கும்" என அமெரிக்க நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பழுப்பு நிற முட்டையிடும் கோழிகள்  உண்ணபதற்கு உணவு அதிகமாகத்  தேவைப்படுவதால் இதன் முட்டைகளின்விலைகள் அதிகமாக இருக்கிறது என்பதை அமெரிக்க வேளாண்துறையும் ஒப்புக்கொள்கிறது.

'ஊட்டச்சத்தை போலவே சுவையிலும் இரு முட்டைகளுக்கு இடையே எந்த வேறுபாடும் கிடையாது என அமெரிக்க ஊடகமான ஹெல்த்லைனில் வெளியான செய்தி கூறுகிறது.

"முட்டையின் சுவை, கோழியின் இனம், அது என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்கிறது, முட்டை எந்தளவுக்கு புதியது, சமைக்கும் முறை ஆகியவற்றை பொறுத்தது. மேலும் வீட்டில் வளர்க்கப்படும் கோழி மற்றும் வழக்கமாக வளர்க்கப்படும் கோழிகள் சாப்பிடும் உணவுகளில் வித்தியாசம் இருப்பதால், இதுவும் முட்டையின் சுவையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்" எனக் கூறுகிறது அந்த செய்தி.

மொத்தத்தில் முட்டையின் நிறத்தில் கவனம் செலுத்துவதை விட, மக்கள் அதன் தரம் மற்றும் அது எந்தளவிற்கு புதியது என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும். இதைத்தவிர முட்டை வாங்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்?

🥚சுத்தமான மற்றும் ஓடுகள் உடையாத முட்டைகளை தேர்வு செய்ய வேண்டும்.

🥚காலாவதியான முட்டைகளை வாங்க வேண்டாம்.

🥚உங்களின் தேவை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப சரியான முட்டையின் அளவை தேர்ந்தெடுக்க வேண்டும்.

🥚முட்டையை வாங்கிய கையோடு அதை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.

🥚முட்டை எங்கிருந்து வருகிறது, அவை எந்தளவிற்கு புதிதாக உள்ளது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

 

நன்றி :பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

No comments:

Post a Comment