“முதுமையின் அரவணைப்பு”
“முதுமையின் அரவணைப்பு
தனிமையைப் போக்கும்
பதுமையுடன் விளையாடும்
மழலைப் போலவே!
பெதும்மை பருவத்தில் மகிழ்ச்சி காணும்
புதுமை செய்யும் குழந்தை போன்றே!"
"பாளையாம் செத்தும் பாலனாம் செத்தும்
காளையாம் செத்தும் இளமை செத்தும்
மூப்பும் ஆகியும் மூலையில் ஒதுக்கியும்
தனித்து விட்ட கொடூரம் எனோ?"
"பொன்னேர் மேனி அழகு இழந்து
நன்னெடுங் கூந்தல் நரை விழுந்தாலும்
மாறாத அன்பு நிலைத்து நிற்க
வயதான மக்களைத் தழுவ வேண்டும்!"
"இளமை நீங்கி உடலும் மெலிய
தளர்ச்சி பெற்று கோலிற் சாய
களைப்பு கொண்ட உள்ளம் ஆற
பாசம் கொடுக்கும் கைகள் தேவை!"
"அடக்கம் தடுக்க ஆசை நடக்க"
"அடக்கம் தடுக்க - ஆசை நடக்க
அச்சம் எச்சரிக்க - அழகு இழுக்க
அடங்கா நெஞ்சம் - பொங்கி வழிய
அணங்கு உன்னுடன் - நான் வரவா?"
"ஆடை கொஞ்சம் - காற்றில் ஆட
ஆபரணம் உடலில் - மின்னி ஒளிர
ஆழம் தெரியா - சுந்தரி கவர்ச்சி
ஆட்டிப் படைக்குது - என் உள்ளத்தை?"
"இமைகளில் சிக்கி - என்னையே இழந்து
இளையாள் இடையின் - வனப்பில் மயங்கி
இருண்ட மேகஞ்ச்சுற்றி - சுருண்டு கூந்தலிற்குள்
இமைப் பொழுதில் - ஏன் வஞ்சித்தாய்?"
"ஈரமான பூவே - இளமை பூவையே
ஈகை ஒன்று - எனக்குத் தருவாயா
ஈன இரக்கம் - கொண்ட விறலியே
ஈடிகை எடுத்து - உன்னை வரையவா?"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]