விஞ்ஞானத்தின் விந்தை

 அறிவியல்=விஞ்ஞானம்



🤰பாக்டீரியா உருவாக்கும் குடல் புற்றுநோய்!

சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வின் வாயிலாக கவலைக்குரிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 2008 முதல் 2017 வரை பிறந்த கிட்டத்தட்ட 1.56 கோடி பேர், எதிர்காலத்தில் வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்படலாம். இதில், 76 சதவீத பாதிப்புகளுக்கு அறிகுறியற்ற எச்.பைலோரி (H. Pylori) என்ற பாக்டீரியா தொற்றே காரணமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக, இந்த பாக்டீரியா, குழந்தைப் பருவத்தில் அசுத்தமான உணவு, நீர் அல்லது தொடுதல் வாயிலாக பரவும்.

பிறகு வயிற்றில் தங்கி, நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தும். நாளடைவில் அல்சர் எனப்படும் குடற்புண்கள் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இந்த பாதிப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு, ஆசியாவிலேயே இருக்கும் என்றும் இந்த ஆய்வு கணித்துள்ளது.

இந்த பாக்டீரியாவை குடலிலிருந்து நீக்க எளிய ஆன்டிபயாடிக் மருந்துகள் வந்துவிட்டன. எனவே, எச்.பைலோரியை இலக்காகக் கொண்டு, உலகளவில் 'பரிசோதித்து சிகிச்சை அளிக்கும்' (Screen--and--treat) திட்டங்களைச் செயல்படுத்துவதன் வாயிலாக, புதிய வயிற்றுப் புற்றுநோய் பாதிப்புகளை 75 சதவீதம் வரை குறைக்க முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

எனவே, பொது சுகாதார அமைப்புகள், குறிப்பாக அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில், இந்த அமைதியான அச்சுறுத்தல் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதற்கு முன் உடனடியாக செயல்பட வேண்டும்.

 

👱ஆஸ்துமாவை அதிகரிக்க…

எதிர்மறை சிந்தனை, மன அழுத்தம் ஆகியவை ஆஸ்துமாவை அதிகரிக்கும் என்று இத்தாலியில் உள்ள கத்தோலிக்கப் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 301 பேரை 12 மாதங்கள் தொடர்ந்து கண்காணித்து இதைக் கண்டறிந்துள்ளனர்.

 

🦟கொசுவை கொல்லும் லேசர்!

சீனாவில் உருவாக்கப்பட்ட 'ஃபோட்டான் மேட்ரிக்ஸ்' என்ற கருவி, கொசுவைக் குறிவைத்துக் கொல்வதற்காகவே உருவாக்கப்பட்டது. இதில் இருக்கும் லேசர், மிகத் துல்லியமாக கொசுக்களை கட்டுப்படுத்துவதில் ஒரு புரட்சியை ஏற்படுத்த உள்ளது.

இந்தக் கருவி, லிடார் (LiDAR) உணரிகள் மூலம், பறக்கும் கொசுவின் அளவு, துாரம், மற்றும் திசை ஆகியவற்றை மூன்று மில்லி விநாடிகளுக்குள் கண்டறியும். பிறகு, ஒரு சிறப்பு லேசர் கற்றையை செலுத்தி, ஒரே நொடியில் 30 கொசுக்கள் வரை அழித்துவிடும்.

மனிதர்களுக்கு ஆபத்தில்லாதது என்ற தரச் சான்று பெற்ற இந்தக் கருவி, நீர்ப்புகாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இதை வீட்டிற்குள் மட்டுமல்ல. வெளியேயும் நிறுவ முடியும். இதன் அடிப்படை மாடல், 3 மீட்டர் துாரம் வரையிலும், ப்ரோ மாடல் 6 மீட்டர் தூரம் வரையிலும் கொசுக்களை தாக்கும்.

மனிதர்கள் அல்லது செல்லப்பிராணிகளுக்கு அருகில் லேசர் பாய்வதைத் தடுக்க ஒரு ரேடார் பாதுகாப்பு அமைப்பு இதில் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனாலும், இந்த லேசரின் சக்தி மற்றும் பாதுகாப்பு சான்றிதழ்கள் குறித்து சில விமர்சனங்கள் இருக்கவே செய்கின்றன. இந்தக் கருவி பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டால், இது கொசுக்களுக்கு எதிராக ஒரு புதிய ஆயுதம் நமக்குக் கிடைக்கும்.

 

㊩குடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் ஸ்மார்ட் மாத்திரை

அமெரிக்காவிலுள்ள கால்டெக் பல்கலை ஆராய்ச்சியாளர்கள், பில்ட்ரெக் (PillTrek) எனப்படும் விழுங்கக்கூடிய 'ஸ்மார்ட்' மாத்திரையை உருவாக்கியுள்ளனர். கிட்டத்தட்ட 7x25 மி.மீட்டர் அளவுள்ள இது, செரிமான மண்டலத்தில் பயணம் செய்து, பி.எச்., அளவு, வெப்பநிலை, குளுக்கோஸ், செரோடோனின் போன்ற நரம்பியல் கடத்திகள் மற்றும் புரதங்கள் ஆகியவற்றையும் நிகழ்நேரத்தில் அளவிடுகிறது.

மலம் அல்லது பயாப்ஸி பரிசோதனைகளை போலல்லாமல், இந்த ஊடுருவல் இல்லாத கருவி மூலம், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்கலாம். இது, ஆரம்ப கால நோயறிதல், வளர்சிதை மாற்றத்தை கண்காணிப்பது மற்றும் மனநல காரணிகளை நிர்வகிக்கவும் மருத்துவர்களுக்கு உதவும்.

இதற்கு குறைந்த மின்சக்தி போதும். நுணுக்கமான மின்னணுவியல் உணரிகளை உள்ளடக்கிய இந்த மாத்திரை, முப்பரிமாண அச்சியந்திரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பில்ட்ரெக் மூலம் பல்வேறு உடல் அறிகுறிகளை சேகரிக்கும் பல்துறை உடல் நோயறியும் கருவியாக உருவெடுத்து இருக்கிறது.

ஏற்கனவே நடத்தப்பட்ட விலங்குகள் சோதனை, நல்ல பலன்களை தந்துள்ளதை அடுத்து, மனித சோதனைகளை செய்ய விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். குடல் நோயறிதலை எளிதாகவும், மலிவாகவும் ஆக்கும் என, கால்டெக் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

👨தாமிர சத்து

சீனாவின் ஹெபெய் மருத்துவப் பல்கலை, 60 வயதைக் கடந்த 2,354 பேரை வைத்து ஆய்வு மேற்கொண்டது. இதன் வாயிலாக தினமும் 1.22 மில்லிகிராம் தாமிர சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொண்டால் நினைவாற்றல், நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்னைகள் வராது என்று தெரியவந்துள்ளது. [தாமிரம் (Copper) என்பது நம் உடலுக்குத் தேவையான அடிப்படை கனிமச் சத்து (Essential trace mineral).]

 

🍾'டயட் சோடா'

சர்க்கரை சேர்க்காத 'டயட் சோடா' பருகும் பழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு நீரிழிவு வகை 2 நோய் ஏற்படும் வாய்ப்பு 38 சதவீதம் அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

 

🖌பாதிப்பில்லாத பூச்சு

பொதுவாக 'நான் ஸ்டிக்' பாத்திரங்களின் மேற்பரப்பில் பூசப்படும் ரசாயனங் கள் உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கானவை. எனவே இவை இரண்டுக்கும் பாதிப்பில்லாத பூச்சை கனடாவைச் சேர்ந்த டொரன்டோ பல்கலை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

பொதுவாக 'நான் ஸ்டிக்' பாத்திரங்களின் மேற்பரப்பில் பூசப்படும் ரசாயனங் கள் உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கானவை. எனவே இவை இரண்டுக்கும் பாதிப்பில்லாத பூச்சை கனடாவைச் சேர்ந்த டொரன்டோ பல்கலை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

 

🪴தாவர கொழுப்பே சிறந்தது

நம் உடலுக்குத் தேவையான சத்துகளுள் ஒன்று கொழுப்புசத்து. உடலில் இந்தச் சத்து அதிகமானால் இதயக் கோளாறு தொடங்கி புற்றுநோய் வரை பல நோய்கள் ஏற்படும். கொழுப்புக்கும் புற்றுநோய்க்குமான தொடர்பு குறித்து நீண்டகாலமாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. உடலில் இயற்கையாகவே புற்றுநோயை எதிர்த்துப் போராடும் நேட்சுரல் கில்லர்ஸ் (Natural killer -- NK) உள்ளிட்ட சில செல்கள் உள்ளன.

அதிகக் கொழுப்பு இவற்றை அழித்துவிடுகிறது. அதனால் தான் புற்றுநோய் வேகமெடுக்கிறது என்கின்றன முந்தைய ஆய்வுகள். கொழுப்பின் அளவை விடக் கொழுப்பின் தன்மை தான் புற்றுநோய் ஏற்படக் காரணமாக உள்ளது என சமீபத்திய ஆய்வு கூறுகிறது .

அமெரிக்காவில் உள்ள பிரின்செஸ்டன் பல்கலையின் புற்றுநோய் மைய ஆய்வாளர்கள் எலிகள் மீது ஆய்வு செய்தனர். ஒரு பகுதி எலிகளுக்குத் தேங்காய், ஆலிவ், பனை எண்ணெயிலிருந்து எடுக்கப்பட்ட தாவரக் கொழுப்பை உண்ணக் கொடுத்தனர். மற்றொரு பகுதி எலிகளுக்குப் பன்றிக் கொழுப்பு, வெண்ணெய், மாட்டுக் கொழுப்பு ஆகியவற்றைக் கொடுத்தனர். பிறகு இரு தரப்பு எலிகள் உடலிலும் புற்றுநோய் செல்களைப் புகுத்தி வைத்தார்கள். கட்டிகள் வளரும் வரை சில நாட்கள் பொறுத்திருந்து எலிகளை ஆராய்ந்தனர்.

விலங்குக் கொழுப்புகள் புற்றுநோய் எதிர்ப்புச் செல்களின் மைடோகாண்ட்ரியாவைத் தாக்கி அந்தச் செல்களைச் சிதைத்தன. இதனால் விலங்குக் கொழுப்பு உண்ட எலிகள் உடலில் புற்றுச் செல்கள் பெருகி இருந்தன.

மாறாகத் தாவரக் கொழுப்பை உண்ட எலிகள் உடலில் நோய் எதிர்ப்புச் செல்கள் நன்றாக இயங்கிப் புற்றுநோய் செல்களை அழித்தன. இதேபோல் மனித உடலில் உள்ள நேட்சுரல் கில்லர்ஸ் செல்களை மட்டும் தனியாக எடுத்து இருவேறு கொழுப்புகளைச் செலுத்தி ஆய்வாளர்கள் சோதித்துப் பார்த்தனர்.

இதிலும் மேற்கண்ட முடிவே வந்தது. ஆகவே விலங்குக் கொழுப்புகளை விடத் தாவரக் கொழுப்புகள் ஆபத்து குறைவானவை என்று இந்த ஆய்வின் மூலம் நிறுவப்பட்டுள்ளது.

 

💫தொகுப்பு:செ.மனுவேந்தன்

No comments:

Post a Comment