"உணவூட்டம் சமநிலை பெறுமா....!"
"உணவூட்டம் சமநிலை பெறுமா இன்று
உடல்நலம் தேர்ச்சி அடையுமா நாளை!
உள்ளம் கேட்குதே கொஞ்சம் சொல்லாயோ
உண்மை உரைத்து விளக்கம் தருவாயோ!"
"ஆரோக்கியம் என்றும் ஒரு புதையல்
ஆரவாரம் முழங்காத மனித நலமே!
ஆற்றல் தரும் ஊட்டச் சத்து
ஆக்கம் அளிக்கும் உணவு மருந்தே!"
"பச்சையிலை பழங்கள் பருப்பு கலந்து
பற்பல கொழுப்புக்கள் சீனி தவிர்த்து
பதப்படுத்தா இயற்கை ஈன்ற சாப்பாடு
பக்குவமாய் சுவை ஊட்டிய அமுதமே!"
"ஊடல்"
[அந்தாதிக் கவிதை]
"ஊடல் இருந்தால் வரும் கூடல்
கூடல் வந்தால் சுரக்கும் இன்பம்
இன்பம் எல்லை மீறினால் துன்பம்
துன்பம் உனக்கு புகட்டுவது அறிவு!"
"அறிவு கொண்டு சிறப்பித்தல் வாழ்வு
வாழ்வு வாழ்வதில் பிறக்கட்டும் பெருமை
பெருமை என்றும் சேர்க்கட்டும் புகழ்
புகழ் வாழ்வுடன் நீங்கட்டும் உயிர்!"
"உயிர் எடுத்த பிறவிகள் எல்லாம்
எல்லாம் பகிரட்டும் சமதர்மம் ஓங்கட்டும்
ஓங்கட்டும் அன்பு தவிர்க்கட்டும் மோதல்
மோதல் வந்தால் பிறக்குமே ஊடல்!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment