தோல் புற்றுநோய் வரும் ஆபத்து....

 யாருக்கு அதிகம்? அறிகுறிகளும் சிகிச்சையும்


புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு மதிப்பீட்டின்படி, ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் 15 லட்சம் பேர் புதிதாக தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

 

தோல் புற்றுநோய்க்கான காரணம்

உலகம் முழுவதும் தோல் புற்றுநோய்க்கான முக்கிய காரணமாக சூரியனிலிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள் உள்ளன. சூரியனிலிருந்து வெளிவரும் இத்தகைய கதிர்கள் புற்றுநோய் காரணியாக (carcinogenic) உள்ளன.

வயல்கள், திறந்தவெளி பகுதிகளில் பல ஆண்டுகளாக தினந்தோறும் நீண்ட நேரத்துக்கு சூரிய ஒளியில் பணிபுரிபவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது.

வெள்ளை நிறமாக இருப்பவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. ஏனெனில், கருப்பு நிறம் சூரிய ஒளியை அதன் வெளிப்புறத்திலேயே உறிஞ்சுவிடும். அதனை உள்ளே அனுமதிக்காது.

குறிப்பிடத்தக்க அளவிலான புற ஊதாக்கதிர்களை நமது தோல் பெறும்போது உடல் செல்கள் வைட்டமின் டி-யை உற்பத்தி செய்கின்றன. ஆனால், நமது தோல் அதிக சூரிய ஒளிக்கு ஆட்பட்டால் மெலனினை உற்பத்தி செய்கிறது. இந்த செயல்முறையில், கருமையாதல் மூலம் தோல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறது.

மலைப் பிரதேசங்களில் வசிக்கும் பலருக்கும் இந்நோய் ஏற்படுவதற்கு அதிக ஆபத்து உள்ளது. ஏனெனில், அவர்கள் அதிகளவிலான புற ஊதாக் கதிர்களுக்கு ஆட்படுகின்றனர்.

சூரிய ஒளி மட்டுமல்லாது, நெருப்பின் வெப்பத்திற்கு தொடர்ச்சியாக ஆட்படுவோருக்கும் தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது.

 

தோல் புற்றுநோயின் அறிகுறிகள்

50 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே தோல் புற்றுநோய் அதிகமாக ஏற்படுகிறது.

💥அதிக நேரம் சூரிய ஒளிக்கு நேரடியாக ஆட்படும் உடல் பாகத்தில் சொறி அல்லது காயம் அல்லது அல்சர் ஏற்படும்போது, உடனடியாக மருத்துவரை காண வேண்டும்.

💥தோலில் கருப்பு அல்லது பழுப்பு (brown) நிறத்தில் புள்ளிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதிக்க வேண்டும். அதை தாமதித்தால், தோல் புற்றுநோய் பரவி, மூக்கு பகுதியில் பரவுவது அல்லது கண்ணுக்கு உள்ளே பரவுவது போன்றவை ஏற்படும்.

 

தோல் புற்றுநோய் எவ்வளவு ஆபத்தானது?

மற்ற புற்றுநோய்களை போன்றே, தோல் புற்றுநோயும் வேகமாக பரவும்போது மரணத்தை ஏற்படுத்துகிறது. நோயாளிகள் ஆரம்பகட்டத்திலேயே உடனடியாக மருத்துவரை ஆலோசித்து, சிகிச்சை எடுக்கும்போது, நோயாளியை காப்பாற்றுவது எளிதாக இருக்கிறது.

இரு வகையான தோல் புற்றுநோய்கள் உண்டு. ஒன்று, மெலனோமா. இந்த வகையான புற்றுநோய் அரிதாகவே ஏற்படுகிறது.

மெலனோமா புற்றுநோய் மரணத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. பொதுவாக ஆரம்பத்திலேயே மெலனோமா புற்றுநோய் கண்டறியப்படும் போது, 90% நோயாளிகள் குணமடைகின்றனர்.

ஆனால், இறுதி கட்டத்தில் கண்டறியும்போது, 90% நோயாளிகளை குணப்படுத்துவது கடினமாகிறது.

மெலனோமா அல்லாத தோல் புற்றுநோயும் உண்டு. அதில் ஒன்று, பாசல் செல் கார்சினோமா (basal cell carcinoma). இது மிக வேகமாக பரவாது. மற்றொன்று செதில் செல்கள் புற்றுநோய் (squamous cell carcinoma), இது மிக வேகமாக பரவி ஆபத்தை ஏற்படுத்துகிறது

 

தோல் புற்றுநோய் சிகிச்சை

பொதுவாக தோல் புற்றுநோய் அறிகுறிகளில் எந்த வலியோ, எரிச்சலோ, அரிப்போ இருக்காது, அதனால் பலரும் அதை கவனிக்கத் தவறிவிடுவார்கள். சூரிய ஒளி நேரடியாக படக்கூடிய உடலில் எந்த பகுதியிலாவது காயம் ஏற்பட்டு, அதிக காலத்துக்கு அது ஆறாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை சென்று ஆலோசிக்க வேண்டும்.

ஆரம்பத்திலேயே அது புற்றுநோயா என்பதை கண்டறியும் போது, அதற்கான சிகிச்சை எளிதாக இருக்கிறது. மோஸ் (Mohs) எனப்படும் சிகிச்சை அதற்கு வழங்கப்படுகிறது.

சூரியனின் ஆபத்தான கதிர்களிலிருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீன் தடவுவது சிறந்த வழியாக பொதுவாக நம்பப்படுகிறது.

உலகம் முழுவதிலும் மெலனோமா புற்றுநோய்களில் 80% சூரியஒளியால் ஏற்படும் வெங்குருவாலேயே (sunburn) ஏற்படுகிறது.

தோல் புற்றுநோய் பெரும்பாலும் மரணத்தை ஏற்படுத்தாது, பாதிக்கப்பட்ட பகுதி அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படுகிறது.

 இதை தவிர்ப்பதற்கான சிறந்த வழி சன்ஸ்கிரீன் உபயோகிப்பதுதான்.

சன்ஸ்கிரீன் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து மட்டும் பாதுகாக்காமல், பல மோசமான நோய்களிலிருந்தும் காக்கிறது. வயதாவதன் விளைவுகள் தோலில் தெரிவதை சற்று தாமதமாக்குகிறது.

ஆனால், சன்ஸ்ஸ்கிரீனை எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த சரியான மற்றும் துல்லியமான தகவல்கள் பலருக்கும் தெரிவதில்லை.

வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக அதை தடவ வேண்டும், ஏனெனில் சன்ஸ்கிரீன் உடனடியாக வேலை செய்யாது. அத்துடன், ஒருநாளுக்கு 2 அல்லது 3 முறை அதை பயன்படுத்த வேண்டும், ஏனெனில் 4 மணிநேரம் மட்டுமே சன்ஸ்கிரீன் வேலை செய்யும்.

 

நன்றி :சந்தன் குமார் ஜஜ்வாரே/பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

No comments:

Post a Comment