"அடைமழை" & "ஈர விழிகள் ....'' & "பனியில் நனைந்த ..."

 


"அடைமழை"

[அந்தாதிக் கவிதை]

"அடைமழை தொடர்ந்து ஐப்பசியில் பெய்யுது

பெய்த நீரோ வெள்ளமாய் நிற்குது

நிற்கும் தண்ணீரில் கழிவுகள் மிதக்குது

மிதக்கும் எண்ணங்கள் தேடுது கடுதாசி

கடுதாசி கப்பலாக அங்கே ஓடுது

ஓடும் மீன்கள் அதைத் துரத்துது

துரத்தும் மீனை பறவை கொத்துது

கொத்தும் பறவை பசியைத் தீர்க்குது

தீர்க்கும் பிரச்சனைகள் அப்படியே இருக்குது

இருக்கும் வடிகாலும் முடங்கிக் கிடக்குது

கிடக்கும் குப்பைகள் ஒட்டத்தை தடுக்குது

தடுக்கும் எதையும் உடைக்குது அடைமழை"

🍱🍱🍱🍱 

 

"ஈர விழிகள் என்னை ஈர்க்கிறதே!"

 

ஈர விழிகள் என்னை ஈர்க்குதே,

பாரமாய் அன்பு இதயம் தாக்குதே,

வீரம் பேசும் சொற்கள் வேண்டாம்,

தூரம் விலகாதே, அருகே வருவாயா?

 

ஆற அமர்ந்து முடிவு எடுக்காயோ,

உண்மையை நீ நேராய் சொல்லாயோ,

சிறந்த பெண்ணே சீற்றம் வேண்டாம்,

நிறம் மாறினாலும் காதல் மாறுமா?

 

கோரமான எண்ணங்கள் அழிந்திடட்டும்,

அரசியல் மறைந்து ஒற்றுமை விளங்கட்டும்,

அரங்கில் நடக்கும் நாடகம் இதுவல்ல,

நல்ல செயல் தான் நட்பை நிலைநாட்டட்டும்.

 

அறம் தரும் இன்பம் மலரட்டும்,

புறம் பேசும் பழக்கம் மறையட்டும்,

உரம் சேர்க்கும் பாசம் துளிரட்டும்,

விறலியே, விரைந்து என்னைத் தழுவாயோ!

🍱🍱🍱🍱  

 

"பனியில் நனைந்த சூரியன்"

 

பனியில் நனைந்த சூரியன் தெரிவதில்லை,

பணியில் நேர்மை காட்டியவன் வாழ்வதில்லை;

குனிந்த இனம் என்றுமே எழுந்ததில்லை,

இனிப்பான பலகாரம் ஆரோக்கியம் தருவதில்லை!

 

நனைந்து நடுங்கும் குளிரில் உடல்,

கனைந்து பெருக்கெடுக்கும் பொங்கும் கடல்;

அனைத்து உயிர்களும் விரும்புவது கூடல்,

தினைப் புனம் காக்கும் மடமையல்ல!

 

சூரியன் உதிப்பது உலகம் வாழ,

நரி ஊளையிடுவது இரவில் தாழ;

திரி எரிவது வெளிச்சம் தர,

அறிந்திடு இதுவே சமூக நியாயம்!

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

No comments:

Post a Comment