"உன்னைச் செதுக்கு" & "நீயில்லா வாழ்வு" & "காளையை அடக்கு..." & "ஓடுகிற தண்ணியிலே"

 கவிதைகள் 



"உன்னைச் செதுக்கு"  

உலகைப் புரிந்து உன்னைச் செதுக்கு
உண்மை அறிந்து உளியைப் பிடி 
உங்கள் மதிப்புகளை கவனமாகப் பதித்து 
உயிராகப் பண்பாட்டை வார்த்து எடு! 

ஞாழல் மணமாய் பண்பு கமழ
ஞாயமான வழியைத் தேடி அமைத்து 
ஞானம் கொண்டு அலசிப் பார்த்து 
ஞாலத்தை சரிப்படுத்த ஆன்மாவை வடிவமை!        
   
பூமி ஒரு சுழலும் சூறாவளி 
நவீன வாழ்க்கையின் தாளம் அது 
மாற்றம் அலை போல நிலைக்காது
சமூகத்தை இணைத்தாலும் இதயங்கள் விலகிவிடும்! 

வெறுப்பை மூழ்கடித்து பயத்தை அமைதிப்படுத்தி 
ஒற்றுமை நிலைநாட்டி பிரிவை அகற்றி 
கருணை பாசம் இரண்டுடனும் வளர்த்து
மனிதத்தை சீராக்கு மானிடம் உயரவே! 


"நீயில்லா  வாழ்வு" 

நீயில்லா வாழ்வு பாலைவனம் ஆகுமே 
நீரற்ற உலகு வெறிச்சோடி இருக்குமே
நீதியிழந்த நாடு சமாதானம் காணாதே 
நீலக் கருங்குயிலே என்னைத் தழுவாயோ?

காதல் இல்லையேல் குடும்பம் அழியுமே
காமம் ஒழிந்தால் பரம்பரை மறையுமே
காதணி அணிந்த அழகு வஞ்சியே 
காலம் தாழ்த்தாமல் அருகில் வருவாயோ?   

உன்னைக் காணாத கண்ணும் விழியல்ல 
உள்ளம் சேராத இல்லமும் வீடல்ல 
உவகை கொண்டு உயிர்கள் நிலைக்க 
உண்மை உணர்ந்து அன்பு பொழியாயோ? 
    


"காளையை அடக்கு கன்னியை மடக்கு "

காளையை அடக்கு கன்னியை மடக்கு
மாலையை அணிந்து தாலியைக் கட்டு 
மேளத்தைத் தட்டி ஊர்வலம் செல்லு 
கோலத்தைப் போட்டு பொங்கலைப் பொங்கு!

சிவப்புத் துணியை கையில் ஏந்தி
மஞ்சள் நிலாவில் மார்பில் சாய    
கருத்த எருதின் திமிலைப் பிடித்து
வெள்ளை நெற்றியில் திலகம் இடவா! 

இடுப்புச் சிறுத்தவளே பரிகாசம் செய்தவளே 
இறுமாப்பு வேண்டாம் மண்டை பெருத்தவளே
ஏறுதழுவி வெற்றி கண்டவன் இவனடா 
வீறாப்பு விட்டு வந்திடு என்னுடன்!      
   


"ஓடுகிற தண்ணியிலே"

"ஓடுகிற தண்ணியிலே வாடிநிற்கும் கொக்கே 
தேடுகிற என்னழகியை கண்டதுண்டோ சொல்லாயோ?
பாடுகிற குயிலே கிளையிலே இருக்கிறியே 
கூடுகிற ஆசையை தூரத்தே எறிந்துவிட்டு 
ஆடுகிற என்னெஞ்சுக்கு ஆறுதல் தாராயோ?"  

"வட்டவட்டப் பாறையிலே முட்டியோடும் ஆறே 
வளைகுலுங்கப் போகும் என்னவளைக் கண்டாயோ?
விரிச்ச நெற்றியுடன் வீறாப்பு பேசுபவளை
வெற்றிலைப் பாக்குடன் குறும்பு செய்பவளை
கண்ணில் அம்பிட்டால் [அகப்படில்‌] எனக்குக் கூறாயோ?    

✍[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

No comments:

Post a Comment