உயர் பண்பு & நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை



''உயர் பண்பு''

"பரந்த இதயத்தில் முயற்சியின் வலுவில்

உறுதியான அலையாக சக்தி பிறக்குமே

உலகிற்கு உதவ கொடுக்கும் கையை 

உன்னத பெருமையாக உலகம் போற்றுமே

வசதி செல்வம் மகத்துவம் அல்லவே!" 

 

"உழைப்பில் இதயங்கள் என்றும் ஒளிருமே

மற்றவர்களையும் உயர்த்த உயரமாக நிற்குமே

அடுத்தவரின் வலியை துடைக்க முயலுமே

ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு அழுத்தத்திலும்

உதவிடும் மகிழ்வே உயர் பண்பாகுமே!" 

🙈🙉🙊 🙈🙉🙊🙈🙉🙊

"நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை"

 

"நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை

நீலக்கண்ணீர் வடிக்கிறான் நீலவானின் கீழே

நீங்காத காதலென்று அவளும் நம்பி

நீதியாய் நடப்பானென்று மகிழ்வில் மிதந்தாள்!"

 

"அன்பு பேச்சில் மனத்தைத் தொலைத்து 

அச்சம் மடம் நாணம் மறந்து

அன்னை ஈன்ற உடல் முழுவதையும்

அழகு கொட்டிட அவனுக்கு கொடுத்தாள்!"

 

"அமைதியான ஓடத்தில் ஆசைகளும் தீர

அம்புலி தன்னை மேகத்தால் மறைக்க 

அந்தரத்தில் விட்டுவிட்டு எங்கோ போனான்

அணங்கு அவளோ நீருடன் சங்கமித்தாள்!"       

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]





0 comments:

Post a Comment