ஆஸ்துமா பரம்பரை நோயா? தடுக்கும் வழிமுறைகள் என்ன ? -

 மருத்துவ நிபுணர் தரும் விளக்கம்


நீண்டகால ஒவ்வாமையினால் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக ஏற்படும் இளைப்பு நோயே ஆஸ்துமா எனப்படுகிறது.


அதிகப்படியான மூச்சுத் திணறல் அல்லது இளைப்பு, அதிகப்படியான இருமலால் ஏற்படும் தூக்கமின்மை, நெஞ்சில் ஏற்படும் வலி, இறுக்கம் ஆகியவற்றை ஆஸ்துமாவின் அறிகுறிகளாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

உலக சுகாதார அமைப்பின் 2019ஆம் ஆண்டு அறிக்கையின்படி, உலகளவில் சுமார் 262 மில்லியன் ஆஸ்துமா நோயாளிகள் உள்ளனர். அந்த ஆண்டு மட்டும் 4.60 லட்சம் இறப்புகள் ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டது.

 

குழந்தைகளுக்கு 4 % - 20 % வரை ஆஸ்துமா தாக்கம் காணப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்துமா இறப்புகள் பொருளாதார வளர்ச்சி குறைந்த மற்றும் நடுத்தர பொருளாதார வளர்ச்சி நாடுகளிலேயே அதிகமாக காணப்படுகிறது.

 

உலக ஆஸ்துமா தினம் ஏன் ?

ஆஸ்துமா நோயை தடுத்தல், சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆஸ்துமாவிற்கான உலகளாவிய அமைப்பு (The Global Inititive for Asthma - GINA) கடந்த 1993ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

 

இது, அமெரிக்காவின் தேசிய இதயம், நுரையீரல் மற்றும் ரத்த நிறுவனம், தேசிய சுகாதார நிறுவனம், மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

 

ஆஸ்துமா பாதிப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைக் குறைக்க உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதாரத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணியாற்றி வருகின்றனர்.

 

ஜினா அமைப்பு தொடங்கி, முதல் சந்திப்பு மே மாதம் முதல் செவ்வாய் கிழமை நடைபெற்றதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

 

இதன்படி, ஆஸ்துமா ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக் கருத்தை அறிவித்து வருகிறார்கள். இதன்படி, உலக ஆஸ்துமா தினம் 2022ம் ஆண்டிற்கு "ஆஸ்துமாவிற்கான சிகிச்சையில் இடைவெளியை நீக்குதல்'' என்கிற மையக் கருத்தை வெளியிட்டுள்ளது.

 

யாருக்கெல்லாம் ஆஸ்துமா ஏற்படும்?

ஆஸ்துமா நோய் யாருக்கெல்லாம் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆஸ்துமா, அலர்ஜி மருத்துவ நிபுணர் டாக்டர் ஜி.கமல் பிபிசி தமிழிடம் பேசினார்.

 

ஆஸ்துமா ஏற்பட ஒவ்வாமை ஒரு காரணமாகிறது. சுற்றுச் சூழலில் ஏற்படும் மாசு, தொழிற்சாலை கழிவுகள் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 

செய்யும் வேலை, அதாவது ஒவ்வாமை காரணிகள் உள்ளடக்கிய சூழலில் நீண்ட நாட்கள் இருப்பது, குறிப்பாக பஞ்சாலை, அதிக புகை வெளியேறும் தொழிற்சாலைகள், சிமெண்ட், கல் உடைக்கும் தொழிற்சாலைகளில் தகுந்த பாதுகாப்பின்றி தொடர்ந்து பணியாற்றுவது ஆகியவற்றால் ஆஸ்துமா ஏற்படும்.'' என்கிறார்.

 

பரம்பரையும் காரணமாகுமா ?

ஆஸ்துமாவிற்கு பரம்பரையும் ஒரு காரணமாகிறது. அதாவது பெற்றோர் அல்லது மூதாதையர் அல்லது குடும்பத்தில் ரத்த உறவினர்களில் யாருக்கேனும் இந்த நோய் தாக்கியிருந்தால், அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது.'' என்கிறார் டாக்டர் கமல்.

 

தவிர்க்கும் வழிமுறைகள்

தொடர்ந்து அவர் கூறுகையில், இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள், தூசியடைந்த சூழலை கட்டாயம் தவிர்க்க வேண்டும். படுக்கை, தலையணை உறைகளை பயன்படுத்த வேண்டும். அவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். பஞ்சு தலையணைகளைத் தவிர்க்க வேண்டும்.

 

தரை விரிப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். செல்லப்பிராணிகளை படுக்கை, படுக்கையறைகளில் அனுமதிக்க கூடாது. அவற்றை வாரம் ஒருமுறை கட்டாயம் குளிப்பாட்ட வேண்டும். ஒவ்வாமை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய்க்கான ஒவ்வாமை காரணியை கண்டறிந்து, அதற்கேற்ற தடுப்பு மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.

 

புகைப்பதைத் தவிர்க்க வேண்டும்

ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்கள் புகைப்பிடிப்பதையும் அவர்களுக்கு அருகில் புகைபிடிப்பது மற்றும் புகை சூழலை தவிர்க்க வேண்டும். மகரந்தபாசிகள், பூஞ்சைகள் இருக்கும் இடங்களை தவிர்க்க வேண்டும். சரியான இடைவெளியில் இந்த நோய்க்கான சிறப்பு மருத்துவரை அணுகி, சோதனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும்.

 

குறிப்பாக, ஆஸ்துமா சிகிச்சையில் முதன்மையானது இன்ஹேலர் வகை சிகிச்சை. பிரிவண்டார் (தடுப்பு) வகை, மற்றொன்று ரிலீவர் வகை என்று இரண்டு வகை இன்ஹேலர் வகை சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், இது அனைவருக்கும் கட்டாமில்லை. நோய் தாக்கத்தின் அடிப்படையில் இந்த சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டும். நுரையீரல் செயல்திறன் பரிசோதனை அடிப்படையில் இதன் தேவையை கண்டறிய முடியும். இம்மினோதெரபி சிகிச்சையில் இன்ஹேலர் தேவைப்படுவதில்லை.

 

கவனத்தில் கொள்ள வேண்டியவை

ஆஸ்துமா பாதித்தவர்களை, குறிப்பாக குழந்தைகளுக்கு பயத்தை ஏற்படுத்தக் கூடாது. குழந்தைகளை அந்தந்த வயதிற்கேற்ற இயல்பான நடவடிக்கைளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஆஸ்துமா பற்றிய சுய விழிப்புணர்வு, குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். நோய் பாதிக்கப்பட்டால் அச்சப்படத் தேவையில்லை. ஆரம்ப நிலையில் கண்டறிந்து, தொடர் சிகிச்சை எடுத்தால், கட்டுப்படுத்தலாம். என்கிறார் டாக்டர் ஜி.கமல்.

 

மேலும், "ஆஸ்துமாவிற்கான சிகிச்சையில் இடைவெளியை நீக்குதல்'' என்கிற உலக ஆஸ்துமா அமைப்பான ஜினாவின் மையக் கருத்தை மனதில் கொள்வோம். ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவோம்.'' என்கிறார் அவர்.

நன்றி:-ஜோ. மகேஸ்வரன் -/-பிபிசி தமிழ்

பழகத் தெரிய வேணும் – 19

-(எனக்கு எல்லாம் தெரியுமே!)-

எல்லாம் அறிந்தவன் இறைவன் மட்டும்தான் எனில், நமக்குத் தெரியாததை எண்ணி விசனம் கொள்வானேன்! இந்த விவேகம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?

 

கதை:

எனக்கு எல்லாம் தெரியும்!’ என்று இறுமாப்புடன் கூறுவான் விட்டல்.

நிறைய விஷயங்கள் அவனுக்குப் புரியாமல் இருக்கும். ஆனால், அதை ஒத்துக்கொள்ளும் தைரியம் அவனுக்குக் கிடையாது.

எப்படியோ சுமாரான பதவி ஒன்றில் அமர்ந்தபின், தன்னைவிட வித்தியாசமானவர்கள் எல்லாரையும் குறை கூறி, அதில் பெருமிதம் அடைவான்.

பிறர் சொல்வதைக் கேட்பது விட்டலைப் போன்றவர்களுக்குப் பிடிக்காத சமாசாரம்.

 

தன் அறிவை வெளிக்காட்டும்வண்ணம்,, தானே அதிகம் பேசுவார்கள்.

ஒருவர் கேட்கும் கேள்வியிலிருந்து, அவரது ஆற்றலைப் புரிந்துகொள்ளலாம்.

 

கதை:

என்னுடன் பணிபுரிந்த பத்மா இருபது ஆண்டுகளுக்குப்பின் என்னைச் சந்தித்தாள்

இப்போதெல்லாம், நீ உன் தலைமயிரைக் கடையில் perm செய்து, சுருட்டையாக்கிக்கொள்கிறாயா?!” என்று கேட்டாள்.

இல்லையே!”

இல்லை. நீ அப்படித்தான் செய்துகொள்கிறாய்!”  என்று பிடிவாதம் பிடித்தாள்.

இயற்கைதான்,” என்று நான் மறுத்தேன்.

மீண்டும் சொன்னதையே சொன்னாள்.

பொறுமையிழந்து, “சரி. அப்படியே வைத்துக்கொள்!” என்று முடித்தேன்.

 

அவர்கள் சொல்வதுதான் சரியென்று வீண்விவாதம் புரியும் குணத்தை SPLITTING THE HAIR என்கிறார்கள்.

 

நான் சொல்வதுதான் சரி. எல்லாரும் அப்படித்தானே சொல்கிறார்கள்!’ என்பவர்கள், ‘நாம் சுயமாகச் சிந்தித்து, இருக்கிற சொற்ப மூளைக்கும் வேலை கொடுப்பானேன்!’ என்பதுபோல் நடப்பவர்கள்.

 

 

விவேகமானவர்கள் யார்?

1. பிறர் கூறுவதைக் கூர்ந்து கவனிப்பவர்கள். பிறரது கருத்து சரியென்றுபட்டால் ஏற்பார்கள். இல்லாவிட்டால், எங்கே தவறு, அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்று அவர்கள் யோசனை போகும்.

 

நான் பெரிய அறிவாளி அல்ல. எனக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காணும்வரை விலகுவதில்லை” (ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்).

 

2. பிறரை மதிப்பவன்

 

தன்னைவிட உயர்ந்த நிலையில் இருப்பவரிடம் ஒரேயடியாகப் பணிந்து, கீழான நிலைகளில் உள்ளவர்களை அலட்சியமாக நடத்துவதும் கிடையாது. இதற்கு தன்னைத்தானே மதிக்கும் குணம் அவசியம். இப்படிப்பட்டவர்களை அபூர்வமாகத்தான் காணமுடிகிறது.

 

எவ்வாறு கற்கலாம்?

பிறருடைய தவறுகளிலிருந்து கற்பதைவிட, சொந்த வாழ்க்கையிலிருந்தே நிறைய கற்க முடிகிறது.

வாழ்க்கைப் பாதையில் சிலர் தகாத முறையில் நம்மை நடத்தியிருப்பர். எவ்வளவோ இழிசொற்களையும் அவமரியாதையையும் தாங்க நேர்ந்திருக்கும். கடந்ததைப் பற்றியே நினைத்து, நினைத்து, வருத்தமும் ஆத்திரமும் கொண்டிருந்தாற்போல் அவை மாறிவிடுமா? அவற்றிலிருந்து கற்கலாம்.

 

கதை:

ஆரம்பக்கால ஆசிரியப் பயிற்சியின்போது எனக்கு அறிமுகமானவள் ராதா. ஒருமுறை, அவள் கூறிய ஏதோ கருத்தை நான் ஏற்கவில்லை.

அவளுக்கு வந்ததே கோபம்! கண்டபடி கத்தினாள். நான் பயந்து, விலகினேன்.

பல வருடங்களுக்குப்பின், இன்னொரு பயிற்சியின்போது அவளும் நானும் ஒரே வகுப்பில் இருக்க நேர்ந்தது. அவளுடைய சுபாவம் புரிந்து, நான் ஒதுங்கிப் போனேன்.

வகுப்பு நடக்கும்போது, நான் விரிவுரையாளரை ஏதாவது கேட்டால், அதைத் தடுக்க நினைப்பவளாக, `நிர்மலா!’ என்று அவளிடமிருந்து கண்டனக் குரல் எழும்.

பல முறை பொறுத்துப் போனேன். இறுதியில், அவள் பக்கம் திரும்பி, “Shut up!” என்றேன், மெதுவாக.

அது போதாதா அவளுக்கு! வகுப்பு முடிந்ததும், என்னுடன் சண்டைக்கு வந்தாள்.

என்னை Shut up என்றாய்,” என்றாள் குற்றம் சாட்டுவதுபோல்.

ஆமாம். சொன்னேன்,” என்றேன் அமைதியாக.

நான் உன்னை அப்படிச் சொன்னால்?” என்றாள்.

சொல்லிவிட்டுப்போ!” என்றேன் அலட்சியமாக.

நான் அப்படியெல்லாம் கீழ்த்தரமாகப் பேசமாட்டேன்”.

சரி. பேசாதே!”.

மீண்டும் ஆரம்பத்திலிருந்து, அதே வார்த்தைகள்.

நீ என்னை ஷட் அப் என்று சொன்னாய்!” என்றுவிட்டு, “நீ என்னை விலக்குகிறாய்!” என்று கத்தினாள்.

நம்மை இழிவுபடுத்தியவர்களை மீண்டும் சந்திக்க நேரும்போது, எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று தோன்றிவிடும்.

இப்படியெல்லாம் வரும் என்று எனக்குத் தெரியும்,” என்றேன்.

அவள் தன் குரலை எவ்வளவு உயர்த்தியபோதும், நான் நிதானத்தை இழக்காமல் பேசினேன்.

இன்னும் என்ன பேசுவது என்று புரியாது, என்னைத் தாக்கிவிடுபவள்போல் மிக அருகில் வந்தாள். எங்களிருவருக்கும் இடையே இருந்த இடைவெளியைத் தன் கரத்தால் வெட்டி, அவளைத் தடுத்து நிறுத்தினார் ஒரு சீனர்.

பிறகு, “இவள் ஏன் இப்படி தரக்குறைவாக நடந்துகொள்கிறாள்!?” என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.

நான் எதுவும் சொல்லவில்லை.

அவள் தன்னைப் பற்றி ஒரேயடியாக அளக்க, அடிமைகளாக இருவர் அவள் பின்னால் நடந்தனர். சம்பவம் நடந்த முதல் நாள், அவர்கள் என்னுடன் ஊரைச் சுற்றிப் பார்க்க (நான் அழைக்காமலேயே) வந்துவிட்டதில் அவளுக்கு ஆத்திரம்தன் தலைமைக்குப் பங்கம் வந்துவிடுமோ என்று.

அதன்பின், நான் என்ன செய்தாலும் அதையே பின்பற்றினாள்!

 

தூண்டப்பட்ட அறிவு

கல்லூரிப் பயிற்சியின்போது, எப்படியெல்லாம் ஒரு நல்ல, திறமையான ஆசிரியர் இருக்கவேண்டும் என்று தினமும் சொல்லிக் கொடுத்தார்கள்.

 

ஓர் இளைஞன் பொறுமையை இழந்தான். “புத்தகத்தில் படிக்கும்போது நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நீங்கள் சொல்லிக் கொடுக்கிறபடி எல்லாம் நடக்க முடியுமா? நேரம் கிடைக்குமா?” என்று விவாதம் செய்தான்.

 

விரிவுரையாளர் பொறுமையாக, “ஒருவருக்கு நல்லவராக இருப்பது எப்படி என்று கற்பித்தால், அவர் எளிதில் கெட்டுப் போகமாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு,” என்று பதிலளித்தார்.

 

என்னிடம் அவர் கேட்டார்: “உங்களிடம் ஒரு மாணவன் ஏதோ ஒரு கேள்வி கேட்கிறான். அதற்குப் பதில் தெரியாவிட்டால், என்ன செய்வீர்கள்?”

 

தெரியாது என்று சொல்வேன்”.

 

முட்டாள் என்று உங்களை நினைத்துக்கொள்ளமாட்டானா?”

 

எப்போதுமே அப்படிச் சொல்லமாட்டேனே! பதிலைத் தேடிக் கண்டுபிடித்து, பிறகு சொல்வேன்”.

 

பிரமிப்புடன், “நீங்கள் மிக நல்ல பள்ளிக்கூடத்தில் படித்திருக்க வேண்டும்!” என்றார்.

 

பெருமையாக உணர்ந்தேன். என்னைத் திட்டித் திட்டி வழிநடத்திய ஆசிரியைகளை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.

 

புதிய இடங்களில், நமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தால், மௌனமாக இருந்துவிட்டால் தப்பித்தோம். இல்லாவிட்டால், நம் முட்டாள்தனத்தை வெளிக்காட்டும் வகையில் ஏதாவது உளற நேரிடும்.[

 

சிறக்க வேண்டுமானால், சில சமயம் சறுக்கவும் செய்வோம். அப்போது குன்றிப்போய்விடலாமா?

- மேலும் தெரிந்துகொள்வோம்.

:-நிர்மலா ராகவன்/எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.