“முதுமையின் அரவணைப்பு”
“முதுமையின் அரவணைப்பு தனிமையைப் போக்கும்
பதுமையுடன் விளையாடும் மழலைப் போலவே!
பெதுமை பருவத்தில் மகிழ்ச்சி காணும்
புதுமை செய்யும் குழந்தை போன்றே!"
"பாளையாம் செத்தும் பாலனாம் செத்தும்
காளையாம் செத்தும் இளமை செத்தும்
மூப்பும் ஆகியும் மூலையில் ஒதுக்கியும்
தனித்து விட்ட கொடூரம் எனோ?"
"பொன்னேர் மேனி அழகு இழந்து
நன்னெடுங் கூந்தல் நரை விழுந்தாலும்
மாறாத அன்பு நிலைத்து நிற்க
வயதான மக்களைத் தழுவ வேண்டும்!"
"இளமை நீங்கி உடலும் மெலிய
தளர்ச்சி பெற்று கோலிற் சாய
களைப்பு கொண்ட உள்ளம் ஆற
பாசம் கொடுக்கும் கைகள் தேவை!"
“பூநகரி மாடு கட்டிப் பூவரசங்குளம் ஏரு பூட்டி..”
“பூநகரி மாடு கட்டிப் பூவரசங்குளம் ஏரு பூட்டி
இளந்தாரி வயலைக் கிளறி
ஆடிக் கொடி தேடி விதைத்து
காணி ஏங்கும் பயிர்கள் முளைக்க
கூடிக் குலாவி மகிழ்வாக இருக்க
பூத்து குலுங்கும் வாழ்வு தந்தான் கமக்காரனே!"
"பத்தாது காணாது இனி இல்லை
மெய்யாச் சொல்லுகிறேன் கேளடா
கதிரையில் காய்பவன் நானல்ல
கடுதாசியில் திட்டம் போடும் சோம்பேறி வேண்டாம்
பெட்டை பெடியன் வெளிக்கிட்டு வெள்ளாமை செய்ய
கெதியாய் பூக்கும் வன்னி மண்ணே!"
"வானுயர்ந்த கற்பனைகள்"
"வானுயர்ந்த கற்பனைகள் மனதில் ஓங்கட்டும்
மண்ணுயிர் எங்கும் கருணை பொழியட்டும்
வாட்டமற்ற செயல்கள் உலகைத் தழுவட்டும்
கூட்டம்போடும் ஆடம்பரம் ஒழிந்து போகட்டும்
விண்ணில் தோன்றும் வானவில் போல்
கண்ணில் காணும் கனவு ஒளிரட்டும்!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment