( ஒரு தோல்வியுற்ற காதல் கதை)
பருத்தித்துறை வடக்கு நகரத்தின் காற்று எப்போதும் கடல் வாசனை சேர்ந்து உப்புடன் கனமாக இருந்தது. அரனும் சூரியாவும் சிறுவயதிலிருந்தே ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள், ஒன்றாக கூடிக் குலாவி விளையாடியவர்கள், இன்று வளர்ந்து வாலிப வயதை அடைந்துவிட்டார்கள், ஆனால் இன்றும் கடற்கரையில் வெறுங்காலுடன், அலைகளுக்கு எதிராக குழந்தைகள் போல் ஒன்றாக ஓடுகிறார்கள். அவர்களிடையே எப்போதும் பேசப்படாத எதோ ஒரு இணைப்பு ஒன்று இருந்தது, அவர்கள் இன்று வளர்ந்தாலும் அவர்களின் இதயங்களை ஒன்றாக இணைக்கும் ஒரு கண்ணுக்கு தெரியாத ஒரு அன்பு , கவர்ச்சி, உணர்வு இருந்தது. அரண் அவளை நெருங்கும்போது சூரியாவின் கண்கள் ஒளிரும் விதம், நாட்கள் எவ்வளவு இருட்டாக, சோர்வாக தோன்றினாலும் அரனின் புன்னகை அவள் முகத்தில் எப்போதும் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் விதம் அவளுக்குள் ஒழிந்து இருக்கும் ஒரு திடமான எண்ணத்தை, உணர்வை சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தன.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை ,காதல் கடலைப் போல கணிக்க முடியாதது. அது உங்களை அலையுடன் முன்னோக்கி கொண்டு செல்லலாம் அல்லது உங்களை மீண்டும் கடலின் ஆழத்திற்கு உள்நோக்கி இழுக்கலாம். எப்பொழுதும் தன்னைப் பற்றி மிகவும் உறுதியாக கருதுவது போல் வெளிக்காட்டிக்கொள்ளும் அரண், உண்மையில் ஒரு தெளிவற்ற மனதைத் தான் கொண்டிருந்தான். அவனது எண்ணங்கள், தங்கள் கிராமத்தை அடிக்கடி நிழல் கொடுத்து மறைக்கும் பருவகால மேகங்களைப் போல, எப்போதும் மாறிக் கொண்டே இருந்தன, அதனால், அவனால் உறுதியாக முடிவெடுக்க முடியாதவனாக, இருந்தான். அவள் திடமான எண்ணங்களை கொண்டு இருக்கும் அதேவேளை அவனது ஒரு ஈரமான எண்ணங்களாக [wet thoughts] இருந்தது.
"மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்"
மனதின் சிறப்புத்தன்மை வாழும் உயிர்களுக்கும் நன்மை பயக்கும் என்பது எனோ அவனுக்கு புரியவே இல்லை. அது நட்புக்கும் காதலுக்கும் கூட ஒரு நன்மை, வலிமை கொடுக்கும். ஆனால், "ஈரமான எண்ணங்கள்" என்பது தெளிவற்ற, திரவம் போல் அங்கும் இங்கும் ஓடக்கூடிய ஒரு உணர்ச்சி மனநிலையைக் குறிக்கும். அதனால், அதை புரிந்துகொள்வது கடினம். எண்ணங்கள் முழுமை அடையாமல், தண்ணீர் எப்படி பிடிப்பது கஷடமோ அப்படி வழுக்கிக்கொண்டு போவது. ஒரு திடமான ஒன்றல்ல. அப்படித்தான் அரன் இருந்தான். அதேநேரம் ஈரமான என்பது கருணை, அன்பு அல்லது மனக்கசிவு என்பதையும் கூட குறிக்கலாம்.
"கைஒன்று செய்ய, விழிஒன்று நாட, கருத்து ஒன்று எண்ண,
பொய்ஒன்று வஞ்சக நா ஒன்று பேச, புலால் கமழும்
மெய் ஒன்று சார, செவிஒன்று கேட்க விரும்பும் யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே"
என்பார் பட்டினத்தார். இங்கே மனம் ஒன்றிச் செய்யமல், மலரை எடுத்து இட்டு அருச்சனை செய்யும்போது வெறும் கைமாத்திரம் இயங்கினால் போதாது, வாக்கும் மனமும் ஒன்றுபட வேண்டும் என்கிறார். அப்படித்தான் அவனும் அவளை நேசிக்கிறான், தன் மனதில் காதல் என்ற மலரைத் தூவி பூசிக்கிறான். ஆனால் அவனது மனம் வள்ளலார் சொன்ன பேய்க்குரங்கு போல் ஊசல் ஆடுகிறது.
இந்த அவனின் இயல்பை சிலதடவை சூரியா கவனித்தாலும், அதை தொடக்கத்தில் பெரிதுபடுத்தவில்லை. சில சந்தர்ப்பங்களில், இருவரும் உரையாடும் பொழுது, அரன் நழுவிப் போகும் எதையோ பிடித்துக் கொள்ளப் போராடுவது போல அவனது கண்கள் அவளிடம் இருந்து விலகி எங்கோ தூரப் போவதைக் கண்டுள்ளாள். என்றாலும் அரன் அவளை என்றுமே நேசித்தான். ஈரமான எண்ணத்திலும் அவள் ஒரு மூலையில் அவனின் அன்பால் சூழ்ந்து இருந்தாள். அது அவளுக்கு, அவனின் பல நடவடிக்கைகளில் வெளிப்படையாகி உறுதியளித்தது. என்றாலும் அது விழித்த நேரம் கலைந்து போகும் கனவு போல போகக் கூடாது என்பதே அவளின் பிரார்த்தனை
இன்னும் சிறிது நேரத்தில் கதிரவன் தன் கதிர்களை மடித்துக் கொண்டு துயிலைப் போகும் மாலை நேரம் அது. கடற்கரை முழுக்க காதலர்கள் அல்லது நண்பன் நண்பிகள் இருவர் இருவராக வண்ண வண்ண நிறத்தில் ... காதலியின், நண்பியின் தாவணிக் குடைக்குள் ஒருவரை ஒருவர் முத்தம் கொடுத்துக் கொண்டும், எதோ என்னவோ கேட்டு கேட்டு கெஞ்சிக் கொண்டும் இருந்தார்கள்.
குழந்தைகள் பல, வெள்ளை மணலில் தவண்டு போகும் நண்டுகளை விரட்டிப் பிடிக்க பின்னால் ஓடி, அவை நிலத்துக்குள் புகுந்து ஒழிக்க, தோற்றுபோய் சிணுங்கிய முகங்களோடு பரிதாபமாக நிற்க்க ...
அவர்கள் இருவரும் கடற் கரையில் ஒரு ஓரமாக ஒன்றாக அமர்ந்தனர். சூரியன் அடிவானத்திற்குக் கீழே கதிரவன் மூழ்கி, தண்ணீரின் மேற்பரப்பில் ஒரு மென்மையான, தங்க ஒளியை விட்டுச் சென்றது. சூரியா அரனின் தோளில் தலை சாய்த்து, அவனது இருப்பின் காதல் அரவணைப்பை உணர்ந்தாள். அவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைக் கழித்த, அதே கிராமத்தில், ஒரு நாள் அவர்கள் ஒன்றாக இல்லற வாழ்க்கையை உருவாக்குவார்கள் என்று அவள் கற்பனை செய்து, அதை அவள் கனவு கண்டாள். அவளால் அவர்களின் எதிர்காலத்தை மிகத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அதில் உறுதியாகவும் இருந்தாள். கொஞ்ச நேரத்தால், இருவரும் கைகளை பிடித்தப்பிடி, இளம்பருவத்தில் ஓடி விளையாடிய மாதிரி, அலைகளை காலில் மிதித்த படி மெதுவாக ஓடி ஆனந்தமாக கழித்தார்கள்.
சூரியாவின் கூந்தல் கடல்காற்றில் முகத்தை மறைத்து மறைத்து விளையாட விரலால் அதைச் சரி செய்தபடி அன்ன நடைபோட்டாள். உன் காலழகையாவது நான் தொட்டு வணங்குகிறேன் என கடல் அலைகள் ஒன்றின் பின் ஒன்றாக போட்டி போட்டுக்கொண்டு அவள் கால்களை முத்தமிட்டு முத்தமிட்டு மகிழ்ந்து போனது.
வழக்கத்தை விட சூரியா இன்று அழகாய் ஒளிர்ந்து கொண்டு இருந்தாள். ஆனால், அவன் எனோ திடீரென ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் போய்விட்டான். அரனின் மனம் அடிக்கடி இருந்தது போல் வேறெங்கோ போய்விட்டது. அவனது எண்ணங்கள் அதற்குள் சிதறி, அவனது வாழ்க்கையின் சிக்கல்களில் சிக்கின. எப்போதுமே அவனுக்கு மிகவும் கட்டுப்பட்டதாக உணர்ந்த சிறிய கிராமத்திலிருந்து விலகி, வாய்ப்புள்ள வாழ்க்கையைத் தொடர, அவன் கொழும்புக்குச் செல்ல வேண்டும் என்று அவனது குடும்பத்தினர் விரும்பிய அந்த எண்ணம் அவனை எப்பொழுதும் திடீர் திடீரென தூண்டிக்கொண்டு இருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் வெளியேறுவதைப் பற்றி நினைக்கும் போது, சூரியாவின் முகம் அவன் மனதில் தோன்றி, முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டு இருந்தது.
"என்ன யோசிக்கிறாய்?" சூரியா அமைதியாகக் கேட்டாள், அலைகளின் மென்மையான மோதலில் அவள் குரல் அவனுக்கு கேட்கவில்லை. ஒருவேளை அந்த அவனது "ஈரமான எண்ணங்கள்" அவனை தடுமாற வைத்துவிட்டது.
தன் எண்ணங்களை எப்படி வார்த்தைகளாக்குவது என்று தெரியாமல் அரண் தயங்கினான். அவன் பொய் சொல்ல விரும்பவில்லை, ஆனால் அவனது மனதில் மேகமூட்டமான மூடுபனி, அங்கு குடியேறிய ஈரமான எண்ணங்களை, விடயங்களை தெளிவாகப் பார்க்க முடியாதபடி எப்படி விளக்குவது என்று அவனுக்குத் தெரியவில்லை.
"நான் நான் ... எனக்குத் தெரியாது," என்று அவன் இறுதியாகக் கூறினான், அவனது குரல் தாழ்ந்தது, மெல்லிய குரலில் எந்த உணர்வையும் காட்டாமல் . "நான் எல்லாவற்றையும் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். எதிர்காலம் .. எங்களை .... கொழும்பு....” முணுமுணுத்தான்.
சூரியா எழுந்து மீண்டும் உட்கார்ந்தாள், அவள் கண்கள் அவன் முகத்தை .. இன்னும் அங்கு எதையோ தேடியது ... "நீங்கள் எங்கள் இருவரையும் பற்றி நினைக்கும் போது ... நீங்கள் என்ன அங்கு பார்க்கிறீர்கள்?"
அரண் உடனடியாக அவள் கேட்க விரும்பிய வார்த்தைகளைச் சொல்ல ஆசைப்பட்டு அவளைப் ஏறிட்டுப் பார்த்தான். ஆனால் அவனது "ஈரமான எண்ணங்கள்" அவனது மனதின் பிளவுகளில் மழை பொழிவது போல் குழம்பியது. அவன் அவளை நேசிப்பதை அவன் அறிந்திருந்தான், ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் அவர்களின் எதிர்காலத்தை ஒன்றாக கற்பனை செய்ய முயற்சித்த போது, அவன் கைகளில் தண்ணீரைப் பிடிக்க முயற்சிப்பது போல, அவனுடைய உள்ளத்தில் ஏதோ ஒன்று வழுக்கி இடம் மாறியது, கிராமத்தில் தங்கி, சூரியா கனவு கண்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் ஒரே நேரத்தில் சரியென்றும் தவறென்றும் தோன்றியது. அவனது இதயம் இரண்டு திசைகளிலும் இழுக்கப்பட்டது போல் இருந்தது, அந்த இரண்டையுமே தெளிவாக அவன் உணரவில்லை.
"எனக்குத் தெரியாது," அவன் கிசுகிசுத்தான், அடிவானத்தில், வண்ண நிறத்தில் பார்வையைத் திருப்பினான். மீண்டும் "நான் என்ன பார்க்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை, சூரியா." என்றான்.
அவள் இதயம் உடைந்தது, குமுறியது. அவள் எதிர்பார்த்த பதில் அது இல்லை, ஆனால் அவள் பயந்த பதில் தான் அது. "நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாதா ... அல்லது உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்களுக்கு புரியாதா ?" அவள் மனமுடைந்து கேட்டாள்.
அரனின் மௌனமே அவளுக்கான பதிலாக இருந்தது. அவள் மீதான அவனது காதல் உண்மையானது, ஆனால் அது முடிவெடுக்க முடியாத மூடுபனிக்குள் சிக்கிக்கொண்டது, அவனுக்குள் இருந்த அசைக்க முடியாத "ஈரமான எண்ணம்" ஒவ்வொரு முறையும் அவன் முயன்றபோது, அது நழுவி, குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் தவிர வேறு எதையும் அவனுக்கு விட்டுவிடவில்லை.
"எனக்கு என்ன வேண்டும் என்று எனக்கு எப்போதும் தெரியும், அரண்," அவள் மெதுவாக. உறுதியாக இறுக்கமாக சொன்னாள், அவள் குரல் நடுங்கியது.
அவன் அப்போது அவளைப் பார்த்தான், அவன் கண்கள் ஈரமான சோகத்தால் நிறைந்தது. அவன் ஏதோ சொல்ல விரும்பினான், அவனுடைய மனம் அவளைப் போல தெளிவாக இல்லை என்பதையும், அவள் மீதான அவனது காதல் எப்போதும் அவனைத் துன்புறுத்திய அதே "ஈரமான எண்ணங்களில்" சிக்கியுள்ளது என்பதையும் விளக்க விரும்பினான். ஆனால் வார்த்தைகள் வரவில்லை. அவை அவனது எண்ணங்களைப் போலவே மழுப்பலாக இருந்தன, அவன் அவற்றைப் புரிந்துகொள்வதற்குள் நழுவிச் சென்றன.
சூரியா சட்டென எழுந்து நின்றாள், அவள் கால்களுக்குக் கீழே, அவளின் உறுதியான காலினால் மென்மையான வெள்ளை மணல் கொஞ்சம் கீழே மூழ்கியது. "எனக்கு உறுதியான ஒருவன் தான் தேவை," என்று அவள் சொன்னாள், அவள் இதயம் உடைந்தாலும், இப்போது அவள் குரல் கம்பீரமாக இருந்தது. "ஈரமான எண்ணங்கள் கொண்ட உன்னுடைய காதல் எனக்கு இனி வேண்டாம், அதைவிட காதல் இல்லாமலே வாழ்ந்து விட்டு போகலாம் என்று உரக்க கோபத்துடன் உறுதியாகக் கூறினாள்.
அவள் கோபத்தில் பிரிந்து செல்வதை அரண் தடுக்கவில்லை. ஆனால், அவள் உருவம், சிறியதாகி, இருள் சூழ்ந்த மாலையில், இருட்டில் மறைவதை அவன் பார்த்துக் கொண்டு அப்படியே கடற்கரையில் நின்றான். அவன் அவளை நேசித்தான், ஆனால் அது வரையறுக்கப்படாத, முடிவற்ற சாத்தியக்கூறுகளால் அவன் தேர்ந்தெடுக்க முடியாத ஒரு காதலாக போயிற்று.
"மனம் என்னும் குளத்தில்
விழி என்னும் கல்லை
முதல் முதல் எறிந்தானே!
அலை அலையாக ஆசைகள்
எழும்ப அவன் வசம் விழுந்தேனே!"
"நதி வழி போனால்
கரை வரக் கூடும்
விதி வழி போனானே!
விதை ஒன்று போட
வேறு ஒன்று முளைத்த
கதை என்று ஆனானே!"
"என்ன சொல்வது என்ன செய்வது
அவனின் ஈரமான எண்ணங்கள்
முடிவு செய்யா குரங்குமணமே!
தானே தேய்ந்தான் என்னையும் தேய்த்தான்
பிரியும் தருவாயிலும் அவன்
மரமாய் அங்கு நிற்கிறானே!"
இறுதியில், கோபமோ துரோகமோ அவர்களைப் பிரித்தது அல்ல. அரனின் ஈரமான எண்ணங்கள், அவர்களுக்கிடையில் மகிழ்வாக இருந்திருக்கக் கூடிய காதலை மூழ்கடித்துவிட்டன, அலைகளின் ஓசையைத் தவிர வேறு எதையும் விட்டுவிடாமல், முடிவில்லாமல் கரையில் மோதின.
சூரியா திரும்பிப் பார்க்கவே இல்லை. காதல் ஒரு உணர்வை விட அதிகமாக இருக்க வேண்டும் என்பதை அவள் அறிந்தாள் - அது ஒரு முடிவாக இருக்க வேண்டும், திடமான மற்றும் அசைக்க முடியாத ஒன்றாக இருக்கவேண்டும். ஆனால், தனது ஈரமான எண்ணங்களில் தொலைந்து போன அரண், ஒருபோதும் அந்தத் தேர்வைச் செய்ய அவனால் முடியவில்லை.
அதனால், கிராமத்தின் மீது படர்ந்திருந்த மூடுபனி போல, அவர்களது காதல், மெல்ல காற்றில் மறைந்தது, அரனின் மனதில் இருந்த மேகங்கள் எப்போதோ தெளிந்திருந்தால், என்னவாக இருந்திருக்கும் என்ற நினைவுகளை மட்டுமே விட்டுச் சென்றது.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment