திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../15/

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

திரிகடுகம் தொடர்கிறது.....பாடல் – 71:

உடுத்தாடை இல்லாதார் நீராட்டும், பெண்டிர்

தொடுத்தாண்டு அவைப் போர் புகலும், கொடுத்து அளிக்கும்

ஆண்மை உடையவர் நல்குரவும், - இம் மூன்றும்

காண அரிய, என் கண்.

விளக்கம்:

ஆடையின்றி நீராடுவதும், பெண்கள் வழக்கு தொடுத்தலும், கொடையாளர்கள் வறுமையும் பார்க்கத் தகுந்தன அல்ல.

 

பாடல் – 72:

நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும்;

அறனை நினைப்பானை அல் பொருள் அஞ்சும்;

மறவனை எவ் உயிரும் அஞ்சும்; - இம் மூன்றும்

திறவதின் தீர்ந்த பொருள்.

விளக்கம்:

ஐம்புலன்களை அடக்கியவனைப் பார்த்து வறுமை பயப்படும். அறத்தையே நினைக்கின்றவனுக்கு பாவம் பயப்படும். கொலையாளிக்கு எல்லா உயிர்களும் பயப்படும். இம்மூன்றும் மிகவும் வலிமை மிக்கவனாகும்.

 

பாடல் – 73:

'இரந்துகொண்டு ஒண் பொருள் செய்வல்!' என்பானும்,

பரந்து ஒழுகும் பெண்பாலைப் பாசம் என்பானும்,

விரி கடலூடு செல்வானும், - இம் மூவர்

அரிய துணிந்து ஒழுகுவார்.

விளக்கம்:

பிச்சை எடுத்துப் பெரும் பொருள் ஈட்டுபவனும், வேசியை நம்பும் காமுகனும், தக்க கருவிகள் இன்றி கடலில் பொருள் ஈட்டச் செல்லும் வணிகனும், தன் முயற்சியில் வெற்றி பெற மாட்டார்கள்.

 

பாடல் – 74:

கொலைநின்று தின்று ஒழுகுவானும், பெரியவர்

புல்லுங்கால் தான் புல்லும் பேதையும், 'இல் எனக்கு ஒன்று;

ஈக!' என்பவனை நகுவானும், - இம் மூவர்

யாதும் கடைப்பிடியாதார். .

விளக்கம்:

கொலை செய்து உண்பவனும், பெரியோரைத் தழுவுகின்ற அறிவில்லாதவனும், இரப்பவனை இகழ்வானும் யாதொரு அறத்தையும் பின்பற்றாதவர் ஆவார்.

 

பாடல் – 75:

வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும், உள்ளத்து

உணர்வுடையான் ஓதிய நூலும், புணர்வின்கண்

தக்கது அறியும் தலைமகனும், - இம் மூவர்

பொத்து இன்றிக் காழ்த்த மரம்.

விளக்கம்:

கொடையாளியிடம் உள்ள செல்வமும், உள்ளத்தில் நினைத்துப் பார்க்கும் நூல் புலமையும், தன்னைச் சேர்ந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய காரியத்தை அறியும் தலைவனும், உறுதியான மனம் படைத்தவர்கள் ஆவார்.

திரிகடுகம் தொடரும்.... ››››››

"குடி கெடுத்த குடி" -சிறு கதை

[“துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.”

(குறள் 926):-உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர் என்கிறார் வள்ளுவர். ]

 

அப்படியான ஒருவர் தான் எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் வசித்த கந்தசாமி ஆவார். அவர் ஒரு குடிசை வீட்டில் மனைவியுடனும் ஒரு மகளுடனும் வாழ்ந்து வந்தார். அவரின் மகள் பெரிய அழகு ராணி என்று கூற முடியாவிட்டாலும், அவர் ஒரு இளைஞனை பிரமிக்க வைக்கும்  ஓரளவு அழகு உள்ளவரே! அவரின் பெயர் ரோஜா என்று எண்ணுகிறேன். மனைவி காலையில் அப்பமும் இடியாப்பமும், தன் குடிசையில் சுட்டு , அயலவர்க்கு விற்பார். மாலையில் இட்டலி, பிட்டு அவித்து விற்பார். ஆனால் கந்தசாமி தொடக்கத்தில் கூலிவேலைக்கு போய் ஓரளவு உழைத்து வந்தாலும், போகப் போக நண்பர்களுடன் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கப் பழகினார்.

 

 

கந்தசாமி, கூலி வேலை முடிந்து வீட்டுக்கு வரும் பொழுது, அவரின் நடையும், தனக்கு தானே சிரித்து, ராஜா மாதிரி ஆனால், தள்ளாடி தள்ளாடி வரும் அவரின் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோ நிலை ஏன் என்பது அப்ப தான் எனக்கு புரிந்தது!. ஆனால் அவர் பிற்காலத்தில் தானே நின்காசி மாதிரி சாராயம் வடிப்பார் என்றோ, அந்த கள்ள சாராயத்தில் என் தந்தையும் தன் உயிரை பறிகொடுப்பர் என்றோ நான் கனவிலும் நினைக்கவில்லை.   

 

ரோஜா, தனது சிறுவயதில் நன்றாக படித்ததுடன், மிகவும் மகிழ்வாக எல்லோருடனும் கலகலப்பாக பழகக் கூடியவராகவும் இருந்தார். உடுப்புகளும் ஓரளவு வண்ணம் வண்ணமாக கவர்ச்சியாக உடுப்பார். 

 

நாமும் சில வேளை அவர்களிடம் காலை உணவுக்கு அப்பம் வாங்கி உள்ளோம். நானும் தம்பியும் அதை சாப்பிட்டுவிட்டுதான் பாடசாலை போவோம். அப்பத்துக்கு சம்பலும் தருவார்கள். அவரின் மனைவி, அவர் குடிக்க தொடங்கிய பின், சிலவேளை அழுது என் அம்மாவிடம் முறையிடுவார். 'இவர் இப்படியே போனால், காசும் கரையும், உடலும் கரையும், ஏன் வாழ்வே கரையும்' எனப் புலம்புவார்.  

 

அப்படியான ஒரு சம்பவத்தை விரைவில் கந்தசாமி வீட்டிலும் காண்பேன் என்று முதலில் நான் நினைக்கவில்லை. ஏனென்றால் குடியை குடி கெடுக்கும் என்று , அவரின் மனைவி கந்தசாமியை பற்றி அடிக்கடி என் அம்மாவுக்கு முறையிடுவதை கண்டுள்ளேன். அப்ப எல்லாம் ரோஜா கூட , தாயின் கையை பிடித்துக்கொண்டு, தனக்கு, அம்மாவும் அப்பாவும் இரவில் தினம் சண்டை என்பதால், காதை பொத்திக்கொண்டு நேரத்துடன் படுக்கைக்கு போவதாகவும், அது தன் படிப்பை, மற்றும், பாடசாலை கொடுத்துவிடும் வீட்டு வேலைகளை முடிக்காமல் போய் விடுவதாகவும், படிப்பில் கவனம் குறைவதாகவும் , தாயுடன் சேர்ந்து என் அம்மாவிடம் கூறுவதை கேட்டுள்ளேன்.

 

கந்தசாமி ஒரு நாள் கூலி வேலைக்கு போவதை நிறுத்திவிட்டு, தானே சாராயம் காச்சி களவாக வீட்டில் இருந்து விற்க தொடங்கியதை அறிந்தோம். அது எங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அமைதியான எம் சுற்றாடல், இனி என்ன பாடு படப்போகுதோ என்று எமக்கு தெரியவில்லை. குடியால் தன் குடியை இப்ப கெடுத்துக் கொண்டு இருக்கும் கந்தசாமி, இனி எத்தனை எம் அயலவர்களை  கெடுக்கப் போகிறானோ என்று ஒரே கவலை!. எம் அயலவர் சிலர் காவல் துறையினருக்கு அறிவித்த போதிலும், அவனின் பணம் அவர்களையும் வாங்கி விட்டது என்பதை பின்பு தான் உணர்ந்தோம்.

 

அவனுக்கு கையில் பணம் கணக்க புழங்க தொடங்க, வியாபாரம் கலைக்கட்ட, கந்தசாமியை திட்டிய மனைவியும் அதில் பங்கு பற்ற தொடங்கினார். அவரின் நடை உடை கூட கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. அவர் இப்ப என் அம்மாவுடன் கதைக்கும் பொழுது, மது வாடை அவர் வாயில் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் இன்னும் கந்தசாமியை திட்டுவதை மட்டும் விடவில்லை. 

 

"துணைப்புணர்ந்த மடமங்கையர்

பட்டுநீக்கித் துகிலுடுத்தும்

மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும்

 

என்பது போல அவரும் இப்ப இரவு நேரங்களில், கணவனுடன் சேர்ந்து, கொஞ்சம் கூட வெறிக்கக் கூடிய காச்சிய சாராயமும் - இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக் /பீர் ] கைவிட்டு மதுவினை - குடிக்க தொடங்கினார் என் அறிந்தோம். பாவம் ரோஜா அவர் இன்னும் படிக்க வேண்டும், நல்ல உத்தியோகம் எடுக்கவேண்டும், நல்ல குடும்பமாக  கௌரவமாக வாழ்வை அமைக்க வேண்டும் என்பதிலேயே இன்னும் இருப்பது போலவே இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு, இப்ப தாயும் தந்தையும் கூடி இரவில் குடித்து இன்புற, எல்லாம் அவளுக்கு தலைகீழாக மாறிவிட்டது.

 

அவரின் முகத்தில் ஒரு கவலை குடிகொண்டதை காணக் கூடியதாக இருந்தது. பொல்லாத காலம், அந்த காலக் கட்டத்தில் தான், இலங்கையில் மிக முக்கியமாக கருதப்படும் பரீட்சையில் ஒன்றான  க.பொ.த சாதாரண தரப் பரீட்சையும் நடைபெற்றது. அவளின் முகத்தல் எந்த மகிழ்வையும் காண முடியவில்லை. கடைசிநாள் பரீட்சை எழுத போனவள், வீடு திரும்பவே இல்லை.  அவள் பரீட்சை முடிய தன் சக தோழிகளுடன் ஒருவேளை எதாவது உணவு விடுதியிலோ அல்லது எதாவது படம் பார்க்க போய் இருப்பாள் என அன்று இரவும் அவர்கள் தங்கள் வியாபாரத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர்.         

ஆனால், யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு போகும் கடைசி தபால் புகையிரதம் புறப்பட்டு போகும் பொழுது ஒரு இளம் பெண் தற்கொலை செய்ததால், தபால் வண்டி தாமதமாக புறப்படும் என்ற இரவு செய்தி தான் கந்தசாமிக்கும் மனைவிக்கும் ஒரு சந்தேகத்தை கொடுத்து இருக்கலாம். அப்ப தான் கந்தசாமியின் மனைவி பதைபதைத்து வந்து, என் அம்மாவிடம், என்னை  அங்கு போய் பார்க்கும் படி கூறினார்.  

 

கந்தசாமியும், அவரின் மனைவியும், தங்களுக்கு மட்டும் அல்ல எங்கள் அயலவர்களுக்கும், ஏன் எங்கள் அப்பாவின் சாவிற்கும் காரணமாக இருந்தாலும், ஒருவர் உதவி என வரும் பொழுது மன்னிப்பதே மனித அழகு என்பதாலும், இந்த சூழ்நிலையிலும், தன் பண்பாட்டிலும் பழக்கவழக்கங்களில் சற்றும் மாறாத ரோஜாவின் நல்ல இயல்பும், என்னை அங்கு போய் தேட வைத்தது.

 

அது அவளே தான். எனக்கு ஒரே அதிர்ச்சி. என்ன செய்வது என்று தெரியவில்லை. இனி காவற்படை விசாரணை மற்றும் தாய் தந்தையரின் அடையாள உறுதி படுத்துதல் போன்ற நடைமுறைகளுக்கு பின்பே செய்வாய் அவளின் பிரேதம் வீட்டிற்கு கொடுக்கப் படும் என்றார்கள். குடி குடியை மட்டும் கெடுக்கவில்லை, அவர்களின் பரம்பரையே இல்லாமல் ஆக்கிவிட்டது.  இனி அவர்கள் திருந்தித் தான் என்ன பயன்?

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-அத்தியடி, யாழ்ப்பாணம்]

இவ்வாரம் வந்த திரைப்படங்கள் எப்படி ?

சுருக்கமான பார்வை 

மெய்ப்பட செய் -விமர்சனம்  (Cinema Tamil Movie 'Meippada sey ' Review)

வேலன் இயக்கத்தில் ஆதவ் பாலாஜி, மதுனிகா, ஜெயபாலன், ராஜ் கபூர், ஓ ஏ கே சுந்தர்,சூப்பர் குட் சுப்பிரமணி, பயில்வான் ரங்கநாதன்  எனப்  பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு  பரணி இசையமைத்துள்ளார்.

சென்னையில் வாழ வழி தேடி வந்த நாயகனும் அவன் மனைவியும்,அவனது 4 நண்பர்களும்,   அவர்கள் கண்முன்னே பாலியல் குற்றவாளிகளின் கொலை வெறியாட்டத்தைக் காண நேரிடுகிறது. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து பகிரங்கமாக மக்களையும் காவல் துறையையும் தங்களது ரவுடித்தனத்தாலும், ஆளுமையாலும் அடிபணிய வைத்துச் சுற்றிக்கொண்டிருக்கும் இந்தக் கும்பலைத் தனி மனிதர்களாக இளைஞர்கள் போராடி, சமுதாயத்துக்கு முன் குற்றவாளிகளைத் தோலுரித்து காட்டுவதே கதை.

 சமூக அக்கறையுடன் கூடியபடம்.

 

பிகினிங் - -விமர்சனம்  (Cinema Tamil Movie 'Biginning' Review)

 ஜெகன் விஜயா இயக்கத்தில் வினோத் கிஷான், கௌரி ஜி கிஷான் என பல நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  இப்படத்தினைலிங்குசாமி தன் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, கிருஷ்ணமூர்த்தி கே எஸ் இசையமைத்துள்ளார்.

ஆசியாவிலேயே முதன் முதல் தயாரிக்கப்படட ஒரே திரையில் இரட்டைக் காட்சிகள் கொண்ட தமிழ் திரைப்படம்.இப்படத்தில் திரையின் இடது பக்கம் ஒரு கதை விவரிக்கப்படும், வலது பக்கம் மற்றொரு கதை நடைபெறும். ஒரே சமயத்தில் இது நடக்கும். அதே நேரத்தில், பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள். ஒரு டிராமா, ஒரு திரில்லர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும்.

புதுமையாய் ஒரு முறை ரசிக்கலாம்.

 

பதான்-விமர்சனம்  (Cinema Tamil Movie 'Pathaan' Review)

 சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக் கான், தீபிகா படுகோன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படம் ஒரு பான் இந்தியா படமாக வெளியானது.

இந்தியாவில் முன்னாள் ஸ்பை ஏஜென்ட் ஆன ஜான் ஆபிரகாம் இந்தியாவுக்கு எதிராக திரும்ப அவனது மிஷனை தடுத்து நிறுத்த கொண்டு வரப்படும் இன்னொரு அராஜகமான ஏஜென்ட் தான் பதான் ஷாருக்கான். ஆனால், அந்த ஏஜென்ட்டை திசை திருப்ப தீபிகா படுகோன் செம ஹாட்டாக வருவதும் அவரது அழகில் மயங்கி பதான் வந்த வேலையை பார்க்காமல் விழுந்து கிடப்பதும் இடைவேளை ட்விஸ்ட்டுக்கு பிறகு ஜான் ஆபிரகாமை துரத்தி துரத்தி அடித்து துவம்சம் செய்து நாட்டுக்காக என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்யக் கூடிய போர் வீரன் நான் என சொல்வதும் தான் இந்த பதான் படத்தின் கதை.

வன்முறை மற்றும் ஆபாச ஜோக்குகள் நிறைந்து , தமிழிலும் வந்த ஹிந்திப் படம்.

 

வல்லவனுக்கும் வல்லவன்-விமர்சனம்  (Cinema Tamil Movie 'Vallavanukkum Vallavan' Review)

விஜய் தேசிங்கு இயக்கத்தில், பாபி சிம்ஹா, பூஜா தேவரியா, நெப்போலியன், கருணாகரன், ஆனந்த்ராஜ், அப்பு குட்டி மற்றும் பலர் நடித்திருக்கும் அதிரடி நகைச்சுவைத் திரைப்படம்.  பாபி சிம்ஹா தயாரித்துள்ளார். ரகு தீட்சித் இசையமைத்துள்ளார்.

 

இருவர் - வெவ்வேறு ஆளுமைகளை கருதி தமிழகம் முழுவதும் இடம் விட்டு இடம் பயணம் செய்கிறார்கள். முதல் நிகழ்வில், பாபி ஒரு தெய்வீக மனிதனாக வருவதைப் பார்க்கிறோம் (நித்யானந்தாவாகத் தெரிகிறது) மேலும் அவன் அழகியுடன் (ஷிவாதா நாயர்) உறங்குவதை அவள் உண்மையான ஆத்ம துணையாகப் பார்க்கிறான். பாபியும் கருணாகரனும் அந்த ஊரில் இருந்து மறைந்து அடுத்த இலக்கை நோக்கி நகர்கிறார்கள், அவர்கள் இந்த கான்செட்டைத் தொடரும்போது, அழகி உட்பட அவர்கள் ஏமாற்றிய அனைவரும் அவர்களை துரத்தத் தொடங்குகிறார்கள். ஆனால் அவர் வழியில் ராபின் ஹூட்டாகவும் நடிக்கிறார். அவர்கள் பிடிபடுகிறார்களா? அழகிக்கு என்ன நடக்கும்?  என்பதே கதை

அது பார்வையாளர்களை ஈர்க்கவில்லை.

தொகுப்பு: செ .மனுவேந்தன்