ஒளிர்வு-(18) வைகாசி த்திங்கள்-2012


தளத்தில்:சிந்தனை ஒளி,/பறுவதம்பாட்டி/க..கவி...கவிதை/கனடாவில்......உறவு /ஆராய்ச்சியாளரின்செய்திகள்,/ சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க/தொழில்நுட்பம்,/உணவின்புதினம்,/கணிணிஉலகம்,/பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை/கர்ப்பகாலத்தில் முகப்பருவா?/சிரிக்க...சிரிக்க....சிரிப்பு வருது!,/சினிமா.
தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com
சிந்தனை ஒளி:
*உண்மைக்காக எதையம் தியாகம் செய்யலாம். ஆனால்,
  எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக் கூடாது!    
*பெண் சுதந்திரம் என்பது கட்டறுத்து ஓடும் காளையல்ல.
   கட்டுக்குள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு!
* புகையிலையில் பற்று வைத்தால் அது நெஞ்சில்
  புற்று வைத்துப் பின்னர் உயிருக்கு முற்று வைக்கும்!
* நாம் எங்கே அதிகம் நம்பிக்கை வைக்கிறோமோ,
   அங்கே நமக்காக ஏமாற்றங்களும் காத்திருக்கும்!
* விட்டுக்கொடுக்க நினைப்பவன் கெட்டுப் போவதில்லை!
   கெட்டுப்போக நினைப்பவன் விட்டுக் கொடுப்பதில்லை!

க..கவி...கவிதை


எப்படி நினைத்தேன்! ------>> இப்படி ஆனேன்!
(ஒரு நகைச்சுவைக் குதம்பம்)


கதிரோன் வருமுன் குறும் துயில் நீங்கி
மஞ்சள் கமழ தலைமேல் குளித்து
பலமுழக் கூந்தல் அழகாய் முடிந்து
நறுமண புஷ்பம் முடிமேல் சூட்டி
நீள்வர்ணச் சேலையில் மேனியைப் புகுத்தி
அழகு மயிலின் நளினமாய் அசைந்து
மங்கள சாந்துத் திலகமும் இட்டு
மின்னலோ என்னும் இடையையும் கொண்டு
அன்னமும் வெட்கும் நடையையும் கொண்டு
மெட்டிகள் ஓசை செவிப்புலன் புகவும்
அச்சம் கொண்ட குறு குறு விழியும்
காண்போர் வியக்கும் பெரியோர் பணிவும்
பிறர்பால் தோன்றும் பாங்கான நாணமும்
முழுமதி தோற்கும் வதனமும் கொண்டு
இல்லம் பெருக்கி நன்னீர் தெளித்து
பலவர்ண ஜால கோலங்கள் போட்டு
இறையைத் தொழுது மந்திரம் செபித்து
கண கணீர் எனவே மணியோசை எழுப்பி
நற்பல தினங்களில் விரதமும் காத்து
நித்தம் வணங்கும் இறைவனை வேண்டி
தீபமும் ஏற்றி கற்பூரம் காட்டி
புக்ககம் அக்ககம் சுபீட்சம் திகழ
வாழ்க்கைத் துணையின் ஆயுளை வேண்டி
காலம் தோறும் சௌக்கியம் கேட்டு
தன்னையே சூழ்ந்த பெரியோர் சிறியோர்
அவர்மனம் குளிர விருந்தும் ஓம்பி
பிறர் உயர்வதனால் தானும் மகிழ்ந்து
தன மக்கள் போல பிறர் தனை மதித்து
ஆணுக்கு என்ற வாழ்வுத் துணையாய்
அறிவுரை பகரும் மதி மந்திரியாய்
துன்பம் வருமுன் காக்கும் காவலனாய்
பாசம் கொட்டும் உற்ற தாயாய்
மக்கள் கல்வியில் உயர்ந்த ஆசானாய்
சிக்கனமாகச் சௌகரியம் காட்டும்
சொப்பன சுந்தரி சோபன நாயகி
புன்சிரிப்புடனும் மென் சுவையுடனும்
அன்புடன் கோப்பி கொண்டுவந்தருகில்
என்துயில் எழுப்பப் பாதம் வணங்கும்
இலக்கியக் காதலின் மோகன சௌந்தரி
அக்கணம் கிடைக்கும் என்றிருந்தேனே.


ஆனால்......ஆனால்......
.


இரவும் பகலும் அயராது தூங்கும்
கரவும் குறையும் நித்தம் சாடும்
அரைகுறை சீவிய கட்டை முடியும்
குளியா உடம்பில் வாசனைப் பொருளும்
அரையோ குறையோ குட்டை உடையும்
வெடிக்காக் குறையாய் இருக்கும் சட்டையும்
புரியா மொழியில் அரை குறைக் கதையும்
விளங்காப் பேய் போல் மனம் போன போக்கும்
ஆந்தையாட்டம் பெருவிழிக் கண்ணும்
சாந்தமே இல்லா பொட்டில்லா முகமும்
கடுக்காய் வெடிக்கும் மூஞ்சுறு முகமும்
சினத்தால் எரிக்கும் செந்நிற முழியும்
ஆன மட்டும் குப்பைகள் தின்று
பேழை வயிறும் பெரும் தொடை நடையும்
என் நபர் கண்டும் அச்சம் இன்றும்
எப்பொருள் கொண்டும் நாணம் அற்றும்
பெரியோர் சொல்லும் மதிப்பது மறந்து
எவர் முன்னாலும் பெரும் குரல் கொடுத்து
பெற்றோர் இருந்தும் பிற மனை அனுப்பி
முற்றாய் முழுதாய் உறவினைத் துறந்து
இறைவனை மறந்து முறைதனை இழந்து
பூசைகள் ஆரங்கள் யாவையும் விடுத்து
தனது சுகமே பெரிதெனக் கருதி
ஆனமட்டும் அங்கிங் அலைந்து
பிறர் உயர்வு கண்டு மன அழல் கொண்டு
எம்நிலை யாவும் தாள்வாய் நினைத்து
மற்றோர் மனை போல் பெரும் மனை கோரி
நாளொன்றுக்கு பட்டு ஒன்று உடுத்து
மோட்டார் ரதம் படகு போல் வேண்டி
கழுத்தோ தாங்கா நகைச் சுமை மாட்டி
அடுத்தார் பிள்ளை படிப்பது எல்லாம்
பந்தோ எதுவோ ஆடுவதெல்லாம்
உடம்பைச் சுற்றி சுழல்வது எல்லாம்
குஷ்தியிட்டு அடிப்பது எல்லாம்
தனது பிள்ளை செய்யலே என்று
மாரடித்துப் பெரும் குரல் இட்டு
சுத்தித் திரிந்து பூராயம் பேசி
சண்டையிட்டு அவலப்பட்டு
சின்னத்திரையின் வில்லத்தனங்கள்
அத்தனை குணமும் பெண்குணம் என்று
சுற்றார் மாற்றார் இல்லம் விரைந்து
குத்திக் குதறிக் சாணக்கியம் செய்து
பொல்லா இரவில் மனையுள் புகுந்து
நல்லாய்த் தூங்கும் கணவன் தலை மேல்
சொல்லால் உமிழ்ந்து மனச் சுமை அழுத்தும்
பொல்லா மனைவியை அடைந்தனன் நானே!
ஐயகோ----

கனடாவில்........


                       உறவு
“உறவு” திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தே ஒரு வலுவான ஒரு உறவுப்பாலமமைத்து கனடிய தமிழ் திரைப்படவரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறார் திரைப்படக் கலைஞர் திவ்வியராஜன் என்றால் அது மிகையாகாது.
கனடிய தமிழ் திரைப்பட உலகின் ஒரு மூத்த கலைஞரின் பாராட்டைப் பெறுவதற்கு ஏற்ற படம்தான் திவ்வியராஜனின்உறவு”.
கணவன், மனைவி என்றால் தனியே ஒருவர் அல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் மனதாரப் புரிந்து கொள்வதும், விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போவதும் தான் திருமண பந்தத்தின் முதலாவது விதி என்பதை உணர்ந்து கொள்ளாவிட்டால் அந்தக் குடும்பமே சந்தேகத்தில் அழிந்து போய்விடும் என்பது மட்டுமல்ல, குடும்பப்பிரச்சனையில் தேவையற்ற மூன்றாம் மனிதரின் தலையீடும் ஒரு குடும்பத்தை அழித்துவிடும் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்தப்படத்தின் மூலக் கருவாகும்.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஜீவன்ராம் ஜெயம் பாராட்டப்பட வேண்டியவர். குறைந்த வசதிகளோடு மிகவும் அற்புதமாகக் கமெராவைக் கையாண்டிருக்கிறார். கமெராக் கோணங்கள் மிகவும் அற்புதம். பாராட்டுக்கள். சில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும், இசையமைப்பு ஒலியமைப்பு, எடிற்ரிங் போன்றவை தரமாக இருக்கின்றன. எந்த ஒரு இடத்திலும் சோர்ந்து போகாமல் படம் இயல்பாக நகர்கிறது.
கனடியத் தமிழர் திரைப்படங்களில் இதுவரை இருந்த பெருகுறைகளான ஒரு முழுமையற்ற திரைக்கதை,சுறுசுறுப்பற்றதும்-பாவம் அற்ற  பேச்சுவழக்கு சம்பந்தமில்லாத காட்சிகள் என்பனபோன்றவற்றினை  தவிர்ப்பதில் திவ்வியராஜன் வெற்றி கண்டுள்ளமை அவருடைய இரண்டாவது திரைப்பட வெற்றிக்கு காரணமெனலாம்.
 பொதுவாக,எமது திரைப்பட வளர்ச்சிக்கு எடுக்கப்பட வேண்டிய கவனங்கள் இன்னும் மலையளவு உள்ளன. நம்பமுடியாத மாயாஜால சண்டைக் காட்சிகளும்,ஆடையில்லாத நடனங்களும் எல்லாத் திரைக்கதைகளுக்கும் அவசியம் என்பதில்லை. அவை இல்லாத பல இந்தியத் திரைப் படங்கள் கூட சாதனை படைத்திருக்கின்றன.அதேவேளை சம்பந்தமில்லாமல், தேவை இல்லாமல் அக்காட்சிகளை வில்லங்கமாக திரைக்கதையில் புகுத்தி படு தோல்வியில் தொலைந்த இந்தியத் திரைப்படங்களும் உண்டு.

திரைப்படங்களில் ஒரு முழுமையான திரைக்கதை, நகைச்சுவை,நல்ல பின்னணி இசை,பாடல்கள்,நடிகர்கள்,தயாரிப்பு,இயக்கம்,கமரா என அனைத்தும் தரமானதாக அமையும்போது நிச்சயம் அப்படம் வெற்றியடையும்.
“உறவு” திரைக்கதையிலும் நாயகி ஒரு பரதநாட்டிய ஆசிரியை என்பது சில காட்சிகள் கடந்த பின்னரே உணர முடிந்தது.பின்னணி இசையிலும் பல இடங்களில் தொய்வு. வழமைபோல் குரலைத் தாழ்த்தியும்,அழுத்தியும் நம்மவர் மேடையில் பேசி நடிப்பதனை திரையில் தவிர்த்திருக்கலாம். இவை போன்ற ஒரு சில சிறிய குறைகள் இருந்தாலும் இதுவரையில் வந்த எம்மவர் திரைப் படங்களில் “உறவு” முன்னணி வகிக்கிறது.
ஒரு இரசிகனின் பார்வையில் கருத்துக் கூறுகையில் நட்புக்காக நண்பர்களையும்,உறவுக்காக உறவுகளையும்- அவர்களை திரைக்கு இழுத்து வந்து வெறும் பொம்மைகளாக வந்து செல்வோரை வந்து பார்த்து திரை அரங்குகளில் சிலமணி நேரம் செலவிடுவதற்கு  தமிழ் இரசிகர்கள்  தயாராக  இல்லை.சில திரைப் படங்களில் தோன்றுவோர்கள் அவர்களின் பாத்திரம் என்ன,யாரோடு பேசுகிறார்கள் என்று எதுவும் புரிவதில்லை.
எனவேதான் நடிகர்களையும்,நல்லகதைகளையும்  நாடிய திரைப் படங்கள் எம் மத்தியில் வரவேற்கப்படுகின்றன.வெற்றியை தேடி அடைகின்றன.
 இந்தியத் தமிழ் திரைப் படங்கள் அவற்றின் உரையாடும் மொழி 50 ,60 களில் நீண்ட வசனங்களாகவும் இலக்கணத் தமிழாகவும் இருந்தன.70 களில் மிகவும் குறைந்த வசனங்களாகவும் உரையாடலில் இடைவெளிகளும் கொண்டு வெளிவந்தன.அப்படங்களை தற்போது எடுத்து பார்த்தால் பொறுமையினை இழந்துவிடுவோம்.ஏனெனில்  தற்போது விரைவான இயல்பான நடிப்பு சினிமா இரசிகர்களை கவர்ந்துகொண்டு இருக்கிறது.இப்படிக் காலத்திற்கு காலம் கதை,வசனம்,நடிப்பு என்பனவற்றை மாற்றிக் கொண்டு வருவதன் முலமே இரசிகர்கள் மத்தியில் அவை இன்றும் வளர்ந்துகொண்டு இருக்கிறது.தமிழை மாற்றிப் பேசும்படி நாம் எதிர்பார்க்கவில்லை.நாம் அந்தக் காலத்தில் நாடக மேடையில் பேசியதுபோன்றே இன்றும் பேசிக்கொண்டு இருப்பது பெரும் குறையாகவே தோன்றுகிறது.ஆம்,திரைக்கென்று ஒரு திரை மொழி எம் மத்தியில் உருவாகவேண்டும்.அப்பொழுது தான் எமது சினிமாவும் எம் மத்தியில் வளர்ந்து நிற்கும்.    
------------------ theebam.com