மொழியின் தோற்றம்: – 07

 மொழி எப்போது தொடங்கியது? எவ்வாறு உருவானது? /

Origin of Language: When Did It Start and How Did It Evolve?



நாம் ஏற்கனவே பார்த்த தொடர்ச்சி கோட்பாடு [“Continuity theories”],  மொழி ஒரு சிக்கலானது, எனவே அது வெறுமனே ஒன்றும் இல்லாததில் இருந்து ஒரு பேசும் வடிவில் தோன்றி இருக்காது,  கட்டாயம் அது படிப்படியாக  எமது முதன்மையான மனிதன் - குரங்கு உள்ளிட்ட உச்சவுயர்வு பால்குடி உயிரினத் தொகுதியில் இருந்து [primate ancestors] வளர்ச்சி அடைந்தது என்கிறது.  ஆனால் இதற்கு எதிர் மாறானதே தொடர்ச்சி அற்ற கோட்பாடு [“Discontinuity theories”] ஆகும்.  அதாவது மொழி என்பது ஒரு தனித்துவமானது . இதை மனிதன் அற்ற எமது உயர்  பாலூட்டிகளுடன் ஒப்பிட முடியாது. எனவே கட்டாயம் அது ஓரளவு மனிதனின் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் ஏற்பட்டு இருக்கும் என நம்புகிறார்கள்.

 

இதை ஆதரிக்கும் மானுடவியல், சமூகவியல், கலாச்சாரப் பரிணாமவியல், மொழியியல் சார்ந்த அறிஞர்கள், ‘பேச்சு / மொழி என்பதை மனித இனத்தின் ஒரு சிறப்பு உயிரியல் பண்பாக கொள்வதுடன், மூலக்கூறு மரபியல் மற்றும் நரம்பியல் ஆய்வு முடிவுகளின் வழியாக மொழி என்னும் பண்பின் மரபியல் எது என்பதை சுட்டி காட்டுகிறார்கள். உதாரணமாக மனிதனின்  மூளையில் பேச்சு/ மொழிக்கான இயங்கு தளங்கள் உள்ளனவா ?, அப்படி ஒன்று இருந்தால், மூளையின் மொழிமையங்களின் வளர்ச்சிக்கும், தூண்டுதலுக்கும், இணைப்புக்கும், செயல்  பாடுகளுக்கும் காரணமான மரபணுக்கள் [புரதங்கள்] எவை? மேலும் நாம் ஒலிகளை உண்டாக்குவதற்கு ஒரு வகை கட்டுப் பாட்டுடன் சுவாசிக்க வேண்டும். எனவே, அவ்வாறு செய்வதற்கு, நமது உடலில் மென்மையான தசைகளை நாம் கட்டுப் படுத்த வேண்டும். எனவே, நமது உதரவிதானம் [diaphragm / இடைத்திரை / வயிற்றுக்கும் மார்புக்கும் இடையே உள்ள குறுக்குச் சவ்வு;  நுரையீரல்  சுருங்கி விரியக் காரணமாய் அமைந்து, மூச்சு இழுத்துவிட உதவும் தசை] அதற்கு ஏற்றவாறு செயல் படவேண்டும். ஆகவே அதிக அளவில் நரம்புகள் அங்கு இருக்க வேண்டும்.  எனவே, இவைகளை விரிவாக ஆய்வு செய்து, இன்றைய மனிதனுக்கும் மற்றும் அதற்கு முந்திய இனத்திற்கும் இடையில் உள்ள தொல்லுயிர்ப் படிம ஆதாரம், மரபியல் ஆதாரம் மற்றும்  உதரவிதான ஆதாரம் மூலம் மொழியின் தோற்றத்துக்கு இவர்கள் விடை கூறுகிறார்கள்.

 

உலகில் வாழும் எண்ணற்ற உயிர்களில் தனித்துவமான உயிராக மனிதன், மற்ற எல்லா உயிரினங்களை விடவும் மேம்பட்டவர்களாக இருக்கின்றனர். இதற்கு காரணம் அவர்களது  பகுத்தறிவும் மற்றும்  சிந்திக்கும் ஆற்றலும் தான்! மனித சிந்தனை வளர்ச்சியில் மிக முக்கியமான அம்சம் கருத்துப் பரிமாற்றம் என்று சொல்லலாம். பண்டைய மனிதர்கள் தங்களுக் கிடையே தகவல்களை மற்றும்  எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள ஓவியங்களையும் (paintings), படங்களையும் (diagrams), குறியீடுகளையும் (symbols) பயன்படுத்தி வந்தனர் என்பது தொல்பொருள் ஆய்வு மூலம் இன்று தெரிய வருகிறது. உதாரணமாக, உலகின் பல்வேறு இடங்களில் நமக்கு காணக் கிடைக்கிற தொல் குகை ஓவியங்கள் (Ancient Cave Paintings) இதற்கு  சான்றுகளாக உள்ளன. மேலே சொன்ன எல்லாவற்றையும் நாம் ஒரே சொல்லில் சொல்வ தென்றால் வார்த்தைகளற்ற தொடர்பு [Non-verbal Communication] என்று சொல்லலாம்.

 

என்றாலும் காலம் செல்ல, அவர்கள் தாம் முன்பு கேட்டு, அதுபோலவே திரும்ப ஒலி எழுப்பிய  பறவைகளின் ஒலியையும், விலங்குகளின் ஒலியையும் சில மாற்றங்களுக்கு உட்படுத்தி, பயன்படுத்தத் தொடங்கினார்கள். இந்த கால கட்டத்தில் தான் பேச்சு மொழி (Spoken Language) உருவாகியது எனலாம். எனவே, இவ்வாறான வார்த்தைகளை (words) அடிப்படையாகக் கொண்ட  பேச்சு மொழியை நாம் வாய்மொழி தொடர்பு [Verbal Communication] என்றும் கூறலாம். இந்த முன்னேற்றமே கருத்துப் பரிமாற்றத்தில் ஒரு மிகப் பெரிய முன்னேற்றத்தை கொண்டு வந்தது.

 

இந்த ஆய்வில், 1928ல் திசம்பர் 7 அன்று பிலெடல்ஃபியாவில் பிறந்த,  மொழியியல் விஞ்ஞானி,  அவ்ரம் நோம் சாம்ஸ்கி (Avram Noam Chomsky) முதன்மையாக உள்ளார்.  இவரை   மொழியியலின் டார்வினாக இன்று போற்றப் படுகிறார். இவர் தொடர்ச்சி அற்ற கோட்பாட்டின் முக்கிய ஆதரவாளர் ஆகும். மரபியல் மற்றும் பரிணாமவியலின் வளர்ச்சிப் படிநிலையே மொழி என்பது இவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

 

 

மொழியின் பரிணாமத்தை பற்றி ஆய்வு செய்வதில் கடினமான பகுதி என்னவென்றால்,  அங்கு அரிதாகவே சான்றுகள் கிடைக்கின்றன, பேச்சு மொழி புதைபடிவங்கள் [fossils] என்று  ஒன்றையும் விடுவதில்லை. மற்றும் புதைபடிவ மண்டை ஓடுகள் [fossil skulls],  உயர்நிலை விலங்கினம் அல்லது மனித இன முன்னோடிகளின்  [hominid]  ஒட்டுமொத்த மூளையின் வடிவம்  மற்றும் அளவை மட்டுமே தருகின்றன, ஆனால் அந்த மூளையால் என்ன செய்ய முடியும் என்பது பற்றி அல்ல, என்றாலும் குரல் பாதையின் [vocal tract] வடிவம் [உதாரணம்: வாய், நாக்கு  மற்றும்  தொண்டை] ஒரு உறுதியான ஆதாரமாக இருக்கிறது. எனவே இதுவரை மேற் கொண்ட தொல்பொருள் ஆய்வில் இருந்து, உடற்கூறியல் ரீதியாக [anatomically] நவீன மனிதன் தோன்ற முன்பு,  ஏறத்தாழ 100,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதப் பேரினத்தின் [ஹோமினிட்களின்]  குரல் பாதையின் வடிவம் கட்டாயம் இன்றைய பேச்சு ஒலியின் வரம்புகளை அனுமதிக்க வில்லை  என்பது  தெரிகிறது [didn't permit the modern range of speech sounds]. இது அதுவரை பேச்சு மொழி ஆரம்பிக்கவில்லை என்று அர்த்தம் அல்ல. முன்னைய மனிதப் பேரினம் சிலவேளை மிகவும்

கட்டுப் படுத்தப்பட்ட ஒரு எல்லைக்கு உட்பட்ட  மெய் எழுத்துக்கள் மற்றும் உயிரெழுத்துகளை கொண்டிருக்கலாம் [a more restricted range of consonants and vowels]? மேலும் குரல் பாதையின்   வடிவத்தில்  ஏற்பட்ட மாற்றம் வேகமாக பேசவும் சொல் திறம் அதிகரிக்கவும் [speech faster and more expressive] வழிவகுத்து இருக்கலாம்.

 

 

இந்த பிரச்சனைகளும் மற்றும் இவை போன்றவைகளும் இன்னும் அறிஞர்களிடம் விவாதத்தில் இருக்கிறது. ஒரு முக்கிய கேள்வி என்னவென்றால், மனித மொழித் திறனின் அல்லது  ஆற்றலின் எந்த அளவு பங்கு முன்னோடியாக விலங்குகளில் காணப்பட்டது என்பது ஆகும் [the degree to which precursors of human language ability are found in animals]?  உதாரணமாக, மனித  குரங்குகளின் சிந்தனை அமைப்புகள் எங்கள் சிந்தனை அமைப்புகளுடன் எவ்வளவுக்கு ஒற்றுமையாக உள்ளன ? இது என்னவென்றாலும், மனித குரங்குகளின் இடஞ்சார்ந்த திறன்கள்  மற்றும் அவர்களின் சமூக உலகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் திறன் [apes' spatial abilities and their ability to negotiate their social world] போன்றவையை  அடித்தளமாக கொண்டு மனிதனின்  சிந்தனை அமைப்புகள் உருவாகி இருக்கலாம் என்று சில ஒருமித்த கருத்தும் உண்டு.

 

 

இன்னும் ஒரு - இவைகளுடன் சம்பந்த பட்ட கேள்வி என்னவென்றால், மொழியின் என்ன அம்சங்கள் மொழிக்கு தனித்துவமானது மற்றும்  என்ன அம்சங்கள், மற்ற உயர் குரங்கினத்துடன்  பகிராத மனிதனின் திறன்களில் இருந்து பெறப் பட்டவை ? என்பது ஆகும். எனினும் சில மொழியியலாளர்கள் / ஆய்வாளர்கள், மொழியில் உள்ள அனைத்தும் மற்ற மனித திறன்களால்  கட்டமைக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறார்கள் [everything in language is built out of other human abilities]. உதாரணமாக, குரல் பிரதிபலிப்பு திறன், பெரிய அளவு தரவுகளை மனப்பாடம் செய்தல்  [இந்த இரண்டு திறன்களும் வார்த்தைகளை கற்க தேவையானவை], மற்றவர்களுடன் தகவல் தொடர்புகொள்ள விரும்புதல், மற்றவர்களின் நோக்கங்களை மற்றும் நம்பிக்கைகளை  புரிந்து கொள்ளுதல், மற்றும் ஒத்துழைக்கும் திறன் [the ability for vocal imitation, the ability to memorize vast amounts of information (both needed for learning words), the desire to communicate, the understanding of others' intentions and beliefs, and the ability to cooperate] போன்றவை ஆகும். தற்போதைய ஆய்வுகள், இந்த மனித திறன்கள் முற்றாக வளர்ச்சி அடையாமல் அல்லது மிக குறைவாக வளர்ச்சி அடைந்து மனித குரங்குகளிடம் [apes] காணப்படுவதாக தெரியப் படுத்துகிறது. மற்ற ஆய்வாளர்களும் இந்த ஆய்வின் முக்கியத்தை ஆமோதிப்பதுடன், உயர்நிலை விலங்கினத்தின் மூளையை  [hominid brains] மொழிக்கு ஏற்றவாறு மாற்ற, மேலும் சில மாற்றங்கள் தேவை என்கிறார்கள்.

 

 

மனிதர்கள் மட்டுமே கதைகள் சொல்லும் பிறவியாகும். எங்கள் ஆரம்ப நாட்களில் இருந்து, பொருட்களை பெயரிட்டு அதை பற்றி விபரிக்கிறோம். எம்மை சுற்றி என்ன நடக்கின்றன  என்பதை மற்றவர்களுக்கு சொல்லுகிறோம். இந்த தனித்துவமான பேச்சு ஆற்றலில் எவ்வளவு பகுதி, நமது மரபணு அமைப்பில் ஒரு பகுதியாக, பிறவியிலேயே உள்ளது? நமது சூழலில்  இருந்து நாம் எவ்வளவு பகுதி கற்றுக் கொள்கிறோம்? என்பது ஒரு முக்கிய கேள்வியாக ஆய்வாளர்களிடம் எழுகிறது.

 

நாம் எம் மொழியை, அதன் சொற்களஞ்சியம் மற்றும் இலக்கண வடிவங்களுடன் [vocabularies and grammatical patterns] பெற்றுக் கொள்கிறோம் என்பதில் எந்த சந்தேகமில்லை. இதற்கு எமது  பரம்பரையாக வந்த ஒரு திறன் [an inherited ability], நாம் மொழியை  இலகுவாக கிரகிக்க, மனதில் பதிக்க மற்றும் விருத்தி செய்ய [to grasp, retain, and develop] உதவுகிறதா?

 

இதற்கான ஒரு முன்மாதிரி விடையை நோம் சாம்ஸ்கி 1957, ஒரு புத்தாகம் மூலம் [“Syntactic Structures”]  வெளியிட்டார். இது ஒரு புதுமையான யோசனையை முன்வைத்தது. எல்லா  மனிதர்களும் மொழி எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றிய உள்ளார்ந்த புரிதலுடன் பிறந்திருக்கலாம்  என அது வலியுறுத்துகிறது. இவரின் இந்த யோசனை பரவலாக ஏற்றுக்  கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

 

 உதாரணமாக, மனிதர்கள் ஏனைய அனைத்துவகை உயிரினங்களிடமிருந்து வேறுபடும் அதே சமயம், தனது சக மனிதர்களோடு பெரும்பாலும் வேறுபடுகின்றனர். ஆனால் மொழி என்று  வருகிறபோது அனைவரும் ஒன்றே என்றாகி விடுகிறது. உதாரணமாக அமேசான் காடுகளில் பிறந்த ஒரு வேட்டை மரபினரின் குழந்தை இங்கே, போஸ்டனில் [Boston] வளர்கிறது என்றால், மொழித் திறன்களைப் பொறுத்தவரை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடும்போது வேறுபடாது. இங்கிருந்து ஒரு குழந்தை அமேசானில் வளர்ந்தாலும் அதேதான். இதுதான் சிறப்புத் தன்மை.  மனிதனால் கையகப் படுத்தப்பட்ட இந்தத் திறன் கலாச்சாரங்களின் கூறாகவும் நமது கற்பனை-அறிவுத் திறன் என பலவாறாக விரிகிறது. எப்படித் திட்டமிடுகிறோம், எப்படி கலையில்

படைப்பாக்கம் செய்கிறோம். சிக்கல் மிகுந்த சமூகங்களை எப்படி உருவாக்குகிறோம் என்பதை எல்லாம் மொழி தீர்மானிக்கிறது. தவிர ஏனைய விலங்குகள் போலன்றி மனிதன் தனக்குள் தானே எப்போதும் எதையும் பேசியபடியே இருப்பதை நிறுத்த முடிவதில்லை. உங்களுக்குள் நீங்களே பேசிக்கொள்வதை நிறுத்த எவ்வளவு முயன்றாலும் முடியவே முடியாது என்கிறார் நோம் சாம்ஸ்கி.

 

புதைபொருள் ஆய்வின் ஆவணங்களை உற்றுநோக்கும் போது ஒரு வித படைப்பாக்க திடீர் எழுச்சி (Creative explosion) இன்றிலிருந்து 1,50,000 வருடங்களுக்கும் 75,000 வருடங்களுக்கும்  இடையே வரலாற்றில் முன்பு நிகழ்ந்துள்ளது. திடீரென்று ஒரு எதேச்சையான பெருவெடிபோல படைப்பாக்க எழுச்சி கிளம்பி, சிக்கலான கலைவடிவங்கள்; சமிக்ஞை முறை பதிவுகள்;  வான்நிகழ்வுகளை அளத்தல், பதித்தல்; சிக்கல்மிகு சமூக அடையாள கட்டமைப்புகளை உருவாக்குதல்இப்படி..  இந்த திடீர் எழுச்சியை வரலாற்றுக்கு முந்தைய மனித

சமூகத்தை ஆய்வுக்கு உட்படுத்தும்  விஞ்ஞானிகள் / வல்லுனர்கள் திடீரென்று தோன்றிய தகவல் தொடர்பு எனும்மொழிவழி எழுச்சியோடு தொடர்பு படுத்துகிறார்கள். அத்துடன் இது  மனித உடற்கூறு மாற்றம் அல்ல என்றும் கருதுகிறார்கள். ஓசை எழுப்புதல் மற்றும் செவிப்புலன் குறித்த உடல்நிலை 60,0000 வருடங்கள் முன் வரை எந்த மாற்றமும் அடையவில்லை என்றும், புலனுணர்வு மற்றும் அறிதல் சார்ந்து [perception and cognition] ஒருவித ஒருங்கிணைப்பு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

 

இனி இந்த மாற்றங்களை விரிவாக பார்ப்போம்.

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]/-பகுதி:08 வாசிக்க அழுத்துக👉 Theebam.com: மொழியின் தோற்றம்:-08ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉 Theebam.com: மொழியின் தோற்றம்: - 01