ஒளிர்வு -05


புதுக்கவி:-நாம் தமிழர்
காலையில்
டொரோண்டோ நகர வீதிகளில்
போத்துக்கீசனைக்   கண்டால்
போம்ஜிய என்போம்
சீனனைக்   கண்டால்
சவான் என்போம்
இந்தியனைக்   கண்டால்
அச்சாசுத என்போம்
பிறேஞ்சுக்காரனைக்   கண்டால்
பொன்ஜோ என்போம்
இத்தாலிக்காரனைக்   கண்டால்
பொன்ஜோர்னோ என்போம்
ஆங்கிலேயனைக்   கண்டால்
குட்மோர்னிங் என்போம்
ஆனால்
தமிழனைக்   கண்டால்
தரை பார்த்து  நழுவுவோம்.
                                                                       -S.MANUVENTHAN 
         நினைவில் ஒரு பழமொழி-ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.

சிறுகதை:- கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?

கனடாவுக்கு வந்து பரமர்    முப்பது வருடங்கள் எப்படியோ பறந்தோடிவிட்டன. தனது சொந்த ஊரான ஆச்சுப்பிடி கிராமத்தினைப் பார்க்கும் ஆசையில்  கனடாவிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்கினார் பரமர்.  அவர் நெஞ்சினில் தான் வெளிநாடு சென்று கட்டியெழுப்பிய ஆச்சுப்பிடிக்   கிராமம் எப்படி இருக்கும் என்ற ஆவல் பலாலி விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது  மேலும் பலமடங்கு அதிகரித்துவிட்டது எனலாம்.
கிராமத்திற்கு செல்ல ஒரு ஆட்டோ வினை பிடித்துக்கொண்ட பரமர் ஊர் போய் சேர அரை மணி நேரம் செல்லும் என ஆட்டோ சாரதி கூறியபோதுநீண்ட நேரமாகுதே என்று   சலித்துக்கொண்டார்.
 ஆட்டோவில் ஏறிய பரமரின் சிந்தனைகள் பின்னோக்கிப் பறந்தன.
அந்நிய நாட்டில் சென்று வாழ்ந்தாலும் சொந்த நாட்டில் தான் வாழ்ந்த விதத்தை மறக்க அவரால் முடியவில்லை.தனது இளம் வயதில் தானும் நண்பர்களுடன்  கீரிமலைக்   கேணியில் நீந்தி விளையாடிய நினைவுகளும்,அவர்களுடன் இணைந்து உருவாக்கிய கணபதி விளையாட்டுக் கழகமும் அக் காலத்தில் அக் கழகம் அடைந்த வளர்ச்சியும்,வருடாந்த விளையாட்டுப் போட்டிகளும்,கலை விழாக்களும் அவர் கண் முன்னே அடிக்கடி வந்து போயின. அந்த நினைவுகள்,அவை கொடுத்த கனவுகள் தானும் தான் நண்பர்களும் விளையாடித் திரிந்த பூமியில்,ஒரு நீச்சல் தடாகமும்,கலையரங்கும்  உருவாகவேனும் என ஆசை கொண்டார்.
  அவருடைய ஆசையினை கனடா வாழ் தனது நண்பர்களுடன் பகிர்ந்தபோது அவர்களின் ஆதரவும் கிடைக்க,பலரும் இணைந்து அத்திட்டத்திற்கான பணத்தினைச் சேர்த்து ஊரிலுள்ள பெரியோர்களையும் உற்சாகப்படுத்தி,அவர்கள் மூலம்,ஒரு நீச்சல் தடாகத்தையும், கலையரங்கையும் கட்டி முடித்துவிட்டனர்.
பரமர் அடையாளப்படுத்தி கூறிய ஆச்சுப்பிடி ஐயனார் கோவிலடி வந்ததும் ஆட்டோ சாரதி வண்டியை நிறுத்தி "ஐயா உங்கட இடம் வந்திட்டுது"என்று குரல் கொடுத்தபோதே  சுய நினைவுக்கு திரும்பினார் பரமர்.

 "அட தம்பி.வலு கெதியாய் வந்திட்டாய்" என்று சாரதியை பாராட்டியவாறே,வண்டிக் கூலி கொடுத்தவர்  சுற்று முற்றும் பார்த்தவாறே,தனது நண்பர் கனகர் வீடு நோக்கிச் சென்றார்.

ஊர் நன்றாக மாறியிருந்தாலும்,முன்னர் அகலமானவைகள் எனக் கருதப்பட்ட வீதிகளெல்லாம் மிகவும் குறுகியதாகவே தென்பட்டன.பரமர் வாழ்ந்த  சிறிய வீடு இருந்த இடத்தில்  ஒரு மாளிகை போன்ற வீடும் சுற்றுமதிலும்,இரும்புப் படலையிலிருந்து வீடு வரை பளிங்குக் கற்களும் பதிக்கப்படிருந்தன. சந்தேகமடைந்த பரமரும் படலையில் தயக்கத்துடன் நிற்க,வீட்டு வாசலில் கட்டியிருந்த அல்சேஷன் நாயின் சத்தம் கேட்டு
வந்த கனகரும் பரமரை அடையாளம் கண்டுகொண்டார்.
ஆனந்தத்துடன் வரவேற்று உபசரித்த கனகருடன் இருந்து பேச பொறுமை இல்லாத  பரமர்,கனகரையும் அழைத்துக்கொண்டு கணபதி விளையாட்டுக் கழகத்தினை பார்வையிட புறப்பட்டுக்கொண்டார்.
   இப்படி ஒரு இடி தலையில் விழும் என்று பரமர் எண்ணிப்பார்க்கவில்லை. கலைஅரங்கத்தையும் நீச்சல்தடாகத்தையும் கண்டுகளிக்க ஓடோடி வந்த பரமர் அங்கு நேரில் கண்ட காட்சிகள் தலையைச் சுற்றியது.அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார்.
"ஆடுகளும் மாடுகளும் படுத்து உறங்கவா இக்கலை அரங்கத்தை கட்டினோம்.குப்பைத் தொட்டியாய் உபயோக்கிக்கவா இந்த நீச்சல் தடாகத்தைக் கட்டினோம் நாங்கள் கண்ட கனவெல்லாம் கானல் நீராய்ப்   போச்சே!."தலையிலை கை வைத்துப் புலம்பினார் பரமர்.அருகில் உட்கார்ந்த கனகர் பேசத்தொடங்கினார்.
"கொஞ்சம் பொறும் பரமர்.நான் சொல்லுறன் எண்டு குறை நினையாதை.
அந்தக்காலத்தில நாங்கள் பெடியளாய் இருந்த வேளையிலை டிவி,வீடியோ,செல்போன்,ஐபோட்,கம்ப்யூட்டர்,இண்டநெட்,என்று எதுவும் இருக்கவில்லை.எங்கட பொழுது போக்குக்காகக்  கூடினோம்.கழகம் அமைத்தோம்.கூத்து ஆடினோம். இப்ப காலம் எவ்வளவோ மாறிவிட்டுது பரமர்.இப்பத்தே பிள்ளைகள் இதுகளிலை மினக்கெட மாட்டினம். அத்தனை பொழுதுபோக்கும் அவர்கள் கைக்குள்ளேயே இருக்கிறது. ஏன்?அங்கை பார். உங்களால எழுப்பப்பட்ட வாசிகசாலை படிக்கிற பிள்ளைகளால பயன்படுத்தப்படுகுதுதானே! அதுவும் கணணி வசதிகள் இருப்பதினாலேயே வாசிகசாலை உபயோகமாய் இருக்குது. என்று சமாதானப் படுத்திக்கொண்டார் கனகர்.
காலத்தை உணராது எடுக்கும்  முயற்சிகள் பயனற்றவை என்பதனை பரமர் அன்றே உணர்ந்தார்.
                            --செ-மனுவேந்தன்

நம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா????


நம்பிக்கை 1 :    வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல்.
          இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்டிருந்தால் இன்னும் குகை மனிதர்களாகவே வாழ வேண்டியதுதான். பலாக்காய் என்ன அதைவிட பெரிய நிலாக்காயக்காக ஆசைபடுங்கள் என்றுதான் நான் சொல்வேன். எதற்கோ ஆசைப்பட்டீர்கள். கிட்டவில்லைஎன்று கிடைத்ததை எட்டிப்பிடித்தீர்கள். இதுவா வெற்றி? உங்கள் கனவை நிறைவேற்ற முழு முயற்சி செய்து அதில் தோற்றால்கூட பரவாயில்லை. ஆனால் விரும்பாத ஒன்றை பெற்று அதை வெற்றி என்று கொண்டாட உங்களால் எப்படி முடிகிறது?.
              எனக்குத்தெரியும்  நான் தோற்றுபோனவனைத்தான் இறக்க போகிறேன். ஏனென்றால் என் கனவான "உலகமே அன்பின் வடிவாய் மாற வேண்டும்" என்பது அவ்வளவு பெரிய  கனவு. இதை என் வாழ் நாளுக்குள் ஓரளவே சாதிக்க முடியும். அதற்காக என் கனவை சுருக்கி கொள்வது எப்படி சாத்தியம். நான் தோற்றாலும் அதை நிறைவேற்ற என் பின்னால் ஒரு ஆயிரம் பேரையாவது விட்டு செல்கின்றேனே அதுவல்லவா வெற்றி !. என்றாவது ஒரு நாள் என் கனவு நிறைவேறுமே. எனவே நாம் செய்யும் ஒவ்வொரு சிறு முயற்சியும் நமது வெற்றி மண்டபத்துக்கு நாம் வைக்கும் ஒவ்வொரு மணல் துகள் ஆகும்.
                         நம்பிக்கை 2 :  ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ?
          மிக மிக தவறான நம்பிக்கை இது. வயது ஏற ஏற பாறைபோல் இருகிபோகும் மனிதர்களுக்கு வேண்டுமானால் இது சரி. ஒரு மலர்போல உயிர்ப்புடன் இருப்பவர்களுக்கு இது பொருந்தாது. உங்கள் கருத்துகள், தீர்மானங்கள், உணர்வுகளை உறைய விட்டு விடுவதனால், உங்களுக்கான வாய்ப்புகளை நீங்களே தாள் இட்டு கொள்கிறீர்கள்.
               மொழி, இனம், உடல் மற்றும் சமூகநிலை என்று குறிப்பிட்ட விஷயத்தோடு உங்களை அடையாளபடுத்திகொண்டு இறுகி விடாமல், திரவ நிலையிலே உங்களை வைத்திடுங்கள். அர்த்தமற்ற நம்பிக்கைகளால் உங்களை நிரப்பி கொள்ளாமல் புதியனவற்றுக்கு இடம் கொடுங்கள். அப்புறம் வயது என்ன செய்துவிடும்?.
              வாழ்க்கையின் உள்ளார்ந்த அர்த்தத்தை கவனித்து வாழ துவங்கினால் ஐந்தைவிட ஐம்பதில் அல்லவா சிறப்பாக வாழ முடியும்!. ஏனென்றால் 49 வருட அனுபவம் சேர்ந்து உங்களுக்கு கைகொடுக்குமே!.


நம்பிக்கை 3 : தகுதிக்கு மீறி ஆசைப்படாதே ........ .
                        தகுதி பெற வேண்டும் என்பதே ஓர் ஆசைதானே !!!!!!!.
             ஆசைபடுங்கள். அதைநோக்கி புத்திசாலிதனத்துடன் தீவிரமாக உங்கள் முழு திறமையை காட்டி செயல்படுங்கள். அதற்க்கு நீங்கள் தகுதியானவர் ஆகிவிடுவீர்கள். இயற்கை அப்படித்தான் உங்களை புரிந்து வைத்திருகிறது.
             ஒன்றை ஆசைப்பட்டீர்கள். அது கிடைப்பது கடினம்மாக தோன்றியது. உடனே வேறொன்றின் மீது ஆசையை இடம் பெயர்த்தீர்கள். அதிலும் சில பிரச்னைகள் வந்தபோது வேறோன்றின்மீது ஆசையை மாற்றிக்கொண்டீர்கள். இப்படியே செய்துகொண்டு போனால், ஆசைப்பட்டதை அடைவதற்கான தகுதி ஒருபோதும் கைவராது. தீவிரமாக செயல்படாதவர்கள்தாம் இப்படி செய்கிறார்கள்.
            நீங்கள் ஆசைபடாதபோது மதிப்புமிக்க ஒன்று கிடைத்தாலும் அதன் மதிப்பு உங்களுக்கு புரியாது. அதை நீங்கள் ரசிக்க மாட்டீர்கள். அதன் ஆழத்தை உணர மாட்டீர்கள். அதன் அழகை ரசிக்க மாட்டீர்கள். அதனால் நியாமான எல்லாவற்றுக்கும் ஆசைப்படுங்கள். அதை நோக்கி தீவிரமாக முழு மூச்சுடன் செயல்படுங்கள். அத்தகுதி உங்களுக்கு தானாக வரும்.

              நம்பிக்கை 4 : ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்  .
          மனிதனின் ஒரு செயலை வைத்தே அவனைப்பற்றி தீர்மானித்துவிடலாம் என்ற அடிப்படையில் இது சொல்லப்பட்டு இருக்குமானால் இது அரைகுறை அறிவை வெளிப்படுத்தும் ஒரு தவறான வாக்கியம் ஆகும் .உயிரற்ற விசயங்களுக்கு பயன்படுத்தும் அதே அளவுகோல்களை வைத்து மனிதனையும் எடைபோட்டால், உண்மையிலிருந்து வெகுதூரம் விலகிப்போய் விடுவீர்கள்.
              ஒவ்வொரு நபரிடமும் குறைகளும் இருக்கும் நிறைகளும் இருக்கும். நீங்கள் கண்ட ஒரு குறையை மட்டும் மனதில் வைத்து அவரை எடைபோடுவது முட்டாள்தனம். இந்த   கருத்தை மனதில் கொண்டிருந்தால், ஒவ்வொரு மனிதனிடமும் குறைகள்தான் பிரதானமாக தெரியும். உங்களைசுற்றி குறையுள்ள மனிதரே வாழ்வதாக நினைத்துவிட்டால், உங்கள் நிம்மதி போய்விடும்.

            ஒரு சமயத்தில் கடவுளைப்போல் தோன்றுபவன், வேறொரு சந்தர்ப்பத்தில் அரக்கனைவிட மோசமானவனாக தோன்றுவான். சூழ்நிலைகளுக்கு உட்பட்டு கவனமின்றி செய்யும் சில செயல்கள் ஒரு மனிதனின் குணத்தை பூரணமாக தெரியப்படுத்தாது.குறைகளோ நிறைகளோ... அதை வெளிக்கொணர்வது நாம்தான்.
                           நம்பிக்கை 5 :  பொறுத்தவர் பூமி ஆள்வார் ........
இதில் சொல்லப்பட்டுள்ள பொறுமை எதையும் செய்யாமல் வாளாவிருக்கும் பொறுமை அல்ல. செயல்களில் தெளிவும் விடாமுயற்சியும் இருந்தாலும், இலக்கை எட்டும்வரை  நம்பிக்கையையும் செயல்களையும் கைவிடாத பொறுமை.
             பூமியையே ஆளவேண்டும் என்பதுபோல், உங்கள் கனவும் லட்சியமும் மிக பெரியதாக இருந்தால், அது ஒரு இரவில் முடிந்து விடாது. அது முடியும்வரை பொறுமை காக்க வேண்டும் என்பதற்கே இது சொல்லப்பட்டதாக இருக்கும்.

நம்பிக்கை 6 :  விரும்பியது கிடைக்காதபோது கிடைத்ததை விரும்பு  .
                      இது முற்றிலும் தோல்வி மனப்பான்மையிலே சொல்லப்பட்டதாகும்.  என்னைகேட்டால் இப்போது கிடைத்திருப்பதை விரும்பு. அதே நேரத்தில் உனது சொந்த விருப்பத்தை விட்டுகொடுக்காதே என்றுதான் நான் சொல்வேன்.
                  விரும்பியது கிடைப்பதற்கு அந்த ஆசை மட்டும் போதுமானது அல்ல. அதைப்பெற திறமையும் விடாமுயற்சியும் அதிகம் வேண்டும். கிடைத்ததை விரும்பாமல் வெறுக்கும்போது அந்த அதிருப்தி உங்கள் திறனை மழுங்கடித்துவிடும்.
பலவிதங்களில் உங்களை முடக்கிபோடும். விரும்புவதை நோக்கி முழுமையாக செயல்பட விடாமல் தடுக்கும்.
              எனவே எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அதை விரும்ப கற்றுக் கொள்ளுங்கள். சொந்த வீடா? அந்த நிறைவை மகிழ்ச்சியோடு அனுபவியுங்கள். வாடகைவீடா?  வேண்டாமென்றால் உதறிவிட்டு போகலாம் என்ற விடுதலை உணர்வை ரசியுங்கள். நீங்கள் ஆனந்தமாக இருக்கும்போதுதான் உங்கள் திறன் உச்சத்தில் இருக்கும். அதை அடைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகும். கிடைத்ததை மட்டும் விரும்பிக்கொண்டு இருந்தால் வேண்டியது எப்போதும் கிடைக்காது.
                                                                    -மதி அங்கிள்(chennai)