ஒளிர்வு-(38)- மார்கழி,2013

உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம்

மகளிர் பக்கம்: என்றும் இளமையுடன் தோற்றமளிக்க...

25 பிளஸ்சில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும்  அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை. ‘50 பிளஸ் நெருங்குபவர்கள்தான் வயதானவர்கள்என்கிற பார்வை உங்களுக்கு  இருக்கலாம். ஆனால், முதுமைத்தோற்றம் என்பது உங்கள் சருமத்தையும் கூந்தலையும் 25 வயதிலிருந்தே விரட்ட ஆரம்பிக்கிற உண்மை தெரியுமா?
25முதுமைத் தோற்றத்துக்கு எதிரான உங்கள் போராட்டமும் முயற்சிகளும், 25 வயதிலிருந்தே தொடங்கப்பட வேண்டியது அவசியம். இளமையைத் தக்க வைத்துக்கொள்ள ஆசைப்படுவோருக்கு அவரது ஆலோசனைகள் நிச்சயம்  உதவும். ‘‘நமது சருமம், 20 வயதில் இருப்பது மாதிரி 40 வயதிலோ, 40ல் இருப்பது மாதிரி 60 வயதிலோ இருப்பதில்லை. 20களின்
தொடக்கத்தில்சருமத்தின் செல்கள், மீள்தன்மையையும் ஈரப்பதத்தையும் இழக்கத் தொடங்கும்.
சருமத்தில் அது வரை இருந்த மிருதுத்தன்மை மாறி, ஒருவித வறட்சியையும் மெலிதான கோடுகளையும் பார்க்கலாம். சருமத்தின் அழகுக்கும்  பூரிப்புக்கும் காரணமான எலாஸ்டின் மற்றும் கொலாஜன் என்கிற இரண்டு புரதங்களின் சுரப்பும் குறையத் தொடங்கும். அதற்கு மிக முக்கிய
காரணம்  வெயில். கூடிய வரையில் வெயிலில் செல்வதைத்
தவிர்ப்பதும், தினம் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிப்பதும், 30 வயதில் அடியெடுத்து  வைப்போருக்குப் பாதுகாப்பளிக்கும்.
30ல் அடியெடுத்து வைப்போருக்கு, கண்களுக்கடியில் மெலிதான கோடுகள் தென்பட ஆரம்பிக்கும். சருமம் வறண்டு போவது, சருமத்தில் ஆங்காங்கே  சிவப்பு மற்றும் பிரவுன் நிறப் புள்ளிகள் தோன்றுவது, கண்களுக்கடியில் வீக்கம், வாயைச் சுற்றியும் நெற்றியிலும் கோடுகள் போன்றவை தோன்றலாம்கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகிய புரதங்களின் சுரப்பு இன்னும் அதிகமாகக் குறையத் தொடங்குவதன் விளைவுகளே இவை.
40 வயதுக்குப் பிறகு சருமத்தில் உண்டாகிற பிரச்னைகளை சரி செய்து, பழைய தோற்றத்துக்குத் திரும்பச் செய்வது சற்றே சிரமமானதுதான்அதனால்தான், 40 பிளஸ்ஸில் இருப்பவர்கள் எடை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, அவர்களது முகத்தசைகள் தொய்வடைந்துமுதுமைத்தோற்றம் தெரிகிறது. எலாஸ்டின், கொலாஜன் சுரப்பு இல்லாததால், சருமம் உறுதி இழந்து, தொய்வடைகிறது. சுருக்கங்களும் கோடுகளும்  இன்னும் சற்று ஆழமாகத் தெரியும்.
50 வயதில் சருமச் சுருக்கங்களும் கோடுகளும்
வெளிப்படையாகவே தெரியத் தொடங்கும். மெனோபாஸ் காலகட்டம் என்பதால், பெண்களின் உடலில்  நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் சரும அழகைப் பெரிதாகப் பாதிக்கும். இவை எல்லாம் அந்தந்த வயதுக்குரிய இயற்கையான மாற்றங்கள்இளமையில் இருந்தே சருமப் பராமரிப்பில் அக்கறை காட்ட ஆரம்பிக்கிறவர்களுக்கு, இந்த மாற்றங்கள் தள்ளிப் போவதுடன், நீண்ட காலம் இளமைத்  தோற்றம் தக்க வைக்கப்படுகிறது. அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
தினமும் சருமத்துக்கு கிளென்சர், டோனர், மாயிச்சரைசர் உபயோகிக்க வேண்டும். வயதாக ஆக கொழுப்பு உணவு தவிர்த்து, முழு தானிய உணவுகள்மீன், காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்க்க வேண்டும். உப்பையும் சர்க்கரையையும் பாதியாகக் குறைப்பது நல்லது. சோயா உணவுகளை அதிகம்  சேர்த்துக் கொள்ளலாம்.

மெனோபாஸில் இருப்போருக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சோயா உதவும்.வால்நட்  மற்றும் பிரேசில் நட், பாதாம் ஆகியவை இளமைக்கு உதவக்கூடியவை. தக்காளி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, அவகேடோ, ஸ்ட்ராபெர்ரி  ஆகிய பழங்களும், பசலைக்கீரை, பீட்ரூட், கிரீன் டீ, டார்க் சாக்லெட் போன்றவையும் இளமைத் தோற்றத்துக்கான உணவுகள்.

தீண்டத்தகாத உணவா சோறு?

அவர் ஒரு நீரிழிவு நோயாளி. நீண்ட நாட்களாக மருந்து சாப்பிடுகிறார். ஆனால் இரத்தத்தில் சீனியின் அளவு கட்டுப்படுவதில்லை. முட்டாள்களின் கோபம் போல இவரது குருதிச் சீனியின் நிலை திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். "சாப்பாட்டில் அவதானம் எடுங்கள்" என்றேன். "அப்ப சோறை நிப்பாட்டட்டோ" என்றார். நான் மனத்திற்குள் சிரித்துக் கொண்டு "சோற்றை நிப்பாட்டிப் போட்டு வேறை என்ன சாப்பிடுவியள்" என அப்பாவியாகக் கேட்டேன். "வேறை என்ன? இடியப்பம், புட்டு, அப்பம், தோசை இதுகளைத்தான்" என்றாள்.

உரல் போல் தொடைகளும், ஊதிய பலூன் போல முகமும் கொண்ட குண்டு மனிதர் இன்னொருவர். அவருக்கும் எடையைக் குறைப்பதற்காக உணவைக் கட்டுப்படுத்தும்படி ஆலோசனை கூறியபோது முன்னவரோடு கதைத்து வைத்தவர் போல "சரி நான் சோத்தை கைவிடுகிறன்" என்றார். "சோறு சாப்பிட வேண்டாம் என நான் சொல்லவில்லையே!" என நான் ஆரம்பிக்கவும், என்ன இந்த டொக்டர் மடைத்தனமாகக் கதைக்கிறார் என மனத்திற்குள் எண்ணியவர் போல ஏளனமும் ஆச்சரியமும் கலந்த பார்வையை என்மீது வீசினார்.

காச்சல்கார பிள்ளையோடு வந்த அம்மா நான் உணவு பற்றி எதுவும் சொல்லாத போதும் தானாகவே "இவனுக்கு சோத்தை நிப்பாட்டிப் போட்டு பாண் வாட்டிக் கொடுக்கிறேன்" என்றாள்.

ஏன் இவர்களுக்கெல்லாம் சோறு தீண்டத்தகாத உணவாக இருக்கிறது? அப்படியும் சொல்ல முடியாது. இவர்கள் யாவரும் வழமையாக சோறுதான் உண்ணுகிறார்கள். ஆனால் நோயுற்ற நேரத்திற்கு மட்டும் சோறு ஏற்புடையதல்ல என எண்ணுகிறார்கள். இவை தவறான
கருத்துத்தான்.

ஆசிய நாட்டவர்கள் அனைவரினதும் பிரதான உணவான அரிசியில் மாப்பொருள் மாத்திரமின்றி புரதம், விற்றமின்கள், கனியங்கள், நார்ப்பொருள் யாவுமே உண்டு. அதிலும் முக்கியமாக தீட்டாத அரிசியிலும், புழுங்கல் (நாட்டு) அரிசியிலும் இவை அதிக செறிவில்
உள்ளது. உண்மையில் தாவர உணவு மட்டும் உண்பவர்களின் தினசரி புரதத் தேவையின் பெரும் பகுதியை அரிசியே நிறைவு செய்கிறது என்பது பலரும் உணராத உண்மையாகும்.

இடியப்பம், புட்டு, அப்பம், தோசை போன்ற பலகாரங்கள் யாவற்றினதும் முக்கிய கூறாக அரிசிதான் இருக்கிறது. ஆனால் பருக்கைகளாக அல்லாது மாவாக இருக்கிறது. எனவே முதலாமவர் கூறியது போல சோற்றை முற்றாக நிறுத்தி இடியப்பம், புட்டு, அப்பம், தோசை
போன்றவற்றைச் சாப்பிடுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. இரண்டிலும் உள்ளது மாப்பொருள்தான்(Starch). எனவே எதைச் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல.

இரண்டாமவர் கூறியதுபோல சோற்றை கைவிடுவதிலும் எந்தவிதத்திலும் விஞ்ஞான பூர்வமான காரணமும் கிடையாது. அவர் இவற்றில் எதைச் சாப்பிடுகிறார் என்பதை விட எவ்வளவு சாப்பிடுகிறார் என்பதே முக்கியமானது. மாப் பொருள் உணவுகளான சோறு, இடியப்பம், புட்டு, அப்பம் போன்றவற்றின் அளவைக் குறைத்து, குறைத்த உணவின் அளவுற்கு ஏற்ப நார்ப் பொருள் அதிகமுள்ள கீரை இலை வகைகள், மரக்கறி, பருப்பு, பயறு, சோயா, பழவகைகள் ஆகியவற்றை அதிகரித்துச் சாப்பிட வேண்டும். இதனால் உண்டவை மெதுவாக சமிபாடடையும், விரைவில் மீண்டும் பசிக்காது. எடையும் அதிகரிக்காது.

காய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடுசெய்யப் போதியளவு போஷாக்குள்ள உணவு உட்கொள்வது அவசியமாகும். சோறு போஷாக்குள்ளது என்பதால் அதையே உட்கொள்ளலாம். விருப்பமில்லையேல் பாற் கஞ்சியாகக் குடிக்கலாம்.
அல்லது சக்திப் பெறுமானமுள்ள வேறு உணவுகளை உட்கொள்ள வேண்டும். பலரும் காய்ச்சல் என்றவுடன் சோடா வேண்டும் என்பார்கள். சோடா என்று நாம் வழமையாகக் கூறும் மென்பானங்களில் இனிப்புத் தவிர்ந்த போஷாக்கு எவையும் கிடையாது என்பதால் அவை விரும்பத்தக்கவை அல்ல.

எனவே நீங்கள் எந்நேரத்திலும், எந்த நோயின் போதும் சோறு சாப்பிடலாம். சோறு சாப்பிடுவதால் எந்த நோயும் அதிகரிக்கப் போவதில்லை. அது தீண்டத்தகாத உணவல்ல. ஆயினும் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். சோறு ஆனாலும்
அளவோடு உண்ணுங்கள்.
- நன்றி,டாக்டர் எம்.கே. முருகானந்தன் -