சைவ சமய புனித நூல் என்ன?
இது பொதுவாகச் சைவ சமயத்தவர்களிடம் பிற சமயத்தவர்கள் கேட்கும் கேள்வியாகும். அப்போது இவர்கள் பதில் சொல்ல முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பில் வெட்கித் தலை குனிவார்கள்.

 

சிலர் 'பகவத் கீதை' என்ற வைணவ சமயத்தினரின் நூல் ஒன்றைச் சொல்லித் தப்பித்துக்கொள்வார்கள். ஆனால், இவர்கள் ஒரு காலமும் விஷ்ணுவை வணங்கியே இருக்க மாடடார்கள். சைவ சமயம் இந்து சமயத்தின் ஓர் அங்கமாகும். சில வேதங்களும், ஆகமங்களும் ஒன்றாக இருந்தாலும் பகவத் கீதைக்கும், சைவர்களின் முழு முதற் கடவுள் சிவபெருமானுக்கும் ஒருவித சம்பந்தமும் இல்லை. இந்த நூல் சிவபெருமானால் அருளப்பட்டதும் இல்லை. ஆகவே, பகவத் கீதை சைவ புனித நூல் அல்ல.

 

கிறீஸ்தவர்களுக்கு பைபிளும், முஸ்லிம்களுக்கு குரானும் என்று, அவரவர் கடவுள்களால் அருளப்பட்ட  புனிதமான நூல்கள் இருக்கின்றன என்று அவர்கள் சொல்கிறார்களே, நமக்கென்று என்று சொல்ல என்ன நூல் இருக்கிறது என்று ஏக்கமடைவார்கள்.

 

ஏன் இந்த ஏக்கம்? ஏன் இந்த தலை குனிவு? அவர்களிடம் அதுவும், இவர்களிடம் இதுவும் இருக்கின்றது என்ற ஒரே ஒரு  காரணத்தினால் எங்களிடமும் இன்னொன்று இருக்கவேண்டும் என்று என்ன இறைவன் இட்ட  சட்டமா?

 

ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், அன்றய நாகரிகமற்ற சமுதாயச் சூழலில், பொது அறிவு, விஞ்ஞான விளக்கம் அற்ற மக்களுக்கு, அவர்களின் அறியாமை மற்றும் அப்பாவித் தனங்களை இலக்குவைத்து, அப்போது உண்மை என்று நினைத்தவற்றையும், ஏற்றுக் கொள்ளக்கூடியவை என்று கருதப்பட்டவற்றையும்  உள்ளடக்கிய சில செய்திகளை உருவாக்கி,  அப்போதய 'புத்திசாலிகள்', 'அறிவாளிகள்'  என்று நினைத்துக்கொண்டிருந்த ஒரு சிலரால், பல வருட காலங்களாக எழுதப்பட்டு வந்துள்ள சில நூல்களைக் கையில் வைத்துக்கொண்டு, ஒவ்வொருவரும் இது கடவுள் வந்தார், தந்தார், எழுதினார், அருளினார் என்று கூறிக்கொண்டு, இதுதான் உலகின் மனித வாழ்க்கைக்கான சவால் விடமுடியாத, ஒரே ஒரு உண்மையான  வழிகாட்டி நூல் என்று கூறிக் காலம் காலமாகப் போதனை செய்து மக்களை மூளைச் சலவை செய்து வருகிறார்கள்.

 

அத்தோடு கூறிக்கொள்வார்கள், இது இறைவன் வாக்கு, எந்தக் காலத்திலும், எந்த மனிதனாலும் மாற்றப்படக்கூடாது; மாற்றினால் அது தெய்வ குற்றமாகும் என்று!

 

ஆனால், அதே சமயங்களில் இருந்து பிரிந்த இன்னொரு சமய இறை தூதன், வேறொரு 'புனித' நூலை உருவாக்கி இதுதான் கடவுளின் ஒரே ஒரு நூல் என்று புதுக் கதை ஒன்றையும் கிளப்பி விட, இப்படியாக உலகத்தில் பல நூறு 'கடவுளின் நூல்கள்' இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

 

காலம் மாற மாற, மனிதன் அறிவு வளர வளர, விவரம் தெரிய வர, விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வளர்ச்சியடைய, அப்பொழுது அவர்கள் புரிந்த மனித அடிமைகள் துஷ்பிரயோகம் உடைந்து ஒழிய, அடிப்படை உரிமைகள் பற்றிய தெளிவு பிறக்க, உயிர்களின் பரிணாம வளர்ச்சி, கிரகங்களின் தோற்றம், சுழற்சி அமைப்பு, சுய மரியாதை என்று எல்லா உண்மைகளும் மனிதனுக்குப் புரிய வரும்போது, அந்தக் கடவுள்மார்களின் நூல்களில்  கூறப்பட்டுள்ள செய்திகள் பலவும்  தற்போதைய அறியப்படும் உண்மைகளில் இருந்து மிக்கவும் விலகி இருப்பதாகவே தெரிய வருகிறது. இப்படி விலகி இருந்தாலும், இவற்றுடன் ஒத்துப்போக இயலாமல், தொடர்ந்து பொய்யான விளக்கங்களைக் கூறிக்கொண்டு தெய்வ பயத்தை ஊட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

 

சைவ சமயத்தில் மற்றைய சமயங்களைப் போல இது மட்டும்தான் கடவுள், இப்படி மட்டும்தான், இந்த நேரம்தான், இந்த நாளில்தான், இந்தனை தரம்தான், இந்த திசையில்தான், இந்த முறையில்தான், இப்படித்தான் வணங்கவேண்டும் என்று கட்டுப்படுத்தவில்லை. சைவத்தில், கேள்வியே கேட்க முடியாத ஆளுமை செலுத்தும் உயர் ஆணையாளர் இல்லை. தீர்க்க தரிசிகள் இல்லை. எதிர்வு கூறல்கள் இல்லை. இதுதான் மாற்றவே கூடாத இறைவன் அளித்த - காலத்தோடு ஒத்துப் போகாதவைகளாக இருந்தாலும் மாற்றப்படாத  - தெய்வீகப் புனித நூல் என்று  திணித்து வைக்கப்படவில்லை. இங்கு ஒற்றைக் கடவுளை வணங்கலாம், உங்கள் தொழிலுக்கு என்ற பல வடிவக் கடவுள்களையும் வணங்கலாம். ஒன்றும் வேண்டாமா? வெறுமையையும் வணங்கலாம். இயற்கையையும் வணங்கலாம் அல்லது மனத்திற்குப் பிடித்த எந்த உயிரினத்தையும் வணங்கலாம்.

 

சைவ சமயம், பெண்களை ஆண்களின் அடிமைகள் என்று ஒதுக்கி வைக்கவில்லை. வணக்கத்து தகுதி இல்லாதவர்கள் என்று விலத்தி வைக்கவில்லை. உண்மையில் பரம சிவனின் சக்தியே பெண் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். மேலும் பல மனித தேவைகளுக்கும் பெண் தெய்வங்கள்தான் பொறுப்பு!

 

எல்லாம்  விருப்பமில்லை என்றால், உங்கள் சொந்த ஆன்மாவையே வணங்கலாம்; அல்லது அஞ்ஞான, நாத்திக, அல்லது மனிதநேய வாதிகளாக இருந்துவிட்டும் போகலாம்; அப்படியானவர்களை ஒருவரும் சுட்டுக் கொல்லப் போவது இல்லை. உங்களுக்கு முழு, முழுச்  சுதந்திரம் உள்ளது.

 

வேற்று மத கடவுள்களையும் சேர்த்து வணங்கினாலும், மக்கள் எல்லோரும் சுற்றிவர நின்று கல்லால் எறிந்து கொல்லப் போவதும் இல்லை.

 

ஒவ்வொரு காலத்திற்கும் ஒத்துப் போகுமாறு வழிபாட்டு வழிமுறைகளை அப்பப்போ அவதரிக்கும் நாயன்மார்கள், மெய்ஞ்ஞானிகள்,ரிஷிமார்கள் முதல் பின்னர் வந்த சங்கரர், வள்ளலார், காஞ்சி மகாப்  பெரியவர்  என்றும், தற்போது இருக்கும் ஆன்மீக குருமார்கள், சுவாமிகள், பாபாக்கள் என்று வந்து திருத்தி அமைத்துக் கொண்டே இருப்பார்கள். உங்கள் வசதிபோல விரும்பியவற்றை எடுத்து பின்பற்றலாம்; விருப்பம் இல்லாதவற்றை ஒதுக்கியும் விடலாம். ஒன்றுமே செய்யாமல் விட்டாலும் மத வாதிகள் உங்களை சிறைக்கூடத்திற்குள்  தள்ளிவிடப் போவதும் இல்லை.

 

பல நூல்களில் பலவிதமான வழிபாட்டு முறைகள் விவரமாகத் தெரியப்பட்டிருக்கின்றன. உங்கள் வசதியின்படி உங்கள் ஆத்ம திருப்திக்கேற்ப பின்பற்றலாம். அப்படிப் பின்பற்றாதவர்கள் எல்லோரையும் கடவுள் நரகத்துக்கு அனுப்புவார் என்று இல்லை. எல்லோரும் அவரின் பிள்ளைகள்தான். அவரவர் செய்யும் நல்ல, தீய செயல்களையே அவர் கருத்தில் கொள்வார். ஓர் உலோபியான தெய்வ பக்தனிலும் பார்க்க தருமியான நாஸ்திகனை  பெரிதும் விரும்புவார்.

 

உங்கள் மன நிலைக்கு ஏற்ப, உங்களுக்கு விருப்பமான துறையில் உள்ள சைவ நூல்களை படிக்கலாம். அக்காலப் படைப்புகளையும் படிக்கலாம், இக்கால சிந்தனைகளையும் பின்பற்றலாம். படிக்காமல் விட்டாலும், நீங்கள்  ஒரு மதத் துரோகி என்று உங்கள் கால், கைகளை கால்களை ஒருவரும் வெட்டிப் போடப் போவது இல்லை.

 

எண்ணற்ற பல நூல்களுள், உதாரணமாக:

 

சைவ சித்தாந்த தத்துவ நூல்கள்:

 

பதி, பசு, பாசம் என்பன என்றும் நிலைத்து நிற்பன. முதலும், முடிவும் இல்லாதவை. இவற்றை எவரும் படைத்ததில்லை. என்றும் நிலையானவை. இவை பற்றி அறிய வேண்டும் என்றால் சைவ சித்தாந்தக் கோட்ப்பாடுகளைப் பற்றிய நூல்களை படியுங்கள்.

 

வேதங்கள்:

 

தியானம், மந்திரங்கள், சடங்கு முறைகள், ரிஷிகளின் உரைகள் பற்றி வேண்டும் என்றால் வேதங்களை படியுங்கள்.

 

ஆகமங்கள்:

 

மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் என்பதுபற்றி அறிய ஆகம நூல்கள் இருக்கின்றன.

 

திருமுறை நூல்கள்:

 

சைவ சமயக் கொள்கைகள், பக்தி மார்க்கம், பண்ணோடு கூடிய பாடல்கள் என்பனவற்றை அறிந்து கொள்ள தேவாரம், திருவாசகம், திருத்தொண்டர், சேக்கிழார் புராணம் எனப் பல நூல்கள் உள்ளன.

 

தல புராணங்கள்:

 

வெவ்வேறு புண்ணிய தளங்கள் பற்றி அறிய ஆயிரக்கணக்கான தல புராணங்களை படியுங்கள்.

 

மனு தர்ம  சாஸ்திரம்:

 

சாதிப் பகுப்பு பற்றிய பகுதியைப் புறந்தள்ளிவிட்டு - தள்ளினால் தோல் உரிக்கப்பட்டுக் கொல்லப்படமாட்டீர்கள்- பிரபஞ்ச தோற்றம் உயிர்கள் தோற்றம்,  கல்வி, பக்தி, ஒழுக்கம், தவம், அரச நிர்வாக கடமைகள், சட்டம், சொத்து, ஒழுங்கு, அறம், குற்றம், தண்டனை, நல்லது, கெட்டது  என்று எல்லா நுணுக்கங்களையும் அறிய மனு தர்ம சாஸ்திரம் படியுங்கள்.

 

திருக்குறள்:

அறம், பொருள், இன்பம் பற்றி அறிந்து அதன்படி வாழ  திருக்குறள் படியுங்கள்.

 

நன்னெறி:

 

நல்ல நீதிக்கு கருத்துக்களுக்கு அவ்வை நூல்கள் உள்ளன.

 

அத்தோடு,

 

உங்கள் விருப்பப்படி, உங்கள் ரசனைப்படி வணங்க இறைவன் பல தெய்வ வடிவங்களில் இருக்கின்றார்.

 

குடும்பஸ்தனாய் வேணுமா? சிவன்-சக்தியை வணங்குங்கள்.

இரண்டு மனைவிக்காரனா? முருகன், தெய்வானை, வள்ளியை வணங்குங்கள்.

திருமணமே வேண்டாமா? விநாயகர் இருக்கவே இருக்கிறார்!

ஒருபாலினத்தவரா? அய்யப்பன் உள்ளான்! ( உயரிய கட்டிடத்தில் இருந்து ஒருவரும் உங்களைத் தள்ளிவிட மாடடார்கள்)

கல்வியா? சரஸ்வதி!

செல்வமா? இலக்சுமி!

வீரமா? துர்க்கை!

ஊர்க்காவலா? ஐயனார் இருக்கிறார்.

இருண்ட ஆட்சிமுறையை மாற்ற, வைரவர் இருக்கிறார்.

என்று இன்னும் பல, பல தெய்வங்கள் உள்ளனர்.

 

ஆதலால், சைவ சமயத்தின் புனித நூல் எது என்று ஒருவரும் தேடி அலையாதீர்கள். அப்படி என்று 'ஒரு' நூல் இல்லை. பல உள்ளன.

 

சைவ வழிபாட்டு முறைகள் காலத்திற்கு ஏற்ப மாற்றக்கூடிய நெகிழ்ச்சி உடையன என்பதுதான் உண்மை.

 

உங்களுக்குத் பிடித்தமான எல்லா நூல்களுமே புனிதமானவைதான்!

 

காலத்துடன் ஒத்து, சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொண்டு இருப்பதால்தான் சைவ சமயம் 4000-5000 வருடங்களாக புற மதங்களின் தாக்கங்களையும் மீறி இன்னும் வாழ்ந்துகொண்டும், வளர்ந்துகொண்டும் இருக்கிறது.

 

(பி.கு.: இது சைவ சித்தாந்த விளக்க கட்டுரை அல்ல. சாதாரண மனிதன் ஒருவனின் கண்ணோட்டம் ஆகும்)

👉எண்ணம்:செ.சந்திரகாசன்