ஒளிர்வு-(20) ஆடி த்திங்கள்-2012


தளத்தில்:சிந்தனை ஒளி,//பறுவதம்பாட்டி//காண்டம்-நாடி ஜோதிடம்/ எரியும் மனிதர்கள் //குழந்தையும்கல்வியும்//ஆன்மீகம்//எங்கேஆதிமனிதன்?//கனடாவில்.......//ஆராய்ச்சியாளரின்செய்திகள்,//சுறுசுறுப்பாகவேலைசெய்ய//தொழில்நுட்பம்...//உணவின்புதினம்,//, கணினி உலகம்//பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை//சிரிக்க...சிரிக்க....சிரிப்பு வருது!,//சினிமா.
தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com
சிந்தனை ஒளி:
* பாசம் அளவுக்கு மிஞ்சி, மனைவியை சந்தேகிக்க   முன் 
  மனைவி உன்னைச் சந்தேகித்தால்
  எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்!                    
    * நெருங்கி இருந்த நண்பன் விலகிப் போனாலும் ஆபத்து!
   விலகி இருந்த எதிரி நெருங்கி வந்தாலும் ஆபத்து!
    * தான் பெற்ற செல்வங்களுக்கு தாமாகவே உணர்ந்து
   தாய்ப்பாலை ஊட்டுவதுதே உண்மையான தாய்மை!
    * சொல்லிய வார்த்தைக்கு நீ அடிமை!
   சொல்லாத வார்த்தை உனக்கு அடிமை!
    * நொந்தவன் வாழ்க்கையை படிப்பினையாக எடுத்துக் கொள்!
   உயர்ந்தவன் வாழ்க்கையை குறிக்கோளாக எடுத்துக் கொள்!
     * மனச்சாட்சிக்கு மேலானதொரு சாட்சி இல்லை!
  அதை மதிக்காவிட்டால் உனக்கு ஆட்சி இல்லை!

எரியும் மனிதர்கள்


உலகத்தில் எங்கோ ஓர் மூலையில் ஆங்காங்கே நடக்கும் சில அதிபயங்கரமான விஷயங்கள், செய்திகளாக இருந்தால் கூட, நமக்கு விந்தையாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஒரு விந்தையான செய்திதான் இது.

திடீர் திடீரென்று மனிதர்கள் உட்கார்ந்த மாத்திரத்திலேயே இறந்துபோவது, இதுதான் அந்த ஆச்சர்ய செய்தி. செய்தியைச் சொன்னதுமே புருவங்கள் விரிகிறது அல்லவா? அதெப்படி மனிதன் தானாக எரிந்துபோக முடியும்? என்ற நம்முள் எழும் சாதாரண கேள்விகள்தான் விஞ்ஞானிகளுக்கும்... இது போன்ற சம்பவங்கள் கடந்த 300 ஆண்டுகளில் 200 சம்பவங்கள் நடந்துள்ளது. 300 வருஷத்திற்கு இவ்வளவுதானே என்று எளிதாக ஒதுக்கிவிடும் விஷயம் அல்ல இது. காட்டில் இரண்டு மூங்கில் மரங்கள், ஒன்றுக்கொன்று உரசிக் கொள்வதன் மூலம், காட்டுத்தீ ஏற்படுகிறது என்பதை நாம் படித்திருப்போம். அதேபோல காய்ந்த சருகுகள், உச்சபட்ச வெய்யிலில் தீப்பற்றி எரிவதையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், சற்றும் நம்ப முடியவே முடியாதபடி மனிதன் எப்படி தானாக எரிய முடியும்?

1673 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு நீதிமன்றம் ஒரு விசித்திரமான வழக்கை சந்தித்தது. கணவன் மனைவிக்கு இடையே சண்டை. இதில் மனைவி தீப்பிடித்து இறந்துவிட்டாள். கொன்றது கணவர் என்பதுதான் வழக்கு. நீண்டநாள் நடந்த பரபரப்பான இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கும் இறுதி நாளும் வந்தது. இந்த வழக்கில், கணவர் குற்றமற்றவர்; அவர், மனைவியை தீ வைத்து கொலை செய்யவில்லை. அவர் மனைவி தானாகவே தீப்பற்றி எரிந்துபோனார் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு எல்லாருக்கும் திகைப்பாக இருந்தது. மருத்துவ பரிசோதனைக் குழுவும் நீதிபதியின் தீர்ப்பை ஆமோதித்திருந்தது. இப்படி மனிதர்கள் தானாக தீப்பற்றி எரிந்துபோவதை ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பஷன் என்று மருத்துவ உலகம் பெயரிட்டது.

இதேபோல ஒரு சம்பவம் 1951ஆம் ஆண்டு ஜூலை இரண்டாம் தேதி வாக்கில் நடந்தது. இம்முறையும் ஒரு பெண்மணிதான். அவர் பெயர் மேரி ரீசர் 67 வயதான இந்த மூதாட்டியை பார்க்க அவர்களது உறவினர்கள் வீட்டிற்கு வந்தபோது, வீட்டிற்குள் ஏதோ எரிந்துபோன நெடி வீசியது. பதற்றத்துடன் கதவைத் திறந்து பார்த்திருக்கிறார்கள். அங்கு,மேரி ரீசர் நாற்காலியில் அமர்ந்தபடி தீப்பிடித்து இறந்துகிடந்தார். இதைப் பார்த்த உறவினர்களுக்கு அதிர்ச்சி. பிரேத பரிசோதனை, தடயவியல் சோதனை இப்படி எல்லா பரிசோதனைக்குப் பிறகு மருத்துவ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த மருத்துவ அறிக்கையில் மேரி ரீசர் தானாக எரிந்துபோயுள்ளார். அவர் உடலில் 2500 டிகிரி வெப்பம் தாக்கப்பட்டதால் உடல் கருகி இறந்துள்ளார் என்ற தகவலை மருத்துவர்கள் வெளியிட்டனர்.

இதேபோல 1938ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் ஒரு இரவு விடுதியில் மேபல் ஆண்ட்ரூஸ் என்ற இளம்பெண் தன் ஆண் நண்பருடன் நடனமாடிக்கொண்டிருந்தபோது, திடீரென்று, அந்தப் பெண்மணியின் பின்புறம், மார்புப் பகுதி, தோள்பட்டை என்று உடலின் அங்கங்கள் திடீரென்று தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அதைச் சற்றும் எதிர்பாராத அவரது நண்பர் அவளை விட்டு விலகி நின்று அதிர்ச்சியாய் பார்த்திருக்கிறார். ஆனால், அவளின் மேல் படர்ந்த தீ, அறையில் எந்தப் பகுதியையும் பாதிக்கவில்லை. உடனடியாக மேபல் மீது எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றியிருக்கிறார்கள். இந்த விபத்து குறித்து மேபல் கூறும்போது, எனக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அன்றும் அப்படித்தான் மது அருந்திவிட்டு என் நண்பருடன் நடனமாடிக்கொண்டிருந்தேன். திடீரென்று இதுவரை நான் உடலில் உணரமுடியாத வெப்பம் என்னுள் இருந்து புறப்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் என் உடல் பாகங்கள் ஒவ்வொன்றும் பற்றி எரிய ஆரம்பித்தது. நீல நிற ஜூவாலையுடன் அந்த நெருப்பு என்னைப் பற்றிக்கொண்டது. இது எதனால் என்று என்னால் உணர முடியவில்லை என்று இன்னும் அதிர்ச்சி விலகாமல் கூறுகிறார்.

இந்த மாதிரி சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இம்மாதிரி செய்தியை எல்லாரும் ஆச்சர்யமாக படித்தார்களே தவிர இதனுள் மறைந்துகிடந்த விபரீதத்தை யாரும் உணரவில்லை. முதன்முதலில் ஸ்பாண்டேனியஸ் ஹுயூமன் கம்பஷன் என்ற விபத்து குறித்த தொகுப்பை, 1763ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோனஸ் டூபாண்ட் என்ற அறிஞர் வெளியிட்டார்.

இந்தக் கட்டுரையின் தாக்கம் மக்களிடையே பரவலாக இருந்தது. இதைத் தொடர்ந்து 1800ஆம் ஆண்டு, சார்லஸ் டிக்கன் என்பவர் ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பஷனை மையக் கருவாகக் கொண்டு பிளீக் ஹவுஸ் என்னும் நாவலை எழுதினார். இந்த நாவல் வாசகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தக் கதையில் நாயகி தானே தீப்பிடித்து இறந்துபோவது போல் கதை சித்தரிக்கப்பட்டிருக்கும். அவள் இறந்த காரணத்தையும் கதையாசிரியர் சொல்லியிருப்பார். அதில் மதுவில் உள்ள ஆல்கஹாலின் அளவு அதிகரிக்கும்போது, உடல் இம்மாதிரி தானாக தீப்பற்றி எரிந்துவிடும் என்ற காரணத்தை சொல்லியிருப்பார். இந்தக் காரணம் கதைக்காக சொல்லப்பட்ட காரணமாக இருந்தாலும், இதிலும் உண்மை இருப்பதாக மருத்துவ உலகம் இறுதியில் உறுதி செய்தது.

இதுவரை உலகம் முழுவதும் ஸ்பாண்டேனியஸ் ஹியூமன் கம்பஷன் மூலம் எரிந்துபோனவர்களில் 80 சதவீதத்தினர் பெண்கள். இவர்களில் பெரும்பாலனவர்கள் மிக அதிகமான உடல் எடையும், அதிக அளவு மது அருந்துபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் எரிந்துகிடந்த உடல் அருகில் மஞ்சள் நிற எண்ணெய் போன்ற திரவம் கசிந்திருக்கிறது. இறந்தவர்களில் பெரும்பாலனவர்களுக்கு மார்புப் பகுதி, இடுப்பு மற்றும் அடிவயிறு பகுதிகள் அடையாளம் காண முடியாத அளவுக்கு முற்றிலும் எரிந்துபோயிருக்கிறது. ஆல்கஹாலை வினைப்படுத்தும்போது அது ஹைட்ரஜனாகவும், பற்றி எரியும் மீத்தேன் அல்லது ஈத்தேன் போன்று ஒரு எரிவாயுவையும் வெளிப்படுத்தும் தன்மைக் கொண்டது.

இவர்களில் பெரும்பாலனவர்கள் அருந்திய கட்டுக்கடங்காத ஆல்கஹால்கள் ஒரு கட்டத்தில் ஹைட்ரஜனாகவும், பற்றி எரியும் எரிவாயுவாகவும் உற்பத்தியாகி, இது முற்றிலும் அதிக தசை கொண்ட உடல் பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும். உடலில் அளவிற்கு அதிகமான வெப்பமோ அல்லது ஏதோ ஒரு வகையில் லேசான மின்தூண்டலில் உடல் உட்படும்போது, இந்த எரிவாயு பற்றி எரிய ஆரம்பிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தங்கள், ஆய்வறிக்கையை வெளியிட்டனர். நடந்து முடிந்த சம்பவங்கள் அனைத்தும் ஏதோ அமானுஷ்யங்கள் கிடையாது. தானாக மனிதன் எரிவது ஆச்சர்யமூட்டும் செய்திதான் என்றாலும், மது உடலை அழிக்கும் என்ற போதனையையும் இந்தக் கட்டுரை உணர்த்தாமல் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மைதானே!

குழந்தையும் கல்வியும்உங்களைப்போல ஒருவர் உலகில் ஒருவர் கூட இருக்கமுடியாது.
Sadhguru-Jaggi-Vasudevகுழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் தங்களுக்குத் தாங்களே அழுத்தத்தினை வரவழைத்துக்கொள்கிறார்கள்.இந்த அழுத்தம் எதனால் என்றால்,நீங்கள் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த வெவ்வேறு உயிர்களை ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்.உங்கள் குழந்தையும் தனித்தன்மை வாய்ந்தது.தனித்தன்மை வாய்ந்த அக்குழந்தையினை ஒப்பிட்டுப் பேசுவது உங்கள் தவறான கண்ணோட்டமே!
உங்கள் குழந்தையை அவரின் அறிவு வளர்ச்சியை கருத்தில் கொண்டா பாடசாலைக்கு அனுப்புகிறீர்கள்?அவர்கள் படித்து முடித்து பெரும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று கருதுவது துரதிஷ்டமனதாகும்.
அறிவுக்கான தாகம் குழந்தைக்கு தூண்டி விடப்பட்டால் அவன் கற்பதை யாராலும் தடுத்து விட முடியாது.ஆனால் அவ் ஆர்வத்தை துண்டாமல் நீங்கள் அதனை அடக்குகிறீர்கள்.ஏனெனில் உங்களைப் பொறுத்தவரையில் பணமும்,சமுக அந்தஸ்த்தும் நோக்கம்.அதனை அடைவதற்காக நீங்கள் கொடுக்கும் நிர்ப்பந்தங்கள் பிள்ளைகளை சோக நிலைக்குத்தள்ளிவிடுகின்றன.
உங்கள் குழந்தை எப்படியாவது எல்லாப்பாடங்களிலும் 100 புள்ளிகள் எடுக்கவேண்டும் என்பதே உங்கள் அவா.அவர்கள் கல்வியிலோ,அறிவு வளர்ச்சியிலோ உங்களுக்கு அக்கறை இல்லை.பிள்ளை உச்சாணியில் அமரவேண்டும் என்பதே உங்கள் நோக்கம்.ஆனால் எல்லோரும் எக்காலத்திலும் உச்சத்தில் இருந்துவிட முடியாது.எனவே இந்த நோய்த்தன்மை மாறவேண்டும்.     
பல்கலைக் கழக சான்றிதழ்கள் உங்கள் புள்ளிகளால் கிடைக்கலாம்.
அப்புள்ளிகள் எல்லோருக்குமே வாழ்க்கையில் வெற்றிபெற உதவிடாது.கல்வியில் கற்கவேண்டியவை இரண்டு.முதலாவது ஒருமனிதன் சம்பாதிப்பதுக்கு தயார் செய்வது எப்படி?இரண்டாவது இவ்வுலகில் வழ்வதுக்கு தன்னை தயார் செய்வது எப்படி?என்பன.நாம் குழந்தையை இந்த நவீன உலகில் வாழ்வதற்கு ஏற்ப தயார் செய்ய வேண்டும்.அதே நேரத்தில் புதுமை என்கிற பெயரில் நடக்கும் முட்டாள் தனத்திலும் அவன் சிக்கி விடப்படாது.
எந்தவித கருத்துக்களும் திணிக்கப்படாமல் இருந்தால் ஒரு குழந்தை தனக்குத் தேவையான கல்வியை தானே தானே தெரிவு செய்யும்போது.அக்குழந்தை தனது நிலையினை உள்நோக்கிப் பார்கின்றபோது அதாவது தாமாகவே சிந்திகின்றபோது அவனுக்குள் நிகழும் அனுபவம் வாழ்க்கைகல்வியின்  ஆரம்பநிலை.சுய புத்திசாலித்தனத்துடன் வாழ ஆரம்பித்தாலே ஆனந்தமாய் மாறுவது இயல்பாய் மாறுவது அவனுக்குள் நிகழும்.ஆனந்தமாய் மாறுவதுதான் இறுதி இலக்கு இல்லையா?
--சற்குரு வாசுதேவ்.

ஆன்மீகம்……………..வழிபாடு


படம். சரஸ்வதி சபதம் - வருடம் 1966
தெய்வம் இருப்பது எங்கே

தெய்வம் இருப்பது எங்கே?
அது இங்கே, வேறெங்கே?
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சம்
நிறைந்த துண்டோ அங்கே!(தெய்வம்)

பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம்
பொய்யில் வளர்ந்த காடு!
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம்
இறைவன் திகழும் வீடு!(தெய்வம்)

ஆடை அணிகலன் ஆடம்பரங்கள்
ஆண்டவன் விரும்புவதில்லை
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்
ஆலய வழிபாடில்லை!

இசையில் கலையில் கவியில் மழலை
மொழியில் இறைவன் உண்டு
இவைதான் தெய்வம் என்பதை அறிந்தால்
ஏற்கும் உனது தொண்டு!(தெய்வம்)

நன்றி நிறைந்தவர் எங்கே தெய்வம் அங்கே
நன்மை புரிந்தவர் எங்கே தெய்வம் அங்கே
பழமை நிறைந்தவர் எங்கே தெய்வம் அங்கே
பாசம் நிறைந்தவர் எங்கே தெய்வம் அங்கே(தெய்வம்) "
………………….கவியரசு கண்ணதாசன்

எங்கே ஆதிமனிதன்?


இயற்கை தந்த கொடையில் ஆயிரம் ஆயிரம் விடைதெரியாத மர்மங்கள் ஒழிந்துகொண்டுதான் இருக்கின்றன. அது என்ன என்ற ஆராய்ச்சியில்தான், ஆராய்ச்சியாளர்களும் பகுத்தறிவாளர்களும் ஈடுபட்டுவருகின்றனர். மர்மங்களும், அமானுஷ்யங்களும் இயற்கையில் மட்டுமல்ல, இயற்கையால் படைக்கப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும் இருக்கிறது. அந்த வகையில் மனிதனும் ஒரு தேடலுக்கான கருதான். அவனும் அமானுஷ்யம் சார்ந்த ஒரு கேள்வியின் மையம்தான்.

நாம் வழிவழியாய் கேட்டுவந்த கதையின் கருவையும், கண்ட செய்திகளையும் வைத்துத்தான் இந்தக் கட்டுரையில் மனிதனைப்பற்றி ஆராயவிருக்கிறோம். சொல்லும் விஷயங்கள் அனைத்தும் கட்டுக்கதை அல்ல. வரலாறும் ஆராய்ச்சியும், புராணங்களும் தந்த செய்திகள்தான்.

தினப்படியான செய்தித்தாள்தான். வழக்கம்போல அரசியல், கொலை, கொள்ளை, கற்பனை, கற்பழிப்பு செய்திகளுக்கு ஊடே ஒரு கணம் நம் மனதில் இனம்புரியாத ஆச்சர்யத்தையும், சொல்லமுடியாத கேள்வியுமாய் தாங்கி வந்தது படத்துடன் வந்த அந்த செய்தி.

அது 2001 ஆம் ஆண்டு. அரபு நாட்டில் ஒரு மூலையில் மிகப்பெரிய மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாய் செய்தி. மனித எலும்புக்கூடு அருகே இன்றைய மனிதர்கள். 50லிருந்து 60 தற்கால மனிதர்களைச் சேர்த்தால் கிடைக்கும் மனித எடையில் இருந்தது, அந்த ஒரு மனிதனின் எலும்புக்கூடு. அந்தப் படத்தைப் பார்ப்பதற்கே திகைப்பாய் இருந்தது. இது உண்மையா...? கிராபிக்ஸா...? புரியவில்லை. ஆனால், மனதை மட்டும் பிசைந்தது ஆயிரம் ஆயிரம் கேள்விகள்.

அதேபோல 2004ஆம் ஆண்டு, இந்தியாவில் பாலைவனப்பகுதியில் கிட்டத்தட்ட 13 மீட்டர் உயரத்தில் அதேபோல ஒரு மனித எலும்புக்கூடு. செய்தித்தாள் ஆரம்பித்து இணையதளம் முழுவதும் இந்தச் செய்தி காட்டுத்தீயாய் பரவியது. ஏற்கனவே கேள்விப்பட்ட செய்தி. அப்படியானால், இது ஓரளவு உண்மையாய் இருக்கலாமா என்று திகைப்பை ஏற்படுத்தியது. இவ்வளவு பெரிய உடல்வாகில் மனிதன் பூமியில் வாழ்ந்திருக்க முடியுமா? அப்படி வாழ்ந்திருந்தால், அவன் வாழ்வாதாரம் எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை விரிந்துகொண்டே போக, இதெல்லாம் சும்மா கிராபிக்ஸ். கப்சா... பேப்பர் விக்கிறதுக்காக பண்ற டிரிக் என்ற பேச்சு மறுபக்கம். நாள்கள் ஓட ஓட அந்தச் செய்தியையும் காற்றோடு கலந்துபோய்விட்டது
.
இவ்வளவு உயரத்தில், அசுர தோற்றத்தில் மனிதன் ஏன் வாழ்ந்திருக்கக்கூடாது? சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் நம்பும் நமக்கு, சாஸ்திரங்களிலும், புராணங்களில் கூறப்பட்ட கதாபாத்திரங்கள் ஏன் உண்மையாகக் இருக்கக்கூடாது...?

இலங்கை நாட்டில் கண்டியில் உளள அருங்காட்சியகத்தில் புத்தரின் பல், பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பல்லின் அளவை வைத்துப் பார்க்கும்போது, புத்தரின் உயரத்தை கணக்கிட்டு சொல்ல முடியாத அளவிற்கு உயரமானவரா? என்ற கேள்வி நம்முன் எழும். அதுமட்டுமல்லாமல் மாநில தலைநகரங்களில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் போர்த் தளவாடங்களைப் பார்க்கும்போது, இவ்வளவு பெரிய வாள், இவ்வளவு எடைகொண்ட கவச உடைகளை அணிந்துகொண்டு எப்படி மனிதர்கள் போரிட்டிருப்பார்கள்? இவ்வளவு எடையை தாங்கும் சக்தி அவர்களுக்கு இருந்தால், அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்ற கற்பனையும் நம் மனதில் எழாமல் இல்லை.

வேதத்தில் ஆதாம் ஏவாள் காலத்தில் தோன்றிய இனம் நெஃபிலிம். இந்த இனத்தில் உள்ள மனிதர்கள் மிக மிக உயரமானவர்களாக இருந்ததாக விவிலியம் கூறுகிறது. அதற்குப் பின் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இயற்கை மாற்றத்தினால், அத்தகைய இனம் கூண்டோடு அழிந்துபோய்விட்டது என்று ஆராய்ச்சி சொல்கிறது. அதற்குப் பின் இஸ்ரேல் நகரத்தில் கோலியாத் போன்ற மிக உ<யரம் கொண்ட மனிதன் சக மனிதர்களை அடித்துக்கொன்று துன்புறுத்திக்கொண்டே இருப்பான். அந்த அரக்க மனிதனை அதே நகரத்தில் வசித்து வரும் ஆடு மேய்க்கும் தாவீது என்ற சிறுவன் கவன் மூலம் அடித்துக்கொல்வதாய் கதை இருக்கும். இந்தக் கதை உண்மை என்பதை, பிரான்ஸ் நாட்டில் 13ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட ஒரு ஓவியம் பரைசாற்றுகிறது.

இந்துப் புராணங்களில் உள்ள கதையைப் படிக்கும்போது தேவர்களை அசுரர்கள் அடித்து துன்புறுத்துவதாய் படித்திருப்போம். அசுரர்களும் மிக மிக உயரம் கொண்டவர்களாகத்தான் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதேபோல இஸ்லாமியத்தில், முகமது நபியும் மிக மிக உயரம் கொண்டவராகத்தான் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதேபோலத்தான்,

ரோமானிய இனம், கிரேக்கம், பல்கேரியன், நார்ஸிய இனத்தவர்களின் மதப் புராணங்களில் தங்களின் கடவுள் மிக உயரம் கொண்டவராகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்.
நிஃப்லிம் இன மனிதர்கள் கோலியாத்தின் உயரத்தைவிட நான்கு மடங்காக இருந்திருக்கிறார்கள் என்றால், கோலியாத்தின் காலத்தில் நிஃப்லிம் இனத்தை விட உயரம் குறைந்துபோயிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். இன்றைக்கு இருக்கும் மனிதனின் சராரசரி உயரம் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு எப்படி இருக்கும்...?

புராணங்களில் கூறப்பட்ட கதை மாந்தர்களும், கடவுளர்களும் மிக உயரமான மனிதர்களாக இருந்திருப்பார்களேயானால், அன்றைய வாழ்க்கை நிலையும் சமுதாயமும் எப்படி இருந்திருக்கும். அத்தகைய மனிதர்கள் எப்படி அழிந்துபோனார்கள். தற்போது கூட கோடியில் ஒன்று, உலகத்தில் ஏதோ ஒரு சில இடங்களில் 7.3 அடி உயர அதிசய மனிதர், 7.5 அடி உயர மனிதர் என்று நாம் படிக்கும் செய்திகள் கூட நம் மூதாதையர்களின் ஜீனின் தொட்டக்குறை விட்டக் குறைதானோ?

கதை, கற்பனை என்று நாம் நம்பிக்கொண்டிருந்த சில விஷயங்கள் நம் கண் முன் ஆதாரமாய் மண்ணைப் பிளந்து வந்துகொண்டிருக்க, பல்வேறு கேள்விகள் நம் எண்ணங்களிலும் கற்பனைகளிலும் புதிது புதிதாய் முளைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், விடைகள் மட்டும் அமானுஷயமாய் நம்மை மிரட்டிக்கொண்டிருக்கிறது.

கனடாவில்.......புதுவரவாளர்கள் மற்றும் கனடாவுக்கான வருகையாளர்கள் ஆகியோருக்கு தனியார் ஆரோக்கிய காப்புறுதியை நான் எங்கே வாங்க முடியும்?
கனடாவில் வாழ்வோருக்கு அடிப்படையான ஆரோக்கிய பராமரிப்பினை அரசாங்கம் இங்கு வழங்குகிறது. சம்பந்தப்பட்ட தெரிவுத் தகைமைத் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்வார்களாயின் இது வழங்கப்படுகிறது. ஒன்ராறியோவில் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒன்ராறியோ ஆரோக்கிய காப்புறுதித் திட்டம் (Ontario Health Insurance Plan / OHIP) அனேக ஆரோக்கிய பராமரிப்பு சேவைகளுக்கான பணத்தைக் கொடுக்கிறது. வழக்கமாக நீங்கள் ஒன்ராறியோவில் வதிவாளராக மாறி மூன்று மாதங்களின் பின்பாகவே ஓஹிப் (OHIP) திட்டத்தின் காப்பு (coverage) நடைமுறைக்கு வருகிறது.
பொதுவாக கனடாவுக்கான வருகையாளர்களின் (visitors to Canada) தேவைக்காகவே காப்பு உங்களுக்குத் தேவைப்படுகிறது. தனியார் ஆரோக்கிய காப்புறுதித் திட்டங்களை நீங்கள் தேடிப் பரிசீலிக்கும் பொழுது, சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திடம் ஓஹிப் திட்டக் காப்பு இல்லாத மனிதர்களுக்கான காப்புறுதித் திட்டங்கள் இருக்கின்றனவா என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
தனியார் காப்புறுதித் திட்டத்தின் கீழ் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட எல்லா விதச் செலவுகளுக்கும் காப்பு வழங்கப்படுவது இல்லை. உதாரணமாக, பிரயாணத்துக்கான காப்புறுதி திட்டத்தில் மகப்பேறு சம்பந்தமான செலவுகளுக்குக் காப்பு வழங்கப்படமாட்டாது. எனவே உங்களுடைய தேவைகளுக்குப் பொருந்துகின்ற ஒரு காப்புறுதித் திட்டத்தை தெரிவு செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சில வர்த்தக நிறுவனங்களில், ஒன்ராறியோவுக்கு நீங்கள் வந்த பின்னர் குறிப்பிட்ட எண்ணிக்கையான நாட்களின் உள்ளாக காப்புறுதியை வாங்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கலாம்.
தனியார் காப்புறுதி இஷ்டத் தெரிவுகள்
பின்வரும் தனியார் காப்புறுதி வர்த்தக நிறுவனங்கள் தனிப்பட்ட ஆரோக்கிய காப்புறுதியை புதிய குடிவரவாளர்கள் மற்றும் ஓஹிப் காப்புறுதித் திட்டம் இல்லாதவர்கள் ஆகியோருக்கு வழங்குகின்றன. கனடாவுக்கான வருகையாளர்களுக்கு என்று இந்நிறுவனங்கள் பிரயாணத்தை அடிப்படையாக கொண்ட காப்புறுதி திட்டங்களையும் விநியோகிக்கின்றன.
புளூ குறொஸ் (Blue Cross)
கட்டணம் இல்லாமல்:  1-866-732-2583
ஈரிஎப்எஸ் (ETFS):
கட்டணம் இல்லாமல்:  1-800-267-8834
ரொறொன்ரோ:  (416) 413-7674
ரிஐசி (TIC):
கட்டணம் இல்லாமல்:  1-800-267-8834
*இந்தப் பட்டியல் ஆயுள் மற்றும் ஆரோக்கிய கனேடிய காப்புறுதி சங்கத்திடம் / Canadian Life and Health Insurance Association (1) (CLHIA) இருந்து பெறப்பட்டது. தகவல் ரீதியான ஒரு சேவை என்ற வகையிலேயே நாம் இதனை வழங்குகிறோம். குறிப்பாக எந்த ஒரு வர்த்தக நிறுவனத்தையும் நாம் பரிந்துரைக்கவும் இல்லை, ஆதரித்துக் கூறவும் இல்லை.
வேறு காப்புறுதி நிறுவனங்களைப் பற்றி அறிவதற்கு மஞ்சள் பக்கங்கள் புத்தகத்தைப் பாருங்கள், அல்லது சங்கத்தின் இணையத்தளத்தில் தேடுங்கள், அல்லது அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் :
ஆங்கிலத்தில்:  1-800-268-8099
பிரெஞ்சு மொழியில்:  1-800-361-8070
காப்புறுதித் தரகு வேலையாளர்கள்
காப்புறுதித் தரகு வேலையாளர்கள் காப்புறுதி வர்த்தக நிறுவனங்களுக்கு பதிலாக உதவக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பல காப்புறுதி வர்த்தக நிறுவனங்களுக்கு பிரதிநிதியாக பணியாற்றுகின்றனர். உங்கள் தெரிவுகளை பற்றிய விபரங்களை அவர்கள் உங்களுக்கு கூறக்கூடியவர்களாக இருக்கிறார்கள். காப்புறுதி தரகு வேலையாளர்கள் குறிப்பாக தனியார் ஆரோக்கிய காப்புறுதித் திட்டங்கள் என்று ஈடுபடுவது இல்லை.
காப்புறுதித் தரகு வேலையாளர் ஒருவரைக் கண்டறிவதற்கு நீங்கள் ஒன்ராறியோவின் காப்புறுதித் தரகு வேலையாளர் சங்கம் / Insurance Brokers Association of Ontario வழங்கும் கணினி வழியான தரகு வேலையாளர் தேடுதல் கருவியை / online broker search tool (2) பயன் படுத்தலாம்: அல்லது மஞ்சள் பக்கங்கள் புத்தகத்தைப் பார்க்கலாம்.