ஒளிர்வு-(13) கார்த்திகை த்திங்கள்

சிந்தனை ஒளி:
·                ஒரு மனிதனைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள அவனிடம் அளவுக்கு அதிகமான பணத்தினைக் கொடுத்துப் பார்க்கத் தேவையில்லை.அப்பணத்தினை அவனுக்குக் காட்டினாலே போதுமானது.

·                ஒரு செயலில் குறைகள் கண்டு பிடிப்பது சுலபமானது.ஆனால் அச்செயலை குறையின்றிச் செய்து முடிப்பது கடினமானது.

·                எந்த ஒரு உறவும்,நாம் எதிர் பார்ப்பது போல் முழுமையாக நடந்து கொள்ள முடியாது.

·                நான் விரும்புகிறவன்,எனது எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்ப்பவன் முட்டாள்.

·                உண்மையாக நேசிப்பவன் பணத்திற்காக உறவுகளை உதறிவிட   மாட்டான்.

·                பிரச்சனைகள் உறவுக்குள் இருப்பது சகஜம்.அவை பிரிவுக்குக் காரணமாய் அமைவது சரியான தீர்வாகாது.

·                ஒருவரை நோக்கி தவறான வார்த்தைகளை சுலபமாகச் சிந்திவிடலாம்.ஆனால் அவற்றை திரும்பப் பொறுக்கி எடுத்து விட முடியாது.

·                உண்மையான நட்பு காதலாக மலர்ந்திடின்,இல்லறம் இனிமையாக இருக்க அது வித்திடும்.

·                காதலிப்போரில் பலர் தங்கள் காதல் உண்மையானது என்று எண்ணி ஏமாந்து,தங்கள் வாழ்வினை தொலைத்துக் கொள்கிறார்கள்.

·                நாடி வரும் உறவுகளை விட்டு ஓடி ஒளியாதே!ஓடி ஒளியும் உறவுகளை தேடி நாடிச் செல்லாதே!

·                கடவுளுக்கு உன்னால் எதனையும் கொடுத்து விட முடியாது.ஏனெனில் எல்லாமே அவனால் படைக்கப்பட்டது.

·                தமது பெருமைகளை மட்டும் வெளிப்படுத்தி பழகும் காதலர்கள்,கல்யாணத்தின் பின் சந்தோசமாய் வாழ அவர்களின் சிறுமைகள் இடமளிக்க மாட்டாது.

மனிதா...! மனிதா...!

ஏன் மனிதா... ஏன்..?
அன்பிலார்ந்த வாழ்க்கையில்
ஆணவத்திற்கு இடமேன்
ஆதிக்க மனப்பான்மை ஏன்..?
இன்பத்தை பங்கு வைக்குமிடத்தில்
ஈகோவிற்கு இடமேன்
இழிவான பேச்சுக்கள் ஏன்..?
உன் பேச்சை மட்டுமே
எல்லோரும் கேட்க நினைக்கும் நீ
மற்றவர் பேச்சை
கேட்க மறுப்பது ஏன்?
மற்றவர்க்குப் பிடித்ததை அவர்கள்
செய்ய நினைத்தால்
எதையும் செய்யாதே
என அடக்கி வைப்பது ஏன்..?
அவர்களை அடக்கிட நினைப்பது ஏன்..?
உன்னைப் போல மற்றவர்க்கும்
மனதுண்டு, வாக்குண்டு
என்பதை அறியாமல் போவதற்கு
அறியாத பிள்ளையா நீ..?
அகங்காரத்தை கைவிடு...
அன்பினைக் கையிலெடு...
அப்போதுதான் உணர்வுகள் சிலிர்க்கும்...
உன் உறவுகள் உன் கைபிடிக்கும்..
……………………………………………….மோகனன்

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா.?

அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்.எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன.நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது,பெட்ரோல் விரிவடையும். எனவே,வெப்பமான காலங்களில்  நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால்,அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது.எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை.பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள்.அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள்.அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும்.நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது.பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும்.இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே,ஆவியாதல் குறையும்.வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.

அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்.
       அட   !....சொல்லவேயில்லை.

சாரதி இல்லாமல் வருகிறது கார்!

பார்க்கிங் பகுதியில் எந்த இடம் காலியாக இருக்கிறது என தெரிந்துகொண்டு, தானே ஓடிச் சென்று நின்றுகொள்ளும் காரை ஜப்பானின் நிசான் நிறுவனம் வடிவமைத்துள்ளது. கார் தயாரிப்பில் 75 ஆண்டு பாரம்பரியம் கொண்ட நிறுவனம் ஜப்பானை சேர்ந்த நிசான் மோட்டார் கம்பெனி. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வாகனங்கள் தயாரிப்பில் தற்போது அதிக அக்கறை செலுத்தி வருகிறது.

சிறிதும் புகையை கக்காத மின்சார இன்ஜின்களை கார்களில் பயன்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் 8-வது எலக்ட்ரிக் இன்ஜின் காரை தயாரித்துள்ளது. ‘பிவோ-3’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த கார் 42-வது டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உலகின் முன்னணி நகரங்களில் பல இடங்களில் தானியங்கி பார்க்கிங் வளாகங்கள் உள்ளன. இவை முழுக்க முழுக்க எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் செயல்படுபவை.

பிவோ-3 காரில் ஜிபிஎஸ் வசதி உள்ளது. நம்மிடம் இருக்கும் ஸ்மார்ட் போன் மூலம் இதை இயக்க முடியும். தானியங்கி பார்க்கிங் வளாகத்துக்கு வந்த பிறகு, நாம் காரில் இருந்து இறங்கிவிடலாம். தனது ஜிபிஎஸ் வசதியை பயன்படுத்தி, எந்த இடம் காலியாக இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் கார், தானாக அந்த இடத்துக்கு சென்று நிற்கும். எந்த இடத்தில் நிற்கிறது என நமக்கு மெசேஜ் வரும். வேலை முடித்து திரும்பும்போதும், நம் இருப்பிடம் தேடி கார் வந்துவிடும். மிகவும் குறுகலான இடத்தில்யூ டர்ன் போடுவதற்கு ஏற்ப இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.