ஆண்களில் இறங்காத விதைகள்


ஆண்களின் விதை  விதைப்பையினுள் இருக்க வேண்டும்
இறங்காத விதை
குழந்தையானது தாயின் வயிற்றில் வளரும்போது விதைகள் அதனது வயிற்றுக்குள்ளேயே இருக்கும். பிறப்பதற்குச் சிலகாலம் முன்னராகவே விதைப்பையினுள் இறங்கும்.
பெரும்பாலான குழந்தைகள் பிறக்கும்போது விதைகள் ஏற்கனவே விதைப்பையினுள் இறங்கியிருக்கும்.
ஆயினும் சில குழந்தைகளில் அவ்வாறு இருப்பதில்லை. சில வேளைகளில் ஒன்று மட்டும் இறங்காது இருக்கலாம்.
ஒரு பக்கம் இறங்காத விதையின் படம்
anatomy_Undescended_Testicle

சிலரில் இரண்டுமே இறங்கத் தவறியிருக்கும். அவ்வாறு இருந்தாலும் பொதுவாக எந்தவித மருத்துவமும் இன்றி 9 மாதமளவில் தானாகவே இறங்கிவிடும்.

இவ்வாறு விதை இறங்காதிருப்பது பெரும்பாலும் காலத்திற்கு முந்திப் பிறக்கும் குழந்தைகளிலேயே அதிகம் இருக்கிறது. குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் என்பார்கள். அத்தகைய குழந்தைகளில் 30 சதவிகிதம் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம்.
ஆயினும் நிறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளில் 3-4  சதவிகிதமானவர்களையும் பாதிப்பதுண்டு.தானாகவே  அக்காலத்திற்குள் இறங்கவில்லை எனில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
இறங்கி ஏறும் விதை
சில குழந்தைகளில் விதை இறங்கியிருப்பது அவதானிக்கப்பட்டிருக்கும். ஆனால் பின் ஒரு தடவை சோதித்துப் பார்க்கும்போது அதைக் கண்டுபிடிக்க முடியாதிருக்கும்.
இது ஆபத்தற்றது. சிறிய விதைகள், தசைகளின் இறுக்கத்தால் மறைந்து பின்பு வெளிவரும் இதனை retractile testes என்பார்கள்.

இத்தகைய விதைகளுக்கு சிகிச்சை செய்ய வேண்டியதில்லை. பொதுவாகப் பருவமடையும் போது விதைகள் பருமனடையும். வெளியே வரும்.

இறங்காத விதையை, காலியான விதைப் பை, மாயமான விதைகள், எனத் தமிழில் சொல்வது போலவே ஆங்கிலத்தில் Cryptorchidism, Monorchism போன்ற நாமங்களைச் சூடிக் கொள்வதும் உண்டு.
எத்தகைய பாதிப்புகள்
விதையானது வளர்ச்சியடைவதற்கு உகந்த சூழல் தேவை. விதைப்பை அதற்கு ஏற்றதாகும். மாறாக அது வயிற்றினுள் இருந்தால் உடலின் வெப்பம் அதன் வளர்ச்சியைப் பாதிக்கும். சரியான காலத்தில் இறங்காவிட்டால் எதிர்காலத்தில் விந்தணு உற்பத்தியாவது பாதிப்புற்று அவன் மலட்டுத்தன்மையை எய்தலாம்.
இறங்காத விதை எதிர்காலத்தில் கட்டியாக வளர்வதற்கான சாத்தியங்கள் அதிகமாகும். புற்றுநொயாக வளரக் கூடும்.
விதை முறுக்கு testicular torsion என்பது அவசர சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய ஒரு நிலையாகும். இறங்காத விதையில் இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
இறங்காத விதை உள்ள சில பையன்களுக்கு ஹெர்ணியா ஏற்படுவதுண்டு.
மற்றவர்களைப் போல தனது பையில் பொருள் இல்லையே என வளரும் குழந்தையின் மனத்தில் கவலையை ஏற்படுத்துவதுடன் மற்றவர்கள் முன் தான் அவமானப்படுவதாகவும் உணரலாம்.
சிகிச்சை
குழந்தைக்கு 6 மாதமாகும்போதும் இறங்காவிட்டால் மருத்துவரைக் காணுங்கள். அவர் பரிசோதித்து தேவையான ஆலோசனைகளை வழங்குவார்.

ஒரு வயதாகும்போதும் இறங்காவிட்டால் சிறு சத்திரசிச்சை மூலம் அதனைச் சரி செய்வார்கள். அதாவது உள்ளே இருக்கும் விதையை விதைப்பையினுள் கொண்டு வந்து சேர்ப்பர்.
இது சிறு சத்திரசிகிச்சையே. குழந்தைக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது.
குழந்தை வளர்ந்த பின்னர் எதிர்காலத்தில் அதற்கு
1.மலட்டுத்தன்மை,
2.இறங்காத விதையில் பிற்காலத்தில் புற்றுநோய் உண்டாதல்
போன்ற பாரிய சிக்கல்களைத் தடுப்பதற்கு இது அவசியம் என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

விதையை இறக்குவதற்கான சத்திரசிகிச்சையின் போது, மிக அரிதாக (5%) அங்கு விதை காண்படாதிருப்பதுண்டு. இயற்கையாகவே விதை அத்தகையவருக்கு வளர்ச்சியடையாததே காரணமாகும். இதை vanished or absent testis என்பார்கள். இவர்களுக்கு எதிர்காலத்தில் குழந்தை கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

0 comments:

Post a Comment