புலர்ந்தும் புலராத வேளை…….

 


ஊமைக் கூதல் காற்று அந்த ஓலைக்குடிசைக் குள்ளும் பேதம் பாராமல் உள்ளிட்டது.

கால்களில் குளிர் சுள்ளென முள்ளாக குத்தியது. குளிர் தாங்க முடியாமல் பூரணம் ஆச்சி, போர்த்தியிருந்த போர்வைக்குள் கால்களை முடக்கி உள்வாங்க முயல, தலைமாட்டிலிருந்த போர்வை, கால்ப் பக்கம் நழுவியது. அதனால் புறடியில் குளிர் தாவியது. குளிரில் அனுங்கியபடி புரண்டு படுத்தாள். அதனால் சற்றுத் தூக்கம் கலைய, குடிசையின் மறு மூலையை, புகைந்த பார்வையால் துலாவினாள். கண்களில் பிசிர் பிடித்திருந்த பீழையால், பார்வை மேலும் மங்கலாகவே பனி மூட்டம் போல தெரிந்தது. சாம்பல் மேட்டில் சுருண்டு முடங்கிக் கிடக்கும் நாய் போல, சணல் சாக்குக் கோணிக்குள் சுருண்டு கிடந்த பேரன் குமரனை பார்த்து பெருமூச்செறிந்தாள்.

 

இன்றையப் பொழுதும் புலர்ந்திற்று.....

 

ஆனால் இன்றைக்கு, வயிறு கழுவ என்ன வழி என்று யோசித்த போது, ஆச்சிக்கு அந்த அதிகாலை வேளையிலும் கண்கள் கசிந்தன. வேளா வேளைக்கு சாப்பிட்டு,எண்ணை தேய்த்துக் குளித்து, மத மதப்பாய் வளரவேண்டிய விடலைப் பருவம் பேரனுடையது.

 

´செல் ´தாக்குதலில், இருந்த வீடு வாசலும் தரை மட்டமாகி, அதில் தாய்-தகப்பனுடன் மற்றும் சகோதரங்களும் காவு வாங்கப்பட்டனர். ஆச்சியும் குமரனும் தப்பிவிட்டனர்.

 

குமரனை இந்தனை வயது வரை எப்படியோ வளர்த்துவிட்டாள். கரை வலை மீன்களை வாங்கி, வீடு வீடாக விற்றும், முட்டைகளை வாங்கி சந்தையில் விற்றும், நெல்லுக்குத்தி அரிசி விற்றும் காலத்தை ஒருவாறு ஓட்டினாள். ஆச்சி ஒரு வாரத்துக்கும் தண்ணியையே குடித்து பசியைத் தாங்கிக் கொள்ளுவாள். ஆனால் பேரன் குமரன் அப்படியல்ல; பசியை கொஞ்சமும் தாங்கிக் கொள்ளமாட்டான். பசி எடுத்தால் வயிறு வலி எடுத்துவிடும். அவனுக்கு அடிக்கடி ஏற்பட்ட மலேரியா காச்சலினால், குடல் புண்ணாகிவிட்டது. ஏதாவது சாப்பிட்டேயாகவேண்டும். அதனால் அவனை ஆச்சி பட்டினி போடமாட்டாள்.

+++++++

" அடி..பாவிமகளே....! உனக்கே இது நல்லாப் பட்டுதா..? எங்களை விட்டிற்று, போக எப்பிடிடி உனக்கு மனம் வந்திச்சுது..? " நான்கு வீடுகள் தள்ளியிருந்து வந்த ஓலம்,

ஆச்சியின் காதுகளில் வந்து மோதியது. துடித்துப் பதைத்து வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

 

அதே வேகத்தில்,ஓலம் வந்த திசையை நோக்கி குடு குடுவென விரைந்தாள். அது முத்தம்மாவின் வீடு. தகப்பனில்லாத குடும்பம். நான்கு பெண்களுக்கு மூத்தவள் செண்பகம். அவளை பற்றித்தான் தாய் முத்தம்மா ஓலம் வைத்தாள்.

 

" எனக்கு நாலஞ்சு நாளா ஐமிச்சம். இயக்கப் பொடியன்கள் செக்கல் பட்ட நேரத்தில, வேலி இடுக்குக்குள்ளால அவளோட குசு குசுத்ததை நானே என்ர கண்ணால கண்ட நான். இவ்வளவு கெதியில போவாள் எண்டு ஆர் கண்டது...! " இது பக்கத்து வீட்டு

விசாலத்தின் வக்கணைப் பேச்சு.

" அவள் ..என்ன மானம் கெடுக்கவா ஓடிப் போயிற்றாள் ? இயக்கத்துக்குத்தானே போய் இருக்கிறாள். எண்டைக்காவது ஒரு நாள் பயிற்சி முடிஞ்சி வருவாள்தானே..! " இது எப்பவுமே வேதாந்தம் பேசும் வேலாயுதத்தார்.

 

" இப்படி ஏதாவது நடக்குமெண்டு தெரிஞ்சுதான், நான் என்ர மகனை காணியை வித்து வெளி நாட்டுக்கு ஏஜென்சி மூலம் அனுப்பிற்றன் " இது அறாவட்டி அமராவதி.

 

" போங்கடி...எல்லாரும் அங்கால..! அவரவர் சோலியைப் போய் பாருங்க..வந்திற்றாளுவள் வக்கணை கதைக்க..." என்று பூரணம் ஆச்சி குழுமியிருந்தவர்கள் மீது சீறிப்பாய்ந்தாள். ஆச்சிக்கு ஊரில் எல்லாருமே பீப்பயம். ஆச்சியிடம் எல்லாருமே நீதி,நியாயம் கேட்பார்கள். வயதுக்கேற்ப அவவிடம் பூரணத்துவம் உண்டென்பது ஊரவர் அனைவருக்கும் தெரியும்.

 

சுளீரென்ற வெயிலில் கரையும் பனித்துளி போல,குழுமியிருந்தோர் தத்தம் திசையில், ஆளாளுக்கு ஒரு நியாயத்தைச் சொல்லிக்கொண்டு கலைந்தனர்.

 

ஆச்சி முத்தம்மாவைத் தேற்ற பெரும் பாடுபட்டாள். "என்னடி மகள் செய்யிறது? அவன் இயக்க கணேசன் வந்தால் நான் கதைச்சிப் பார்க்கிறன். அவளை இயக்கத்தில சேர்க்காமல் திருப்பிக் கொண்டுவந்து விடச்சொல்லிக் கேட்டுப் பார்க்கிறன். அவன் என்ர சொல்லைக் கேட்பான். நீ அழாத மகள்."

 

முத்தம்மாவை தேற்றவேண்டும் என்பதுக்காக பூரணம் ஆச்சி சொன்னாளே தவிர, அவளுக்கே அந்த வார்த்தைகளில் கிஞ்சித்தும் நம்பிக்கையில்லை. இயக்கத்தின் கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் அவளுக்குத் தெரிந்ததே. இலகுவில் மீள்வதென்பது முடியாத காரியம்.

 

செண்பகத்தை நினைத்தபோது, பேரன் குமரனின் விடலை பருவம் சிந்தையில் நிழலாடியது. பெண் பிள்ளைகளே இயக்கத்துக்குப் போகும் போது, குமரனுக்கும் அந்தநிலை வரலாம். அவன் போனால் தன் நிலை.......??

 

அதைப்பற்றி நினைக்கவே தலை சுற்றுவது போலிருந்தது. ஆச்சி வீட்டுக்கு விரைந்தாள். குமரன் எழுந்து வேப்பங் குச்சியால் பல் விளக்கிக் கொண்டிருந்தான்.

 

" பொறு மோனே! முகம் கழுவ சுடுதண்ணி வைச்சுத்தாறன்." என்றவள் அவசர அவசரமாக அடுப்பை மூட்டி, குண்டானில் நீர்விட்டு சூடாக்கத்தொடங்கினாள். பூக்கம்பாளையும், தென்னோலையும் சுடர்விட்டு எரிந்தன. சிறிது நேரத்தில் நீர் சூடாகவும், தேனீருக்கு அளவாக நீரை எடுத்துக் கொண்டு மிகுதியை கதகதப்பாகக் கலந்து குமரனிடம் கொடுத்தாள். குமரன் முகம் கை கால்கள் அலம்பி முடிய தேனீரும் தயாராயிற்று.

 

" மோனே ! அவள் முத்தம்மாட மோள் செண்பகம், இயக்கத்துக்கு போயிற்றாளாமடா "

 

என்று சொல்லிக்கொண்டே ஆச்சி, அவனது உணர்ச்சி வெளிப்பாட்டை கடைக் கண்ணால் நோட்டமிட்டாள். குமரனுக்கு அது முற்கூட்டியே தெரிந்த சேதிதான். அதனால் ஆச்சி அவனிடம் எந்தச் சலனத்தையும் அவதானிக்க முடியவில்லை.

 

"அதுக்கென்ன இப்ப..? " ஆச்சியின் முகத்தைப் பார்க்காமலே அசட்டையாக கேட்டான்.

 

"மோனே..! உனக்கும் அந்தமாதிரி எண்ணங்கள் வரக்கூடாது கண்டியோ...!. என்னால தாங்கிகொள்ள முடியாது. " வெள்ளம் வர முன்னே அணை கட்டும் ஆதங்கம் இழையோடியது.

 

அப்போதும் அவன் முகத்தில் எந்த சலனமும் நிழலாடவில்லை. தேனீரை உறிஞ்சி பருகுவதிலேயே முனைப்பாயிருந்தான்.

 

" நான்..மத்தியானம் வந்து சோறு சமைச்சிருவன். நீ வெயிலுக்குள்ள ஊர் சுத்தாத..."

 

ஆச்சி ஓலைக் கடகத்தை எடுத்துக் கொண்டு எங்கோ நடையைக் கட்டினாள். இன்றையப் பொழுதுக்கு ஒரு நேரச் சாப்பாட்டுக்காவது வழி பார்த்தாகவேண்டுமே.

********

ஆச்சி எங்கெங்கோ அலைந்துவிட்டு,உச்சி வெயிலில் வெறுங்கையுடன் குடிலுக்கு வந்தாள். உள்ளே நுளைந்தவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. குமரன் வழமையாய் வருகின்ற வயிற்றுவலியால் சுருண்டு முனங்கிக்கொண்டு படுத்திருந்தான்.

 

" என்ர ..ராசா..என்ன மோனே செய்யுது..? " பதட்டத்தோடும் ஆதரவோடும் அவன் தலையைக் கோதியபடி கேட்டாள். ஆனால் ஆச்சிக்கு நன்றாய் புரிந்திருந்தது- அது என்ன ஏது என்று. அடிக்கடி பீடித்த மலேரியா காய்ச்சலால் ஏற்பட்ட வயிற்றுப் புண்ணின் கொடுமைதானது.

 

வேளைக்கு ஏதும் சாப்பிடாதுவிட்டால் வரும் வலிதான் வந்திருக்கிறது.

 

" வயிற்றைச் சுண்டி வலிக்குதணை..." தீனமாய் அனுங்கினான்.

 

ஆச்சி நினைத்தது சரிதான். இன்றைய சாப்பாட்டுக்கு கேட்கக்கூடிய இடமெல்லாம் கெஞ்சியாயிற்று. அவர்களிடமும் இருந்தால்தானே கொடுப்பதற்கு.....

 

உடனே இஞ்சி குத்தி தேனீர் போட்டுக் கொடுத்தாள்.

 

கிணற்றடியில் நின்ற மரவள்ளியை நோட்டமிட்டாள். சில வாரங்களுக்கு முன்னர்தான் செடியை புடுங்காதவாறு தோண்டி, ஒரிரண்டு கிழங்குகளை எடுத்திருந்தாள்.

 

இப்போது ஏதாவது கிழங்கு பிடித்திருக்கலாம் என்ற நப்பாசையில் நிலத்தைத்தோண்டத் தொடங்கினாள். எதுவுமே கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் குழியை மூடிவிட்டு,முருங்கை மரத்தை நாடினாள். கீரையைப் பறித்து, குறுணல் அரிசியுடன் கஞ்சி காய்ச்சத் தொடங்கினாள்.

 

அப்போதுதான், மாவட்ட சபையை ஆளும் இயக்கத்தின் தமிழ் தேசிய இராணுவத்தைச் சேர்ந்த இருவர் வந்தனர். அவர்களைக் கண்டதும் ஆச்சிக்கு நெஞ்சு இடித்தது.

 

" என்ன.. மோனை ! இஞ்சாலப் பக்கம் ..? " பதற்றத்தை புதைத்துக்கொண்டு போலியான நிதானத்துடன் கேட்டாள் ஆச்சி.

 

" ஆச்சி...! முத்தம்மாட மகளை எங்களோட சேரச்சொல்லி கேட்டும், அவள் புலிக்குப் போயிற்றாள். உங்கட பேரனையும் அப்பிடிப் போக விட்டிராதைங்கோ...எங்களோட சேர்த்துவிடுங்க. மாதச் சம்பளம் தருவம். " என்றான் வந்தவர்களின் ஒருவன்.

 

" என்ர ரசா..! அந்த பிஞ்சுக் குருத்துக்கு இப்பதான் பதினேழு வயசு நடக்குது. அதுக்கு உலக நடப்பே புரியாது. அவனை எப்படி ராசா இயக்கத்தில சேர்க்கிறது ? " என்று ஏக்கத்துடன் மன்றாட்டமாய் கேட்டாள் ஆச்சி.

 

" எணை..! ஆச்சி..உன்ர பேரன் புலிகளோட கொண்டாடுறது எங்களுக்குத் தெரியாது எண்டு நினைக்காத. நாங்களும் இதுவரையில வயது பார்த்துத்தான் பேசாம விட்டு இருந்தம். இந்தா... ! இவன்ர வயதும் பதினேழுதான். இவன் சேர்ந்து இப்ப, ஆறு மாதங்களாகுது. எங்களால குமரனை இழுத்துக் கொண்டு போக ஏலும்.... உனக்கு மரியாத தரவேணுமெண்டுதான் இப்ப கேட்கிறம்." என்றவன் சற்று நிறுத்தி,

"சரி..சரி ! இன்னும் ஒரு இரண்டு கிழமை அவகாசம் தாறம். அதுக்குள்ள உன்ர முடிவைச் சொல்லு....."

 

ஆச்சிக்கு , பேயும் பிசாசும் ஒரு சேர அறைந்தது போலிருந்தது. ஆச்சி விக்கித்து நிற்க, அவர்கள் போய்விட்டார்கள்.

 

அடுப்பில் இலைக் கஞ்சி கொள..கொளத்துக் கொண்டிருந்தது, அவள் உள்ளம் போல. ஆச்சிக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் அதிகம். இன்றே..இப்போதே முடிவு எடுத்துவிட வேண்டும் என தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள்.

 

"இவன்களிட்ட...பேரனை தாரை வார்த்துக் கொடுப்பதைவிட, அவன் உண்மையான விடுதலைப் போராளிகளிட்ட போய்ச் சேரட்டும். செத்தாலும் சனங்கள் மத்திலில மாவீரனாய் புகழோடு வாழ்வான். என்னிட்ட பட்டினி கிடந்து வயிற்று வலியால துடிப்பதைவிட, அவன்கள் ஒரு வேளைக்காவது ஒரு பிடிச் சோறு போடுவான்கள்.

தன்மானத்தோட வாழ வழிகாட்டுவான்கள். "

ஆச்சியின் முடிவு துணிச்சலானது; இறுதியானது.

 

" என்ர..ராசா..! எழும்பு மோனே..! இந்தக் கஞ்சியை வயிராற குடிச்சிட்டு, அவன் கணேசனை ஒருக்கா என்னைவந்து பார்க்கச் சொல்லு." வைரம் பாய்ந்த வார்த்தைகள்.


நடந்தவற்றை அவதானித்துக் கொண்டு படுத்திருந்த குமரன் புத்துணர்வுடன் எழுந்து அமர்ந்தான். ஆச்சி தந்த சூடான இலைக் கஞ்சியை உறுஞ்சிக் குடித்த போது வயிற்றுக்கு இதமாக இருந்தது. ஆச்சியின் முடிவும் மனதுக்கு இதமாக இருந்தது. அவனது நீண்ட நாள் கனவும் மெய்ப்படத் தொடங்கியது.

((இந்திய அமைதிப்படை வடக்கு, கிழக்கில் இருந்த காலத்தில் எழுதப்பபட்டது))

மயில் மகாலிங்கம் // ( யேர்மனி)

வர்ணத்திரையில் இவ்வாரம்

 


ஏஜென்ட் கண்ணாயிரம்

கதாநாயகனாக சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை மனோஜ் பீதா இயக்கி வருகிறார்.

 📽📽📽📽📽📽📽

அரண்மனை 3’

சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘அரண்மனை 3’. சுந்தர்.சி இயக்கியுள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டு இருக்கிறார். இப்படத்தில் ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

📽📽📽📽📽📽📽

'விக்ரம் வேதா'

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் இந்தியில் ரீமேக்காக இருப்பதாக  தகவல்  வெளியானது.

📽📽📽📽📽📽📽

தீபாவளியில்  5 படங்கள்

தீபாவளி பண்டிகை விருந்தாக ரஜினிகாந்தின் 'அண்ணாத்த', விஷால், ஆர்யாவின் 'எனிமி', சிம்புவின் 'மாநாடு', அருண் விஜய்யின் 'வா டீல்' ஆகிய 4 படங்கள் தியேட்டர்களிலும், சூர்யாவின் 'ஜெய்பீம்' ஓ.டி.டி, தளத்திலும் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

📽📽📽📽📽📽📽

ஜோதிகாவின் 50வது படம்

சசிகுமார், சமுத்திரகனியுடன் ஜோதிகா நடித்துள்ள, ஜோதிகாவின் 50வது படம் 'உடன்பிறப்பே' திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

📽📽📽📽📽📽📽

நானே வருவேன்’

செல்வராகவன்  இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாக உள்ளது. தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

📽📽📽📽📽📽📽

ஓடிடி-யில் மேலும்  2 படங்கள்

 சசிகுமார் ஹீரோவாக, மிருணாளினி ரவி ஜோடியாக நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார். இப்படமும் சசிகுமார் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ‘உடன்பிறப்பே’ படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

📽📽📽📽📽📽📽

பீஸ்ட்’

மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

📽📽📽📽📽📽📽

ஓ மணப்பெண்ணே’

அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஓ மணப்பெண்ணே’. அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

📽📽📽📽📽📽📽

நடிகை உமா மகேஸ்வரி மரணம்

'மெட்டி ஒலி' சீரியலில்  திருமுருகன் மனைவியாக  விஜி என்ற கேரக்டரில் நடித்ததன்  மூலம் பிரபலமான நடிகை உமா மகேஸ்வரி (வயது 40) உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். ‘ஒரு கதையின் கதை’, ‘மஞ்சள் மகிமை’ உள்ளிட்ட தொடர்களிலும் அவர் நடித்து உள்ளார். கால்நடை மருத்துவர் முருகன் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவர், அதற்குப் பிறகு தொடர்களில் நடிக்கவில்லை .உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(17) மரணமடைந்தார்.

📽📽📽📽📽📽📽

தொகுப்பு :செ.மனுவேந்தன்