வர்ணத்திரையில் இவ்வாரம் ....

 


உலகம்மை’

காதல் எப்.எம்., குச்சி ஐஸ் ஆகிய படங்களை டைரக்டு செய்த விஜய் பிரகாஷ், ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு, ‘உலகம்மை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். வெற்றி மித்ரன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகி கெளரி .இளையராஜா இசையமைக்கிறார் என்று படக் குழுவினர் கூறுகிறார்கள். சு.சமுத்திரம் எழுதிய நாவலை தழுவிய கதை இது.

 

'அனபெல் சுப்பிரமணியம்'

விஜய்சேதுபதி 'அனபெல் சுப்பிரமணியம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நாயகியாக டாப்சி வருகிறார். இருவருமே இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.ராதிகா, தேவதர்ஷினி, யோகிபாபு, சுப்பு பஞ்சு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தை தீபக் சுந்தர்ராஜன் இயக்கி உள்ளார். திகில் கதையம்சம் உள்ள இப்  படத்தில் சரித்திர காலத்தையும், இப்போதைய காலத்தையும் காட்சிப்படுத்தி இருப்பதாகவும், சரித்திர கால கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி மன்னராகவும், டாப்சி ராணியாகவும் நடிப்பதாக தகவல்.அதோடு படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடவும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

 

5 படங்களில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் ஹீரோ படம் வெளியான பிறகு டாக்டர் மற்றும் அயலான் படங்களில் நடித்தார்.படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சி நடப்பதாக தகவல். அடுத்து புதிதாக 5 படங்களில் நடிக்க உள்ளார்.அதில் ஒரு படம் டான் என்ற பெயரில் தயாராகிறது. இதில் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பாலசரவணன், காளிவெங்கட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்னொரு படத்தை அனுதீப் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு ரூ.25 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல்.இதையடுத்து அறிமுக இயக்குனர் அசோக் இயக்கும் படத்திலும், அதோடு மேலும் 2 புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

 

 

விக்ரம்

கமல்ஹாசன், இந்தியன் 2 படப்பிடிப்பு முடங்கி உள்ளதால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் பார்வையற்றவர் வேடத்தில் கமல்ஹாசன் நடிக்க தொடங்கி உள்ளார். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகிய இருவரும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ,நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக உறுதியற்ற தகவல்.

 

படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜுக்கு விபத்து

தற்போது தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜ் படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜ் நடிக்கும்போது  திடீரென்று கால் சறுக்கி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவரது இடது கை தோள்பட்டையில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத் சென்றார்.

 

நடிகை சரண்யா சசி மரணம்

தமிழில் 'பச்சை என்கிற காத்து' படத்தில் நடித்தவர் சரண்யா சசி. மலையாளத்தில்  பல படங்களில் நடித்து இருக்கிறார். தமிழ், மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

சரண்யா சசிக்கு மூளையில் கட்டி ஏற்பட்டது. இதற்காக கடந்த 10 வருடங்களாக  அவருக்கு 11 தடவை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. சில வாரங்களுக்கு முன்பு சரண்யா சசிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு  சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். பின் வேறு சில உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி சரண்யா சசி மரணம் அடைந்தார்.

 

பிரபுதேவா பேய்

பிரபுதேவா பேய் படமொன்றில் நடிக்கிறார். இந்த படத்தை பாடலாசிரியர் பா.விஜய் இயக்குகிறார். ஏற்கனவே திகில் கதையம்சத்தில் தயாரான 'தேவி' படத்திலும் பிரபுதேவா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவா நடித்துள்ள 'பொன்மாணிக்கவேல்' திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. 'தேள்', 'யங் மங் சங்' படங்களிலும் நடித்து இருக்கிறார். சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் புதிய படத்தில் பிரபுதேவாவுடன்  வரலட்சுமி, ரைசா வில்சன் ஹீரோயின்களாக இணைகின்றனர்

 

மகனுடன் விக்ரம் நடிக்க..

விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் தந்தை மகனாகவே இணைந்து நடிக்கின்றனர். இது விக்ரமுக்கு 60-வது படம். சிம்ரன், வாணிபோஜன் கதாநாயகிகளாக வருகிறார்கள்.படப்பிடிப்பு முடிந்ததும் பெயரை அறிவிக்க உள்ளனர்.

📂-தொகுப்பு செ.மனுவேந்தன்

இராவணன் நல்லவனா?..கேள்வி(18--24)

கேள்வி(18):- தனி இரு மனிதர்களின் கெளரவப் பிரச்சனைக்காக போர் நடப்பது மனுதர்மமா? கெளரவத்திற்காக நாடும் நாடும் சண்டையிட்டுக் கொள்ளலாமா?

 

இது என் வார்த்தைகளில் இழையோடி வரும் கேள்வி.. ராவணன் இலங்கையை ஆண்ட காலத்தில் பல அரசர்கள் நிம்மதியாக அரசாண்டுருக்கிறார்கள், தசரதன், ஜனகன், கோசல நாடு, கேகய நாடு, அங்க நாடு என அனைத்து நாடுகளும் அமைதியாக இருந்திருக்கின்றன. ராவணன் வம்புச் சண்டைக்கு போகவில்லை, மனிதர்களை கொல்லவில்லை என்பது தெரிகிறதல்லவா?

 

ஒருவன் இறப்பதால் அவன் தோற்றான் என்று அர்த்தமில்லை...... அதுவே அவன் அரசனானால்................ அப்படியென்றால் இறந்துபோனவன் சேனையை தோற்ற சேனை யென்று அழைப்பீர்களா? இல்லை வேறு எப்படி அழைப்பீர்கள்?

ஒருவன் எப்பொழுது தன்னிலை மாறுகிறானோ அப்போதுதான் அவன் அடுத்தவனிடம் தோற்றவனாகிறான்.

 

ஆக முனிவர்கள் முறையிடாமல் எங்ஙனம் விஷ்ணு இராமாவதாரமெடுத்தார்? ஒருவேளை அப்படியில்லை என்றாலும் யார் சொல்லி ராமன் அவதாரமெடுத்தார் விஷ்ணு? தானாகவே தாம் நினைக்கும்போது எடுத்துக் கொண்டாரா? இராமாயணத்தின் ஆரம்பத்திலேயே இது சொல்லப் பட்டிருக்கிறது..

 

ராமாயாணத்தில் அல்ல பாகவதத்தில் சொல்லப்பட்டது. ராமாயணக் கதைப்படி தசரதனுக்கு ராமன் மகனாய் பிறந்தான்.

 

கேள்வி(19):-  ஒரு தலைவனோ அல்லது அரசனோ இல்லை பெரும் மனிதனோ ஒருவனை ஒரு விஷயத்திற்காக அனுப்பினால் அது தூது,,, அதுவே ஒரு சாதாரண மனிதன் (அதாவது துறவியாகிய ராமன்) அனுப்பினால் அப்படியென்றால் அதற்கு பெயரென்ன? அனுமன் எதன் அடிப்படையில் இலங்கை வந்தான்? தூதுவனாகவா? இல்லை வெறும் வானரமாகவா? தூதில்லை என்று யார் சொன்னது?

 

ராமன் அனுமனை அனுப்பியது சீதை எங்கிருக்கிறாள் என்று கண்டு வர.. ராவணனிடம் பேச்சு வார்த்தை நடத்த அல்ல. அது அனுமனாக உருவாக்கிக் கொண்ட சுயபதவி. ராமன் ராவணனிடம் தூதனுப்பியது அங்கதனை. போருக்கு முன்.

 

கேள்வி(20):-அப்படியே ஒரு வானரமாக இருந்தாலும் அவனும் ஓர் உயிரல்லவா? அவனை கைதியாகவா நடத்துவது?

 

மானைக் கொன்ற ராமன் மானை உயிரியாக மதிக்கவில்லையே. சதி என்று அறிந்தே செய்தானல்லவா? இலங்கைக்கு நாசம் விளைவித்த ஒருவனை எப்படி நடத்த வேண்டுமோ அப்படி செய்தான் ராவணன்

 

கேள்வி(21);-எந்த தவறும் செய்யாத ஒரு வானரத்தை கைதியாக நடத்துவது இராவண குல தர்மமோ? அதிலும் வாலில் தீவைப்பது என்ன அநியாயம்?

 

நன்றாக கவனியுங்கள் வெறும் பேச்சினால் என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.. ஆக அனுமன் தான் இலங்கையை எரித்தது என்று எனக்குத் தெளிவாகத் தெரியும் அதற்கு காரணம் யார்? தெளிவில்லாத அரசனின் பேச்சு... அனுமன் கேட்டது சீதையைப் பற்றிதான்.. சீதையை மீட்க வந்திருக்கும் ஓர் தூதுவன் என்று இன்றுவரை என்னால் சொல்லமுடியும்

.. ஆக அவனை நல்லபடியாக பேசி அனுப்பாமல் இழிவு செய்வது இராவண குல தர்மமா?

 

 தூதுவன் என்பவன் தூதிற்கான ஆதாரம் கொண்டுவர வேண்டும். நான் ஜார்ஜ்புஷ் -இன் தூதுவன் என்று சொன்னால் நீங்கள் எப்படி என்னை நடத்துவீர்கள்?

 

....... மானும் கடவுள் படைத்த உயிரினம் தானே? இது நீங்கள் கேட்ட கேள்வி... மானும் கடவுள் படைத்த உயிரனம்தான்... ஆனால் அனுமன் ஒரு மனிதனை உட்காருவதற்குகூட அருகதையில்லாதவனாய் நடத்துதல் ஓர் நல்ல அரசனுக்கு அழகா?

 

அதாவது அறிவுள்ளவர்கள் உயர்ஜாதி அறிவில்லாதோர் அற்பஜந்து அப்படித்தானே!.

 

கேள்வி(22):-ராவணனைப் படைத்த பிரம்மாவையே ஒழித்து விடலாமே....

 

அழகிய கேள்விதான்.. பிறக்கும்போது யாரும் குற்றவாளியாக பிறப்பதில்லை... இதற்காக இராவணன் குற்றமற்றவனானால், கம்சனும் நல்லவன்தான். துரியோதனனும் நல்லவந்தான். பின்லேடனும் நல்லவந்தான்/.... இன்னும்பல அசுரர்களும் குற்றமற்றவர்களாவர்களே!!! நண்பரே நன்றாக யோசியுங்கள்..

அதாவது வினை என்பது நல்லவன் கெட்டவன் என்பதை தீர்மானிக்கிறது.. ராவணன் பல வருடங்கள் புலனடக்கி தவம் செய்தவன். அப்படி பெண்ணாசை கொண்டவனாய் இருந்தால் ஊர்வசி மேனகா என் தன்வசம் ஆயிரக்கணக்கில் இருந்த அஸ்திரங்களைப் பயன்படுத்தி இந்திரன் அவன் தவத்தைக் கலைத்திருக்கலாமே!

 

ஒரு கதாசிரியர் தானே இவனுக்கு இந்த பாத்திரம் என்று சொல்லவேண்டும்? அப்படிக் கொண்டால் ஏன் யாவரும் இராவணனையே கெட்டவனாக சொல்லவேண்டும்.? ஏன் வால்மீகி இராவணனுக்கு சீதையைக் கவரும் சீப்பான உள்ளம் தரவேண்டும்? இராமனை ஏன் கற்புக்கரசனாக சித்தரிக்கவேண்டும்? (பிற்பாடு வேறு..)

 

அப்படியானால் ராவணன் நல்லவனா கெட்டவனா என்ற விவாதமே எதற்கு?

 

வால்மீகிக்கு  ராவணன் என்ன கொடுமை செய்தான்? ஏன் இராவணனை அரக்கனாக காட்டுகிறான்  என்று பொருள்பட கேட்கிறீர்கள்.வட நாட்டவருக்கு என்றும் தென் நாட்டவர் எல்லாவற்றிலும் குறைந்தவர்களாகவே மதிக்கப்பட்டார்கள்.

சீதையின் சுயம் வரத்தில் கலந்து கொண்ட எவருமே ராவண பயம் கொண்டவர்களாகத் தெரியவில்லை. இந்திரன் மகன் ஜெயந்தன் கூட அதில் கலந்து கொள்கிறான்அசுரர்களால் துரத்தப்பட்டு மறைந்து வாழும் ஜெயந்தன் எப்படி வெளிப்படையாக சுயம்வரத்தில் கலந்து கொள்கிறான்?

 

ராவணன் பிராமணன் என்பது நானும் அறிவேன்... பிறப்பினால் அசுரனில்லை ஆயினும் அரக்கன் என்பதை நீவிர் ஒத்துக் கொள்கிறீரா?... ஒத்துக் கொண்டது போல எழுதியிருக்கிறீர்கள்.

 

அசுரன் என்பது பண்புப் பெயர். ஆரியருக்கு பிடித்தம் இல்லாதவர் எல்லாம் அசுரர் தானே. ஆப்பிரிக்கா காரர்போல் தோற்றமளித்த அனுமனையும் மக்களையும் குரங்குகள் என எழுதியவர்,   அதைச் சூட்டி உள்ளார்களே தவிர நான் ஒத்துக் கொள்ளவில்லை.

அனுமன் இலங்கையை அடையும் போது சாதாரணமாகவா நுழைந்தான்.. எத்தனை இன்னல்கள் கடலில்? அத்தனையும் இராவணனுக்குச் சொந்தமில்லாதவையா? ஓர் நல்ல பிராமணன் (பிராமணன் ஆட்சி!!!!) உயிர்கொல்லும் ராட்சத பாம்பு போன்ற விஷமிகளை எதற்காக வைத்திருக்கவேண்டும்?

ஏன் ஆளுயரக் கோட்டை, முதலைகள் உலவும் அகன்ற அகழி கோட்டைகளைப் பற்றி படித்திருப்பீற்களே! நாட்டைக் காக்க அரண்கள் அமைப்பது அரசனின் மிக முக்கியக் கடமை அல்லவா?

 

நாட்டைக் காப்பாற்ற என்றால்..... முதன்முதலில் இலங்கைக்குச் செல்லவிருக்கும் அனுமனால் நாட்டுக்கு தீங்கு வந்துவிடும் என்று நினைத்துவிட்டதுகளோ இந்த ஜந்துகள்?

 

வரும் வெளியாரைத் தடு என்பது அவர்களின் பணி.. இலங்கை மக்கள் இவற்றால் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை.

 

கேள்வி(23):-ஒரு நாடும் நாடும் போரிடும்போது கூட ஓலையில் தகவல் அனுப்புவார்கள். அனுமன் தேமெ என பறக்கும்போது ஜந்துகளை ஏவிவிட்ட இராவணன் நல்லவனா?

 

ஆளில்லா விமானம் காஷ்மீர் பகுதியில் பறந்தால் சுட்டுத் தள்ளுவதில்லையா? ஒரு நாட்டினுள் நுழைய அனுமதி பெறவேண்டுமல்லவா?

 

கேள்வி(24):-விருப்பமின்றித் தொடும் பெண்கள் என்பது வால்மீகி ராமாயணத்தில் இல்லை என்று கூறுகிறீர்கள். பின் ஏன் இராவணன் சீதையைக் கடத்தி அவளிடம் அடிக்கடி சம்மதம் பெற அசோகவனம் வரவேண்டும்? ( கிளைக்கதைதான் என்றாலும் இது வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. )

 

அவன் சீதையின் சம்மதம் பெறுவதன் மூலம் ராமனின் கௌரவத்தை உடைக்க முடியும். மனைவியே நம்பிக்கை விட்டால்..!சூர்ப்பனகை மூக்கறுப்பிற்கு இது சரியான தண்டனை அல்லவா..!!

(கேள்விகள் தொடரும்...)

-தாமரை செல்வன்

"மிருகங்களிருந்து மனிதர்கள் கற்கவேண்டியவை" / பகுதி: 02

4] "என்ன நடந்தாலும் சிறு புன்னகையுடன் கடந்து செல்லுதல்" : ---

 

"சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்

நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்"

 

"பொய்த்திரள் வருவதைப் புன்னகையில் மாய்ப்பாய்" - பாரதியார்

 

"இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்"

[குறள் 621]

 

எம்மை சூழ நடைபெறும் அனைத்தையும் மறந்து புன்னகைக்கும் பொழுது, மனம் ஆழ் கடல் போல் அமைதியடைவதை  நாம் உணரலாம். உடலுக்கும் மனதுக்கும் எந்தவித மருந்தாலும் தர முடியாத நன்மையை புன்னகை செய்துவிடுகிறது. துன்பத்திலும் புன்னகை செய்ய பழகவேண்டும் என கூறுவதை கேள்வி பட்டு இருப்பீர்கள். இதனால் தான் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் வருகின்ற முதல் வெள்ளிக்கிழமை உலக புன்னகை தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. இது மனிதனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. ஹார்வே பால் என்பவர் 1963-இல் புன்னகை முகம் என்ற குறியீட்டை 1963 இல் அறிமுகம் செய்தார் [Harvey Ball, a commercial artist from Worcester, Massachusetts created the smiley face]. இதனைத் தொடர்ந்து உலக புன்னகை தினம் 1999-ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது. எதிரிகளைக் கூட நண்பர்களாக்கி உறவுகளைப் பலப்படுத்தும் ஆயுதம் புன்னகை ஆகும்.

 

கங்காரு குடும்பத்தைச் சேர்ந்த ஆஸ்திரேலியாவில் வாழும் விலங்கான, மிகக் குறுகிய வாலை கொண்டுள்ள குவாக்கா [Quokka] ஒரு சாதாரண வீட்டு பூனையின் அளவை மட்டுமே கொண்டுள்ளது. இது புல், இலைகள், தளிர்கள் மற்றும் பழங்களை உண்கிறது.  குவாக்காவின் பொதுவான வாழ்விடம் அடர்த்தியான புதர்களைக் கொண்ட வறண்ட புல்வெளி வயல்கள் ஆகும். இந்த நட்புள்ள மகிழ்ச்சியான விலங்கின் அதிசயமான, மக்களின் மனதை  தொடும், பார்ப்பவர்களை சிரிக்கச் செய்யும் புன்னகை [infectious smile], சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து விடுகிறது, இதனால் அதனுடன் சேர்ந்து  அற்புதமான அந்த காட்சியை  புகைப்படம் எடுக்க, பலரை தூண்டுவதை நாம் இன்று காண்கிறோம். அவைகள் கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கையை வாழ்கின்றன  என்பதை இந்த அற்புத புன்னகை எமக்கு புலன்படுத்துகிறது. ஆகவே மனிதர்களும் இந்த அற்புத புன்னகையை கற்றுக்கொண்டால், ஆக்கபூர்வமான அணுகுமுறையை புன்னகையால் சாதிப்பார்கள் என்று நம்புகிறேன்.  

 

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பல பல பிரச்சனைகள் உண்டு. பிரச்சனை இல்லா மனிதன் உலகில் இல்லை என்றே கூறலாம். பிரச்சனைகளை எதிர்த்து போராடும் பொழுதே, எம் ஆற்றலும் மன வலிமையையும்  வெளிப்படுகிறது. இதற்க்கு புன்னகை துணை புரிகிறது. ஏன் என்றால், மனம் மகிழ்வுடன் இருந்தால், எவ்வளவு பிரச்சனையையும் எதிர்த்து போராடும் மனத்தையிரியம் உண்டாகும். நீங்கள் உண்மையில் ஒரு துக்ககரமான நாளில் இருக்கிறீர்கள் என்று வைத்தாலும், இந்த குவாக்கா விலங்கை ஒரு முறை சிந்தித்தீர்கள் என்றால், அது உங்களுக்கு ஒரு தெம்பையும். ஊக்கத்தையும் வலிமையையும் கொடுத்து உங்களை புன்னகைக்க வைக்கும்.

 

5] "ஒன்றிணைந்து செயல்படுதல் [கூடி வேலை செய்தல்]" : --- 

 

"எறும்பு ஊற கல்லும் தேயும்" - பழமொழி

 

"சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்." -  நீதிமொழிகள்:6-6,9

 

எறும்புகளை நீங்கள் உற்று நோக்கினால், அவை ஒரு அதிசய பிறவிகள் என்பதை உணர்வீர்கள். தம்மை விட உருவத்தில் பெரிய பூச்சிகளை, தாம் உண்பதற்காக, கூட்டமாகச் சேர்ந்து அல்லது ஒன்றிணைந்து மெல்ல மெல்ல கூட்டுக்கு  நகர்த்தி செல்லும். இந்தச் செயல்பாடுகள் எமக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பிப்பதை உணரலாம். ஆமாம், எறும்புகள் கூட்டமாக ஒன்று சேர்ந்து வாழ்பவை. இவற்றின் சமூக வாழ்வு வியக்கத்தக்கது. ஒவ்வொரு எறும்புக் கூட்டமும் ஒன்றாகக் கூடி கூட்டைப் பராமரிப்பது, உணவு தேடுவது, முட்டையிடுவது, இனப்பெருக்கம் செய்வது, கூட்டை சுத்தம் செய்வது, எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது என வேலைகளை பகிர்ந்து கொள்கின்றன.  இதையும் மனிதன் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

"உடலினை உறுதி செய்

அறிவை விரிவாக்கு

கொள்கை வகுத்து நில்

கூடி வேலை செய்"

 

என யாரோ கூறியது என் நினைவுக்கு வருகிறது. உதாரணமாக, எறும்புகள்  அழுக்குகளின் சிறிய துகள்களை ஒரு குழுவாக  நிலத்தடிக்கு கொண்டு சென்று, அங்கே ஒரு சிக்கலான சுரங்கங்களை உண்டாக்கி தம் வாழ்விடத்தை உண்டாக்குகின்றன. ஒரு அணியாக இரையை தேடி கண்டுபிடித்து சமாளிக்கின்றன. அது மட்டும் அல்ல, அவையை தமது இருப்பிடத்துக்கு ஒரு அணியாக, ஒரு வரிசையில் ஊர்ந்து எடுத்து செல்கின்றன. மிகவும் கடுமையாக, ஒற்றுமையாக ஒரு குழுவாக, எல்லோரும் அங்கு பங்கு செலுத்துகின்றன. அங்கு யாரும் எல்லா எடையும் தனியாக சுமக்கவில்லை. யாரும் ஒரு ஓரத்தில், ஒரு சுமையையும் தூக்காமல், விலகி நிற்கவில்லை. இதைத் தான் மனிதன் கட்டாயம் கற்கவேண்டும்.

 

தமிழர்களாகிய நாம் பெற்றிருக்கும் வளங்கள் - குறிப்பாக - அறிவுசார் வளங்கள், பல துறைகளில் நம்மவர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் - பிரமிப்பானவை;  உலகின் எந்த ஓர் இனத்துக்கும் சவால் விடக் கூடியவை. அப்படியிருந்தும், ஏன் சக்திமிக்க ஓர் இனமாக நாம் உருவெடுக்க முடியவில்லை? தமிழர்களாகிய நாம், குறிப்பாக கொஞ்சம் யோசிக்கக் கூடியவர்கள், படித்தவர்கள், ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ், ஒரு பொது நோக்கத்தின் கீழ் பணியாற்றும் பண்பை இன்னும் ஏனோ கற்றுக் கொள்ள வில்லை. தமிழர்களில் பெரும் பான்மையினரிடத்தில் - அதாவது, அவர்கள் எவ்வளவு பெரிய மேதைகள், ஆளுமைகள், சாதனையாளர்களாக இருந்தாலும் சரி - இந்தப் பலவீனத்தை அதிகமாக இன்னும் கொண்டு உள்ளார்கள். இன்னும் சொல்லப் போனால், இந்த விடயத்தில், சாமானியர்களைக் காட்டிலும் கொஞ்சம் யோசிக்கத் தெரிந்தவர்களே மிக மோசமாக இருக்கிறார்கள். ஒற்றுமையாக வாழத் தெரியாமல், இருப்பதையும் போட்டு உடைக்கிறார்கள்!  அவர்களிடம் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற வாழ்வை இன்னும் காணோம்!"  "கூடி வேலை செய்"  என்ற பண்பையும் காணோம்!!. ஏன் இவர்கள் தம் காலில் மிதிபடும் இந்த எறும்பின் வாழ்வையாவது ஒரு முறை சிந்திக்கக் கூடாதா? 

குறிப்பு:ஆரம்பத்திலிருந்து வாசிக்க தொடுங்கள்  Theebam.com: "மிருகங்களிலிருந்து மனிதர்கள் கற்கவேண்டியவை" / 01

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 03 வாசிக்கத்  தொடுங்கள் Theebam.com: "மிருகங்களில் இருந்து மனிதர்கள் கற்கவேண்டியவை" / 03