"தாய்மை"

 



''தாய்மை என்பது தாலாட்டும் மகிழ்ச்சி

தாலி கட்டியவன் கொடுத்த பரிசு !

தாகம் எடுத்தாலும் அழுகை கேட்கின் 

தாவி பாய்ந்து அணைக்கும் பாசம் !!"

 

"மண்ணும் பெண்ணும் தாய்மையின் வடிவங்கள்

பண்பினை போற்றிடும் கற்புடைமை தாய்கள்

கண்ணை போல் பிள்ளையை பராமரித்து

ஆண்டுகள் போனாலும் தேயாத உணர்வு !"

 

"உடலால் மழலை உயிர் வளர்த்து

உள்ளத்தால் பெரும் பூரிப்பு அடைந்து

உவகை கொண்டு பெருமை கொண்டு 

உரிமை உடன் பேணும் தெய்வம் !"

 

"அழுகையில் பதறி, சிரிக்கையில் மகிழ்ந்து

அச்சம் தவிர்த்து தைரியம் ஊட்டி

அரைநாண் கட்டி கொஞ்சி குலாவி   

அம்புலி காட்டிசோறூட்டும் தேவதை !"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

நடிகர் நம்பியார் -ஒரு நினைவு

 


மாஞ்சேரி நாராயணன் நம்பியார் அல்லது சுருக்கமாக எம். என். நம்பியார் (மார்ச் 7, 1919 - நவம்பர் 19, 2008) தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்தார். குணச்சித்திரம் மற்றும் எதிர் நாயகனாக (வில்லன்) எண்ணற்ற திரைப்படங்களில் நடித்தார். வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

 

இளமை

கேரள மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் மலபார் மாவட்டம், தற்போதய கண்ணூர் மாவட்டம், சிரக்கல் வட்டத்தில் பெருவமூர் என்ற ஊரில் கேளு நம்பியார் என்பவருக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார் நம்பியார். இவருக்கு ஒரு தமையனாரும் ஒரு தமக்கையாரும் உள்ளனர். நம்பியாரின் எட்டாவது வயதில் தந்தை இறக்கவே தமையனார் வசித்து வந்த உதகமண்டலத்துக்குக் குடி பெயர்ந்து அங்குள்ள நகராட்சி உயர் பள்ளியில் மூன்றாம் பாரம் வரை படித்தார்.

 

இல்லறம்

1946 ஆம் ஆண்டில் தனது உறவினரான ருக்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார். பா. ஜ. கவின் முக்கிய தலைவராக இருக்கும் சுகுமாரன் நம்பியார் இவரது மகன். மோகன், சினேகா என்போர் இவரின் மற்ற குழந்தைகள் ஆவர்.

 

ஆன்மிக ஈடுபாடு

திரைப்படங்களில் எதிர் நாயகனாக நடித்த போதும், தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த ஒழுக்கங்களை கடைபிடித்துவந்தார். திரையுலகில் சிறந்த ஆன்மீகவாதியாகவும், ஒழுக்கத்தில் சிறந்தவராகவும் அறியப்பட்டார்.  நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரி மலைக்குச் சென்று வந்தார்.

 

நாடகத்துறை பங்களிப்புகள்

தொடர்ந்து படிக்க அவரது பொருளாதாரம் இடம் கொடாமையால், தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராசமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்து  சேலம், மைசூர் எனச் சுற்றினார். ஆனாலும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் வரவில்லை. நாடகக் கம்பனியின் சமையலறையில் உதவியாளராகவே இருந்தார். வேடம் போட்டால் தான் சம்பளம். இலவசச் சாப்பாடும், படுக்க இடமும் கிடைத்தது.

 

திரைத்துறை பங்களிப்புகள்

நவாப் கம்பனியின் ராம்தாஸ் என்ற நாடகத்தை 1935 ஆம் ஆண்டு பக்த ராம்தாசு என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். இதன் படப்பிடிப்புக்காக பம்பாய் சென்றார்கள். நம்பியாரும் கூடவே சென்றார். இப்படத்தில் அக்கண்ணா, மாதண்ணா என்ற நகைச்சுவை வேடங்களில் மாதண்ணா வேடத்தில் நம்பியார் நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் திரைப்படமாகும். அக்கண்ணாவாக டி. கே. சம்பங்கி நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக நம்பியாருக்கு நாற்பது ரூபாய் கொடுக்கப்பட்டது.

 

பல இடங்களிலும் சுற்றிவிட்டு தஞ்சாவூர் வந்தது நவாப்பின் நாடகக் குழு. தஞ்சையில் நடந்த ஏசுநாதர், ராஜாம்பாள் போன்ற நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட மாதச் சம்பளம் மூன்று ரூபாய். அவ்வேளையில் கிருஷ்ணலீலா நாடகத்தில் நடித்து வந்த கே. சாரங்கபாணிக்குக் கையில் ஏதோ கோளாறு ஏற்படவே சாரங்கபாணியின் வேடங்கள் அனைத்து நம்பியாருக்குக் கிடைத்தது. 1939 இல் இருந்து பெரிய நடிகர்கள் வாங்கக்கூடிய பதினைந்து ரூபாய் சம்பளம் வாங்கினார்.

 

1944 இல் நவாப்பின் குழுவில் இருந்து விலகி டி. கே. கிருஷ்ணசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்து எஸ். டி. சுந்தரம் எழுதிய கவியின் கனவு நாடகத்தில் ராஜகுருவாக நடித்தார் நம்பியார். இந்நாடகத்தில் நடித்ததன் மூலம் நம்பியாரும் எஸ். வி. சுப்பையாவும் பெரும் புகழடைந்தனர்.

 

இதனையடுத்து ஜுபிட்டர் பிக்சர்சின் நான்கு படங்களுக்கு நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். வித்யாபதி (1946), ராஜகுமாரி ஆகியவற்றில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். கஞ்சன் (1947) என்ற படத்தில் கதாநாயகன் வேடம் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அபிமன்யு, மோகினி போன்ற படங்களிலும் நடித்தார். அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி படத்தில் கதாநாயகன் மூர்த்தியாக நடித்து பெயர் பெற்றார். கல்யாணி (1952), கவிதா (1962) ஆகியவற்றிலும் கதாநாயகனாக நடித்திருந்தார்.

 

அதன் பின்னர் அவர் பல படங்களில் வில்லன் பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம். ஜி. இராமச்சந்திரனின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார்.

 

வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற பல படங்களில் இராமச்சந்திரனுடன் சேர்ந்து நடித்தார்.

 

எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே. பாக்யராஜ். அவர் நடித்த தூறல் நின்னு போச்சு படத்தில் நம்பியார் குணச்சித்திர வேடமேற்றார். ரஜினிகாந்த்தின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். நம்பியார் விஜய்காந்தின் சுதேசி படத்தில்லேயே கடைசியாக நடித்தார்.

 

தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார்.

 

திகம்பரசாமியார் எனும் பெரு வெற்றிப் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார்.

 

மறைவு

உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் 2008, நவம்பர் 19 பிற்பகல் 12:30 மணியளவில் காலமானார்.

நடிகர் நம்பியார் நினைவு தினத்தையொட்டி தொகுப்பு:செ.மனுவேந்தன் 

நாய் வாலை நிமிர்த்த முடியாது!

அம்பிகாபதி திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக்காட்சி . தமிழ் சினிமாவின் ஆரம்பகால நகைச்சுவை நடிகர்களான என்.எஸ்.கிருஷ்ணன் மதுரம் தம்பதிகள் நடித்த காட்சி அது. என்.எஸ்.கிருஷ்ணன் மதுரத்தை காதலிப்பார். என்.எஸ்.கிருஷ்ணன் தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறும் தனது காதலிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் எனவும் கூறுவார். அதற்கு மதுரம் ”நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்யவேண்டாம். எனது செல்ல நாயின் சுருண்டு போயுள்ள வாலை நிமிர்த்திவிட்டால் நான் உங்களை திருமணம் செய்கிறேன்” எனப் பதிலளிப்பார். உடனே ”இதுவா விடயம் .இது ஒன்றும் பிரமாதமான விடயமல்ல” என்று சொல்லிவிட்டு தனது நண்பருடன் சேர்ந்து நாயை பிடித்து அதன் வாலை நேராக்கிவிடுவார் என்.எஸ்.கிருஷ்ணன்.

 

ஆனால் கையை விட்டதும் வால் மறுபடியும் சுருண்டு விடும் .இப்படி இரண்டு மூன்று தடவைகள் முயற்சித்து களைத்துப் போன பின் ஒரு தடியை எடுத்து வந்து நாயின் வாலில் வைத்து கட்டிவிடுவார். கட்டிவிட்டு வெற்றிப் புன்னகையுடன் மதுரத்தைப் பார்த்து “எப்படி?” என்று கேட்பார். மதுரம் தனது நாயின் வாலில் கட்டியுள்ள தடியை அவிழ்த்ததும் நாயின் வால் மறுபடியும் சுருண்டு பழையநிலைக்கு வந்துவிடும்.

 

இதேபோல் தான் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளையும் ஒருபோதும் திருத்தவே முடியாது போலிருக்கிறது. தமிழர்கள் என்ற இனம் ஒற்றுமையாக இருந்தால் அது உலகத்துக்கே ஆபத்து என்று கடவுள் நினைக்கிறார் போலிருக்கிறது. மூவேந்தர்களும் இணைந்திருந்திருந்தால் உலகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்திருக்கலாம்.

 

தமிழர்களின் ஒற்றுமைக்கு யாழ்ப்பாணத்திலுள்ள இந்து ஆலயங்களே நல்ல எடுத்துக்காட்டு. சிறிய ஆலயங்கள் முதல் பெரிய ஆலயங்கள் வரை அனைத்து ஆலயங்களிலும் ஆண்டவனுக்கு சேவை செய்வதற்காக போட்டி போட்டு சிங்கள பௌத்த பொலிஸாரையும் நீதிமன்றத்தையும் நாடுகின்றனர் மெத்தப் படித்த யாழ்ப்பாணத்தார். பல கோயில்கள் பூட்டப்பட்டுள்ளன; சில கோயில்களில் பூசகர்களும் நிர்வாகிகளும் மாறிமாறி இரண்டு பூட்டுகள் போட்டு பூட்டும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

 

சில கோயில்கள் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மூடப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் ஆண்டவனுக்காக தம்மை அர்ப்பணித்து ஆண்டவனுக்கு சேவை செய்யும் நோக்குடனேயே சிங்கள பௌத்த பொலிஸாரையும் நீதிமன்றத்தையும் நாடுகின்றனர் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. 


இதேபோல் பாடசாலையின் அபிவிருத்தியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட யாழ்ப்பாண பாடசாலைகளின் பழைய மாணவர்களும் தங்களுக்குள் முட்டி மோதிக் கொள்கின்றனர். கிராம அபிவிருத்திச் சங்கம் ,சனசமூக நிலையம் போன்றவற்றிலும் இவ்வாறே மக்கள் சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக அடிபடுகிறார்கள்.

 

தமிழ் அரசியல்வாதிகளும் இதற்குவிதி விலக்கல்ல; தமிழ் அரசியல்வாதிகளும் தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து தமிழ் மக்களுக்காகச் சேவை செய்து வருகின்றனர் என்பதை யாரும் மறுக்கமுடியாது. தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்வதற்கு மட்டும்தான் போட்டி போடுகின்றனர் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்; தமது சொந்த நலன்கள் என்று வரும் போது அவர்கள் தமது அரசியல் வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகள் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு மிகமிக ஒற்றுமையாக செயற்படுவார்கள் என்பதையும் ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

 

1984-86 காலப்பகுதியில் தமிழ்மக்களின் உரிமைகளுக்காக தங்களுக்குள் மாறிமாறி சுடுபட்ட தமிழ்ப்போராளிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், எப்படி வடக்கு மாகாணசபையில் வாகன அனுமதிப்பத்திரம் பெறுவதற்கும் ஏனைய விடயங்களுக்கும் ஒற்றுமையாகச் செயற்பட்டார்கள் என்பதை ஈழம் வாழ் தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஜே.வி.பியினரைப் போல் அரசாங்கம் வழங்கும் சலுகைகளை வேண்டாமென்று சொல்ல தமிழர்கள் ஒன்றும் முட்டாள்களல்லர், தமிழர்கள் புத்திசாலிகள்.

 

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடருக்கு வருடந்தோறும் இலங்கையிலிருந்து தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளால் மூன்றுக்குக் குறையாத கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடருக்கு பிரேரணைகளை அனுப்புவதற்கான காலக்கெடு கடந்த மாதம் 23 ஆம்திகதியுடன் முடிவடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காலக்கெடுவுக்கு முன்னர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் எவருமே பிரேரணைகள் எதையும் அனுப்பியதாகத் தெரியவில்லை.

 

சற்று காலதாமதமானலும் ஈழத் தமிழர்களின் நலன்கருதி இலங்கை தமிழர் தரப்பிலிருந்து அனுப்பப்படும் பிரேரணைகளுக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேன், எவ்வளவு அதிகமாகப் பிரேரணைகள் எனக்கு கிடைக்கிறதோ அவ்வளவுக்கு தான் இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி ஐ.நா.மனித உரிமைகள் மகா நாட்டில் பிரஸ்தாபிக்க முடியும் ”எனவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏதோ இரகசியச் செய்தி அனுப்பியிருக்க வேண்டும்.

 

அதனால் தான் ஆளாளுக்கு தனித்தனியாக , ஏட்டிக்கு போட்டியாக காலம் கடந்த பின்னும் கடிதங்களாக அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். பதவி ஆசை என்பது அறவே இல்லாத எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் சுயநலனுக்காகத்தான் இப்படி கன்னை கட்டிக் கொண்டு கடிதம் அனுப்புவதாக யாரும் தவறாக நினைத்தால், அவர்களின் கண்ணைக் கடவுள் குத்தவும் கூடும்.

 

இறுதியாக அண்டை நாட்டு இராஜதந்திரி ஒருவர் கூறிய கருத்தையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். 

தமிழ் அரசியல்வாதிகள் உச்சபட்ச வாக்குகளுடன் எங்களை நாடாளுமன்றுக்கு அனுப்புங்கள் என்று கேட்கிறார்கள்; ஏனென்றால் தாங்கள் (தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்) உச்சபட்ச சலுகைகளை அனுபவிப்பதற்காக” என்றார்.

(தமிழருக்கு என்றொரு....பண்பாடு உண்டு)

நன்றி:ந.பரமேஸ்வரன்

குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 03

 


ஆண் ஆணை திருமணம் செய்யும் ஒரு பால் திருமணம் வரலாற்றில் மிக மிக அரிதாகவே உள்ளது. கிபி 54 முதல் 68 வரை ரோமப் பேரரசை ஆட்சி செய்த மன்னனான நீரோ, இரு முறை ஒரு பால் திருமணம், முறையான திருமண சடங்குகளுடன் செய்தான். அது மட்டும் அல்ல, ஏகாதிபத்திய நீதிமன்றம் [Imperial Court] அவர்களை அவரது மனைவிகளாகக் கருத வேண்டும் என்று வலுக்கட்டாயப் படுத்தினான். இதை தொடர்ந்து இரண்டாம் மூன்றாம் நூறாண்டில், உரோமில் ஓரினச் சேர்க்கை திருமணங்கள் கவலை அளிக்கும் அளவுக்கு பொதுவானதாகி விட்டது. இதனால், ரோமானியர்கள் கி பி 342 இல் இதை முறையான சட்டம் மூலம் முற்றாக தடை செய்தனர்.

 

சமூக விமர்சகர் ஜூவனல் [Juvenal], மர்லின் யலொமின் 'மனைவிகளின் ஒரு வரலாறு' [A History of the Wife by Marilyn Yalom] என்ற புத்தகத்திற்கு விமர்சனம் செய்யும் பொழுது "பார் - குடும்பமும் மற்றும் அதிர்ஷ்டம் கொண்ட ஒரு மனிதன் [ஆண்]  - ஒரு மனிதனை [ஆணை] திருமணம் செய்துகொண்டான்". மேலும்  "இது போன்ற விடயங்கள், நாம் மிகவும் வயதாகிவிடும் முன், பொதுவில் செய்யப்படும்" என்று இந்த நூறாண்டில் எழுதினார் ["Look—a man of family and fortune—being wed to a man!" Juvenal wrote. "Such things, before we're very much older, will be done in public."]. அவர் மேலும் அதை கேலி செய்து, இந்த மணப்பெண் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்டு தங்கள் கணவர்களை கவர [பிடிக்க] முடியாது என்கிறார். எது எப்படியாகினும் முதன் முதலாக 2001 இல் நெதர்லாந்தில் ஒருபால் திருமணத்தை ஒப்புக் கொள்ளும் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை தொடர்ந்து இன்று, அர்ஜென்டினா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கொலம்பியா, டென்மார்க், பிரான்சு, ஐசுலாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், மெக்சிக்கோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, போர்த்துகல், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், சுவீடன், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, உருகுவை ...  ஆகிய நாடுகளில் ஒருபால் திருமணம் சட்ட பூர்வமாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

 

திருமணத்தின் தோற்றம் குறித்த இலக்கிய, வரலாற்று சான்றுகள் குறைவாகவே உள்ளன. இது பல்வேறு காலங்களில், அந்தந்த  கலாச்சார ரீதியாக ஏற்பட்டதால், பல்வேறு வழிகளில் இது வரையறுக்கப் பட்டும் உள்ளது. எது எப்படியாகினும் திருமணம் ஒரு நிறுவனமாக உள்ளதால், அதன் வரையறையில் கணிசமான உடன்பாடு அல்லது ஒற்றுமை காணப் படுகிறது. ஆரம்ப கால சமூகங்கள் ஒற்றை அல்லது பலதார மணமாக அல்லது கூட்டு வாழ்க்கையாக இருந்தாலும், பாலியலை கட்டுப்பாடுடன் அல்லது சுதந்திரமாக கடைப் பிடித்தாலும் அல்லது பெண்ணால் ஆளப்படும் அல்லது ஆணால் ஆளப்படும் சமூகமாக இருந்தாலும் (matriarchal or patriarchal), தத்துவார்த்த ரீதியாக திருமணம் என்பது குடும்பங்களைப் போல பழையதாக இல்லை என்பதே பொதுவான கருத்தாகும். 

 

நீங்கள் மனித வரலாற்றை நுணுக்கமாக பார்த்தால், பழமையான கலாச்சாரத்தில், திருமணம் என்பது, மனித இனப்பெருக்கத்தின், ஒரு தர்க்கரீதியான நீட்டிப்பாகும் [Further in Primitive culture, marriage was a logical extension of human reproduction]. எனவே, குடும்பமும் குடும்பங்களை சுற்றி அமைக்கப் பட்ட சமுதாயமும் நிலைத்து உயிர் வாழ்வதற்கு இது உதவுகிறது. எப்படியாகினும், கடந்த நூறு ஆண்டுகளில் எம் மனித இனம் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. நாம் இன்று வேட்டுவ உணவு திரட்டிகள் அல்லது விவசாய அடிப்படை சமூகங்கள் [hunter-gatherers or agriculturally based communities] அல்ல. நாங்கள் உயர் தொழில் நுட்பம் கொண்ட சமூகமாக இருக்கிறோம். இன்று எம்மிடம் தொலைபேசி, வானொலி, தொலைகாட்சி, விமானங்கள், ரயில்கள், கார்கள், மேம்பட்ட மருந்துகள், மரபணுப் பொறியியல் [genetic engineering], இணையம், பிறப்பு கட்டுப்பாடு, கருக்கலைப்பு, குளோனிங் அல்லது நகலி [cloning], சோதனைக் குழாய் குழந்தைகள், மற்றும் பல இருக்கின்றன. நாம் இன்று கூடிய ஆண்டு உயிர் வாழ்கிறோம். பல காரணங்களால் இன்று மனித இனம் முன்னதை காட்டிலும் வேறு பட்டுள்ளது. அந்த வேறுபாடுகள் இன்று திருமணம் என்ற கட்டுக்கோப்பை பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது. உதாரணமாக, எம்மை இறப்பு பிரிக்கும் மட்டும் ["till death do us part"] என்ற அர்ப்பணிப்பு இன்று இல்லை. மேலும் அவர்கள் குடும்பமாக இருந்தாலும், தனித்தனியாக அல்லது வெவ்வேறாக பல விடயங்களை கையாள முடியும். எனவே உங்கள் துணையை பெரிய கட்டுப்பாடுகள் அற்று தேர்ந்து எடுக்க முடியும். மேலும் marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும்  திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம். இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான தொடக்கத்தை உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony  = matri  + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood]. எனவே, பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு [conjugal relations], என்பது பெண் தாய்மை அடைதல் ஆகும் என எடுத்து கொள்ளலாம்.

 

எனவே திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும், ஒரு நிரந்தர மற்றும் பிரத்தியேக அர்ப்பணிப்புகளுடன் ஒன்றிணைவதுடன், இயற்கையாகவே (இயல்பாகவே அமையப்பெற்ற) குழந்தைகளை பெற்று ஒன்றாக வளர்ப்பதன் மூலம் நிறைவேற்றப் படுகிறது. அதாவது, ஆண் பெண் பாலியல் நடத்தைக்கு ஒரு அங்கீகாரம் வழங்கி அவர்களை ஒன்றாக குடும்பமாக வாழ வைப்பது திருமணம் என்று பொதுவாக சொல்லப் படுகிறது. அது மட்டும் அல்ல குடும்பங்கள் ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலை முறை வரை ஒரு கலாச்சாரத்தின் மதிப்பை [culture's values] கடத்தும் ஒரு கட்டமைப் பாகவும் செயல் படுகிறது.

 

உலக வரலாற்றை நோக்கும் பொழுது பல ஆட்சியாளர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். என்றாலும் அவர்கள் திருமணம் செய்யும் பொழுது, கட்டாயம், உதாரணமாக ஆட்சியாளர் ஆணாக இருக்கும் தருவாயில், மற்றவர் பெண்ணாகவே இருக்கிறார். எனவே திருமணம் என்பது தன்னிச்சையான கட்டுமானம் அல்ல; அது ஒரு “கெளரவமான அமைப்பு“. இது ஆண் பெண்களின் வேறுபட்ட மற்றும் இணக்கமான இயல்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதனால் தான் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், தொல்காப்பியர் இயம்பியவாறு சடங்குகளால் வலுப்படுத்தப் பட்டு சட்டப் பூர்வமாக பிணைக்கப் பட்டுள்ளது. உங்களுக்கு நன்றாகவே தெரியும், இதயத்திற்கு இரத்தத்தை உந்தி தள்ளும் செயல்பாடு உள்ளது, அப்படியே கண்ணுக்கு பார்க்கும் செயல்பாடு உள்ளது, எனவே கட்டாயம் மனித நிறுவனங்களுக்கு (human institutions) மிகவும் வெளிப் படையாக ஒரு தேவை இருக்கும். அதை யாரும் மறுக்க முடியாது.

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
பகுதி 04 தொடரும்....  
வாசிக்கத்  தொடுங்கள் Theebam.com: 'குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / பக...4:  

ஆரம்பத்திலிருந்து வாசிக்கத்  தொடுங்கள் -Theebam.com: 'குடும்பங்கள் / திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 01