"பெருவெடிப்புச் சித்திரம்"

[நவீனகவிதை / படக் கவிதை]

 


"பெருவெடிப்பு ஒன்று சிதறிப் பாய

சிதறிய ஒவ்வொன்றும் ஒரு உலகமாக

உலகம் எல்லாம் வெவ்வேறு அழகு தர

காட்சிகள் மனதைக் கொள்ளை கொள்ள

மகிழ்ச்சி தந்த உத்வேகத்தில்

தூரிகை எடுத்து வரையத் தொடங்கினேன்!"

 

"மாலைக் காற்று மெதுவாய் வீச

பாடும் குயில்கள் பறந்து செல்ல

வானவில் ஜாலங்கள் புரிய

மனதை நெருடி மகிழ்ச்சி தர

நாணம் கொண்ட என்னவளை நினைத்து

என் எண்ணத்தின் பெரு வெடிப்பில்

சிதறிய அவள் அழகுத் துகள்களை

பொறுக்கி எடுத்து ஒன்று சேர்த்து

ஓவியம் ஆக்கினேன்!"

 

"அகன்ற மார்பும் சிறுத்த இடையும்

ஒரு பக்கம் சரிந்த கார் குழலும்

இதலைத் தொட்டு கோர்த்த இரு கைகளும்

இதழில் மலரும் புன்னகையும்

தோளில் சரிந்து விழுந்து

முழங்காலை துப்பட்டா கொஞ்ச

அந்த அழகு சிலை

என் இதய பெரு வெடிப்பின்

அழகு துகள்களே!"

 

"அவள் அழகில்

தென்னை மரமும் குனிந்து ரசிக்க

ஞாயிறும் மயங்கி துயில் போக

தில்லை நடராஜன் ஒரு காலில் கூத்தாட

அவள் கயல் விழிகள் இமைத்தன

என்னைப் பார்த்து நாணம் கொண்டன!!"

 

-------------------[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

கடைசி வாரம் வெளிவந்த திரைப்படங்கள் எப்படி?


'மாமனிதன்' விமர்சனம்  (Maamanithan movie review)

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, காயத்திரி சங்கர்,குரு சோமசுந்தரம், கே பி சி லலிதா, அனிகா  உட்படப் பலர் நடித்திருக்கும்,   இத்திரைப்படத்தினை  யுவன் ஷங்கர் ராஜா தானே தயாரித்து, அவரின் தந்தை இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்துள்ளார்.

"அப்பன் தோத்த ஊர்ல.. புள்ளைங்க ஜெயிக்கிறது கஷ்டம்" என்கிற ஆழமான சூழலில் தனது பிள்ளையை ஜெயிக்க வைக்க தலை நிமிர்ந்து வாழ வைக்க தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ராதாகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி செய்யும் வேலைகள் தான் படத்தின் மையக் கரு.

 மெதுவாக நகரும் கதை என்றாலும் குடும்பங்களோடு ரசித்து மகிழக்கூடிய  படம்.[3/5]

 

''மாயோன்'' விமர்சனம்  (Maayon review. Maayon Tamil movie review)

கிஷோர் இயக்கத்தில், சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதா ரவி, கே எஸ் ரவிக்குமார் என ப்பல  நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும், திரில்லர் திரைப்படம். இப்படத்தினை  அருண் மொழி மாணிக்கம் தயாரிக்க,  இளையராஜா இசையமைத்துள்ளார்.

 பழங்கால கிருஷ்ணர் கோயிலில் இருக்கும் ரகசிய அறையில் உள்ள புதையலை எடுத்து வெளிநாட்டிற்குக் கடத்த ஹரிஷ் பெரடி, சிபிராஜ் இருவரும் சேர்ந்து நினைக்கும் அவர்கள்,  அந்தப்  புதையல் அறை எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க  முயற்சி செய்கிறார்கள். திட்டமிட்டபடி அவர்களால் அதைச் செய்ய முடிந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

குடும்பத்த்துடன் பார்க்கக் கூடிய மாய உலகம் [3/5]

 

'பட்டாம்பூச்சி' விமர்சனம் ('Pattampoochi' movie review)

 பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி, ஜெய், ஹனி ரோஸ் என பலர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை நடிகை குஷ்பூ சுந்தர் தயாரிக்க,  நவ்நீத் சுந்தர் இசையமைத்துள்ளார்.

தூக்குத் தண்டனை கைதியான சுதாகர் (ஜெய்) அதிலிருந்து தப்பிக்க, தான் பட்டாம்பூச்சி எனும் சைக்கோ கொலைகாரன் என்கிற ட்விஸ்ட்டை கொடுக்க அதுதொடர்பான விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிடுகின்றனர்.

அந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக குமரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுந்தர்.சி. தூக்குத் தண்டனையில் இருந்து ஜெய் தப்பித்தாரா? உண்மையில் அந்த பட்டாம்பூச்சி சைக்கோ ஆனது எப்படி? குற்றவாளியை நீதிமன்றத்துக்கு முன் நிறுத்தினாரா சுந்தர். சி என்பது தான் படத்தின் கதை.

முதல் பாதி சுவாரஸ்யம், இரண்டாம் பாதி சம்பவம் சுமார் தான்…[2/5]

 

'வேழம்'விமர்சனம் (Vezham Movie Review)

 சந்தீப் ஷியாம் இயக்கத்தில், அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். கேசவன் தயாரிக்க, ஜானு சந்தர் இசையமைத்துள்ளார்.

காதலியான ஐஸ்வர்யா மேனனை கொன்றவர்களை பழிவாங்க துடிக்கும் அசோக் செல்வன் பல உண்மைகளை அறிகிறார். அவை என்ன? அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.

 கதை வேகமானது, ஆனால் நீளம் கூட என்பதால் பொறுமையுடன்தான் பார்க்க வேண்டும் . [3/5]

 

தொகுப்பு:செ.மனுவேந்தன்

மாறிடும் நவீன உலகில், எம்மை நெருங்கும் புதுமைகள்

 அறிவியல் 
கொழுப்பை உறிஞ்சும் அன்னாசி (pineapple)  இலை!

அப்படியே குப்பைக்குப் போகக் கூடியவை அன்னாசி  இலைகள். ஆனால், அவை உடலில் அதிகம் கொழுப்பு சேராமல் தடுக்கும் என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அன்னாசி  இலைகளை உலர்த்தி, பொடியாக்கி மாத்திரையாக்கினர் விஞ்ஞானிகள்.பின்னர், மனித ஜீரண அமைப்பின் மாதிரியை உருவாக்கி, அதில் மாத்திரையை செலுத்தினர். அந்த மாதிரியில் செரிமான அமிலம் உள்ளிட்டவை இருந்தன. இதன் ஊடாக, மாத்திரைகள் நகரும்போது ஒரு அதிசயம் நடந்தது.

சமைத்த கொழுப்பு உணவுகளில் இருக்கும் கொழுப்பை அந்த குளிகைகள் உறிஞ்சிக் கொண்டன. எவ்வளவு தெரியுமா? ஒரு கிராம் அன்னாசி  இலைப் பொடி, 45.1 கிராம் அளவு கொழுப்பை உறிஞ்சியது. பிறகு அந்த குளிகை, கொழுப்பு கலந்த உருண்டையாக மாறி, ஜீரண உறுப்பைக் கடந்து வெளியேறியது. இன்னும் இந்த கண்டுபிடிப்பு மனிதர்கள் மீது சோதிக்கப்படவில்லை. ஆனால், இந்த மாத்திரை சந்தைக்கு வந்தால், உடல் பருமனைக் குறைக்க உதவும்.

💊💊💊💊


மன நிலையை அளக்க ஒரு செயலி!

உங்கள் மன நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமா? அதற்காக வடிவமைக்கப்பட்டதுதான், 'மூட் - சீ ஹவ் யு பீல்' என்ற செயலி.

இதன் பயனாளி, தனது மனநிலை தற்போது எப்படி உள்ளது என்பதை, வண்ணங்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக, அவர் இலகுவான மன நிலையில் இருந்தால், மென்மையான நிறங்களை தேர்ந்தெடுக்கலாம். இப்படி, ஒரு நாளில், மனநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நேரும்போதெல்லாம் அவர், தன் இந்த செயலியைத் திறந்து, வண்ணங்களால் குறிப்பெடுக்கவேண்டும். இக்குறிப்புகளை, 'மூட் மீட்டர்' என செயலியை உருவாக்கியோர் குறிப்பிடுகின்றனர்.

இப்படி, வாரம் மற்றும் மாதக் கணக்கில் பதிவுகளைச் செய்தால், பயனாளியின் மனநிலை மாற்றம் குறித்த தெளிவு அவருக்கே ஏற்படும். அவர், சோர்வான மன நிலையில் இருந்தால், இந்த செயலிக் குறிப்புகளைப் பார்த்து, எப்போது அவருக்குள் மாற்றம் ஏற்பட்டது என்பதை, நோட்டம் விட்டாலே தெரிந்துகொள்ளலாம். மூட் செயலியை பயன்படுத்தும்போது, சுய விழிப்புணர்வு மற்றும் சுய மனக்கட்டுப்பாடு வர வாய்ப்புகள் அதிகம்.

 💻💻💻💻


சாலை போட உதவும் பழைய டயர்!

தார் சாலைகள் சூரிய ஒளியில் காய்ந்து, விரிந்து பழுதாகின்றன. இதை தடுக்க வீணாகும் ரப்பர் டயர்களை பயன்படுத்தலாம் என ஆஸ்திரேலியாவின் ஆர்.எம்..டி., விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

வழக்கமான தார் சாலைகளின் மீது, 22 சதவீத அடர்த்தியுள்ள ரப்பர் டயர் துகள்களை அரைத்து மேல் படலமாகப் போட்டு ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் சோதித்தனர். அத்தகைய படலத்தின் மீது அடர்த்தியான புற ஊதாக் கதிர்களை ஒரு மாதத்திற்குப் பாய்ச்சினர்.

இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு சூரிய ஒளியில் நேரடியாக காய்ந்தது போன்ற தாக்கத்தை அவர்கள் ஏற்படுத்தினர். இதையடுத்து சோதித்தபோது, தார் - டயர் ரப்பர் கலவைச் சாலைக்கு இரண்டு மடங்கு ஆயுள் இருக்கும் என்று கணித்தனர். அதேபோல சாலையில் வாகனங்கள் செல்வதற்கும் இந்தக் கலவைச் சாலை ஏற்றதாக இருக்கும் என்றும் தெரியவந்தது.

 ⛙⛙⛙⛙


வீட்டு வேலை செய்யும் ரோபோக்கள் !

வீட்டுத் தரை, தொழிற்சாலைத் தளம் என்று சுத்திகரிப்பதற்கு ரோபோக்களை பயன்படுத்துவதில் முன்னோடி டைசன் நிறுவனம். இது விரைவில், வீட்டு வேலைகளைச் செய்யும் ரோபோக்களை சந்தைக்குக் கொண்டுவரவிருக்கிறது.

அண்மையில் டைசன் வெளியிட்டுள்ள காணொளியில், ஒரு ரோபோ, தரையில் கிடக்கும் பொம்மைகளை தன் கை விரல்களால் எடுக்கிறது. பாத்திரங்களை உலர்த்தி அடுக்குகிறது. இருக்கை மீதுள்ள துாசியை 'வாக்குவம் கிளீன்' செய்வதுபோல உறிஞ்சுகிறது.

ரோபோவியலில் கடந்த 20 ஆண்டுகளாக டைசன் ஆராய்ந்து வருகிறது. இதனால் அது தரை துடைக்கும் வட்டவடிவ ரோபோவோடு நிற்கவில்லை. அடுத்து, வீட்டுக்குள் நடமாடி, கைநீட்டி, வேலைகளைச் செய்யும் அசல் ரோபோக்களை டைசன் சோதித்து வருகிறது.

டைசன் நிறுவனம், 2000த்தில் துவங்கி தற்போது வரை 250 ரோபோ வல்லுநர்களை தனது சிங்கப்பூர் மற்றும் பிரிட்டன் மையங்களில் பணிக்கு சேர்த்துள்ளது. விரைவில் ரோபோ துறையின் 750 மிகச் சிறந்த மூளைகளை வேலைக்கு அமர்த்தவுள்ளது.

இதன் மூலம், வருங்கால வீட்டு ரோபோக்கள் மற்றும் தனி நபர் உதவி ரோபோக்கள் சந்தையில் முன்னணி இடம் பிடிக்க டைசன் திட்டமிடுகிறது.

 🤖🤖🤖🤖

படித்ததில் பிடித்தது