பழகத் தெரிய வேணும் – 97



குருட்டுத்தனம் வேண்டாமே!

கோலாலம்பூரில் உள்ள பத்து மலையில் (BATU CAVES) தைப்பூசத் திருவிழா.

எங்கேடா போறோம்?”

யாருக்குத் தெரியும்?”

லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களும், வேடிக்கை பார்க்க வந்தவர்களுமாக கும்பல் திரண்டிருந்தது. பலவிதமான ஒலிகளுக்குமேல் அங்கு கேட்ட ஓர் உரையாடல் அது.

 

தவிர்க்க முடியாத கும்பலில் சரி. ஆனால், எப்போதும் பிறரைப் பின்தொடர்ந்தால் என்ன ஆகும்?

 

`தடம் பதித்தவர்கள்என்று சிலரைக் குறிப்பிடுகிறோம்.

 

நாமும் அவர்களைப் பின்தொடர்ந்து, அதே தடத்தில் நடந்தால், நமக்கும் மதிப்பும் மரியாதையும் கிடைக்குமே என்ற நப்பாசை பலருக்கு. ஆனால், அவர்கள் காலடி எப்படிப் பிறர் கண்களில் படும்? திருப்திதான் கிட்டுமா?

 

அரசாங்க ரீதியில் இப்படிச் செய்யும்போது, ஒரு நாட்டு மக்கள் ஆட்டுமந்தைகளாக அதிகார வர்க்கத்தினரைப் பின்தொடர்கிறார்கள்.

 

வாலறுந்த நரி ஒன்று பிற நரிகளைக் கேலி செய்து, அவையும் தம் வாலை வெட்டிக்கொள்ளச் செய்ததாம். தன்னை வித்தியாசமாகக் கருதிவிடப்போகிறார்களே என்ற பயம் அதற்கு.

 

சமீபத்தில் மலேசியாவில் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளான சமாசாரம் இது.

 

மாஜி பிரதமர் ஒருவர், “சீனர்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள். இன்னமும் தங்கள் வழக்கப்படி, உணவு உட்கொள்ள CHOP STICKS (குச்சிகள்) பயன்படுத்துகிறார்கள்! நம்மைப்போல் கையைப் பயன்படுத்துவதில்லை,” என்று பேசியிருந்தார்.

 

எல்லா இனத்தவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

 

`சீனர்கள் தம் உணவை மிகுந்த சூடாக உட்கொள்வார்கள். (குளிர்நாட்டுப் பழக்கம் அது). அத்தனை சூட்டில் கை வைக்கமுடியாது,’ என்று ஒருவர் விளக்க, நாட்டு ஒற்றுமையைக் குலைக்கப்பார்க்கிறார் என்ற பழி கிட்டியது.

 

தமக்குச் சரியென்று படுவது எல்லாருக்கும் ஏற்புடையதாக இருக்குமா என்று பலரும் யோசிக்கத் தவறிவிடுகிறார்கள்.

 

நம்மில் ஒவ்வொருவருக்கும் மூளை என்ற ஒன்று ஏன் தனித்தனியாக அமைந்திருக்கிறது?

 

அதிகாரத்தை விரும்பும் சில அற்பர்கள் பயமுறுத்தியும், கேலி பேசியும் பிறரைப் பணியவைக்க முயல்வார்கள். அவர்கள் தைரியசாலிகளாக இருக்கமாட்டார்கள். அதை மறைக்கத்தான் முரட்டுத்தனம்.

 

எல்லாரும் தம்மைப்போலவே நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் எதிர்த்திசையில் நடப்பவனுக்கு `கர்வி,’ `ஒற்றுமையாக இருக்காதவன்என்று பெயர் சூட்டிவிடுவார்கள்.

 

நீ ஓயாமல் தமிழ் புத்தகங்களைப் படிக்கிறாயே! நன்றாகவா இருக்கும்?” ஒரு மலாய் ஆசிரியை என்னைக் கேட்டாள், முகத்தைக் கோணியபடி.

 

அவளுக்குப் புரியாத மொழியில் நான் படித்ததால் அவளுக்கு அச்சமோ?

 

எனக்குப் பிடிக்கும்!” என்றேன் அவள் முகத்தில் அடித்தாற்போல்.

 

பழக்கவழக்கங்கள் புரியாது..

பிற மனிதர்களை மட்டுமின்றி, பண்டைக்கால பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதும் ஒரு விதத்தில், அறியாமைதான்.

 

தீபாவளியன்று எங்கள் வீட்டுக்கு விஜயம் செய்த ஒரு சீனர், “எதற்காக முன்வாசலில் தோரணம் கட்டுகிறீர்கள் என்று நான் பலரைக் கேட்டபோது, எல்லாரும், TRADITION (பாரம்பரிய வழக்கம்) என்றார்கள்,” என்றார், சற்று ஏமாற்றத்துடன். அறிவுப்பசி அவருக்கு.

 

நல்லவேளை, நான் அதைப்பற்றிப் படித்திருந்தேன். “பலரும் நம் வீட்டுக்கு வரும்போது, அவர்கள் மூச்சுக்காற்றிலிருந்து வெளியாகும் கரியமல வாயுவை பச்சை மாவிலைகள் உள்வாங்கிக்கொள்கின்றன. இது சுகாதார அடிப்படையில் உண்டான பழக்கம்,” என்று என் `அறிவாற்றலைவெளிப்படுத்திக்கொண்டேன்.

 

இன்று பலரும் கட்டுவது பச்சை இலைகளால் அல்ல. பிளாஸ்டிக்காலான `மாவிலைத்தோரணம்!

 

அரிசி மாவானான கோலத்தைப் போடுவது எறும்புபோன்ற சின்னஞ்சிறு பூச்சிகளுக்கு ஆகாரமாக. அழகுக்காக அல்ல.

 

இதைப் பலரும் மறந்துவிட்டதால், பிளாஸ்டிக்கின்மேல் போடப்பட்ட வண்ணக்கோலம் அமோகமாக விற்பனையாகிறது.

 

பெண்களைக் கிண்டல் செய்வது நகைச்சுவையா?

பட்டிமன்றங்களில் பெண்களைப்பற்றித் தாறுமாறாகப் பேசுகிறார் ஆண் ஒருவர். `நகைச்சுவைஎன்று ஆண்கள் சிரிக்க, `நாமும் ஒத்துப்போய்விடலாமே!’ என்று பெண்களும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.

 

அவர் சொல்வதில் உண்மை இருக்கிறதா என்று எவரும் யோசிப்பதில்லை.

 

::கதை::

என் கல்லூரி நாட்களில், பிரபலமான ஒருவர் கோயிலில் கதாகாலட்சேபம் செய்ய வருவார். அவருடைய புகழும் வருமானமும் அதிகரிக்க, தான் எது பேசினாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற தைரியம் பிறந்தது அவருக்கு.

 

இந்துப் புராணக்கதைகளின் நடுவே, தற்காலப் பெண்களைப்பற்றி இழிவாகப் பேச ஆரம்பித்தார். `சுவாரசியமாக இருக்கட்டுமே!’ என்று நினைத்திருப்பார். எல்லாரையும் சிரிக்கவைக்கலாம் என்ற அவர் நம்பிக்கை வீண்போகவில்லை.

 

அதன்பின், நான் அவருடைய நிகழ்ச்சிக்குப் போக மறுத்துவிட்டேன்.

 

நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லை!” என்று என்மேல் தாயாருக்குக் கோபம்.

 

நான் மசியவில்லை.

 

சில ஆண்டுகளுக்குப்பின், அம்மாவும் போவதை நிறுத்திவிட்டார், “பெண்களைக் கேவலமா பேசறார்!” என்று முகத்தைச் சுளித்தபடி.

 

கூட்டத்தில் ஒருவர் சிரித்தால், சற்றும் யோசியாது, எல்லாரும் அவரைப் பின்பற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும்வரை பெண்களை இழிவுபடுத்தும் பேச்சாளர்களுக்குக் கொண்டாட்டம்தான். `கும்பலோடு கோவிந்தா!’ என்பது இப்படிப்பட்ட நடத்தைக்குத்தானா!

 

பெண்கள் ஆண்களிடம் தாம் காணும் குறைகளைப்பற்றிப் பேசினாலோ, எழுதினாலோ, ஆண்கள் கொதித்தெழுவார்கள்.

 

எந்த உண்மையையும் நேருக்கு நேர் சந்திக்க தைரியம் வேண்டும். ஆனால், அதைவிடப் பிறரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது எளிதாயிற்றே!

 

திரைப்படங்களைக் காப்பியடிப்பது

திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், ஆண் எந்தப் பெண்ணை வேண்டுமானாலும் அறையலாம், மனம்போனபடி கேலி செய்யலாம் என்று காட்டுகிறார்கள்.

 

முட்டாள்களைப் பின்பற்றி நடப்பவனும் முட்டாளாகிறானே! அதையெல்லாம் பார்த்துவிட்டு, அதேபோல் நடக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

 

இயக்குனர் ஒருவர், சிறிதும் மாற்றமின்றி, தான் சொல்லிக்கொடுப்பதுபோலவேதான் நடிகர்களும் பேசி, நடிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாராம். அப்படிச் செய்யாவிட்டால் தண்டனை என்று அவர்கீழ் வேலை பார்த்தவர்கள் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.

 

நடிக்க வந்தவர்களின் மனோதர்மத்துக்கு இடங்கொடுக்காவிட்டால், எல்லாரும் ஒரேமாதிரிதான் நடிப்பார்கள். அதில் இயக்குனரின் கைவரிசை தெரியும். புதுமையோ, சுவாரசியமோ இருக்குமா?

 

மதத்தின் பெயரால்….

மத குருஎன்று தம்மைத் தாமே அறிவித்துக்கொண்டு, பெயரும் புகழுமாக இருக்கிறார்களே சிலர், எப்படி?

 

கலை, தர்மம் இரண்டிலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள்போல் எதையாவது ஆரம்பித்தால், நல்லவர்கள் பலர் அவருக்கு உதவியாக நடக்க முன்வருவார்கள். இது உலக நியதி.

 

பல காலம் கழிந்தபின்னர்தான் அவர் செய்துவந்தது சமூக சேவை இல்லை, சுயநலம் என்பது வெளியாகும்.

 

நான் அப்படி ஒருவரைச் சந்தித்திருக்கிறேன்கலை நிகழ்ச்சிகளில்.

 

அவர் நடக்கும்போதே சில பக்தைகள் அவர் காலில் விழுந்து வணங்குவார்கள். மரியாதை என்பது ஒருபுறமிருக்க, ஒருவர் அப்படிக் கும்பிட்டால், அவர் செய்த பாபம் வணங்கப்பட்டவருக்குப் போய்விடுமாம்.

 

சில ஆண்டுகளிலேயே, நடக்கக்கூட முடியாது அவர் தள்ளாடியதைக் கண்டு, “அவருக்கு என்ன, கான்சரா?” என்று அவருடைய மருத்துவரைக் கேட்டேன்.

 

அது மட்டும்தான் இல்லை. மற்ற எல்லா வியாதிகளும் இருக்கின்றன,” என்ற பதில் கிடைத்தது.

 

பிறர் தன்னைப் பின்பற்றுகிறார்களே என்ற பெருமிதம் அப்போதாவது மறைந்திருக்குமா?

 

ஏனென்று கேள்!

குழந்தைகள் இயற்கையாகவே எதையும் அறியும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அவர்களது அறிவுப்பசிக்குத் தீனி போடாது, `சும்மா தொணதொணக்காதே!’ என்று விரட்டிவிட்டால், அடங்கிவிடுவார்கள்.

 

பதின்ம வயதில், `இப்படி நட!’ என்று அதிகாரம் செய்தால் கேட்பார்களா?

 

`ஏன்? ஏன்?’ என்று கேட்கும் பழக்கம் உள்ளவர்கள் பிறர் கூறுவதையோ, செய்வதையோ பின்பற்றமாட்டார்கள். சுயமாகச் சிந்தித்துச் செயல்படுவார்கள். அவர்களைப் பார்த்துப் பிறர் அச்சமடையும் அபாயம் உண்டு!

 

ஒரு மருத்துவர் கூறினார்: “தொண்டையில் வலி இருந்தால், கடையில் வாங்கும் மருந்துகளைவிட உப்பு கரைத்த வெந்நீரால் கொப்புளிப்பது சிறந்தது”.

 

நான் அதை அப்படியே ஏற்கவில்லை. “ஏன், டாக்டர்?” என்று அவரை மடக்கினேன்.

 

என் கேள்வியை எதிர்பாராத அவர் சற்று அயர்ந்துவிட்டார். அவரிடம் வேறு யாரும் அப்படி `எதிர்த்துப் பேசியதில்லை போலிருக்கிறது!

 

கூடுதலாக இன்னும் சில மணி நேரம் உப்பின் குணமாக்கும் தன்மை நீடித்திருக்கும்,” என்றார், ஒருவழியாகச் சமாளித்துக்கொண்டு.

 

`டாக்டர் சொன்னால், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். அவருக்குத் தெரியாததா!’ என்பவர்களுக்கு: `அவருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், எனக்குத் தெரியாதே!’

 

::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

 ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...  Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1