"ஈரம் தேடும் வேர்கள்" -சிறு கதை

 


"கடலின் அலைவந்து கரையில் விளையாடும்.

கரிய முகில் வந்து மலையில் சதிராடும்.

கடலின் இளங்காற்று எமது தலைசீவும்.

தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும்

கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக்

கோண மலையெங்கள் வீடு."

என மார்புதட்டி பெருமையாக வாழ்ந்தவர் தான், முன்னைய கணித ஆசிரியை கண்மணி என்ற மூதாட்டி ஆகும். இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான திருகோணமலையில், உயர்ந்து நிற்கும் சிவனின் சிலையை முன்னுக்கு கொண்டிருக்கும் திருக்கோணேஸ்வரத்திற்கு அண்மையில் இவரின் வீடு இருந்தது.  கண்மணி தனது அறிவு மற்றும் சிரமங்களைத் தாங்கும் அல்லது விரைவாக அதில் இருந்து மீளும் விரிவாற்றலுக்கும் அறியப்பட்டார், வாழ்க்கையின் பல பருவங்களை அல்லது கட்டங்களை எதிர்கொண்டவர் . அவளது சுருக்கம் விழுந்த முகமும் வெள்ளை முடியும் எண்ணற்ற அனுபவங்களையும் கதைகளையும் அவள் இதயத்திற்குள் சுமந்து கொண்டு இருக்கின்றன.


கண்மணிக்கு இன்று நேற்று இல்லை, பல ஆண்டுகளாக  இயற்கையோடு ஒரு தனிப் பிணைப்பு என்றும் இருந்தது. அவள் தன் ஓய்வு நாட்களை தோட்டத்தைப் பராமரிப்பதிலும், செடிகளையும் பூக்களையும் கனிவான கவனத்துடன் வளர்ப்பதிலும்

ஆர்வமாக இருந்தாள். அவளுக்குப் பிடித்த தாவரங்கள் ஆழமான வேர்களைக் கொண்டவை, அவை செழிக்கத் தேவையான ஈரப்பதத்தைக் கண்டறிய மண்ணுக்கு அடியில் நீண்டிருந்தன, ஈரம் தேடும் வேர்களாக.

 

இலங்கையில், வடக்கு கிழக்கில் அன்று நிலவிய ஒரு போர் சூழ்நிலை மற்றும் அடக்குமுறைகளில் கண்மணி தன் கணவரை இழந்தார். அதனால் மிகவும் பயந்துபோன கண்மணி, தன் மூன்று இளம் பிள்ளைகளையும் வெளிநாட்டுக்கு படிப்பிற்காகவும் மற்றும் பாதுகாப்புக்காகவும் அனுப்பிவிட்டார். தான் தனித்துப்போவேன் என்று அவள் சிந்திக்கும் நிலையில் அப்ப கண்மணி இருக்கவில்லை. அவள் எண்ணம் செயல் இரண்டும் பிள்ளைகள், பிள்ளைகள், பிள்ளைகள், அது மட்டுமே!   

 

வருடங்கள் செல்ல செல்ல, கண்மணி தன் சொந்த வாழ்க்கைக்கும் தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும் ஒரு தொடர்பு இருப்பதைக் கண்டார். ஈரத்தைத் தேடும் வேர்களைப் போலவே அவளும் வாழ்வு மலர.. வாசணை துளிர.. வேதனை மறைய..சந்தோஷங்கள் நிறைந்த நேரத்தை தேடும் ஏக்கம் இருப்பதை அவள் உணர்ந்தாள். பிள்ளைகள் அருகில் இல்லாதது இப்ப பெரும் குறையாகவே அவள் உணர்ந்தாள். பிள்ளைகள் எத்தனை பணம் அனுப்பினாலும், வசதிகளை அமைத்து கொடுத்தாலும், அவள் எதையோ இழந்து தவிப்பது தெரிந்தது.  ஈரத்தைத் தேடும் வேர்களைப் போல, நேரடியான பாசம், அன்பு ... என்ற ஈரங்களை தேடி மனம் அலைந்து கொண்டே இருந்ததை அவள் உணர்ந்தாள்.

 

ஒரு கோடை நாளில், கண்மணி  தனது தோட்டத்தில் அமர்ந்திருந்த போது, ​​ஒரு இளம் மரக்கன்று வறண்ட மண்ணின் மத்தியில் வளர போராடுவதைக் கண்டாள். அது பலவீனமாகவும் வாடிப்போகக்  கூடியதாகவும் தோன்றியது, அதனால் உயிர்வாழத் தேவையான ஈரப்பதத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. என்றாலும் அந்த மரக்கன்று பிடிவாதமாக அதன் வேர்களை தரையில் ஆழமாக நீட்டிக்கொண்டு இருப்பதைக் கண்டாள். அந்த மரக்கன்றின் உறுதி கண்மணிக்கு ஒரு தெம்பை கொடுத்தது.

 

கடினமான அல்லது சவாலான வாழ்க்கை அனுபவங்களை வெற்றிகரமாக மாற்றியமைக்கும் மரக்கன்றுகளின் செயல்முறையால் [மீள்தன்மையால்] ஈர்க்கப்பட்ட கண்மணி , தானும் அப்படியான ஒரு  கண்டுபிடிப்புக்கான பயணத்தைத் தொடங்க முடிவு செய்தார். வேர்கள் தண்ணீரைத் தேடுவதைப் போல, அவளும் தனக்கான நேரடி  ஆதாரங்களைக் கண்டுபிடிக்க ஏங்கினாள். கையில் ஒரு கைத்தடியை [வாக்கிங் ஸ்டிக்கை] எடுத்துக்கொண்டு  கொண்டு, தன் ஆர்வத்தாலும், அசையாத உள்ளத்தாலும் வழிநடத்தப்பட்ட அவள், போரினால் கடுமையாக பாதிக்கப்படட, திருகோணமலையின் ஒரு எல்லைக்கிராமமான  முல்லைத்தீவு சென்றாள்.

 

அவள் கிராமத்தின் பழக்கமான எல்லைகளைத் தாண்டிச் சென்றபோது, ​​கண்மணி பல்வேறு சவால்களையும் தடைகளையும் பாதுகாப்பு படையிடம் மற்றும் புலனாய்வு அலுவலர்களிடம்  எதிர்கொண்டார். வாழ்க்கை அடிக்கடி அளிக்கும் கஷ்டங்களையும் சோதனைகளையும் அவள் அறிவாள். எனவே தன் ஒவ்வொரு அடியிலும், கண்மணி  உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் வலுவாக தன்னை திடப்படுத்திக் கொண்டார்.

 

தனது பயணத்தில், கண்மணி, பெற்றோர் இல்லாத பிள்ளைகளையும், கணவன் இல்லாத ஒற்றை தாய்களையும், கை அல்லது கால் இழந்த ஆண்களையும் கண்டார். என்றாலும் அந்த வேதனையிலும், இழப்பிலும்  கஷ்டத்திலும் கூட அவர்களின் அன்பை, ஆதரவான பேச்சை பார்த்து , கேட்டு அதிசயப் பட்டாள். அங்கு ஈரத்தை கண்டாள்! அது அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்ததுடன், தன் தேடல் வெற்றி அடைந்ததை உணர்ந்தாள். எதை தேடினாலோ அது அங்கு கிடைத்தது. அவள் இதயம் அந்த ஈரத்தில் நனைத்தது!  

 

தன்னிடம் உள்ள பணம், வசதிகளை முதலீடாக அமைத்து, கண்மணி அங்கே ஒரு அநாதை இல்லம் அமைத்து, அவர்களுக்கு சேவை செய்ய முடிவு எடுத்தாள். அவளை சுற்றி குழந்தைகள் முதல் வயதானவர்கள் இருந்தனர். அவள் தேடிய நேரடி பாசம், அன்பு, துணை என்ற ஈரங்கள் அவளை நனைத்து மகிழ்வைக் கொட்டிக்கொண்டே இருந்தன!

 

ஈரப்பதத்தைத் தேடும் வேர்கள் தங்கள் சுற்றுப்புறங்களுக்குத் தகவமைத்துக் கொள்வது போல,  அதாவது,  புற மாற்றங்களுக்கேற்ப ஒர் உயிரி தன்னை மாற்றியமைத்துக்கொள்ளல் போல, ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் அனுபவங்களை மாற்றியமைத்து கற்றுக் கொள்ளவதுடன், ஏற்படும் சவால்களைத் எதிர்த்து, வாழ்வு மலர தேவையான ஆதாரங்களைக் தேடிக் கண்டறியவேண்டும் என்ற தன் அனுபவத்தை மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக கண்மணி பாட்டி தனது எண்பதாவது அகவையிலும் வாழ்ந்துகொண்டு இருக்கிறாள்.

 

ஈரம் தேடும் வேர்களைப் போலவே, அவள் தன் சொந்த ஆவியையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் தொடர்ந்து வளர்த்து, வாழ்க்கைத் தோட்டத்தில் அழகாக மலர்ந்துகொண்டு இருக்கிறாள்!

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment