பழகத் தெரிய வேணும் – 58


பரோபகாரம் போதுமா?

தலைவர்கள் தாம் சாதித்ததாக எண்ணுவதைத் தேர்தல் சமயத்தில் பட்டியலிடுவார்கள்.

 

அரசியலில் மட்டுமல்ல, எந்த ஒரு சிறு குழுவின் தலைவர்களாக இருப்பவர்களும்கூட.

 

வெற்றி என்பது ஒருவரது சாதனைகளின் மட்டுமல்ல. மற்றவர்களுக்காக எதுவும் செய்யாது, தமக்குத்தாமே நன்மை செய்துகொண்டிருப்பவர்களால் பிறருக்கு என்ன லாபம்?

 

ஒரு சிலர், `குறுகிய காலத்தில் நான் இத்தனை பட்டங்கள் பெற்றேன், சொத்து சேர்த்தேன்,’ என்று பெருமை பேசிக்கொள்வார்கள்.

 

அறிவும் பணமும் மட்டும் நிறைவைக் கொடுத்துவிடாது. (ஆனால், அது காலம்கடந்துதான் புரியும்).

 

தகுந்த தருணத்தில், அல்லல்படும் ஒருவருக்கு உதவிக்கரம் நீட்டுவதால் கிடைக்கும் திருப்தி அதைவிடப் பெரிது. பிறர் பிரமித்து, பாராட்டாவிட்டால் என்ன!

 

தம்மைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களை எப்படியாவது தாம் இருக்கும் தாழ்ந்தநிலைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்றெண்ணி, அதன்படி செயல்படுபவர்கள் கீழேயேதானே இருக்க நேரிடும். இது எத்தனை பேருக்குப் புரிகிறது?

 

மாறாக, பிறரை உயர்த்த நம்மால் ஆன உதவியைச் செய்தால், நமக்கும் ஏதாவது நல்லது நடக்கும். ஆனால், விளைவைக் கருத்தில்கொண்டு செயல்படுவது நலனைத் தருவதில்லை.

 

::கதை::

தான் மற்ற உறவினர்களைவிடச் செல்வச்செழிப்புடன் இருக்கிறோமே, அதைக் கண்டு அவர்கள் பொறாமை கொண்டால், அந்த ஆற்றாமை ஏதாவது தீய விளைவில் கொண்டுவிடப்போகிறதே என்று பயந்தாள் மைதிலி.

 

உறவினர்களைப் பார்க்கும்போதெல்லாம், கைநிறைய பரிசுப்பொருட்கள் வாங்கி வருவாள். அடிக்கடி எல்லாருக்கும் கடிதம் எழுதி, அவர்கள் நலனை விசாரிப்பாள். தான் மிகவும் நல்ல இருதயம் படைத்தவள் என்று நம்பி, அவர்கள் வாழ்த்த வேண்டுமாம்!

 

மைதிலியின் குழந்தைகள் பெரியவர்களானதும், ஒவ்வொருவருக்குமே ஏதோ ஒரு இடர். விபத்தில் ஒரே மகளுக்குக் கால் ஊனமாகியது.

 

`நாங்கள் பிறருக்கு அவ்வளவு செய்தோமே! எங்களுக்கு ஏன் இப்படி ஒரு துயரம்?’ என்று கதறினாள் மைதிலி.

 

பிறர் நமக்கு என்ன பிரதியுபகாரம் செய்யப்போகிறார்கள் என்று எதிர்பார்த்துச் செய்வது பலன் தராது.

 

திருமணங்களின்போது, தங்களுக்கு யார் எத்தனை மொய் எழுதியிருக்கிறார்கள் என்று கணக்கு எழுதி வைத்துக்கொண்டு, அதே தொகையை அவர்கள் வீட்டு வைபவங்களுக்குத் திருப்பி அளிப்பதும், குறைவாகக் கிடைத்தால் சண்டைபோடுவதும் எதில் சேர்த்தி?

 

குழுச் சண்டைகள்

பிறருடன் ஒரு காரியத்தில் ஈடுபடுகையில், பொறாமை அல்லது கோபத்தால் விளையும் சிறிய சச்சரவுகள் எழும். அப்போதுதான் புரிந்துணர்வு அவசியமாகிவிடுகிறது. பிறரது மனநிலையில் நம்மை வைத்துக்கொண்டு பார்த்தால், பிறர் செய்வது நம்மை அதிகமாகப் பாதிக்காது.

 

இதனால்தான் ஒத்த மனதினருடன் ஒரு குழுவில் இணையவேண்டும் என்பது. `நமக்கு ஆதரவு அளிக்க பலர் இருக்கிறார்களே!’ என்று புரிந்துபோக, ஒவ்வொருவரும் தனிப்பலம் அடைகிறார்கள்.

 

அந்நிலையில் ஒருவருக்கொருவர் உதவியும், ஊக்கமும் அளித்துக்கொள்வதால் அதில் இருப்பவர்கள் அனைவருமே வெற்றி அடைகிறார்கள்.

 

மொத்த முழுவிற்கும் அவர்களால் நன்மை. ஏனெனில், `அடுத்து என்ன செய்யலாம்?’ என்று கலந்தாலோசிக்கிறார்கள்.

 

விரைந்து செல்லத் தனியாகப் போகவேண்டும். ஆனால், நீ தொலைதூரம் செல்ல வேண்டுமானால், பிறருடன் சேர்ந்து போ!’ என்று அறிவுரை கூறுகிறார் திரு.அனுபவசாலி.

 

கஷ்டங்கள் விலக..

நம்மைப்பற்றியே வேண்டாத யோசனை செய்துகொண்டிருந்தாற்போல் நிலைமை மாறிவிடப்போவதில்லை

 

சிலர் தாம் படும் சிறு, சிறு கஷ்டங்களைப்பற்றி உபகாரியானவரிடம் ஓயாது பேசி, அவற்றின் பாதிப்பைக் குறைக்க நினைக்கிறார்கள். இவர்களுக்குப் பிறரைப்பற்றிய சிந்தனையே கிடையாது.

 

`உதவி செய்கிறோம்!’ என்ற நல்லெண்ணத்துடன் அந்த அவலங்களைச் செவிகொடுத்து கேட்க நேரிடுபவர்கள் நிலை பரிதாபம். அவர்களே அல்லல்படுவதுபோல் வருத்தம் எழும்.

 

இவ்வாறு ஓயாமல் மூக்கால் அழுபவர்களை விலக்குவதே புத்திசாலித்தனம். ஏனெனில், நம் பரிதாப உணர்ச்சியால் ஆக்ககரமாக எதுவும் நடக்கப்போவதில்லை.

 

அப்படி நேரத்தை வீணாக்குவதைவிட தகுதியுள்ள பிறருக்கு உதவி செய்தால் நம் கஷ்டங்கள் விலகுகிறதோ, இல்லையோ, நம் நிம்மதியாவது குலையாமல் இருக்கும்.

 

`இவள் தேவலை! தன் காரியத்தைத் தானே பாத்துக்கொண்டுவிடறா!’ இப்படி ஏளனமாக எழும் ஒரு குரலைக் கேட்கும்போது குற்ற உணர்ச்சி எழுந்தால் அது தவறு.

 

பிறருக்கு உதவிபுரியுமுன் முக்கியமாகச் செய்ய வேண்டுவது: நம் நலனைக் கவனித்துக்கொள்வது.

 

::கதை::

பிறருக்கு உதவி செய்வதே ஒரு நல்ல பெண்ணுக்கு அடையாளம் என்பதுபோல் வளர்க்கப்பட்டிருந்தாள் சுமித்திரா.

 

தன்னைவிட வயதில் மூத்தவர்களின் கைவேலையைப் பிடுங்கிச் செய்வதில் பெருமகிழ்ச்சி கொண்டாள் அப்பேதை.

 

ஆனால், அதற்குமுன் அவள் தன்னையும் பொறுப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூற எவருக்கும் தோன்றவில்லை.

 

படிப்பில் சோடைபோனாள். பிறருக்குக் கேலியாக ஆயிற்று. யாரும் தன்னை மதிக்காதது வருத்தத்தை உண்டாக்கியது. சுதந்திரமாக நடக்கவும் அவளுக்குத் தெரியவில்லை.

 

எங்கு, யாரால் தவறு நிகழ்ந்தது என்று காலம் கடந்து புரியும்போது இப்படிப்பட்டவர்களுக்கு அளவிலா வருத்தம் ஏற்படும். அல்லது, பிறர்மீது பழிசுமத்தத் தோன்றும்.

 

பொருளாதாரச் சுதந்திரம்

முதுமை அடைந்தபின்னரோ, உடல்நிலை கெட்டபின்னரோ பலரும், `கடமை’ என்றெண்ணி, தம் சொத்து அனைத்தையும் பெற்ற பிள்ளைகளுக்கு அளித்துவிடுவார்கள்.

 

உயிர் இருக்கும்வரை நம்மைக் காத்துக்கொள்ள பொருளாதாரச் சுதந்திரம் வேண்டாமா?

 

முன்யோசனை இல்லாது எல்லாவற்றையும் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஒவ்வொன்றுக்கும் அவர்கள் கையை எதிர்பார்ப்பது அடிமைத்தனம்.

தமக்கே உதவி செய்துகொள்வது கேவலம், அல்லது சுயநலம் என்று எண்ணாது, முன்யோசனையுடன் நடந்தால் தன்னம்பிக்கை என்றும் குன்றாது.

::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

தொடரும்.... 
👉👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../17/

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

திரிகடுகம் தொடர்கிறது.....

பாடல் - 81

தோள் வழங்கி வாழும் துறை போல் கணிகையும்,

நாள் கழகம் பார்க்கும் நயம் இலாச் சூதனும்,

வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும், - இம் மூவர்

ஆசைக் கடலுள் ஆழ்வார்.

 

விளக்கம்:

பலருக்குப் பொதுவாய் நின்று நீரைத் தரும் கிணற்றினைப் போன்று தனது உடலைக் கொடுத்து வாழும் வேசியரும், சூதாடும் இடத்தைத் தேடி அலையும் நீதியில்லாத சூதாடியும், மிக்க வட்டிக்கு கொடுத்துப் பொருள் தேடுபவனும் பேராசை பிடித்தவர்கள் ஆவார்.

 

பாடல் - 82

சான்றாருள் சான்றான் எனப்படுதல், எஞ் ஞான்றும்

தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல், பாய்ந்து எழுந்து

கொள்ளாருள் கொள்ளாத கூறாமை, - இம் மூன்றும்

நல் ஆள் வழங்கும் நெறி.

 

விளக்கம்:

நற்குணங்கள் நிறைந்தவர்களால், நல்லோன் எனப்படுதலும், செல்வம் இருந்தபோதும், இல்லாதபோதும் நட்புடன் கருதப்படுதலும், தமது நற்சொல்லை ஏற்றுக் கொள்ளாதவரிடத்து சொல்லாதிருத்தலும் நல்லவர் குணங்களாகும்.

 

பாடல் - 83

உப்பின் பெருங் குப்பை, நீர் படின், இல்லாகும்;

நட்பின் கொழு முளை, பொய் வழங்கின், இல்லாகும்;

செப்பம் உடையார் மழை அனையர்; - இம் மூன்றும்

செப்ப நெறி தூராவாறு.

 

விளக்கம்:

உப்பின் குவியல் மீது நீர் படிந்தால் உப்பு கரைந்து போகும். நட்பில் பொய் வந்தால் கெட்டுப் போகும். நடுநிலைமையுடையர் மழை போல் எல்லோருக்கும் உதவி செய்வர். இம்மூன்றும் நல்ல நெறிகளைக் கெடுக்கா முறைகள் ஆகும்.

 

பாடல் - 84

வாய் நன்கு அமையாக் குளனும், வயிறு ஆரத்

தாய் முலை உண்ணாக் குழவியும், சேய் மரபின்

கல்வி மாண்பு இல்லாத மாந்தரும், - இம் மூவர்

நல் குரவு சேரப்பட்டார்.

 

விளக்கம்:

வழி அமையா குளமும், வயிறு நிரம்ப தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அறிவில்லாத மாந்தரும், ஆகிய இம்மூவரும் வறுமைக்கு ஆளாவார்கள்.

 

பாடல் - 85

எள்ளப்படும் மரபிற்று ஆகலும், உள் பொருளைக்

கேட்டு மறவாத கூர்மையும், முட்டு இன்றி

உள் பொருள் சொல்லும் உணர்ச்சியும், - இம் மூன்றும்

ஒள்ளிய ஒற்றாள் குணம்

 

விளக்கம்:

தன் செயல்கள் பகைவருக்குத் தெரியாமலும், நடந்த காரியத்தைக் கேட்டு மறவாதிருத்தலும், அதனைத் தடையின்றி தெளிவாகச் சொல்லும் திறமையும் கொண்டவர்களே சிறந்த வேவுகாரனது குணமாகும்.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

...............................................................

 

"பேராசை" [சிறு கதை][பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டுவிட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும்எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுதுதான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.]

 

நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்கசொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தைநடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்துவிட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும்நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!

 

காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில்படுதோல்வி அடைந்துபாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்குநூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விடபாடசாலை முதல்வரை விடஎன்னுடன் படித்துசிறந்த சித்தி பெற்றுஇப்ப மருத்துவம்பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விடஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக்கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாகபெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!

 

 "தெருவோர   மதகில்  இருந்து

ஒருவெட்டி   வேதாந்தம் பேசி

உருப்படியாய் ஒன்றும்   செய்யா

கருங்காலி   தறுதலை  நான்"

 

"கருமம்      புடிச்ச     பொறுக்கியென

வருவோரும் போவோரும் திட்ட

குருவும்     குனிந்து    விலக

எருமை     மாடு       நான்"

 

இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோஎப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள்பாவம் அவர்கள் !!

 

நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையைவெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றைஎன் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!

 

 "வருடம்    உருண்டு    போக

வருமாணம் உயர்ந்து    ஓங்க

கருணை   கடலில்     மூழ்க

மிருக-மனித அவதாரம்  நான்"

 

"தருணம்   சரியாய்      வர

இருவர்   இரண்டாயிரம் ஆக

ஒருவர்   முன்         மொழிய 

தரும-தெய்வ அவதாரம்   நான்" 

 

என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக்கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளிபெரும் சாமிகூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்னவென்றால்எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோஅதன் ஐம்பதாவது ஆண்டுவிழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம் அப்படி ஒன்று இருப்பதாக எனக்கு தெரியவில்லைஅடித்து துரத்தப்பட்டவனுக்கு கம்பளி வரவேற்பு!

 

"ஊருக்கு    கடவுள்     நான்

பாருக்கு    வழிகாட்டி  நான்

பேருக்கு    புகழ்       நான்

பெருமதிப்பு கொலையாளி  நான்"

 

"குருவிற்கு  குரு       நான்

குருடருக்கு கண்      நான்

திருடருக்கு பங்காளி   நான்

கருவிழியார் மன்மதன்  நான்"

 

என் பேராசை இத்துடன் நின்றபாடில்லைபாவம் புண்ணியம் இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை! 

 

"குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து

கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு

குடை பிடித்து பதவி உயர்ந்து

குபேரன் வாழ்வை கனவு கண்டான்!"

 

கள்ள வழிகளில் கனவு நியமாவதும்பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லைஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லுமுல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டிபோட தொடங்கிவிட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன்எங்கோ ஒரு மாளிகையில்மஞ்சத்துக்கு போய்விட்டான்! இதைத்தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்துவிட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!   

 

"ஒவ்வொரு இதயத்தையும்ஒவ்வொரு மனதையும்

ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது

ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி

ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"

 

மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களேஏமாற்றி பிழைத்தவர்களேஅடித்த கொள்ளையை தந்துவிட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன்யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச்சோடி போய்விட்டது!

 

"நீர்க்கோல வாழ்வை நச்சி நான்

நீதியற்ற வழியில் நித்தம் சென்று

நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து

நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"

 

பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லதுகெட்டதுஎது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற்கொண்டு இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன் . நான் இப்பஇன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாகபணத்துடன் செல்வத்துடன் போய்க்கொண்டு இருக்கிறேன். மனைவிகூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:

 

[ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால்அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்லபிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால்அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள்முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்குமுகம் தெரியாதவர்களுக்குசாமானியர்களுக்குஉழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டிஅவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களேநானே பேராசை பிடித்தவன்]

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடியாழ்ப்பாணம்]