அத்தியடி



எந்த ஊரு போனாலும்.. 
பழமை வாய்ந்த அத்தியடி ஸ்ரீ சிதம்பர நடராஜா வீரகத்திப் பிள்ளையார் கோவிலும்  அதனுடன் அமைந்த வாசிக்க சாலையும்  நம்ம அத்தியடிக்கு, யாழ் நகரில் உள்ள சிறு இடத்திற்கு , முக்கிய அடையாளம் .ஒரு 5 நிமிஷம் உட்கார்ந்தால் போதும் எப்பேர்ப்பட்ட[எவ்வகையான] கவலையும் தணியும். இதை நான் பெருமையாகவே சொல்வேன்.விடுதலை நாட்களில் ,ஓய்வு நேரங்களில் கூடும் இடம் அவை இரண்டும் தான்.வாசிகசாலை ஊர் புதினம் அறிய .கோவில் முற்றம் நண்பர்களை சந்தித்து அளவளாவ ,பின் ஒன்று சேர்ந்து விளையாட..  சித்திரைப் புதுவருட  தினத்தில் யாழ் அத்தியடி பிள்ளையார் கோயில் வருடாந்த தேர் உற்சவம் நடைபெறும்.கைவிசேசத்துடன் கொண்டாட்டமும் கலை கட்டும் ."கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது ஔவையாரின் முது மொழி. "ஆலயம்- இது ஆன்மாக்கள் இலயப்படும் அல்லது ஒன்று படும் இடம் என்றும், கோயில்- கோன்(அரசன்) உறையும் இடம் எனவும் பொருள் கூறுவார்கள். எமக்கோ  பெரியவர்கள் ஆனபின்பும் ,இன்று வெளிநாடுகளில் உள்ள மதுக் கடை அல்லது பொது விடுதி [pub ]கள்  நண்பர்களை சந்திக்க உதவுவது போல   தொடர்ந்து இருந்தது.

எம்மை  பார்த்து  கொண்டு  யாழ் ரயில் நிலையம் ,எமது ஒரு பக்க எல்லையில் அமைந்துள்ளது . "நாம் "ஊர்விட்டு ஊர் சென்று வாழ்ந்தாலும்  யாழ் மண் வாசம் மனம் விட்டு போகாதே  யாழ் தேவி ரெயில் ஏறுவோம்  எங்கள் இதயத்தின் மொழி பேசுவோம்" என்று "கவிஞர் சதீஸ்" எழுதிய  பாடல் வரிகளை இது  நினைவூட்டும்.ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களினதும் வாழ்க்கையுடன் நெஞ்சில் பின்னிப் பிணைந்த யாழ்தேவியின்    சத்தத்தையும் ஆரவாரத்தையும் கேட்காத நாட்களே இல்லை .

"ஆறுமுக நாவலன் அடியிணை பரவுதும் தேறு முகவின்பந் திகழ்தரற் பொருட்டே" என "நாவலர் சற்குருமணிமாலை" போற்றும் ,தமிழும் சைவமும் தந்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் வீடு ,இன்றைய நாவலர் மண்டபம் ,எமது வீட்டிற்கு  பின்னால் உடனடியாக உள்ளது .நாம் சிறுவராக இருந்த  போது அங்கும் நாம் விளையாடுவது உண்டு .அங்கு  எஞ்சியிருந்த  நாவலர் வீட்டின் சுவர் கீழே தரப்பட்டுள்ளது.

Ethir Nagalingam Ethirveerasingam1952, 1956 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளிலும் மூன்று ஆசியப் போட்டிகளிலும்  இலங்கைக்காக விளையாடிய நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (Dr Nagalingam Ethirveerasingam) அத்தியடியில் வசித்தவர் மட்டும் அல்ல ,நான் படித்த  அதே யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவனும் கூட.நாவலர் கூட அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில்-இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில்-பாடசாலை மாணவராகவும் ஆசிரியர் ஆகவும் இருந்தவரே!
பொதுவாக யாழ்ப்பாண நகர் ,யாழ் கோட்டை ,சந்தை பகுதியையும் வைத்திய சாலை , பேருந்து ,புகையிரத, நிலையத்தையும்  முதன்மை வீதிகளையும் உள்ளடக்கியுள்ளது .வட அமெரிக்கரின் பேச்சுப்பாங்கில் இதை  "downtown."எனவும் கூறலாம்.இதன் எல்லையில் தான் அத்தியடி உள்ளது .யாழ் நகர் மக்கள் பொதுவாக தாம் யாழ்ப்பாணம் என்றே கூறுவார்கள் .கொஞ்சம் யாழில் எங்கே என்று கேட்கும் போதுதான் அத்தியடி, ஆணைப்பந்தியடி ..இப்படி வட்டாரம்,இடக்குறிப்பையும்  சேர்த்து கூறுவார்கள் .இது ஒரு நல்ல பண்பாடு.மேலும் யாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரங்களை ஆங்ககாங்கே காணாலாம்.

பனை மரம்  புயலுக்கு பயங்கரமாக ஆடி அசைந்தாலும் ,நாணல் போல வளைந்து தப்பிக் கொள்ளாதது .அது வளைவதை விட ,வளையாமல் உடைவதையே விரும்புவதுஇன்னல் , துன்பம் வரும் போது ,யாழ்ப்பான மக்கள் ,பனை மரத்தின் இந்த சிறப்பான தன்மையை உதாரணமாக எடுத்து ,தாமும் அது போல் உற்சாகத்துடன் தைரியம் , துணிச்சலுடன்  தளர்வுறாத,விடாப்பிடியாய் எதிர்க்கின்ற ஒரு இயல்புக்குணம்/ பண்பை  வளர்த்துள்ளார்கள் .இது பொதுவாக பெருமை படக்கூடிய ஒரு விசேஷ குணமாகும் .

"யாழ்பாணம் போனேனடி பொன்னம்மா யாழ்பாணம் போனேனடி"என்ற அறு[60]வது எழு[70]பதில் எல்லாராலும் முணுமுணுக்கப்பட்ட அந்த பாடல் வரிகளும் எனக்கு இப்ப ஞாபகம் வருகிறது.அப்ப நான் பாடசாலை ,பல்கலைக்கழக மாணவன் .யாழ்பாணம் பொதுவாக சுவர்க்கம் என்று சொல்லும் அளவிற்கு நேசமான,நட்புணர்வுள்ள மக்களையும் உயர் பண்பாட்டையும் ஆரோக்கியமான காலநிலையையும் ,கண்ணைக் கவருகிற சுற்றுப்புறத்தையும் கொண்டது'  

18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயற்றப்பட்ட  "யாழ்ப்பாண வைபவமாலை" எனும் நூல், முற்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசனொருவனால், இந்தியாவிலிருந்து வந்த யாழிசையில் வல்ல குருடனான யாழ்ப்பாணன்[யாழ்+பாணன்] ஒருவனுக்கு வட பகுதியிலிருந்த  மணற்றிடல் எனும் இடம் பரிசாக அழிக்கப்பட்டதென்றும், அப்பகுதி யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றுப்பின்னர் முழுப் பிரதேசத் துக்குமே இப்பெயர் வழங்குவதாயிற்று என்று கூறுகிறது .போர்த்துகேயர் வருகைக்கு பின் காலப்போக்கில் மெல்ல மெல்ல  திரிபு அடைந்து யாழ்ப்பாணம்[Yarlpaanam]U+2192.svgயாப்பாணம்U+2192.svgஜப்பாணம்U+2192.svgஜப்பணம் U+2192.svgஜவ்வணம்[Jaffanam]U+2192.svgஜவ்ண[Jaffna ] இப்படி பிரித்தானியர் காலத்தில் முற்றுப் பெற்றிருக்கலாம்? என அறிகிறேன்.      

யாழ்ப்பாணம் எங்கும் சேவல் கூவுகிறது. பொழுது விடிகிறது. சூரியன் சுடுகிறது. குயில்கள் பாடுகின்றனவெள்ளை மல்லிகையின் நறுமணம் எங்கும் பரவுகிறது இந்த சொர்க்கத்தில் நித்திரை செய்து எழும் போது என்னவொரு சுகம்!மலையில் சூரியன் மேற்கு திசையில் மறைவதை பனை மரங்களின் "நிழல் படம்"[நிழல்வடிவம்] வழியாக பார்ப்பதில் என்ன  பேரின்பம்!!அதன் பின்  மங்கும் அந்தியொளியில்  பனை தந்த அமிர்தத்தை அவசரமாக விழுங்குவதில் காணும் இன்பமோ- சொல்லில் அடங்கா மகிழ்ச்சி!!! 

"சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா? அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக் கீடாகுமா?"
----[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment